Monday, 31 December 2018
Friday, 21 December 2018
Tuesday, 18 December 2018
Thursday, 13 December 2018
குறள் அமுது - (140)
பொருள்:
பின்னர் நினைத்துக் கவலைப்படக் கூடிய செயல்களச் செய்ய வேண்டாம். நினைத்துக் கவலைகொண்டாலும் மீண்டும் அது போன்ற செயலைச் செய்யாதிருப்பது நல்லது.
விளக்கம்:
இத்திருக்குறள் வினைத்தூய்மை என்னும் அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளாகும். நற்செயல் செய்வதை வினைத்தூய்மை என்பர். எற்று - நினைத்து, எற்றுதல் - நினைத்தல். பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்குதல் நற்செயலே ஆகும். ஆனால் நாம் ஒரு தீயசெயலை செய்துவிட்டு அதை நினைந்து நினைந்து தன்னிரக்கம் கொள்ளுதல் நல்ல செயலல்ல.
பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்போர் மிகச்சிலரே. தாம் தீமை செய்கின்றோம் என்பதை உணராமலேயே தீமை செய்வாரும் உளர். அறிந்தோ அறியாமலோ ஒழுக்கம் தவற நேரிட்டாலோ, கெட்ட வழிகளில் செல்ல நேரிட்டாலோ பிறருக்குத் தீமை செய்ய நேரிட்டாலே காதலியோ காதலனோ கைவிட்டாலோ அவற்றை ஓயாமல் எண்ணுவது தவறு. அது சில வேளைகளில் அப்படி நினைப்போரது மனநிலையைப் பாதிக்கும். அது புத்திப் பேதலிப்பை ஏற்படுத்தி தன்னிலை மறந்து தகாத செயல்களைச் செய்யத் தூண்டும்.
“பணத்தை செலவு செய்தாலும் மனத்தை செலவு செய்யாதே
மனம் வாசனையானால் வாய்ப்பது முத்து”
இது என் தந்தை கூறும் பொன்னான ஒரு சொற்றொடர். பணத்தை மட்டுமல்ல நம்மை நாமே தீயவழியில் செலவு செய்ய நேரிட்டாலும் கழிவிரக்கம் கொள்ளக்கூடாது. [நடந்ததை எண்ணி ஒருவர் தன்மேல் கொள்ளும் பேரிரக்கம் கழிவிரக்கமாகும்.] தன்னிரக்கம் எம்மை மனநோயாளர்களாக்கும். மனதை செலவு செய்தால் மனநோயாளர் ஆவோம். மன அழுக்குகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எம்மை மன அழுத்தத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே திருவள்ளுவர் இக்குறளில் செய்தவற்றை எண்ணி தன்னிரக்கம் கொள்ளவேண்டாம் என்கிறார்.
அப்படி நினைப்போமேயானால் திரும்பவும் [மற்று] அதுபோன்ற [அன்ன] செயலைச் செய்யதிருப்பது நன்று.
Monday, 10 December 2018
Wednesday, 5 December 2018
நின் எழில் காணேனோ!
பல்லவி
காணேனோ! நின் எழில்
காணேனோ! கந்தனே!
- காணேனோ
அநுபல்லவி
நாணேனோ! உன் முன்
நாணேனோ! சித்தனே!
- காணேனோ
சரணம்
நானேனோ உன்னை
நினைந்து நலிகிறேன்
நீயேனோ என்னை
நினைந்து நளிக்கிறாய்
தீயேனோ முன்னை
தீயால் அழிகிறேன்
மாயேனோ பின்னை
மறுமை தீயவே
- காணேனோ
இனிதே,
தமிழரசி
சொல்விளக்கம்:
நலிகிறேன் - மெலிகிறேன்
நளிக்கிறாய் - வருத்துகிறாய்
முன்னைத்தீயால் - முற்பிறப்பு வினைப்பயன்
மாயேனோ - அழிந்து போதல்
பின்னை மறுமை - வர இருக்கும் பிறப்பு
தீயவே - இல்லாது எரிந்து நீறாகித் தீர்ந்து போதல்
Monday, 3 December 2018
மகாமேரு மலர்
வெண்ணிற மகாமேரு மலர்
மனிதர்கள் தமது வாழ்நாளில் பார்க்க முடியாத மலர்களில் இதுவும் ஒன்று. குறிஞ்சிமலர் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும். ஆனால் மகாமேரு மலர் 400 வருடங்களுக்கு ஒருமுறை பூக்குமாம். இம்மலர் இந்த வருட [2018] ஆவணி மாதத்தில் பூத்திருந்தது. இப்பூவைத் தேடி மேருமலைக்குச் செல்ல வேண்டாம்.
சதுரகிரி மலை
மதுரை மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர்[ஆண்டாளின் ஊர்] இருக்கிறது. அதிலிருந்து 10கிமீ தூரத்தில் சதுரகிரி மலை உள்ளது. சித்தர்களும் மூலிகைகளும் இருக்கும் இடம் சதுரகிரி மலையாகும். ஆடி அமாவாசை அன்று அங்குள்ள அருவியில் நீராடுவர். அத்தகைய சதுரகிரி மலையில் மகாமேரு மலரும் பூத்தது. எனது சித்தி அனுப்பி வைத்த மகாமேருமலரின் படத்தை உங்களுடன் பகிர்கிறேன்.
இம்மலரை மகாமேரு புஸ்பம் என்றும் அழைப்பர். குறிஞ்சி மலர் போல் நம் குறிஞ்சி நிலத்திற்கு சொந்தமான மலர் என்கின்றனர்.
இனிதே,
தமிழரசி.
Tuesday, 27 November 2018
Friday, 23 November 2018
குறள் அமுது - (139)
குறள்:
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்” - 158
பொருள்:
மனச்செருக்கால் நீதி இல்லாத பெருங்கேடு செய்தாரை நீங்கள், உங்களது தகுதியால் வென்றுவிட வேண்டும்.
விளக்கம்:
இத்திருக்குறள் பொறை உடைமை என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக இருக்கிறது. எதனையும் பொறுத்துக் கொள்ளல் பொறையுடைமையாகும். செருக்கின் மிகுதியால் நீதியில்லாதவற்றைச் செய்வோரை என்ன செய்யலாம் என்பதையே இக்குறள் சொல்கிறது. மனிதர்களுக்கு செருக்கு பலவழிகளில் வந்து சேர்கிறது. அதனை ஒருவித அறியாமை என்றும் சொல்லலாம்.
அது திடீரெனக் கிடைக்கும் பணப்பெருக்கம், பெரும் பதவி, கல்வி, அரசியல் செல்வாகு, ஆள், அடிமையால் வந்த வலிமை, சிறந்த நடிகன், கலைஞன், அறிஞன் எனும் எண்ணத்தால் வரும்பெருமிதம் போன்றவற்றால் உண்டாகிறது. பெரும்பாலும் சூழ்ந்திருப்போர் போடும் கூலக் கும்புடு அவர்களிடம் ஆணவத்தை வளர்க்கிறது. இவை மட்டுமல்ல ஒருசிலருக்கு இருக்கும் கயமை, பொறாமை, போன்ற குணங்களும் செருக்கடைய வைக்கின்றன.
மிகக்கூடுதலாக ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அதானல், அந்த மிகுதியால் வருவது இறுமாப்பு எனும் செருக்கு. அதன் காரணமாக தாம் யாருக்கும் எதனையும் செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகும். அச்செருக்கு நீதியில்லாத செயல்களைச் செய்ய வைக்கும். கொடுமை, கொள்ளை, கொலை போன்ற செயல்களை மிக்கவை என்கிறார். அப்படிச் செய்தோரையும் எமது பொறுமை என்ற தகுதியால் வெற்றி கொள்ளவேண்டுமாம்.
எம்மைவிட வலியோரை பொறுமையைக் கைக்கொண்டு அறிவால் வெற்றிகொள்ள வேண்டும்.
மனித வாழ்வியலுக்கு பொறையுடையாகிய பொறுமை மட்டும் இருந்தால் போதாது. அதனை ஆசாரக்கோவையில்
“நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லொடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியொடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து” - [ஆசாரக்கோவை]
எனக் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் மிக அழகாகச் சொல்கிறார்.
தமக்குப் பிறர் செய்த நன்மையை மறவாதிருத்தல், பொறுமை, இனிமையாகப் பேசுதல், எந்த உயிர்க்கும் துன்பஞ்செய்யாதிருத்தல், கல்வியையும், ஒப்புரவையும் மிக ஆழமாக அறிந்து வைத்திருத்தல், அவற்றால் அறிவு, நல்ல இயல்புடையாரோடு நட்பாக இருத்தலும் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்திற்கு வித்தாகுமாம். ஆதலால் பொறுமை பின்னால் வரும் பல துன்பங்களில் இருந்து எமைக்காக்கும்.
Wednesday, 21 November 2018
தாயகமண்ணை நினைத்திடும் போது
தாயக மண்ணை நினைத்திடும் - போது
சேயென துள்ளம் சிவக்கின்றதே
காயுள் கனியும் சுவை போல - என்
கருத்துள் கனிந்த காவியமே
தீயுன் உடலைத் தழுவிடுங்கால் - தீரா
துயரென் உள்ளம் தழுவியதே
தோயும் நினைவுச் சிற்றலையில் - நெஞ்சு
தீட்டும் துயரம் பற்பல காண்
படிக்கும் காவியச் சொற்களிலே - நின்
பருவ இனிமை மின்னலிடும்
துடிக்கும் எந்தன் உளங்கூட - உன்
தூய காதலில் தாளமிடும்
கடிக்கும் சுவை மாங்கனியுமே - இளங்
காலக் களிப்பை நினைவூட்டும்
வடிக்கும் ஓவிய வரியெல்லாம் - உந்தன்
வடிவ அசைவின் எழில்காட்டும்
இருளைக் கண்டே அஞ்சுகிறேன் - நின்
எழிலே இருளில் மிஞ்சுவதால்
கரிய கடலைக் காணுகையில் - சுழல்
காவிய விழிகளை மீட்டுகிறாய்
கருத்த வானைப் பார்த்திட்டால் - என்
கனவுத் துடிப்பின் தாரகையாய்
விரிந்தே கண்ணைச் சிமிட்டியெங்கோ - எனை
வாவென் றழைத்தே மறைகின்றாய்
பூரண நிலவின் பொற்கதிரில் - மது
பொங்கும் இளமைப் பேருருவாய்
தாரணி மகிழப் பண்மீட்டும் - ஓடை
தாளங் கூட்டும் இசையொலியாய்
சீரணிக் கனவின் கருத்தெனவே - என்றன்
சிந்தனைக் கவியின் உயிர்த்துடிப்பாய்
பாரினில் வாழ்ந்த உனைமீண்டும் - நான்
பார்த்து இரசித்து மகிழ்வேனோ!
Monday, 19 November 2018
திருவள்ளுவர் திருநாள் விழா எடுத்தோர்
அநுராதபுரத்தில் நடந்த திருக்குறள் மாநாடு [திருவள்ளுவர் திருநாள்] மலர் 1955
ஈழத்தில் வாழ்ந்த அறிஞர்கள் பலர் தமிழை வளர்ப்பதற்காகப பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சி வை தாமோதரம்பிள்ளை, நாவலர் பெருமான் போன்றோரைச் சொல்லலாம். அவர்களைப்போல தமிழக அறிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மாமனெல்லையில் வாழ்ந்த நமசிவாய முதலியார். அவர் மானிப்பாயில் பிறந்த போதும் கொழும்பு, கண்டி, மாமனெல்லை என வாழ்ந்ததால் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குடத்துள் விளக்காயின போலும்.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைப் படித்து அதன்மேல் காதல் கொண்டோர் பலராவர். அந்தக் காதலால் ஒருசிலர் திருவள்ளுவரைப் புகழ்ந்துபாட சிலர் சிலை வைத்தனர். இன்றும் அது தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஆனால் தமிழரை, உலகை ஒன்று படுத்தவும் பண்டைத் தமிழரின் பண்பாட்டை, நனிநாகரிகக் கொள்கையை உலகறியச் செய்யவும் திருக்குறளே சிறந்தது என ‘நமசிவாய முதலியார்’ எண்ணினார்.
