Wednesday, 20 May 2015

ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகளா?

ஆற்றிடைக்குறை [இது போன்றது இலங்கை]

ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகள் என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். அது உண்மையா? என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போமா? உலக வரலாற்றைப்புரட்டிப் பார்த்தால் இலங்கையில் தொன்று தொட்டே தமிழர் வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நிறைய இருப்பதைக் காணலாம். நாம் அதனைக் கண்டுகொள்வதில்லை.

இலங்கை என்பது தமிழ்ச் சொல்லே. இலங்கை என்றால் என்ன என்பதற்கான சரியான விளக்கத்தை தமிழ்மொழி அல்லாத வேற்றுமொழிகளில் காணமுடியாது. ஓர் ஆற்றுக்கு இடையே இலங்கும் நிலத்தை இலங்கை என்று நம் தமிழ் முன்னோர் அழைத்தனர். அதாவது ‘ஆற்றிடைக்குறை’ இலங்கை எனப்படும். இந்தியாவும் கடல் கொண்ட தென் நாடும் ஒரே நிலப்பரப்பாக இருந்த காலத்தில் குமரி ஆற்றுக்கு இடையே இலங்கிய நிலமே இலங்கை.

இருக்குவேதம் இலங்கையில் புலத்திய முனிவர் வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் சொல்கிறது. இருக்கு வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி மு 1500 - 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [An introduction to Hinduism - Gavin D (1996)]. ஆதலால் இருக்கு வேதம் தொகுக்கப்பட்டு ஆயிர ஆண்டுகளின் பின்பே விஜயன் இலங்கைக்கு வந்தான். ஆனால் இருக்குவேதம் எழுதப்பட முன்பே இலங்கையில் புலத்திய முனிவர் வாழ்ந்திருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த அந்தப் புலத்திய முனிவர் நாகர் இனத்தைச் சேர்ந்தவர். சங்கத்தமிழ் நூலான பரிபாடல் மதுரையை நாகநாடு என்றும் தமிழரை நாகர் என்றும் சொல்கின்றது. 

சிலப்பதிகாரமும் 
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு”
என மதுரையை நாகர்களின் நாடாகச் சொல்வதைக் காணலாம். ஆதலால் இன்றைக்கு 3200 வருடங்களுக்கு முன்பிருந்தே - அதாவது இருக்கு வேத காலத்திற்கும் முன்பிருந்தே இலங்கையில் தமிழர் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறியலாம். 

அதுமட்டுமல்ல மூவாயிர வருடங்களுக்கு முன்பு king Solomon காலத்தில் [கி மு 931] இலங்கையில் கிடைத்த மாணிக்கக் கற்களை கிரேக்கர்களும், உரோமர்களும் அரேபியர்களும் சீனர்களும் பெரிதும் விரும்பி வாங்கினார்கள். அதனாலேயே அகில், தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி போன்ற பல தமிழ்ச்சொற்கள் அவர்கள் மொழியில் கலந்தன. அப்போது உலகின் தலைசிறந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து அரேபியர்கள் பெற்றார்கள் என்பதை பண்டைய இலங்கையின் இரத்தினக் கற்களின் வரலாறு சொல்கிறது. அந்நாளில் அரேபியர்களால் இலங்கை சேரன் தீவு [Serendib] என்றே அழைக்கப்பட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். சேர அரசர்கள் தமிழ் அரசர்கள் தானே? மூவாயிர வருடங்களுக்கு முன்பே சேரர்கள் இலங்கையை ஆண்டார்கள். அப்படியிருக்க எப்படி ஈழத்தமிழர் இலங்கையின் வந்தேறு குடிகள் ஆவர். சிங்களவர்களுடைய நாடாகும்?

எனவே இலங்கைக்கு விஜயன் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாகிய நாம் செய்த செய்யும் வரலாற்றுப் புறக்கணிப்பே, நாடற்று வாழும் இன்றைய நிலைக்குக் காரணமாகும். அதனாலேயே The Times வெளியிட்ட 'Complete History of the World' என்னும் புத்தகத்தின் 16ம் பக்கத்தில் கி மு 500ல் சிங்கள ஆரிய மக்கள் இலங்கை வந்ததாக எழுதி இருக்கின்றது. இது எவ்வளவு பெரிய வரலாற்றுத் தவறு தெரியுமா? 

இலங்கையைப் போல் சிங்களம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். தமிழரின் ஆடற்கூத்து வகைகளில் ஒன்று சிங்களம். பண்டைத் தமிழரின் ஆடற்கூத்துகளில் சாந்திக்கூத்து என்பது ஒருவகை. அது சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நான்கு பிரிவாகும். அதனை
“சாந்திக் கூத்தே தலைவனின் இன்பம்
ஏந்தி நின்றாடிய ஈரிரு நடமவை
சொக்கம் மெய்யே அவிநய நாடகம்
என்றிப் பாற்படூஉம் என்மனார் புலவர்”
என்று தனிப்பாடல் ஒன்று சொல்கிறது. சாந்திக்கூத்தின் ஒரு பிரிவான மெய்க்கூத்து தேசி, வடுகு, சிங்களம் என மூன்று வகையாகும். இந்த மெய்க்கூத்துப்பற்றிக் கூறும் அறிவனார் எழுதிய ‘பஞ்ச மரபு’ என்னும் நூல் தேசி, வடுகு, சிங்களம் ஆகிய மூன்று மெய்க்கூத்துக்களின் கால் தொழில் பற்றியும் சொல்கிறது. 

