Photo Source: Discover Wildlife
இயற்கையின் படைப்புகளில் தாமே மனிதரை நாடி வந்து மனிதரோடு வாழும் ஒரேயொரு பறவை சிட்டுக்குருவியே. அதனால் நம் சங்கத்தமிழ் முன்னோர் சிட்டுக்குருவியை மனையுறை குருவி, உள்இறைக் குருவி, ஊர்க்குருவி, உள்ளூர்க் குருவி என்ற பெயர்களால் அழைத்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தம்வீட்டில் வாழும் குருவி என்ற கருத்தில் 'மனையுறை குருவி' என்றனர். அது வீட்டுக்கூரைக்குள் கூடு கட்டி வாழ்வதால் இறையுறை குருவி எனவும் அழைத்தனர். வீட்டின் கூரையை இல்இறை என்பர். இக்காலத் தமிழராகிய நாமும் அச்சிட்டுக்கள் வாழ நம் வீடுகளில் அடைக்கலம் கொடுப்பதால் அடைக்கலக்குருவி, அடைக்கலாங்குருவி என்ற பெயர்களால் அழைக்கிறோம்.
சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறீர்களா? அவை ஒன்றோடு ஒன்று கிச்சூ கிச்சூ, க்யூக் க்யூக் எனச் சீழ்க்கை அடித்தபடி காதல் மொழி பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? சேவல் சிட்டு தன் பேடைச்சிட்டு முட்டை இடுவதற்காகக் கட்டும் கூட்டைப் பார்த்து இரசித்ததுண்டா? பேடைச்சிட்டு பெரிதாகக் குரல் எழுப்பியபடி சேவற்சிட்டுக்கு கால்களால் அடிப்பதைக் கண்டிருக்கிறீர்களா? சேவலும் பேடையுமாகத் தமது குஞ்சுகளுக்கு உணவூட்டும் அழகைப் பார்த்து மகிழ்ந்ததுண்டா? அவை தரும் ஆனந்தத்திற்கு ஈடு இணையேது! சிட்டுக்குருவிகளின் வாழ்வியலே ஓர் ஆனந்தம்.
அதனாலேயே பாரதியாரும்
“சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்து வா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா” - (பாரதியார் பாடல்)
எனப்பாடிவைத்தார். நானும் வண்ணப்பறவைகளைக் கண்டு மகிழ்ந்தேன். பேடைச் சிட்டு தத்தித் தத்தி நடக்க சேவற்சிட்டு துள்ளித் துள்ளி நடை போடும்.
சிட்டுக்குருவி இழைத்த கூடு
வண்ணக்கன் தாமோதரன் எனும் சங்ககாலப்புலவர் துள்ளு நடை நடக்கும் சேவற்சிட்டொன்று தனது பேடை முட்டை இடுவதற்கு [ஈன்இல்] ஏற்ற கூட்டை இழைக்க இனிய கருப்பின் வெண்பூவைக் கோதி எடுப்பதைச் சொல்கிறார்.
“உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்”
- (குறுந்தொகை - 85: 2 - 5)
எனக் குறுந்தொகை மணமில்லா [நாறா] கரும்புப்பூவால் கூடு இழைக்கும் சிட்டுக்குருவியை காட்ட, புறநானூறோ
“மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பை
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்துதன்
புன்புறப் பேடையொடு வதியும்”
- (புறம்: 318: 4 - 8)
என ‘கறை போன்ற தாடியுள்ள [கறையணல்] சேவற்சிட்டு பாணர் பாவிக்கும் யாழ் நரம்புத் துண்டுகளோடு [நரம்பின் சுகிரொடு] கர்ச்சிக்கும்[குரல்செய்] சிங்கத்தின்[வயமான்] பிடரிமயிரையும் சேர்த்து இழைத்த கூட்டில் [குடம்பை] பெரிய வயலில் விளைந்த நெல்லரிசியை உண்டு தன் போடையோடு வாழும் என்கிறது. எனவே சிட்டுக்குருவிகள் தமக்கு வேண்டிய கூட்டைக் கட்ட சுற்றாடலில் கிடைக்கும் நார், மயிர் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன என்பதை அறியலாம்.
சங்ககாலத்து வீட்டுக் கூரையில் வாழ்ந்த சிட்டுக்குருவியை குறுந்தொகையில்
“ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின் நுண்டாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்று கொல் தோழி அவர் சென்ற நாடே”
- (குறுந்தொகை : 46)
எனச் சங்ககாலப் புலவரான மாமலாடனார் [மாமிலாடன்] கூறுகிறார். “வாடிய [சாம்பல்] ஆம்பற்பூவின் நிறத்தைப் போன்ற கூம்பிய சிறகை உடையவர்[சிறகர்] - வீட்டில் வாழும் [மனையுறை] குருவி, முற்றத்தில் உலரும் தானியங்களைத் [உணங்கல்] தின்று பொதுவிடத்திலுள்ள எருவின் [காய்ந்த சாணி] புழுதியில் குடைந்து விளையாடி வீட்டின் இறப்பிலுள்ள கூட்டில் [ பள்ளி] தம் குஞ்சுகளோடு [பிள்ளை] வாழுகின்ற மாலை நேரமும் இல்லையோ தோழி! அவர் சென்ற நாட்டிலே?” எனத் தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி தன் தோழியைக் கேட்டதை இப்பாடல் கூறுகிறது.
பறவைகள் பலவிதம். அதில் சிட்டுக்குருவிகள் ஒருவிதம். அந்த சின்னஞ்சிறிய சிட்டுக்களின் வாழ்க்கை மனித மனங்களைச் செம்மைப்படுத்தின. அதனை இச்சங்ககாலப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. தலைவன் சொந்த ஊரில் வாழ்ந்த காலத்தில் சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையைப் பார்த்திருப்பான். அவற்றின் வாழ்க்கை அவனுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கும். அவன் சென்ற நாட்டில் உள்ள சிட்டுக்குருவிகள் மாலை நேரம் ஆனதும் கூட்டைத் தேடிப் பறந்துவந்து தந்துணையோடும் பிள்ளையோடும் [குஞ்சோடும்] கீச்சுக் கீச்சென்று குலாவி வாழ்வதைக் காண்பான். அதைப் பார்த்ததும் தம்மை நினைத்து வாருவான் எனும் துணிவை அவளுக்குச் சிட்டுக்களின் வாழ்க்கை கொடுதிருக்கிறது.
மனித வாழ்வுக்கு வேண்டிய செவ்வியல் கருத்தை இப்பாடலில் மாமலாடனார் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஃறிணைக்குரிய சிட்டுக்குருவியை ‘சிறகர்’ என மரியாதைப் பண்பில் அழைத்திருப்பது மனித வாழ்வியலோடு சிட்டுக்களுக்கு இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது.
கார் அணற் சேவல் [ஆண்]
ஒன்றாக வாழ்ந்த சிட்டுக்குருவிப் பேடைக்கும் சேவலுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பச் சண்டையை நற்றிணைப் பாடல் ஒன்று படம்பிடித்து வைத்துள்ளது.
“உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப
கையற வந்த மையல் மாலை”
- (நற்றிணை : 181: 1 - 8)
இப்பாடலை இயற்றிய சங்கப் புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் சிட்டுக்குருவிகளின் இரசிகன் என்பதை இப்பாடல் காட்டுகிறது. வீட்டு இறைப்பில் வாழும் கரிய தாடியை[அணல்] உடைய சேவற்குருவி வேறு பகுதியிலுள்ள பேடையோடு கூடி இன்புற்று வாழ்ந்த பின்னர் தன் பேடையைத் தேடி வந்தது. அப்படி வந்த சேவலில் உண்டாகியிருந்த மாற்றங்களைப் பார்த்த [செவ்வி நோக்கி] பேடை, வெடித்துச் சிதறும் ஈங்கைப் பூவைப்போலச் சத்தம்மிட்டு தன் குஞ்சோடு [பிள்ளையோடு] வாழும் கூட்டினுள் வராது தடுத்தது. அதனால் அச்சேவல் மழையில் [துவலையில்] நனைந்த முதுகோடு [புறத்தது] கூட்டுக்கு அருகில் குளிரால் நடுங்கியபடி [கூரல்] இருந்தது. அது நடுங்குவதைக் கண்ட பேடைக்கு அதன்மேல் இரக்கம் [ஈர நெஞ்சின்] வந்தது. தான் என்ன செய்யலாம் என நீண்ட நேரம் [நெடிது] நினைத்துப்பார்த்து சேவலைத் தன்னிடம் அழைத்தது. அச்சேவலும் தான்விட்ட பிழையால் செயலற்றதாயிற்று [கையறல்]. அத்தகைய மயக்கமுள்ள மாலைப்பொழுதும் வந்தது.
குறுந்தொகையும் நற்றிணையும் சொல்லும் சிட்டுக்குருவியின் வாழ்வியல் மனிதவாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டவில்லையா? சிறுவயதில் இப்படியான இயற்கையின் பாடத்தைப் படித்தோருக்கு வாழ்க்கை சுமையாகத் தெரியாது. சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை முறையை இரசித்தவர்கட்கு குடும்ப வாழ்க்கையின் இரகசியம் புரியும். அது இயற்கை கற்றுக்கொடுக்கும் வேதபாடமாகும். அதற்குப் பணம் தேவை இல்லை. இல்லற வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தால் counselling என்று அலையவேண்டியதில்லை.
குருவிகளின் வாழ்வியலை அவை மனிதனின் இல்லறத்தை நல்லறமாக வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும் பாடத்தை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
பெண்: “பாக்கு மரச்சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லாம் என்ன பின்னுது"
ஆண்: அது வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு
மனசும் மனசும் கலந்துகிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது”
என ‘தலை கொடுத்தான் தம்பி’ என்ற படப்பாடலில் எழுதினார்.
ஜெயகாந்தன்
“சிட்டுக்குருவி பாடுது - தன்
பெட்டைத் துணையைத் தேடுது”
எனவும் கவிஞர் கண்ணதாசனும்
“சிட்டுக்குருவி முத்தங்கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே”
என்றும் பாட்டெழுதி சிட்டுக்குருவிகளின் வாழ்வியல், மனித வாழ்வியலை நெறிப்படுத்துவதைக் கடந்த நூற்றாண்டிலும் பதிவு செய்தனர்.
நம்வீட்டு முற்றங்களில் உள்ள தானியங்களை உண்டு, காய்ந்த சாணிப் புழுதியில் புகுந்து பூச்சி, புழுக்களைத் தின்று அதில் குளித்து விளையாடி, சிறுமலர்களைக் கொத்தி, கோதிப் பார்த்து மாலையில் கிணற்றடி நீரில் புரண்டு குளித்துச் சிலிர்த்து தம் கூட்டில் வந்து துயிலும் சிட்டுக்குருவிகள் எங்கே? எங்கே? அவை எங்கே தம் சிறகை விரித்தன?
நான் கடந்த வருடம் இலங்கை போன பொழுது கோப்பாய், மானிப்பாய், மருதனாமடம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, நயினாதீவு, கிளிநொச்சி, மாங்குளம், துணுக்காய், வவுனிக்குளம் திருக்கேதீஸ்வரம் எனச் சென்ற இடங்களில் சிட்டுக்குருவியை முன் போல் பார்க்கமுடியவில்லை. ஆனால் வவுனியாவில் கண்டேன். அது மனதிற்கு நிறைவைத் தந்தது.
‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே மணம் வீசும்’ எனும் பிழையான எண்ணத்தில் நம் தமிழ்ப்பண்பாடுகளைத் தொலைக்கும் தமிழர் நாம். அதனாலேயே தமிழரின் வீடுகளில் 2300 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டி உறவாடி வாழ்ந்து வரும் சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்புக்குக் கொண்டு செல்கிறோம். அவற்றை மட்டுமா அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றோம்! அவை உண்ணும் உணவுகளை! அவை ஆடி மகிழ்ந்த முற்றங்களை! அழிவின் விளிம்புக்கு இட்டுச்செல்கிறோம். இத்தகைய நம் செயலால் நம்மை அறியாமல் நாமே அழிவின் விழிம்புக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?
தேங்காய்ப்பூக் கீரை
சங்க இலக்கியத்தில் கபிலர் தொன்னூற்று ஒன்பது பூக்களைக் குறிஞ்சிப்பாட்டில் சொல்லி மகிழ்கிறார். அப்பூக்களில் ஒன்று பூளை. அதனை பூளாப்பூ என்றும் சொல்வர். இப்பூவை சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும். அதனால் ‘குரீஇப் பூளை’ என்ற பெயரும் இச்செடிக்கு உண்டு.
“குரீஇ பூளை குறு நறும் கண்ணி”
- (குறிஞ்சிப்பாட்டு: 72)
இப்பெயர் சங்ககாலப் பழமையானது. இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகச் சிட்டுக்குருவிக்கு உணவாய் நம் ஒவ்வொருவர் வீட்டுக் காணியிலும் பூத்து நின்ற ‘தேங்காய்பூக் கீரையே’ இந்தக் குருவிப் பூளைச் செடி. இப்போது தேங்காய்ப்பூக் கீரைச் செடி எவர் வீட்டுக்காணியில் இருக்கிறது எனச் சல்லடை போட்டுத் தேடவேண்டிய நிலையில் இருக்கிறோம். தேங்காய்ப்பூக் கீரைச்செடியின் மெல்லிய தண்டு காற்றில் அங்கும் இங்கும் அசைய சிட்டுக்குருவிகள் அதிலிருந்து பூக்களைக் கொத்தித் தின்னும் அழகே அழகு.
தேங்காய்ப்பூக் கீரையின் அருமை தெரியாமல் அவற்றைக் காட்டுச் செடியெனக் கருதி வெட்டி எரிக்கிறோம். தேங்காய்ப்பூக் கீரை வறை மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்புக்கீரை இரசமும் சுவையானதே. நம் முன்னோர்கள் தேங்காய்ப்பூக்கீரை பூத்துக் குலுங்கும் காலத்தில் அதனை வேரோடு பிடுங்கி மண் போக அலசி காயவிட்டு மூட்டையாகக் கட்டி கோர்க்காலியில் அடுக்கி வைத்து உணவாகப் பயன்படுத்தினர்.
இரசம், கஞ்சி, கறி போன்றவற்றில் போட்டும், இடித்து மாவாக்கி அரிசிமாவுடன் கலந்து புட்டு, களி போன்றன செய்தும் உண்டனர். ஏனெனில் சிறுநீரகக் கோளாறு - சிறுநீரகக்கல், சிறுநீர்பை, சிறுநீர்க்குளாய் தொடர்பான நோய்களை நீக்கும் நல்ல மருந்து தேங்காய்ப்பூக் கீரையே. எனது சிறுவயதில் வீட்டிலிருந்த வைத்திய வாகடத்தில் இதனை வாசித்திருக்கிறேன். நாம் எம் கண்போல் வளர்க்க வேண்டிய மருந்துச் செடியை எமது அறியாமையால் அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறோம்.
நாம் வாழ்ந்த வீடுகள் கூரையற்று இடிந்து கிடக்கின்றன. அவற்றை மீண்டும் கட்டச் செல்வோருடன் மல்லுக்கட்டும் கைக்கூலிகளின் தொந்தரவைத் தாங்க பெரிய மனது வேண்டும். எப்படித்தான் பிறர் சொத்தை தமதாக்க நினைக்கிறார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம். இப்போது நம் நாட்டில் வாழ்வோருக்கு எழுத வாசிக்க நன்கு தெரியும். ஒவ்வொருவரிடமும் அவரவர் உறுதிகள் இருக்கும். அதைப் பார்த்து தம் காணியின் எல்லையை அளந்து மதிலைக் கட்டினால் அடுத்த வீட்டுக் காரருக்கு தொல்லை இருக்காதல்லவா! அவர்களும் வந்து தத்தமது வீடுகளை மீளக்கட்ட வசதியாக இருக்குமே. அதைவிடுத்து அவர்கள் புலம் பெயர்ந்து விட்டனர் எனத் தம்போக்கில் பிறர் காணிகளை பிடிப்பதால் நேரமும் பணமும் வீணாய் போவதை உணர வேண்டும். அப்படி உணரும் நாள் வந்தால் சிட்டுக்குருவிகள் நம்மவர் கட்டும் வீடுகளில் அடைக்கலக் குருவி என்னும் அதன் இன்னொரு பெயருக்கு ஏற்ப மீண்டும் அடைகலம் புகும்.
தற்காலத்தில் வீடு கட்டுவோர். முற்றத்தில் இருக்கும் மரங்களை வெட்டி, கல் பதிக்கின்றனர். முப்பது நாற்பது வருடங்கலாக முற்றத்தில் நின்ற வேப்பமரங்கள், மாமரங்கள், பலாமரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அம்மரங்களில் வாழ்ந்த அணில்கள் குருவிகள் யாவும் எங்கே சென்று வாழும் என்பதை ஏன் சிந்திப்பதில்லை? கட்டும் வீடுகளைச் சுற்றி குறைந்தது ஐந்தாறடி நிலமாவது விட்டால் எம்மைவிட்டுச் சென்ற சிட்டுக்குருவிகள், செம்போந்துகள், மரகதக் குயில்கள், கருங்குருவிகள், பச்சைவண்ணச் சிட்டுகள், மாம்பழக்குருவிகள், கானாங்கோழிகள் யாவும் மீண்டும் எம்மனை நாடிவந்து முற்றத்துப் புழுதியில் விளையாடும்.
மனிதருக்குச் சிட்டுக்குருவிகள் செய்யும் பேருதவி என்ன தெரியுமா? நுளம்புகள் இடும் முட்டைகளை உண்பதே அப்பேருதவி. நம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடும் டெங்குக் காய்சலுக்கு எத்தனை மனிதஉயிர்கள் பலியாகின்றன? நாகரீகம் என்ற போர்வையில் சிட்டுக்குருவிகளை நாம் புறக்கணிப்பதும் அதற்கு ஒரு காரணம். ஈடு இணையற்ற இயற்கை எல்லாவற்றையும் தந்திருக்கிறது. இயற்கையின் அற்புதக் கொடைகளை நாம் அழிப்பதால் பல நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்.
எம் முன்னோர் ஏன் சிட்டுக்குருவிகளை ‘மனைஉறை குருவி’ எனப்போற்றி வளர்த்தனர்? என்ற சிந்தனை சிறிதும் இன்றி வாழ்கிறோம். எம்மைவிட்டுச் சிறகு விரித்துச் சென்ற சிட்டுகுருவிகள்! அழிகின்றனவே என ஏங்குவதை விடுத்து, மனிதராய் சிங்காரச் சிட்டுக்களை சீராட்டிப் பாராட்டி பாதுகாப்போமா!
இனிதே,
தமிழரசி.