அதனால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் திருநாளான வைகாசி மாத அனுட நாளில் ‘திருவள்ளுவர் விழா’ கொண்டாட முடிவெடுத்தார். ஏனெனில் 'திருமயிலையில் [மயிலாப்பூர்] உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் வைகாசி அனுடத்தை திருவள்ளுவர் நாளாகச் சிறப்பித்துக் கொண்டாடும்’ குறிப்பொன்று அவரது வீட்டிலிருந்த பழைய திருக்குறள் புத்தகத்தில் இருந்தது. அதனை ஆதாரமாகக் கொண்டு ‘வைகாசி அனுட நாளை’ திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டார்.
'திருவள்ளுவர் கழகம்' என்ற பெயரில் ஒரு கழகத்தை உருவாக்கி ‘திருவள்ளுவர் விழாவை’ 1927ம் ஆண்டு வைகாசி மாதம் அனுட நாளில் 17ம் திகதி [17-05-1927] கண்டியில் கொண்டாடினார். அதற்கான விழா மலரும் வெளியிட்டிருந்தார். அவ்விழா ‘கண்டிப் பெரகராவுக்கு’ அடுத்த நாள் நடைபெற்றது. அவ்விழாவுக்கு தமிழகத்திலிருந்து வடிவேலு செட்டியாரும் வந்திருந்தார். வடிவேலு செட்டியார் திருக்குறளின் பரிமேலழகர் உரைக்குத் தெளிவுரை எழுதியவர். அவர்களது முயற்சியால் தமிழ்நாட்டின் சில இடங்களிலும் அதே நாளில் ‘திருவள்ளுவர் விழா’ கொண்டாடினர். நமசிவாய முதலியார் இறந்ததால் அவரது முயற்சி மெல்ல மறக்கப்பட்டது. ஆனால் தென்காசி திருவள்ளுவர் கழகமும் திருகோணமலை திருவள்ளுவர் கழகமும் புங்குடுதீவு வல்லன் திருவள்ளுவர் கழகமும் அதனை மறக்காது கொண்டாடியதாம். இக்கழகங்கள் 1927ல் தொடங்கப்பட்டவை. தென்காசி திருவள்ளுவர் கழகம் இன்றும் இயங்குகின்றது என நினைக்கிறேன்.
இலங்கையைச் சேர்ந்த நமசிவாயமுதலியாரே முதன் முதலில்[1927]ல் 'திருவள்ளுவர் விழா’ எடுத்தவர் ஆவார். அதனால் எமக்கெல்லாம் முன்னோடியாய் வழிகாட்டியாய் திகழ்கிறார். இவரின் தந்தை மானிப்பாய் உலகநாதர் பரம்பரையைச் சேர்ந்தவர். தாயார் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரும் மறைமலை அடிகளும் தாய்வழி உறவு முறையினர். இவர் பஞ்சதந்திரம் போன்ற தமிழ், சமஸ்கிருத நூல்களை சிங்களத்தில் மொழி பெயர்த்தார். அதனால் 1901ல் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அச்சங்கத்தார் இவரை பலமுறை அழைத்து மதிப்பளித்தனர்.
இவரது காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த கா நமச்சிவாயமுதலியர் 1935ல் திருவள்ளுவர் திருநாள் கழகம் ஒன்றை அமைத்து வைகாசி மாதம் 18ம் 19ம் திகதிகளில் [18, 19-05-1935] சென்னையில் திருவள்ளுவர் திருநாள் விழாவை நடாத்தினார். அதுவும் வைகாசி அனுடத்திலேயே கொண்டாடப்பட்டது. தமிழகத்து நமச்சிவாய முதலியாரின் முயற்சியால் கொண்டாடப்பட்டு வந்த ‘திருவள்ளுவர் திருநாள் விழாவும்’ கால ஓட்டத்தில் மெல்ல மங்கியது.
