Monday 23 November 2020

எள்ளி நகைக்கலாமோ


எண்ணி எண்ணி நாளும் இங்கு
                ஏங்கி அழலாமோ
                        ஏதிலர் போல் நீயுமெனை
                                    எள்ளி நகைக்கலாமோ

நண்ணி நண்ணி நானும் அங்கு
                நாயா யலையலாமோ
                           நோதிலர் போல் நீயுமெனை
                                       நையப் புடைக்கலாமோ

துண்ணித் துண்ணி துவளும் நெஞ்சு
                துன்பப் படலாமோ
                            தோதிலர் போல் நீயுமெனை
                                        துவைத் தெடுக்கலாமோ

பண்ணி பண்ணி பாடும் உளம்
                பாரம் சுமக்கலாமோ
                            பேதையர் போல் நீயுமெனை
                                            பேண மறக்கலாமோ

இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்
ஏதிலர் - அயலவர்
எள்ளிநகைத்தல் - ஏழனம்
நண்ணி - அணுகி
நோதிலர் - கவலைப்படாதவர்
நையப்புடைத்தல் - வருத்துதல்
துண்ணி - பயந்து நடுங்குதல்
தோதிலர் - பொருத்தமில்லாதவர்
துவைத்தல் - மிதித்தல்
பண்ணி - புனைந்து
பேதையர் - அறிவிலாதவர்
பேண - காக்க 

2 comments: