Tuesday 2 December 2014

நித்த மணாளர்

எம் சிந்தையின் உள்ளே

உலகெங்கும் வாழும் மனித இனங்கள் தத்தமக்கு என்று பண்பையும் பண்பாடுகளையும் கலைகளையும் படைத்துக் கொண்டது போல் கடவுள் கொள்கைகளையும் படைத்துக் கொண்டன. பண்டைய தமிழினம் படைத்துக் கொண்ட கடவுட்கொள்கையை 'சைவ சமயம்' என்கிறோம்.  எம்மைப் படைத்த கடவுளைப் படைத்தவரும் நாமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் நம்மில் பலரிடம் இல்லாது போனதற்கு மூடநம்பிக்கைகளும் அவற்றை பின்பற்றுவோரின் வழிகாட்டலில் நடைபெறும் சமயச் சடங்குகளுமே காரணமாகும். 

தன்னம்பிக்கை உள்ள மனிதராய் நாம் நம்மை நிலை நிறுத்த முயல்வோமேயானால் நாம் யாரையும் தலைவணங்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கை என்பது அகங்காரம் அல்ல. தன்னம்பிக்கை வேறு, அகங்காரம் என்றும் இறுமாப்பு எனவும் தலைக்கணம் என்றும் திமிர் எனவும் சொல்வன வேறு. தன்னம்பிக்கை உள்ளவனே தன்னை நம்புவான். தன்னை நம்பாதவன் எப்படி கடவுளை நம்பமுடியும்? நம் சிந்தையின் உள்ளே சிவனை வைப்பதற்கோ, சித்தத்தை சிவன்பால் வைப்பதற்கோ தன்னம்பிக்கை மிக மிக தேவையல்லவா? 

காதலும், பக்தியும் கூட தன்னம்பிக்கை உள்ளோருக்கே கைகூடும். நான் யார்? என் எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன? எதனால்? எப்படி? யாரால் அவை எழுகின்றன? போன்ற சிந்தனை எழுவதற்கும், எம்மையே நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை உள்ளோரே தம்மைத் தாமே ஆராய்ந்து பார்ப்பர். கடவுதல் என்றால் வினவுதல், கேட்டல் என்ற கருத்துக்களையும் தரும். எங்கே கேள்வி எழுகின்றதோ அப்போதே நாம் அதனை ஆராயத் தொடங்கிவிட்டோம் தானே? எங்கும் நிறைந்திருக்கும் இயற்கையை நாம் நம் உள்ளத்துள் கடவுதல் செய்வதாலேயே உலகை இயக்கும் சக்தியை கடவுள் என்கிறோம்.

தன்னம்பிக்கை உள்ளவனாய் கடவுளை நம்பும் எந்த ஒரு மனிதரும் பிறரின் கால்களில் வீழ்ந்து வணங்க மாட்டான். தன்னம்பிக்கை உள்ளோருக்கு அச்செய்கை நாணத்தைத் தரும். நம் ஒவ்வொருவரது சிந்தையிலும் சிவனைக் காணமுடியும் என்பதை எம் முன்னோர் எமக்குச் சொல்லிச்சென்றுள்ளனர். அப்படி இருக்க ஏன் நாம் சுவாமிமார்களின் கால்களிலும் கோயில் குருக்கள்மார் கால்களிலும் வீழ்ந்து வணங்க வேண்டும்? அதற்கு ஏன் பல கோயில்களின் அறக்காவலர்களும் துணை போகிறார்கள் என்பது எவராலும் விளங்கிக்கொள்ள முடியாத பெரும்புதிரே! 

தேன் சிந்தும் திருவாசகத்தை சொன்ன மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் பாருங்கள்!
"நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்"
                                            - (ப.திருமுறை: 8: 17: 3)

காதலில் வீழ்ந்த தன் மகள் என்ன சொல்கிறாள் என்பதை ஒரு தாய் சொல்வதாக இத்திருவாசகம் சொல்கிறது. “அன்னையே! என் உள்ளத்தே இருக்கும் காதலன் எப்போதுமே கல்யாணமாப்பிள்ள [நித்த மணாளர்] போலவே இருப்பார். பேரழகுடையவர். தென்னனின் பெருந்துறையில் வாழ்கின்ற அவர் என் உள்ளத்தில் இருக்கின்றவர். மிகவும் உயர்ந்த குணங்களை உடையவர் [அத்தர்], எனக்கு என்றும் ஆனந்தத்தைத் தருபவர் அம்மா” என்று மகள் தாய்க்கு கூறுகிறாள்.

அதாவது மாணிக்கவாசகக் காதலிக்கு அவரின் “சிந்தையின் உள்ளே சிவன்” காதலனாய் இருந்தார் என்பதையே இத்திருவாசகம் சொல்கிறது. அத்துடன் சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழிகாட்டுகிறது  என்பதையும் சொல்கிறது. மாணிக்கவாசகரின் சிந்தையில் மட்டுமா சிவன் இருப்பான்? நாமும் மனிதர்கள் தாமே! கொஞ்சம் சிவனைச் சிந்தை செய்தால் என்ன? சுவாமிமாரைத் தேடிப் போய் கால்களில் வீழ்ந்து கிடக்கும் அந்த நேரத்தில்; இருந்த இடத்தில் இருந்து சிந்தை நிறைய சிவனைச் சிந்திக்கலாமே! 

மாணிக்கவாசகரைவிட மிக அற்புதமாக திருமூலர் சொல்கிறார். சிந்தை வேறு சிவன் வேறில்லை. இரண்டும் ஒன்றுதான். எமது சிந்தைக்குள் இருந்து சிவனும் வெளிப்பட்டு வருவான். எதுவித சந்தேகமும் இன்றித் தெளிவாகச் சிந்தனை செய்யக்கூடியவர்கட்கு சிந்தையின் உள்ளே சிவன் பெரிய சிம்மாசனம் போட்டு இருப்பானாம். இதோ அந்தத் திருமந்திரம்.
“சிந்தை அது என்னச் சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளிய வல்லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே”
                                               - (திருமந்திரம்: 2853)

சிவனைக் காண இதைவிட இலகுவான வழி வேறு இருக்கிறதா சொல்லுங்கள்? அருணகிரினாதரால் கூட அரைநிமிட நேரம் தவவழியில் முறையாய், சிந்தை செய்ய முடியவில்லை. அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? முடிந்த நேரத்தில் சிந்தையில் சிவனை வைத்து, சிந்தை தெளிய சிந்தை செய்தால் என்ன?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment