Wednesday, 16 December 2020

திருக்குறளின் நோக்கம் மனிதப்பண்பை ஊட்டுவதே



உலகவுயிர்கள் யாவும் இன்பமாகவாழ மனிதன் பண்புடையவனாக வாழ்தலே சிறந்த வழியாகும். திருக்குறள் மனிதப்பண்பைப் பற்றியே பேசுகிறது. ஆதலால் திருக்குறளின் உயிர்நாடியாய் இழையோடுவது மனிதப்பண்பாகும். எவ்வாறெல்லாம் திருக்குறள் மனிதப்பண்பை ஊட்டுகிறது என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் நேக்கமாகும்.


1. பண்பு

பண்பு என்றால் என்ன?

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்1 - (கலி: 133: 8)

எனக் கலித்தொகை சொல்கிறது. அன்பாய் சான்றாண்மையுடன் தத்தமது கடமையைச் செய்து உலகுடன் சேர்ந்து வாழ்வதைபாடுஎன்பர்பண்டைத்தமிழர் தமக்கு நற்பண்பைத் தந்தவற்றை நல்லவை எனவும் தீயபண்பை வளர்த்தவை தீயவை எனவும் பிரித்து மனிதப்பண்பைப் பேணினர்.  


1.1 நற்பண்பு

இடைச்சங்ககாலப் புலவரான நரிவெரூஉத் தலையனார்நல்லனவற்றைச் செய்யாவிட்டாலும் தீயவற்றைச் செய்யாதீர்கள். அது எவரையும் மகிழ்வித்து நல்வழிப்படுத்தும் என்பதை

நல்லது செய்தல் ஆற்றுநீராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லோரும் உவப்பது அன்றியும்

நல்லாற்றுப் படூம் நெறியுமார் அதுவே2 - (புறம்: 195: 6 - 9)

எனக்கூறுகிறார். இப்புலவர் திருவள்ளுவர் காலத்திற்கும் முற்பட்டவர். இப்பண்பில் வளர்ந்த திருவள்ளுவர் படைத்த திருக்குறளும் மனிதப்பண்பை ஊட்டுகிறதா?


ஒருவருக்கு ஒரு வேலையைச் செய்யக்கொடுத்து அதன் நன்மை தீமையை ஆராய்ந்து நன்றாக இருந்தால் வேலைகொடுக்கலாம் என்பதைத் திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையால் ஆளப் படும் - (குறள்: 511) 

எனப்பகர்கிறது. அவரவர் பண்பை ஆராய்ந்து செய்யாவிடின் நன்மை செய்வதிலும் தவறுவரும்3 எனத் தனிமனிதப்பண்பை ஆராயச்சொல்கிறது. 


1.2 பண்பின் சிறப்பு

மனிதர் எவ்வகையில் ஒருவருக்கொருவர் ஒப்பாகமுடியும் என்பதை திருக்குறள் காட்டிதருகிறது. மனிதர் தம்மிடையே முகம், கை, கால் போன்ற உறுப்புக்களால் ஒத்திருத்தல் ஒப்பாகாது. நெருங்கிய பண்புகளில் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்கின்றது.4 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் -(குறள்: 972)

எல்லாமனிதரும் பிறப்பால் ஒத்தவரே. அவரவர் செய்யுந்தொழிலால் பெருமையின் சிறப்பு வேறாகிறது. பண்புடையவரிடமே உலகம் தங்கி இருக்கிறது என்பதைத் திருக்குறள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன் - (குறள் 996)

எனக்கூறி எச்சரிக்கை செய்கிறது. விதியையும் முறியடித்து வெல்லலாம்,5 கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் துன்பத்தையும் துன்பப்பட வைக்கலாம்,6 பணியுமாம் என்றும் பெருமை,7 என்னுடன் போர்புரியாத பகைவனும் அஞ்சும் என்வீரம் அவளின் நெற்றிக்கு உடைந்ததே8 மலரினும் மெல்லியது காமம். அதன் பண்பை அறிந்து அநுபவிப்போர் ஒருசிலரே9 என ஒவ்வொரு பண்பின் மேன்மையையும் எடுத்தியம்புகிறது.


2. இயற்கை

திருக்குறள் இயற்கையை இறைவன் என இயம்புகிறது. ஆதிமனிதன் இயற்கையை இறைவனாகப் படைத்துக்கொண்டான். அந்த வழக்கம் பண்டைத்தமிழரிடமும் முகிழ்ந்திருந்தது. நற்றிணையில் 

மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கையாக…”10 

எனப் பெருந்தேவனார் திருமாலையும் காரைக்கால் அம்மையார்

அடிபேரில் பாதளம் பேரும் அடிகள் 

முடிபேரில் மாமுகடு பேரும்11                

என்று சிவனையும் இயற்கையின் உருவாய்ப் போற்றுவதைக் காணலாம்.


2.1 இயற்கைப்பண்பு

தன்னியல்பில் மாறாதிருப்பது எதுவோ அதுவே இயற்கை. இயற்கை ஒருவட்டச் சுழற்சியுடையது. இயற்கைச்சக்தி அழிவில்லை (Conservation of energy). ஆண்டாளும்ஆழிமழைக் கண்ணா!” என்ற பாசுரத்தில்12 மழையின் சுழற்சியைக் கூறி உலகம்வாழக் கண்ணனையே மழையாகப் பெய்! நாமும் மார்கழி நீராடலாம் என்கிறாள். திருக்குறளும்மழையே உலகை வாழ்விக்கும் அமிழ்தம் என்று உணர்க!’ என மழையின் தேவையை உணர்த்துகிறது. “மழையே உண்ணும் உணவை உண்டாக்கி தானே நீராய் உணவாகும்.” அத்தகையமழை இல்லாவிடின் ஏரின் உழார் உழவர்.” “பச்சைப் புல்லையும் காணமுடியாது.” “ஆழ்கடலும் தன்மையில் மாறுபடும்.” அவை மட்டுமல்ல

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி - (குறள்: 13)

இவ்வுலகமே பசியால் வருந்தும் ஆதலால்நீர்இன்று அமையாது உலகுஎன அறிவுறுத்துகிறது. உலகவுயிர்கள் சார்ந்த இந்த இயற்கைப்பண்பு கெடாமல் காக்கும் மனிதப்பண்பை எமக்கு ஊட்டுதற்கே யார்யார்க்கும் என விழிப்புடன் சொல்கிறது வான்சிறப்பு.13


2.2 இயற்கையின் சிறப்பு

இயற்கையில் நிலமும் நீரும் மரஞ்செடி கொடியும் இருக்க மனிதன் தன்னிடம் ஒன்றுமில்லையே என்று முடங்கி இருப்பதைப் பார்த்தால் நிலமகள் சிரிப்பாளாம். இயற்கையின் செழிப்பை 

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும் - (குறள்: 1040)

எனக்கூறி விளங்க வைக்கிறது. உலக உயிர்களை இயற்கையே அரணாகயிருந்து காக்கிறது.14 மனிதரிடம் அடங்காதிருக்கும் ஆசையை நீக்கின் அப்போதே இயற்கையுடன் நிலைபெறலாம்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் - (குறள்: 370)

உலக உயிர்கள் யாவும் அழிவது போலத் தோன்றினும் ஒரு சுழற்சியாய் அழியாத இயற்கையோடு என்றும் நிலைபெறுகின்றன. ஈழத்தமிழரிடையே ஒருவர் இறந்து போனால்அவர் இயற்கை எய்திவிட்டார்எனக்கூறும் வழக்கம் இருக்கிறது. அழியாப்பண்பே இயற்கையின் சிறப்பாகும்.


3. அறம் 

அறம் என்றால் என்ன? இல்வாழ்க்கையே அறம் என்கிறது திருக்குறள்.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று  - (குறள்: 49)


3.1 அறப்பண்பு

சிறந்த மனிதப்பண்பில் ஒன்று அறம் செய்தல். செய்யக்கூடிய வழிகளில் எல்லாம் இடைவிடாது அறம் செய்யலாம்15 எனக்கூறும் திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற - (குறள்: 34)

என அறம் செய்வதற்கு குற்றமற்ற மனம் இருக்கவேண்டும். மற்றவை யாவும் ஆரவாரங்கள் என்று மனிதமனப்பண்பின் முதன்மையைப் பகர்கிறது. உலகவுயிர்கள் யாவும் பயடைய மனிதமனம் பேணப்பட வேண்டும். “மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்16 எனவும் வலியுறுத்துகிறது. 


3. 2 அறப்பண்பின் சிறப்பு

புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரசன்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்17

என்பதோடுதனக்கென உழைக்காது பிறர்க்கென உழைப்போரால் இவ்வுலகம் வாழ்கின்றதுஎன்று அறப்பண்பின் சிறப்பைக் கூறுகிறான். திருக்குறளும் ஈதலும் அதனால் வரும் புகழுமே உயிருக்குப் பயன் தரும்18 என்று சொல்லி அறப்பண்பை ஊட்டுகிறது.


4. இல்லறம்

இல்லறத்தில்  இணைந்து வாழ்வோர் அன்பாய், விருந்தோம்பி, இனிமையாய்ப் பேசி  ஒருவர் செய்த நன்மையை மறவாது நடுவுநிலைமையுடன் வாழவேண்டும். பிறர்மனைவியை விரும்பாதே! பொறுமையாய் இரு! பொறாமபப்படாது, மற்றவர் பொருளை எடுக்கநினையாது, புறங்கூறாமல் பயனற்ற சொற்களைச் சொல்லாது இரு! தீவினை செய்யப்பயப்படு! எனக் கட்டளை இடுகிறது.

4.1 இல்லறப்பண்பு 

அன்பாக வாழ்ந்தால் உலகில் இன்பமாய்வாழலாம்.19  சுற்றத்தோடு சேர்ந்து ஒழுகி, இல்வாழ்வு வாழ்வது விருந்தினர்க்கு உதவ20 எனக்கூறி, விருந்தோம்பலின் மிகவுயர் பண்பை

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - (குறள்: 322)

எனக்காட்டுகிறது. வியாபாரிகளும் பிறர்பொருளைத் தமது பொருளாகக்கருதி நடுவுநிலைமை உடன் வியாபாரம் செய்யட்டும்.21 நாவைக் காக்காவிடின் வசையால் துன்பம்வரும்.22  ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்ற வேண்டும்.23 உலகில் புகழுக்குரியவர் யாரென்றால் பிறருக்கு உரியவளின் தோளைச் சேராதவர்24 என இல்லறப்பண்பை ஊட்டுகிறது.


4.2  இல்லறத்தின் சிறப்பு

இல்வாழ்க்கையின் அன்புப் பண்போடு பிறர்க்குச் செய்யும் அறமே அதன்பயன்.25 நன்மக்களைப் பெறுவது இல்வாழ்க்கையின் சிறப்பாகும்.26

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது - (குறள்: 68)

உலகவுயிர் நேயமே இல்லறத்தின் நோக்கம் என்பதை இஃது உணர்த்துகிறது. உங்களை நீங்கள் விரும்பினால் எவ்வித தீமையையும் செய்யாதீர்கள்!27 தன்னை ஒத்த உயிர்களின் தன்மையை அறிபவனே ஒப்புரவாளன்.28 வறியவர்க்குக் கொடுப்பதே ஈகையாகும். மற்றெல்லாம் கொடுத்து வாங்கும் தன்மையதே.29 எதைச்செய்தாலும் புகழ்சேரச் செய்க. இல்லையேல் செய்யாதிருத்தல் நன்று.30  குறுந்தொகை இல்லறத்தில் சேரயிருக்கும் காதலன் தன் காதலியைமருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே31 எனக்கூற, குறளும்தன் நோய்க்கு தானே மருந்து32 என்கிறது. இப்பண்புகளை இல்லறமே ஊட்டுகிறது.


5. துறவறம் 

தம்கருமம் செய்யும் தவத்தோர்33 அருளோடு புலால் உண்ணாது, சினமற்றுப் பிறருக்குத் துன்பம் செய்யாதவராய் இருக்கவேண்டும். துறவறம் மேற்கொள்ள வேண்டுமானால் எல்லாம் இருக்கும் போதே துறக்கவும். துறந்தபின்னர் வரும் இன்பங்கள் பலவாகும்.34 ஏனெனின்

யாதனின் யாதனின் நீங்கினான் நோதல்

அதனின் அதனின் இலன் - (குறள்: 341)

 

5.1 துறவறப்பண்பு

பலவழியில் ஆராய்ந்தாலும் அருளே வாழ்வுக்குத்துணையாகும்.35மனத்தொடு வாய்மை மொழி36 எனக்கூறி வாய்மைக்கும் உண்மைக்கும் இடையிலான பண்பு வேறுபாட்டையும் உணர்த்துகிறது.

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள் - (குறள்: 312)

இதுவே துறவறத்தின் உயர்பண்பு. உண்மையைக் கண்டால் மெய்பொருளை அறியலாம்.37


5.2 துறவறத்தின் இழிபண்பு

திருக்குறளின் கூடாவொழுக்கம் என்னும் அதிகாரம் துறவறத்தின் இழிபண்பையே சாடுகிறது. வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம், வானுயர் தோற்றம் எவன்செய்யும், வலியில் நிலைமையான் வல்உருவம், வஞ்சித்து வாழ்வார், மூக்கிற்கரியார் எனப்படம் பிடித்துக் காட்டுகிறது.38 தவவேடத்திலிருந்து பெண்களை தம்வயப்படுத்தல் புதரில் மறைந்துநின்று வேடன் பறவைகளைப் பிடிப்பது போன்றது.

 தவம் மறைத்து அல்லவைசெய்தல் புதல்மறைத்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று - (குறள்: 274)

திருக்குறள் நற்பண்புகளை மட்டுமல்ல இது போன்ற இழிபண்புகளையும் வெளிச்சம்போடுகிறது.


5.3 துறவறத்தின் சிறப்பு

துறந்தார் பெருமை உலகில் இறந்தவர்களை அளவிடுவது போன்றது.39 எது வேண்டுமோ அது வேண்டியபடி கிடைப்பதே துறவறத்தின் சிறப்பு.40 அரிய செயல்களைச் செய்பவர் பெரியோர், அப்படிச் செய்யமுடியாதவர் சிறியோர், எனச்சுட்டி பெரியோர் சிறியோருக்கு இடையிலான மனிதப்பண்பைத் தெளிவுபடுத்துகிறது.


6. வாழ்வியல்

பொருளும் இன்பமும் வாழ்வியலின் இருகண்கள். நல்லரண் சூழ்ந்த நாட்டையும் பொருளையும் குடிகட்குக் காத்துக் கொடுப்பது அரசின் பண்பு. அது அரசியலாகும். இன்பம் இல்லறப்பண்பு. களவும் கற்பும் அதனுளடக்கம். நாட்டையாள்பவன் கல்வியைக் கசடறக்கற்று அதன்படி நடந்து தூங்காது துணிந்து செயலாற்ற வேண்டும்.41 கற்காவிடினும் கற்றதைக்கேள். இரக்கமுள்ளவனாய் நீதியோடு எப்படியுலகம் செயற்படுகிறதோ அப்படிச்செயற்படு.42 என உலகப்பண்பைக் கூறுகிறது.


6.1 வாழ்வியற் பண்பு

பகையை வேடிக்கையாகவும் விரும்பாதே!43 துன்பந் தாங்காது அழுதகண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை!44 தாய் பசியால் வாடுவதைக் கண்டாலும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதே!45 கயவர் தாமுண்ட எச்சிற்கையையும் பிறருக்கு உதறார். அவர்கள் கன்னத்தைக் கைமுட்டியால் உடை.46 நட்பென்பது சிரித்துப்பேசி மகிழ்வதற்காகவல்ல, இடித்துரைத்து திருத்துவதற்காகவே!47 உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து நன்றாகப் பசித்ததும் மாறுபாடு இல்லாத உணவை உண்! உன் உயிருக்கு ஒரு கேடும் நேராது!48 என்று வருந்துன்பங்களை ஈடுகொடுக்க உதவும் பண்புகளை அடித்துச்சொல்கிறது


இவற்றிற்குப் பலபடி மேலே சென்றுபிச்சையெடுத்து உயிர்வாழும் நிலைவரின் இவ்வுலகைப் படைத்தவன் கெட்டழிக!”49 எனக் கவல்கிறது. அதனால்ஊழின் பெருவலி யாவுள?”50 எனக்கேள்வியும் எழுப்புகிறது. இதற்கான விடையைஊழ்வினை உருத்து வந்தூட்டும்51 என்று சிலப்பதிகாரம் கூறுங்கதை தருகிறது. வாழ்வியலில் எது? ஏன்? எதற்கு நடக்கிறது? எனும் கேள்விக்குப் பதில் கிடையாது.


6.2 வாழ்வியலின் சிறப்பு

அத்தகையஊழையும் முயற்சியால் வெல்லலாம்52 என்பதும் வாழ்க்கையின் சிறப்பே! நிறைந்த செல்வமும் குறையாத விளைச்சலும் கற்ற அறிஞரும் இருப்பினும் அழிவுகளை அறியாததாய் அழிந்தாலும் வளங்குன்றாததே தலைசிறந்த நாடாகும்.53 குடிமக்களை அணைத்து நீதியோடு ஆள்வோரின் கீழ் இவ்வுலகம் நிற்கும்.54 ஆள்வோருங்கூட உழவரின் பின்னே.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல்பவர் - (குறள்: 1033)

அதனால் செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கலாம்.55 வறியவரின் அழிபசிதீர்த்து, ஈத்து உவக்கும் இன்பத்தை அறியலாம்.56 நன்மக்களைப் பெற்று சான்றோன் எனக்கேட்ட தாயாக வலம் வரலாம்.57 எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்.58 குற்றமிலானாய் குடிசெய்து வாழலாம்.59 சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகலாம்.60 நேற்று இருந்தவன் இன்று இல்லாமல் போவான் எனும் பெருமைஉடையது இவ்வுலகம்61 என்பதையும் தெளியலாம். இவற்றுக்கு மேலாகத் எம்காதற் துணையை எண்ணி மகிழலாம்.

எள்ளின் இளிவாமென்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு   - (குறள்: 1298)


7. திருக்குறளின் நோக்கம்

உலகவழக்கு உயர்ந்தோர் மேலேயே தங்கியிருக்கிறது. நிகழ்வுகளும் அவர்களால் நிகழ்கின்றன.

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான62

என தொல்காப்பியம் கூறுகிறது. திருக்குறளும் பண்புடையவரிடமே உலகம் தங்கியிருக்கிறது. அப்பண்பு இல்லையேல் உலகம் மண்ணுக்குள் புகுந்து அழிந்துவிடும்63 என அச்சுறுத்துகிறது. உலகையே இயக்கும் ஆற்றல் மானுடப்பண்புக்கு உண்டு. ஆதலால் மனிதரின் நற்பண்பை வளர்த்து மனிதப்பண்பை ஊட்டுவதே திருக்குறளின் நோக்கம் என்பதை அறியலாம்.