இக்கூத்துக்களைத் தேவரடியார்கள் ஆடியதை சோழர்கால கல்வெட்டுகளும் சொல்கின்றன. 13ம் நூற்றாண்டில் இலங்கையின் ஒருபகுதியை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த மாறவர்மன் குலசேகரன் காலத்தில் மல்லத்தில் இருந்து [மல்லம் - இப்போது ஆந்திராவிற்குள் இருக்கும் இடம்] சிங்களக் கூத்தாடுவோரை நரசிம்மன் [சிதம்பரத்தின் கிழக்குக் கோபுரத்தை 108 நாட்டியக் கரணங்களோடு கட்டிய கோப்பெருஞ்சிங்கனின் பேரன்] இலங்கைக்கு அழைத்துச் சென்றதை வீரமாதேவி தனது நாட்குறிப்பில் சொல்கிறாள். இந்த வீரமாதேவி புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்தவள். அதன் பின்பே, தமிழரின் மெய்க்கூத்தில் ஒன்றான சிங்களக்கூத்து மெல்ல மெல்ல இன்றைய கண்டியன் நடனமாக மாறியது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட சிங்களவர்களால் பேய் நடனம் என்றே கண்டியன் நடனம் அழைக்கப்பட்டது. அதனை 1900 - 1910 எடுக்கப்பட்ட கீழே உள்ள படங்களே எடுத்துச்சொல்வதைப் பாருங்கள். இப்பொழுதும் கண்டியன் நடனம் ஆடுபவர்களுக்கு தமிழரின் சிங்களக்கூத்தின் சரியான நுணுக்கங்கள் தெரியாது. அவை கொஞ்சம் கடுந்தமிழ்ப் பாடல்களாக இருப்பதே அதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

தமிழரின் மெய்க்கூத்தில் ஒன்றான சிங்களக்கூத்து 


மனிதஇனங்கள் பெரும்பாலும் பேசும் மொழியாலேயே இனங்காணப்படுகின்றனர். கி பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய வட்டெழுத்தில் இருந்து பிறந்த மொழிகளில் ஒன்றே சிங்களம். சிங்கள மொழிக்கு முதன்முதல் எழுதப்பட்ட சிங்கள இலக்கண நூல் - ‘ஸிதத் ஸங்கராவ’ [Sidath Sangarawa] - கி பி 13ம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. அதுவும் தமிழ்மொழி இலக்கண நூலான[தமிழ் சமஸ்கிருத - மணிப்பிரவாள  நடைக்கான]  வீரசோழியத்தைப் படித்தே எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்க சிங்கள மொழி உண்டாகி, சிங்களவர் தோன்ற 1200 வருடங்களுக்கு முன் சிங்கள ஆரியர் இலங்கை வந்ததாக  The Times ஆல் எப்படி எழுதமுடிந்தது? தமிழர்களாகிய நாம் இத்தகைய வரலாற்றுத் தவறை தட்டிக் கேட்பதில்லை. வருங்காலத்தில் இதனையே உண்மையான வரலாறாக உலகம் சொல்லப் போகிறது. இது வரலாற்றுத் தவறு என்பதையும் இலங்கை காலங்காலமாக தமிழரின் சொந்த நாடு என்பதையும் சிங்களவர் நம் நாட்டில் வந்து குடியேறியவர்கள் என்பதையும் நாம் உலகுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். வாய்மூடி மௌனித்து இருப்பது அழகல்ல.

ஆயிர வருடங்களுக்கு முன் பாடப்பட்ட ஒரு தனிப் பாடல் ஒன்று பதினேழு நாடுகளை தமிழ் நாடாகச் சொல்கிறது.
“சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளு கடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கு கலிங்கம் வங்கம்
கங்கம் மதகம் கவுடம் கடாரம் கடுங் குசலம்
தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ் புவி தாமிவையே

பண்டைத் தமிழர் வாழ்ந்த இந்த பதினேழு நாடும் இப்போது எங்கே போயிற்று?   இதிலிருந்து என்ன தெரிகிறது? பதினேழு நாட்டிலும் அதன் அதன் இனமாக, மொழியாக தமிழரும் தமிழும் மாறியது தெரிகிறது. அந்த வரலாற்று மாற்றத்தை தக்க ஆதாரத்துடன் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இப்பாடலில் மலையாளம் குறிப்பிடப்படவில்லை. மலையாளமொழி தேன்றமுன்னர் எழுதப்பட்ட பாடல் என்பதை அது காட்டுகிறது.

அதிகம் வேண்டாம் 1925ம் ஆண்டிற்கும் 1950ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இன்றைய இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களின் பிறப்புச் சான்றிதழ்களை எடுத்து ஆய்வு செய்தால் நூற்றுக்கு 65 வீதமானவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதைப் பார்ப்பீர்கள். இன்று சிங்களவர் என்று வாழ்வோரில் பெரும்பாலானோர் தமிழர்களே. அதுவே உண்மை.
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. வாழ்த்துகள். அருமையான தகவல்.

    ReplyDelete