மீண்டும் இலங்கையில் திருவள்ளுவரைப் போற்றுதற்காகத் 'தமிழ் மறைக் கழகம்’ 1952ல் கொழும்பில் தொடங்கப்பட்டது. ‘தமிழ் மறைக்கழகம்’ வித்துவான் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களின் எண்ணத்தின் உருவம் அது. அவரும் பண்டிதர் மு ஆறுமுகனும் ஆண்டு தோறும் வைகாசி அனுட நாளில் ‘திருக்குறள் மாநாடு’ என்ற பெயரில் திருவள்ளுவருக்கு விழா நடாத்தி வந்தனர். தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ் போன்ற இடத்தில் வாழ்ந்த தமிழரையும் ஒருங்கிணைத்து வைகாசி அனுட நாளை திருவள்ளுவர் திருநாளாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வெற்றியும் கண்டனர்.
தமிழ்மறைக் கழகத்தின் முதலாவது 'திருக்குறள் மாநாடு' 28, 29, 30-05-1953ல் திருகோணமலை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இரண்டாவது ‘திருக்குறள் மாநாடு’ 16, 17, 18-05-1954ல் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. மூன்றாவது ‘திருக்குறள் மாநாடு 04, 05-06-1955ல் அனுராதபுர விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. திருக்குறள் ஏட்டுச்சுவடியை கதிரேசன் கோயில் யானையின் அம்பாரியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த திருக்குறள் மாநாடு நடந்த பொழுது தமிழ்மறைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராய் இருந்தோரே மேலே படத்தில் இருப்போர். அவர்களில் எத்தனை பேர் தீவுப்பகுதியைச் சேர்ந்தோர் என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் இருப்பவர்களில் சுதந்திரன் ஆசிரியர் எஸ் டி சிவநாயகம், ஆசிரியர் இ சி சோதிநாதன் (எனக்கு ஏடு தொடக்கிய குரு), பண்டிதர் கா பொ இரத்தினம் (பேரனார்), பண்டிதர் மு ஆறுமுகன் (தந்தை), சி. க நடராசா (பேரனார்), வித்துவான் ச சபாபதி, கு வி செல்லத்துரை (உறவினர்) போன்றோர் நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே என் மேல் அன்பைச் சொரிந்தோராவர். அவர்களது அன்பும் ஆசியும் நான் 'திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி' என்ற நூலை எழுதக் காரணம் எனலாம்.
அநுராதபுரத்தில் நடந்த மாநாட்டைப் பற்றி பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இறந்த பொழுது, பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் அவர்கள் (நீர்வேலி), "பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றுத் தமது இல்லத்தில் உணவும் தங்குமிடமும் கொடுத்து உதவிய காட்சி இன்றும் மனக்கண் முன் நிழலாடுகின்றது. அவருடைய அருமை மனைவியாரும் அவருடன் சேர்ந்து அனைவரையும் உபசரித்தமை எல்லோருடைய மனத்தையும் கவர்ந்திருந்தது" என எழுதியிருந்தார். அதற்குப் பின்னர் அநுராதபுரத்தில் அத்தகைய ஒரு தமிழ்மாநாடு நடக்கவேயில்லை. இனி நடக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
1955
1955ம் ஆண்டு தமிழ் மறைக் கழகம் வெளியிட்ட 'திருவள்ளுவர் திருநாள் மலர்' முதற்பக்கத்தில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் எழுதியதை இப்படம் காட்டுகிறது. அவர் அதை எழுதி 65 ஆண்டுகள் ஆகியும் நம்மில் எத்தனை பேர் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாளாகிய வைகாசி அனுடத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்? இதற்காக பலநாட்டு தமிழறிஞர்களும் 1927ல் இருந்து பாடுபட்டு பாதுகாத்த நாளை குழி தோண்டி புதைத்துத்துள்ளோம்.
வள்ளுவர் திருநாளை கருணாநிதிக்காக தை மாதத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறோம். செல்லரித்துக் கிடந்த சங்க இலக்கியநூல் ஏடுகளை அச்சிட்டு தமிழ் அன்னைக்கு செழுமை சேர்த்தவர் உ வே சுவாமிநாதையர். அவரும் அவர் போன்ற பலரும் திருவள்ளுவர் வைகாசி அனுடத்தில் பிறந்து, மாசி உத்திரத்தில் முத்தியடைந்தார் என்று எடுத்துச் சொல்லியும் எம் காதுகள் கேட்காது இருப்பது ஏனோ! 1927ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் திருவள்ளுவர் விழா வைகாசி அனுடத்தில் [கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக] கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. பழைய மெய்கண்டான் நாட்காட்டியிலும் [Calendar] வைகாசி அனுடமே திருவள்ளுவர் நாளாக குறிக்கப்பட்டிருந்ததை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எப்படி தை மாதத்திற்கு அந்நாள் மாறியது?
'திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு' விழாவும் 'தமிழ்மறைக் கழகத்தின் பதினாறாவது' மாநாடும் கிளிநொச்சியில் 1969ல் வைகாசி அனுடத்திலேயே நடாத்தப்பட்டது. அம்மாநாட்டையும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களும் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களும் ஒன்று சேர்ந்தே மிகச்சிறப்பாக நடாத்தினர். அப்போது பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள் கிளிநொச்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். திருவள்ளுவர் ஈராயிர ஆண்டு மலரில் பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் "வாழ்வில் துன்பந் தொடும் போதெல்லாம் அறிஞர்கள் வள்ளுவதேவரைச் சரணடைகின்றனர். அவர் திருவாய் மலர்ந்த ஆயிரத்து முன்னூற்று முப்பது அருந்தேன் குறள் மலரிலும் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கின்றது. எமது குழந்தைகளும் சீரிய வாழ்வு வாழ வேண்டுமானால் வள்ளுவர் தந்த வான்மறையைப் போற்றி அதன்படி ஒழுகி எல்லா உயர்வுகளையும் அடைவார்களாக!" என எழுதியிருந்தார்.
தமிழ் மறைக்கழகம் தொடங்கிய நாளில் இருந்து நாடெங்கும் திருக்குறள் போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கிய பெருமையும் இக்கழகத்திற்கு உண்டு. அதற்காகத் திருக்குறளைப் படித்தோர் பலராவர் "வான்மறை தந்த வள்ளுவன் வழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வாங்கு வாழலாம்" என எண்ணியே நம்முன்னோர் 1927ல் இருந்து திருவள்ளுர் விழா கொண்டாடினர். இன்று எத்தனை பேர் திருவள்ளுவரை நினைக்கிறோம்?
சிலப்பதிகாரத்திற்கு மட்டுமல்ல திருவள்ளுவருக்கு விழா எடுத்த பெருமையும் புங்குடுதீவாருக்கு உண்டு. புங்குடுதீவு வல்லனில் 1927ல் தொடங்கிய ‘திருவள்ளுவர் கழகம்’ அங்கு இப்பொழுதும் இருக்கிறதா? அறிந்தவர்கள் எவராவது சொல்லுங்களேன்.
சிலப்பதிகாரத்திற்கு மட்டுமல்ல திருவள்ளுவருக்கு விழா எடுத்த பெருமையும் புங்குடுதீவாருக்கு உண்டு. புங்குடுதீவு வல்லனில் 1927ல் தொடங்கிய ‘திருவள்ளுவர் கழகம்’ அங்கு இப்பொழுதும் இருக்கிறதா? அறிந்தவர்கள் எவராவது சொல்லுங்களேன்.
இனிதே,
தமிழரசி.
Subscribe to:
Posts (Atom)