Wednesday 12 April 2017

முயற்சியும் நட்பும்


இவ்வுலகத்தில் வாழும் மனிதரின் வாழ்க்கைப் பாதை எல்லோர்க்கும் ஒன்றாய் இருப்பதில்லை. ஓர் இனமாய் இருந்தாலும் ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் வாழும் வாழ்க்கை ஒன்றாவதில்லை. எப்படித்தான் அவர்போல வாழவேண்டும் இவர்போல வாழவேண்டும் என எண்ணுவோரும் அந்த இலக்கை அடைவதில்லை. அல்லது அவர்கள் நினைத்ததைவிட பலமடங்கு சிறந்த இலக்கை அடையலாம்.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனும் பழமொழி முயற்சி செய்வோர் செல்வத்தில் கொழிப்பர் என்கிறது. அந்த முயற்சியை எறும்பு போலவும் செய்யலாம். எலியைப் போன்றும் செய்யலாம். புலி மாதிரியும் செய்யலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் எத்தகைய முயற்சி செய்வாருடன் நாம் நட்புக்கொள்வது நல்லது என்பதை நாமே ஆராய்ந்து அறியவேண்டும். சங்ககால அரசனான சோழன் நல்லுருத்திரன் எவ்வகையால் முயற்சி செய்து வெற்றி அடைந்தாருடன் நட்புக் கொள்வது சிறந்தது என்பதை தன் அநுபவத்தால் கண்டு சொன்னதைப் புறநாநூறு 

“விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சிகொண்டு அளைமல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மை யொடு
இசைந்த வைகல் உளவா கியரோ”
                                                                        - (புறம்: 190)
என எடுத்துச் சொல்கிறது.

‘நன்றாக விளைந்திருக்கும் சின்னஞ்சிறிய இடத்தைப் பார்த்ததும் அங்கு வளைந்து தொங்கும் நெற்கதிர்களைத் திருடிச் சென்று தனது வளையினுள் நிறைத்து வைத்திருக்கும் எலி போன்ற முயற்சியை உடையோராய்த் தேடும் பொருளைத் தமக்கென இறுக்கிப் பிடித்து வாழ்வோரோடு சேரும் நட்பு இல்லாதொழியட்டும். கொடிய காட்டுப்பன்றி தனது இடதுபக்கத்தே வீழ்ந்து கிடப்பினும் அன்று அவ்விடத்தில் அதை உண்ணாது பெரிய யானையை வலப்பக்கத்தில் அடித்து வீழ்த்தி உண்ணும் பசித்த புலிபோன்ற முயற்சியுள்ள வலிமையுடையோரது நட்புபோடு சேர்ந்ததாய் நாட்கள் இருக்கட்டும்’ என்கிறான்.

தமக்கெனப் பொருளைப் பதுக்கி வைக்கின்ற உளமில்லாதார் [உளம் இலாளரோடு - நல்லமனமில்லாதார்] நட்பைக் கைவிட்டும், மெலிவு இல்லாது [மெலிவில்] உள்ளத்தில் வலிமையுடையார் [உரனுடையார்] நட்பை [கேண்மை] நாள்தோறும் [வைகல்] வளர்த்துக் கொள்ளவும் வேண்டுமாம்.
இனிதே,
தமிழரசி.  

No comments:

Post a Comment