Thursday 20 April 2017

குறள் அமுது - (133)

குறள்:
“ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்”

பொருள்:
அறிஞர்களுக்கு முன்பு நாமும் அறிஞர்களாகப் பேசவேண்டும். அறிவிலார் முன் நாமும் வெண்சுண்ணாம்பு போல ஒன்றும் அறியாதவராகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ‘அவை அறிதல்’ அதிகாரத்தில் நான்காவது குறளாக உள்ளது. ஒன்றைப் பேசுவதற்கு முன்பு சூழ உள்ளோரின் பண்பை அறிந்து கொள்வதை அவை அறிதல் என்கிறார். அந்நாளில் அரசர்க்குத் தூது செல்வோர் முன்பின் அறியாத மாற்றான் நாட்டு அரச அவையில் தூதை எடுத்துச் சொல்லவேண்டும். அவையில் இருப்போரின் செய்கையைக் வைத்தும் அவர்கள் சொல்வதைக் கொண்டும் தன்னைச் சூழ்ந்திருப்போர் எத்தன்மையர் என்பதை அறிந்து பேசவேண்டும் என்பதையே இவ்வதிகாரம் சொல்கிறது.

ஒளியார் - ஒளியுள்ளோர், அதாவது அறிவொளி உள்ள அறிஞர்கள் முன்னிலையில் பேசும் பொழுது ஒள்ளியராய் - அறிவுமிகுந்தவராகப் பேசவேண்டும். ஆராய்ந்து கற்ற கல்வியறிவும் உலகியல் அறிவும் வேண்டியதை வேண்டியவாறு பேசும் திறனும் உடையோரே அறிவொளியுடையோர். அத்தகைய அறிஞர்களின் முன் ஒன்றை எடுத்துச் சொல்லும் பொழுது ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதற்கு இணங்க சொல்வதைச் செவிமடுத்து, நன்மை தீமைகளை எண்ணிப்பார்த்து தக்க பதிலைச் சொல்வர்.

வெளியார் - இதற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒருவருக்கு அறிவு நிறைந்திருக்க வேண்டிய இடம் வெளியாய் வெற்றிடமாய் இருப்பது ஒன்று. அறிவு வெளிறி மங்கிப்போய் இருப்பது மற்றொன்று. எப்படிப் பொருள் கொள்ளினும் அறிவில்லாத பேதையரையே திருவள்ளுவர் வெளியார் என்கின்றார்.  பேதையர் முன்பு ஒன்றைச் சொல்லப்போனால் நாலடியார் சொல்லும் ‘கற்கிள்ளி கை இழந்தோர்’ நிலை சொல்வோருக்குக் கிட்டும். கருங்கல்லைக் கிள்ள முடியுமா? அப்படிக் கருங்கல்லை கிள்ளிப் பார்ப்பவர்களின் விரல், நகம் முன்போல் இருக்குமா? அதனை  பேதைமை எனும் பகுதியில் நாலடியார்
"தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணங்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப
கற்கிள்ளி கையிழந் தற்று"                                - (நாலடியார்: 336)
எனச் சொல்கிறது.

அதனால் திருவள்ளுவர் அறிவுடையோருக்கு ஓர் எச்சரிக்கை செய்கிறார். அறிவற்ற வெளியார் முன்பு ‘வான்சுதை வண்ணமாக இரு!’ என்கிறார். வால்[வெண்மை] + சுதை[சுண்ணாம்பு] = வான்சுதை. சுண்ணாம்பு வெண்மையாய் நிறமற்று இருப்பது போல அறிவுடையோர் வெளிறி ஒன்றும் தெரியாதவர் போல் இருக்க வேண்டுமாம்.

அறிஞர்களோடு அறிஞராய் இரு! அறிவிலிகளோடு அறிவிலி போல இரு! என்பதே திருவள்ளுவர் கூறும் செய்தியாகும்.

No comments:

Post a Comment