Thursday, 21 May 2015

ஏன் இந்த நிலை


ஏன் இந்த நிலை! பெண்களுக்கு! புங்குடுதீவுக்கு! மானுடர் யாவருக்கும் ஏன் இந்த நிலை? மானிடராய்ப் பிறந்தோர் செய்யக் கூடிய செயலா இது? மானுடப்பண்பு மாண்டு போனதோ! இந்த இழிநிலைக்கு காரணம் என்ன?

இக்கட்டுரையில் நான் எழுதுபவை சிலவேளை ஆண்களின் நெஞ்சங்களை நெருடக்கூடும். ஒட்டு மொத்த ஆண்களையும் நான் இதில் குறிப்பிடவில்லை. ஏனெனில் நானும் ஒரு தந்தைக்கு மகளாய் பிறந்து, ஒரு மகனுக்கு தாயாய் இருப்பவள் தான். தவறைத் தவறு என்று சுட்டிக் காட்டுவதில் தப்பில்லையே. கனிவு, கண்ணியம், கட்டுபாடு ஆகிய பண்புகள் நிறைந்த நல்ல ஆண்களுக்காக நான் எழுதுவதை தவிர்க்க முடியாது. தவிர்க்கவும் கூடாது. இது காலத்தின் தேவை. வன்னியில் பள்ளிக்குச் சென்ற சரண்யா, புங்குடுதீவில் பள்ளிக்குச் சென்ற வித்தியா ஆகிய இருவரும் கடந்த கால போரின் கொடுமைகளில் சிக்குண்டு பல துன்பங்களை அநுபவித்தவர்கள். எனினும் அவற்றை மறந்து கல்வி என்னும் அழியாச்செல்வத்தைப் பெற இளமைக்கனவுகளுடன் படிக்கச் சென்றவர்கள். அந்த இளமொட்டுக்களை துடிக்கத் துடிக்க பாலியல் வல்லுறவு செய்து கொடூரமாய்க் கொலை செய்தமையே இப்பதிவுக்குக் காரணம். 

நானும் எனது இளவயதில் வன்னியிலும் புங்குடுதீவிலும் துள்ளித் திரிந்திருக்கிறேன். என் காலத்தில் இதுபோன்ற காமுகக் கொலைஞர்கள் அங்கே வாழவில்லை. இருந்திருந்தால் என்போன்றோருக்கும் இது நடந்திருக்கலாம். அன்று அன்போடும் பண்போடும் இருந்த நம் வாழ்வு, காட்டு வாழ் நாகரிகத்தை விடக் கேடுகெட்டதாக மாறியது ஏன்? அந்நாளில் வன்னி என்றாலும் சரி, புங்குடுதீவு என்றாலும் சரி, அங்கு வாழ்ந்த தமிழ் சாதி ஒரு கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பிணைப்போடு வாழ்ந்தது. அதுமட்டுமல்ல அங்கு வாழ்ந்த அன்றைய ஆண்களிடம் ஓர் அழகிய பண்பு இருந்தது. பெண்கள் இருக்கும் இடத்தில் உடுத்திருக்கும் வேட்டியையோ சாரத்தையோ முழங்கால் வரை மடித்துக் கட்டமாட்டார்கள். கட்டி இருப்பினும் பெண்களைக் கண்டால் கட்டை அவிழ்த்து கணைக்கால் வரை மறைத்துக் கொள்வார்கள். அப்படி வாழ்ந்த இனத்தின் வாரிசுகளா இன்று பெண்களைச் சூரையாடப் புறப்பட்டது? நினைக்க மனம் அனலாகக் கொதிக்கிறது.

வன்னி, புங்குடுதீவு இரண்டும் எனது இரு கண்போன்றவை. ஒரு கண்ணைக் குத்தினாலே இரு கண்ணும் கண்ணீர் சிந்தும். எனது இரு கண்களும் குத்தப்பட்டு நெஞ்சக் குமுறலையும் சேர்த்து செந்நீராய்ச் சிந்துகின்றன. ஏனெனில் வன்னி நான் வாழ்ந்த இடம். புங்குடுதீவு எனது சொந்த ஊர். அதிலும் வல்லன் என் தாய்வழி மூதாதையர் வாழ்ந்த இடம். நூற்றைம்பது வருடங்களின் முன் வாழ்ந்த பத்தினி, மாதினி என்ற இரு சகோதரிகள் பெயரால் பத்தி, மாதி பகுதி என்பார்கள். அப்படிப் பெண்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்த வல்லன் பகுதிப் பெண் காமவெறி கொண்ட காமக்கொடூரரால் கொலையா? இது வல்லனுக்கோ புங்குடுதீவுக்கோ ஏற்பட்ட வசையல்ல மனிதகுலத்திற்கே ஏற்பட்ட வசையாகும்.

இதற்கு நம் இளம் சந்ததியினரிடையே விதைக்கப்படும் போதைப்பொருளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே காரணம் ஆகாது. குடிவெறியால் நடந்து இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். குடிகாரர் எப்படிப்பட்ட வெறியிலும் தத்தமது வீட்டிற்கு வருகிறார்கள் தானே? அவர்கள் தம்மிலும் பார்க்க வலிமையானவரைக் கண்டால் கும்பிடுபோட்டு விலகிப்போவதும், வலிமை அற்றவரைக் கண்டால் கூப்பாடுபோட்டு சண்டைக்கு போவதும் எப்படி? இவற்றை மட்டும் எப்படி அவர்களால் சரியாகச் செய்ய முடிகிறது? சரி பிழை தெரியாமலா இவற்றைச் சரியாகச் செய்கிறார்கள்? 

உண்ணா நஞ்சு [நாம் எடுத்துக் குடிக்காத நஞ்சு] எம்மைக் கொல்லாது என்பார்கள். ஆனால் நஞ்சு உண்ணாமலேயே பெண்கள் நசுக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். சரண்யா, வித்தியா இருவரும் கொல்லப்படட்டது ஏன்? இது போல் பாடசாலைகளில் படிக்கும் எத்தனை அப்பாவிச் சிறுமியர் காமுகர் கைகளால் சிதைக்கப்படுகிறார்கள் தெரியுமா?அதற்கு நம்மிடையே புரையோடிப்போய் இருக்கும் சாக்கடை அரசியலும் ஆணாதிக்கமும் ஒரு காரணமாகும். எத்தனையோ ஆண்கள் தமது காமப் பார்வையால் கூட அழகான பல பெண்களைக் கொல்லாமல் கொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மனிதகுலப் பெண்ணாக, ஒரு தாய்க்கு மகளாக, ஒரு மகளுக்குத் தாயாக திருவள்ளுவரிடம் நான் ஒன்றைக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உமது திருக்குறள் முழுவதையும் எனது ஏழு வயதிற்கு முன்பே பாடமாக்கி இருக்கிறேன். உமது ஆயிரத்து முந்நூற்றி முப்பது திருக்குறளுக்கும் கேள்வி கேட்டு, உமது திருக்குறளை விடையாகத் தந்து அவற்றுக்கு விளக்கமும் அளித்து ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். இப்போ நெஞ்சம் நெருடக்கேட்கிறேன்
“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்று நீங்கள் எழுதியதற்குக் காரணம் என்ன? ஆண்கள் தங்கள் ஒழுக்கத்தைக் [நிறையை] காத்துக்கொள்ளமாட்டார்கள் என்று முடிவெடுத்திருந்தீர்களா? அதனாற்றான்  இருட்டறையில் பிணங்களையும் தழுவுவார்கள் [குறள்: 913] என்பதையும் எழுதினீர்களா?

உலக இயற்கை என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒரு கலவையே. அப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் ஒழுக்கத்தை கற்பித்து ஆண்களைத் தவிர்த்தது தகுமா? எந்த வீட்டில் களவு நடந்தாலும், எந்த ஊரில் கலவரம் நடந்தாலும், எந்த நாட்டில் போர் நடந்தாலும் எங்கேயும் எப்போதும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் பெண் என்பவள் போகப் பொருளாகக் கருதப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள். உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணையும் பெண்தானே பெற்றுத்தருகிறாள். ஒரு பெண்ணின் விருப்பமில்லாது பாலியல் வல்லுறவு கொள்ளும் ஆண்களுக்கு ‘தான் ஒரு தாயின் மகனல்லவா?’ என்ற எண்ணம் வராதா?

திருவள்ளுவரே நீங்கள்
“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மானுடர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்று எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். அப்படி எழுதி இருந்தால் ஓநாய்கள் கூடி வேட்டையாடி உண்பது போல் காமுகர்கள் கூடி பெண்களை வேட்டையாடி சீரழித்துக் கொல்லும் நிலை தமிழ் இனத்தில் குறைந்திருக்கலாம். நாம் வளர்க்கும் ஆடு மாடுகள் ஏன் காட்டில் வாழும் கொடிய விலங்குகளான சிங்கம் புலி கரடி யானை எதுவாக இருந்தாலும் மற்ற ஆண் விலங்குகளையும் கூவி அழைத்து வந்து பெண்விலங்கைப் புணர்ந்து ஒன்று மாற ஒன்று இன்பம் காண்கின்றனவா? ஆறறிவு படைத்த மானிடராய் பிறந்தும் தவளைகளாய்ப் பிறந்த கூர்ப்பு நிலை மாறாது இருப்பவர்கள் இதனைச் செய்கிறார்களா?

உலகில் மனிதன் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை மனிதன் தனது மனிதப்பண்பை போற்றி வாழ்ந்த வரலாற்றைக் காணமுடியவில்லை. இயற்கையை அழிப்பதிலும் சரி பெண்களை அழிப்பதிலும் சரி ஆண்களே முன்னிற்கின்றனர். ஏனோ சில ஆண்கள் தங்கள் தனி மனிதப்பண்பைப் பேணிக்கொள்ளத் தவறி விடுகின்றனர். அதனாலேயே சங்ககால ஔவையார்
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”                    - (புறம்: 187)
என்று கூறினார் போலும்.

அதாவது நாடாக இருந்தால் என்ன! காடாக இருந்தால் என்ன! பள்ளமாக இருந்தால் என்ன! மேடாக இருந்தால் என்ன! எந்த வழியில் ஆண்கள் நல்லவராய் இருக்கிறார்களோ அந்த வழியில் இந்த நில உலகமும் நல்லாய் இருக்கும் என்று தனது அநுபவத்தைச் சொன்னார் போலும். உலகவாழ்க்கை என்பது ஆண்களைப் பொறுத்தது என்பதே ஔவையாரின் முடிவாகும். ஔவையார் அப்படிக் கூறி இரண்டாயிர வருடங்கள் ஆகியும் ஆண்கள் மாறவில்லையே!

பாடசாலை மாணவிரயரைக் கொன்ற காமவெறியர்க்கு பள்ளிக்கூடச் சீருடை கூடவா கண்ணுக்குத் தெரியவில்லை? அப்படியென்றால் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை என்றே கொள்ளவேண்டும். அதுவே உண்மையாக இருக்கக் கூடும். எனெனில் வன்னி மண்ணின் கல்வியை யுத்தம் சிதைத்தது போல் புங்குடுதீவில் 1991ல் 1996ல் நடந்த இடப்பெயர்வின் காரணமாக பாடசாலைகள் பல இடிந்து கால்நடைகள் வாழ்விடமாயும் மாறின. அவற்றில் ஒன்று வல்லனில் இருக்கும் சண்முகநாத மகாவித்தியாலயமாகும். அது 1925ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனை 1972ம் ஆண்டு விஞ்ஞான ஆய்வு கூடத்துடன் கூடிய பெரிய கட்டிடமாகக் கட்டி, சண்முகநாத மாகாவித்தியாலயம் எனத் தரம் உயர்த்தினர் என நினைக்கிறேன். ஆனால் 17/10/1991 அன்று மக்கள் இடம்பெயர்ந்ததிலிருந்து இன்று வரை அது வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. அதில் படித்தோர் இன்று உலகமெங்கும் பெரும் செல்வர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாமல் எப்படி சண்முகநாத மகாவித்தியாலயம் மறைந்தது. போர் முடிந்து ஆண்டுகள் ஆறாகியும் இன்னும் செயலற்ற நிலையில் கிடப்பதை மேலே உள்ள படத்தில் பாருங்கள்.

ஆனால் வல்லனிலுள்ள அந்த சண்முநாத மகாவித்தியாலயத்திற்கு அருகே சிறிய கோயிலாக இருந்த புளியடி நாச்சிமார் கோயில், பத்துவருடங்களுக்கு முன்பே பெரிதாக - முருகன் கோயிலாய் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப் போகிறார்கள். அத்துடன் மிகச்சிறிதாக இருந்த ஆலடி வைரவர் கோயில், கும்பாபிஷேகம் செய்யப்பட்ட துர்க்கை அம்மன் கோயிலாக காட்சி தருகிறது. வல்லனில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் உறவுகளும் சேர்ந்தே அந்தக் கோயில் இரண்டையும் பெரிய கோயில்களாய் கட்டினார்கள். அவர்கள் கண்ணிலும் சண்முகநாத மகாவித்தியாலயமும், ‘கல்வியே கருந்தனம்’ என்று நம் முன்னோர் உரைத்த உரையும் தென்படவில்லை. 

நம் முன்னோர் சொன்னவற்றில் ஒன்றேயொன்று புலம் பெயர்ந்து வாழும் நம் எல்லோர் மூளையையும் சலவை செய்கிறது. ஔவையார் சொன்ன “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதே அது. சலவை செய்யப்பட்ட எமது மூளையில் கோயில், பூசை, குருக்கள், கும்பாபிஷேகம், திருவிழாக்கள், மேளதாளம், பால்குடம், தீச்சட்டி, சுவாமிமார்கள் மட்டுமே தெரிகின்றன. அதனாலேயே புலம்பெயர் நாடுகளிலும் எம்மூரிலும் எத்தனை எத்தனை கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும் எமக்கு அறிவுக்கண்ணை திறப்பது கல்வி என்பது தெரியாமல் போய்விட்டதா? என்ன??

அன்னதானம் செய்யும் சத்திரங்கள் ஆயிரம் கட்டி, பதினாயிரம் கோயில்களைக் கட்டி, அவற்றிற்கும் மேலாகச் சொல்லப்படும் தருமங்களை எல்லாம் செய்து உங்கள் பெயரும் புகழும் தெரியச் செய்வதைவிட ஏழையொருவனைப் படிக்கவைப்பதால் புண்ணியம் கோடி கிடைக்கும் என்றார் பாரதியார்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்”    - (பாரதியார் பாடல்)

இதை மட்டுமா பாரதி சொன்னார்? “சரசுவதி தேவியின் புகழ்” என்பது பாரதியார் பாடிய பாடல்களின் தலைப்புகளில் ஒன்றாகும். அதிலே நம்மை ஒன்றாய்ச் சேர்ந்து சரசுவதியை [சேர்ந்து தேவை] வணங்க அழைக்கிறார். சரசுவதியை வணங்குவது மிக இலகுவான செயல் இல்லையாம் [எளிதன்று கண்டீர்]. ஏனென்றால் எல்லோருக்கும் விளங்காத மொழியில் மந்திரங்களைக்கூறி ஏடுகளை அடுக்கி அதற்குமேல் சந்தனமும் பூங்களையும் இட்டு வணங்குவோர் சொல்லும் சாத்திரம் சரசுவதிக்குச் செய்யும் பூசை இல்லையாம் [இவள் பூசனை அன்றாம்].

“செந்தமிழ் மணி நாட்டிடையுள்ளீர்
  சேர்ந்து தேவை வணங்குவம் வாரீர்
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
  வாழி அஃதிங்கு எளிதன்று கண்டீர்
மந்திரத்தை முணு முணுத்து ஏட்டை
  வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
  சாத்திரம் இவள் பூசனை அன்றாம்”

அப்போ எது சரசுவதிக்கு செய்யும் பூசையாகும்? எப்படி சரசுவதியை வணங்குவது? அதனையும் பாரதியாரே சொல்கின்றார். என்ன சொல்கிறார் பாருங்கள்.

“வீடு தோறும் கலையின் விளக்கம்
  வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
  நகர்கள் எங்கும் பலபல பள்ளி
தேடு கல்வி இல்லாத ஓரூரைத்
  தீயினுக்கு இரை ஆக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் என்னன்னை
  கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்”

நாடு முழுவதிலுமுள்ள ஊர் வீடுகளில் எமது கலைகளைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அவ்வூர்களில் உள்ள வீதிகளில் ஒன்று இரண்டு பாடசாலைகள் இருக்க வேண்டும். அந்த நாட்டின் நகரங்களில் கணக்கற்ற பாடசாலைகள் இருக்க வேண்டும். கல்வி கற்க வசதி இல்லாது ஓரூர் இருந்தாலும் அதனை தீயிட்டு அழிக்க வேண்டும். எமக்கு வரும் கேட்டைத் தீர்த்து வைக்கும் அமிழ்தம் போன்றவள் என் அன்னையாகிய சரசுவதி. அவளுடன் நட்புக் கொள்ள ஏற்றவழி இவைதான் தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

நாமெல்லோரும் வீடுகளிலும் கோவில்களிலும் நவராத்திரி காலங்களில் பாடும் பாடல்தான் பாரதியாரின் இந்த ‘சரசுவதி தேவியின் புகழ்’. மேலே உள்ள பாடல் இரண்டும் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் நாம் எல்லோரும் நுனிப்புல் மேய்பவர்கள் தானே. 
“வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்”
என்பது சரசுவதி தேவியின் புகழின் முதலாவது பாடலாகும். இதைப் பாடாது எந்த நவராத்திரி பூசையும் நடைபெறுவது உண்டா? பத்துப்பாடலையும் படித்திருந்தால் நாம் கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வதை விடுத்து சண்முகநாத மகாவித்தியாலயத்தைப் புதுப்பித்திருபோம். அதுகேடு தீர்க்கும் அமிழ்தமாய் இருந்து இந்நிலை எமக்கு வராது பாதுகாத்திருக்கும். 

அது எப்படி என்று கேட்கிறீர்களா? விஞ்ஞான ஆய்வுகூடத்துடன் கூடிய சண்முகநாத மகாவித்தியாலயம் வல்லனில் இருந்திருந்தால் வித்தியா புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு சென்றிருக்க மாட்டாள். இந்த வன்செயலில் ஈடுபட்டவர்களில் சிலர் 1991ல் நடந்த இடப்பெயர்வின் பின்னரே பிறந்தவர்கள். இப்போது தான் அவர்களுக்கு 22, 23 வயது. அவர்களும் உண்மையான கல்வியைக் கற்றிருப்பர்கள். களவு, சூது, குடி, கற்பழிப்பு, கொலை போன்ற  செயல்களைக் கற்றிருக்க மாட்டார்கள். வல்லன் மக்களும் இப்போ இருப்பதை விட இன்னும் அதிகமாக அங்கே வாழ்ந்திருப்பார்கள். களவுகள் குறைந்திருக்கும். நல்லறிவு கிடைத்திருந்தால் இவை நடந்திருக்குமா? புங்குடுதீவு மக்களாய் மட்டுமல்ல மானுடராய் வருங்கால எம் இனத்துக்கு இந்நிலை வராது காக்க நாம் உடனே தொழிற்பட வேண்டும். கல்வியை மேம்படுத்துவதாலேயே அதனை நாம் செய்ய முடியும்.

வித்தை கற்கும் ஆலயமே வித்தியாலயமாகும். ஔவையார் காலத்திலும் கலைகள் கோயில்களில் கற்பிக்கப்பட்டன. அதனாலேயே ஔவையாரும் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றார். கோயில்கள் கல்வியைப் புகட்டியதற்கு நிறையவே கல்வெட்டு ஆதாரங்கள் கூட இருக்கின்றன. அதுமட்டுமல்ல சரசுவதி வாழும் கோயில்கள் கல்விக்கூடங்களே. வித்தையின் தாய் வித்தியா. அவளே சரசுவதி. எனவே வித்தியாவின் பெயரால் வித்தியா ஆலயங்களை - வித்தியாலயங்களைக் கட்டி எம் குழந்தைகளின் அறிவை தெளிந்த நல்லறிவாக்குவோம்.
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. இதுபற்றி சகோதர வலைப்பதிவர்கள் அம்பாளடியாள், மற்றும் இனியா அம்மா எழுதிய வெண்பாக்கள் நினைவு வருகின்றன.

    காலம் கருவறுக்கும்.

    காத்திருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோர் நெஞ்சக்கனலையும் மூட்டிய செயல்.

      Delete