இனிதே,

தமிழரசி.


அடிக்குறிப்புகள் 

  1. கலித்தொகை, கழக வெளியீடு, 1965, பக். 413, 133: 8.
  2. புறநானூறு, கழக வெளியீடு, 1996, முதற்பகுதி, பக். 421, 195: 6 - 9.
  3. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள்: 469.
  4. மேற்படி., குறள்: 993.
  5. மேற்படி., குறள்: 620.
  6. மேற்படி., குறள்: 625.
  7. மேற்படி., குறள்: 978.
  8. மேற்படி., குறள்: 1088.
  9. மேற்படி., குறள்: 1289.
  10. நற்றிணை, எஸ் ராஜம் வெளியீடு, 1957, பக். 5, கடவுள் வாழ்த்து: 1- 2.
  11. பதினொராம் திருமுறை, வர்த்தமானன் பதிப்பகம், 1999, பக். 84, அற்புதத் திருவந்தாதி: 77: 1- 2.
  12. ஆண்டாள் பாசுரம், திருப்பாவை: 4: 1.
  13. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள் எண்கள்: 11, 12, 14, 16, 17, 20.
  14. மேற்படி: குறள்: 742.
  15. மேற்படி: குறள்: 33.
  16. மேற்படி: குறள்: 457.
  17. புறநானூறு, கழக வெளியீடு, 1996, முதற்பகுதி, பக். 396, 182: 5 - 9.
  18. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள்: 231.
  19. மேற்படி: குறள்: 75.
  20. மேற்படி: குறள்: 81.
  21. மேற்படி: குறள்: 120.
  22. மேற்படி: குறள்: 127.
  23. மேற்படி: குறள்: 131.
  24. மேற்படி: குறள்: 149.
  25. மேற்படி: குறள்: 45.
  26. மேற்படி: குறள்: 60. 
  27. மேற்படி: குறள்: 209.
  28. மேற்படி: குறள்: 214.
  29. மேற்படி: குறள்: 221.
  30. மேற்படி: குறள்: 236.
  31. புலியூர்க்கேசிகன், குறுந்தொகை, பாரிநிலையம், 1965, பாடல் எண்: 71.
  32. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள்: 1102.
  33. மேற்படி: குறள்: 266.
  34. மேற்படி: குறள்: 341.
  35. மேற்படி: குறள்: 242.
  36. மேற்படி: குறள்: 295.
  37. மேற்படி: குறள்: 355.
  38. மேற்படி: குறள் எண்கள்: 271, 272, 273, 276,277.
  39. மேற்படி: குறள்: 22.
  40. மேற்படி: குறள்: 265.
  41. மேற்படி: குறள்: 383.
  42. மேற்படி: குறள்: 426.
  43. மேற்படி: குறள்: 871.
  44. மேற்படி: குறள்: 555.
  45. மேற்படி: குறள்: 656.
  46. மேற்படி: குறள்: 1077.
  47. மேற்படி: குறள்: 784.
  48. மேற்படி: குறள்: 944/945. 
  49. மேற்படி: குறள்: 1062.
  50. மேற்படி: குறள்: 380.
  51. சிலப்பதிகாரம், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, 1985, பக் 4, 57. 
  52. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள்: 620.
  53. மேற்படி: குறள்: 731/736.
  54. மேற்படி: குறள்: 544.
  55. மேற்படி: குறள்: 86.
  56. மேற்படி: குறள்: 226/228.
  57. மேற்படி: குறள்: 69.
  58. மேற்படி: குறள்: 666.
  59. மேற்படி: குறள்: 1025.
  60. மேற்படி: குறள்: 524.
  61. மேற்படி: குறள்: 336.
  62. புலியூர்க்கேசிகன், தொல்காப்பியம், பாரிநிலையம், 1980, பொருள்: 638.
  63. தமிழரசி, திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி, 2007, குறள்: 996.

No comments:

Post a Comment