சித்திரக்கவிதையில் மிக இலகுவான கவிதைக்கு ‘பத்திரம்’ என்னும் வகையையும் ‘கோமுந்திரி’ என்னும் வகையையும் சொல்லலாம். பத்திரம் என்றால் அழகு. அதாவது அழகான கவிதை என்பதையே பத்திரம் என்னும் சொல் குறிக்கின்றது. கோண பத்திர சித்திரக் கவிதையின் முதலாவது சொல்லாக வரும் ஓரெழுத்துச் சொல் அல்லது ஈரெழுத்துச் சொல் எல்லாப் பக்கமும் சூழ நின்று இச்சித்திரக் கவிதைகளை பத்திரமாகக் காப்பதால் கோணபத்திரம் என்றும் அழைத்திருக்கலாம்.
ஈழத்தில் “ஓம் அர ஹர நம சிவ ஓம்” என்று பாடுவோமே அதுவும் இந்த கோணபத்திர சித்திரக் கவிதை வடிவைச் சேர்ந்ததேயாகும். அது ஈரெழுத்து சொல்லால் ஆனது. அதன் சித்திர வடிவைப் பாருங்கள்.
ஓம்
ஓம் ஓம்
ஓம் சிவ ஓம்
ஓம் நம சிவ ஓம்
ஓம் ஹர நம சிவ ஓம்
ஓம் அர ஹர நம சிவ ஓம்
ஓம் ஹர நம சிவ ஓம்
ஓம் நம சிவ ஓம்
ஓம் சிவ ஓம்
ஓம் ஓம்
ஓம்
கோணபத்திரம் என்னும் சித்திரக் கவிதை வகையில் நான் எழுதிய இரண்டு வித சித்திரக் கவிதைகள் கீழே இருக்கின்றன.
முதலாவது :
கோணபத்திர கவிதையில் ‘வேலவா’ எனும் பெயர்ச் சொல்லை வைத்தே சித்திரக் கவிதையை நான் புனைந்திருக்கிறேன்.
இந்த வகைச் சித்திரக்கவிதையை நீங்கள் எழுதுவதானால் எடுத்துக்கொள்ளும் பெயர்ச்சொல்லுக்கு முன்னே அப்பெயர்ச் சொல்லின் உரிச்சொல்லைச் சேர்த்து அழகுபடுத்த வேண்டும். எழுதும் சித்திரக் கவிதைக்கு ஏற்ப பெயர்ச்சொல்லும் உரிச்சொல்லும் கலந்து கவிதைக்கு மெருகூட்டலாம். பெயர்ச் சொல்லின் முன்னே வரும் உரிச்சொல்லை பெயரடை [Adjectives] என்றும் சொல்வர்.
எனது முதலாவது பாடலின் மூன்றாவது அடியில் இருக்கும் ‘வேலவா’ என்ற சொல்லின் முன்னே நான்காவது அடியில் ‘வடி’ என்ற உரிச்சொல்லைச் சேர்த்திருக்கிறேன். வடி என்றால் கூர்மை. கூர்மையான வேலை உடையவன் வடிவேலன். ஐந்தாவது வரியில் ஆனந்தம், இப்படி ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லைக் கூட்டிச் செல்லவேண்டும். கவிதை முடிந்ததும், அந்த வரிக்கு மேலே நீங்கள் எழுதிய கவிதை வரிகளை கீழிருந்து மேலாக எழுதி முடிக்க வேண்டும்.
வா
வா வா
வா வேல வா
வா வடி வேல வா
வா ஆனந்த வடி வேல வா
வா பர மானந்த வடி வேல வா
வா சிவ பர மானந்த வடி வேல வா
வா அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா என் மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா மன அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா அருட் சிவ பர மானந்த வடி வேல வா
வா சிவ பர மானந்த வடி வேல வா
வா பர மானந்த வடி வேல வா
வா ஆனந்த வடி வேல வா
வா வடி வேல வா
வா வேல வா
வா வா
வா
இது ஒரு வகை கோணபத்திர சித்திரக் கவிதையாகும்.
இரண்டாவது :
கவிதையை எழுதத் தொடங்கும் முதல் எழுத்தை தொடக்கமாகக் கொண்டே கவிதையின் ஒவ்வொரு சொல்லும் வர வேண்டும். ஓரெழுத்துச் சொல்லில் கவிதை தொடங்க வேண்டும். ஒவ்வொரு வரியும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும். கீழேயுள்ள சித்திரக் கவிதையில் தகர வரிசையில் ‘தா’ என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டே கவிதை புனைந்திருக்கிறேன்.
கவிதையை எழுதத் தொடங்கும் முதல் எழுத்தை தொடக்கமாகக் கொண்டே கவிதையின் ஒவ்வொரு சொல்லும் வர வேண்டும். ஓரெழுத்துச் சொல்லில் கவிதை தொடங்க வேண்டும். ஒவ்வொரு வரியும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும். கீழேயுள்ள சித்திரக் கவிதையில் தகர வரிசையில் ‘தா’ என்ற சொல்லை முதற்சொல்லாகக் கொண்டே கவிதை புனைந்திருக்கிறேன்.
தா
தா தா
தா தாதா தா
தா தாதா தாதையே தா
தா தாதா தாதையே தாளிணை தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தா
தா தாதா தாதையே தாளினை தாங்க தாதா தாரகம் தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தா
தா தாதா தாதையே தாளிணை தாங்க தா
தா தாதா தாதையே தாளிணை தா
தா தாதா தாதையே தா
தா தாதா தா
தா தா
தா
“தா தாதா தாதையே தாளிணை தாங்க தாதா தாரகம் தா”
“தா தாதா [பிரமனே] தாதையே [தந்தையே] தாளினை தாங்க [அடியினைத் தாங்க] தாதா [கேட்கும் வரங்களை கொடுக்கும்] தாரகம் [தாரக மந்திரத்தை] தா”
அதாவது "பிரமனே! உயிர்களைப் படைக்கும் தந்தையே! நின் அடிகளைத் தாங்க, கேட்கும் வரங்களை கொடுக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தைத் தா!!" என்பதே சித்தரக் கவிதையின் கருத்தாகும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment