Saturday, 28 November 2020

தமிழரின் பெருவிழா

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கார்த்திகை தீபம்

உலகெல்லாம் வாழும் மனிதர்கள் குரோனா வந்ததன் பின்னர் வீட்டுக்குள் முடங்கினோம். குரோனா மட்டுமல்ல கார்த்திகை மாதமும் மனிதரை வீட்டினுள் முடக்கும். ஏனெனின் உழவுத் தொழில் முடிந்து கலப்பைகள் வீட்டினுள் முடங்கித் தூங்கும். அதனால் மனிதரும் கார்த்திகை மாதத்தில் முடங்குவர். உழவே தலை’, ‘ஏர் பின்னது உலகம் என வாழ்ந்த காலம் அது. மனிதர் முடங்கிக் கிடந்த கார்த்திகை மாதத்திற்கு ஒளியூட்டி பெருவிழா எடுத்தனர் பெண்கள். அதுவும் மதிநிறைந்த நாளில் ஊரிலுள்ளோருடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலி ஒருத்தி அகநானூற்றில் தன் காதலன்

உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி

மழைகால் நீங்கிய மாக விசும்பில்

குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி

பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவு உடன் அயர வருகதில் அம்ம

                                                            - (அகம்:141: 5 - 11)

என - உலகத்து தொழில்கள் அற்றுப்போக, உழும் கலப்பையும் தூங்க, மழை மேகம் இல்லா வானத்தில் முயலின் களங்க நிறம் தெரிய, முழுமதியானது கார்த்திகை நட்சத்திரத்தைச் [அறுமீன்] சேரும் நள்ளிரவில் தெருக்களில் [மருகு] விளக்குகளை வைத்து மாலைகளை தூக்கி தோரணமாகக் கட்டி பழைய சிறப்புமிக்க மூதூரில் பலருங்கூடும் விழாவைக் கொண்டாட வருவார்என்கின்றாள். இரண்டாயிர வருடங்களுக்கு முந்திய பாடல் இது.


தற்போது கொரோனாவால் வேலையில்லாது வீட்டில் இருப்போர்க்கு அரசாங்கங்கள் காசு கொடுப்பது போல அந்நாளிலும் நடந்தது. செல்வந்தர்கள் கார்த்திகை மாதத்தில் வேலை ஏதுமின்றி வீட்டினுள் முடங்கிய வறியவர்க்குக் கொடுத்தனர். அறம் செய்கின்ற மாதம் என்னும் கருத்தில் அறம் செய் திங்கள் என்னும் பெயர் கார்த்திகை மாதத்திற்கு உண்டு.

கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை

அறுமீன் கெழீய அறம்செய் திங்கள்

செல்சுடர் நெடுங்கொடி போலப்

பல்பூங் கோங்கம் அணிந்த காடே

                                                            - (நற்றிணை: 202: 8 - 11)

இளயவளே! உன் தந்தை கார்த்திகை நட்சத்திரம் சேருகின்ற அறம் செய்யும் மாதத்தில்; நீண்டு செல்லும் சுடரொளி போல கோங்கம் பூக்கள் அழகு செய்யும் காட்டைப்பார்என ஒரு காதலன் காட்டுகிறான். நாட்டின் முடக்கமே அறம் செய்யும் பண்பையும் மனிதனுக்குக் கொடுத்தது போலும்.


பசுமையற்று காய்ந்து கல்லான இடத்தில் வெம்மையால் வானம் வறண்டு மழையில்லாது அருவி வற்றிய மலை உச்சியில் கார்த்திகைப் பெருவிழா விளக்குகள் இருப்பது போலஎன்று பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற அரசனே கார்த்திகை விளக்கீட்டை பெருவிழாவாகச் சொல்கின்றான்.

பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்

வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து 

அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்

பெருவிழா விளக்கம் போல - (அகம்: 185: 8 - 13)

தமிழரின் எரிமலை வழிபாடே கார்த்திகைத் தீபவழிபாடாக எஞ்சி நிற்கிறது. எரிமலையின் செவ்வொளி, சிவனாய் - சொக்கப்பனாய் ஆனாது. இப்போதும் கார்த்திகை விளக்கீட்டில் சொக்கப்பனை எரிக்கிறோம். பாருங்கள் சிவன் - சொக்கன் - சொக்கப்பனாய், சொக்கப்பனையாய், சொக்கப்பானையாய் இன்று ஆகிவிட்டான். சொக்கப்பனை எரிக்கும் போது கேட்கும் வெடிச்சத்தங்கள், எங்கும் விரவி எரியும் தீச்சுடர், அதைச் சூழ்ந்திருக்கும் புகை இவையெல்லம் எரிமலை வழிபாட்டின் எச்சங்களே. திருவண்ணாமலை உச்சியில் ஏற்றும் சுடரொளியும் எரிமலை வழிபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


ஆயிரத்து முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்த திருஞானசம்பந்தரும் 

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாளீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்

தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்

- (பன்.முறை: 2: 47: 3)

என்று பெண்கள் தொன்மையாக வரும் கார்த்திகை நாள் விளக்கீட்டை கொண்டாடியதை எடுத்துச் சொல்கிறார். திருஞானசம்பந்தர் வளைக்கை மடநல்லார் என்று பெண்களைத் தானே குறிப்பிட்டுள்ளார்!


இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக தமிழரால் தொடர்ந்து கொண்டாடப்படும் ஒரேயொரு பெருவிழா கார்த்திகை விளக்கீடே. அதுமட்டுமல்ல பெண்கள் கொண்டாடிய பெருவிழா என்ற பெருமையும் கார்த்திகை விளக்கீட்டுக்கு உண்டு. தமிழரின் பெருவிழாவை எங்கே? எப்போது? தொலைத்தோம் எம் தொன்மையை?

இனிதே,

தமிழரசி.

1 comment:

  1. தமிழர் பண்பாட்டை விளக்கும் சிறந்த ஆய்வுத் தொகுப்பு

    ReplyDelete