Friday, 28 April 2017

முத்தமிழ் எனும் சொல்லைச் சொன்னவர் யார்?

சீத்தலைச் சாத்தனார்

முதன் முதலில் முத்தமிழ் என்ற சொல்லைச் சொன்னவர் யார்?

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கதுங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா”
- (நல்வழி: கடவுள் வாழ்த்து)
என்று ஔவையார் கேட்டிருப்பதால் அவரே சொன்னார் எனச் சிலர் சொல்கின்றனர். இவ்வெண்பாவில் ‘சங்கத் தமிழ் மூன்று’ எனக் கூறியுள்ளாரே அல்லாமல் முத்தமிழ் எனும் சொல்லைச் சொல்லவில்லை.

வேறு சிலர் கம்பன் சென்னான் என்கின்றனர். அவர்கள் கம்பன் சொன்னதாகக் குறிப்பிடும் பாடலில் தேவர்நாடு கூடத் தமிழர் நாட்டிற்கு இணையாகாது என்பதை எடுத்துக் காட்டக் கம்பன் ‘முத்தமிழைக்’ கூறுகிறான்.
“அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கு மென்றால் அது ஒக்குமோ
எத்திறத்தினும் ஏழுலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்”
என ‘முத்தும் முத்தமிழும் தேவர் நாட்டில் கிடைக்குமா? ஆதலால் தமிழ் நாட்டிற்கு தேவர் நாடு ஒப்பாகாது’ எனக் கூறியுள்ளான். கம்பன் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். எனவே அக்காலத்திற்கு முன் எவராவது கூறியிருக்கிறார்களா?

சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தரும்
முத்தமிழே கற்று முழங்கு மெய்ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி”
எனப்பாடியிருக்கிறார். அவரும் பிற்காலத்தவேரே. அகத்தியரை ‘முத்தமிழ் முனிவர்’ எனச்சொல்லும் ‘காஞ்சிபுராணமும்’ பிற்காலத்தைச் சேர்ந்ததே.

'முத்தமிழ்க் காப்பியம்' என்னும் பெயர் சிலப்பதிகாரத்திற்கு உண்டு. ஏனெனில் பாடல்கள் இடையே உரைநடை வருவதாலும் இசையுடன் கூடிய நாடக வெண்பாக்கள் இருப்பதாலும் முத்தமிழ்க் காப்பியம் என்கின்றோம். சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க்காப்பியம் என்று யார் எப்போது சொன்னார் என்பதை அறியமுடியவில்லை.

திருவள்ளுவரின் திருக்குறளைப் புகழ்ந்து சங்ககாலப் புலவர் பலரும் பாடியுள்ளனர். அத்தொகுப்பு ‘திருவள்ளுவமாலை’ என அழைக்கப்படும். அதில் ஒரு வெண்பா
மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்”
என இருக்கிறது. அதில் சீத்தலைச் சாத்தனார் இவ்வெண்பாவை இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரே மணிமேகலையை இயற்றியவர். 'முத்தமிழ்' என்ற சொல்லை முதன் முதல் மொழிந்தவர் சீத்தலைச் சாத்தனார் எனக் கருதுவதே பொருந்தும்.

முத்தமிழ் என்றால் என்ன?
மன எண்ணங்கள் அறிவு, உணர்ச்சி, செயல் எனும் மூன்று வடிவங்களாலும் வெளிப்படும். எம் மன எண்ணத்தின் சிந்தனைச் சிதறல்கள் எழுதும் எழுத்தாலும் எழுப்பும் ஒலியாலும் சொற்களாக வெளிவருகின்றன. பண்டைத்தமிழர் இயற்கையிடம் இருந்து தாம் இயல்பாய் அறிந்ததை மற்றவர்கட்குச் சென்னதால் அதை இயற்றமிழ் என்றனர். இயல்பாய்ப் பிறந்த தமிழ் இயற்றமிழ் ஆயிற்று. அறிவார்ந்த தமிழே இயற்றமிழ் எனினும் பொருந்தும்.

இன்பமோ துன்பமோ கோபமோ வீரமோ எதுவானாலும் அங்கே உணர்ச்சியே முன்னிற்கும். குயிலின் குரல் கேட்டு அதனோடு இணையாகக் கூவத் தூண்டுவது எது? குயிலின் குரல் நம் உணர்ச்சியைத் தூண்ட அந்த மயக்கத்தில் கூவுகிறோம். அதாவது எமது மனம் குயிலின் குரலோடு இசைகிறது. இவ்வாறு இன்பத்திலோ துன்பத்திலோ பிறரை இசைவிப்பது இசைத்தமிழாகும். எனவே உணர்ச்சியைத் தூண்டும் தமிழை இசைத்தமிழ் எனலாம்.

அறிவும் உணர்ச்சியும் ஒன்றுசேரும் பொழுது செயல் நிகழும். இயலும் இசையும் சேரும்போது நடிப்பு நிகழும். செயலே நாடகங்களில் காட்சியாக்கப்படுகிறது. இயலும் இசையும் இணைந்தே நாடகக் காட்சியாய் ரசிகனின் மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. செயல் வடிவில் வெளிப்படும் தமிழை நாடகத் தமிழ் என்கிறோம் என்பதே உண்மை.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் சேர்ந்ததே தமிழ்மொழி. அதுவும் தமிமொழியின் தனிச்சிறப்பில் ஒன்றாகும்.

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment