Thursday, 25 December 2014

குறள் அமுது - (100)


குறள்:
“இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று”                              - 308

பொருள்:
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் மூழ்க்கியது போன்ற துன்பத்தைச் செய்தாலும் மீண்டும் சேர்வார்கள் ஆயின் கோபங்கொள்ளாது இருத்தல் நன்றாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் உள்ளது. பூக்கள் அடுக்கடுக்காக சுழன்று இருக்கும் பூங்கொத்தை இணர் என்பர். கடம்ப மலரை ஐங்குறுநூறு 
“வலஞ்சுரி வால் இணர்” 
எனச்சொல்லும்.  

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிலே தீச்சுடர்கள் அடுக்கடுக்காக சுவாலித்து சுழன்று எரிவதால் இணர் எரி என்றார். நெருப்பானது சுவாலித்து சுழன்று எரியும் பொழுது யாரும் அதன் அருகே செல்ல முடியாது. அவ்வளவுக்கு அந்த நெருப்பு சுற்றாடலையே வெம்மை ஆக்கும். அப்படிப்பட்ட இணர் எரியில் ஒருவரைத் தோய்த்து எடுத்தால் எப்படி இருக்கும்? அவர் உயிருடன் இருப்பாரா? இருப்பினும் எப்படி இருப்பார்?

ஒருவரோடு ஒருவர் மனத்தால் நட்புக்கொள்வதை புணர்தல் என்ற சொல்லால் இக்குறளில் வள்ளுவர் குறிக்கின்றார். எமக்குத் துன்பத்தை செய்பவர் சுவாலித்து எரியும் நெருப்பில் மூழ்கடித்தது போன்ற பெருந்துன்பத்தைச் செய்தாலும் மீண்டும் வந்து எம்முடன் சேர்வார் ஆயின் அவர்கள் மேல் கோபம் கொள்ளாது இருத்தல் நன்மையைத் தரும். ஏனெனில் தீயைவிட கோபத்தீ பொல்லாதது. தீ அதில் போட்டவரை மட்டுமே எரிக்கும். கோபத்தீயோ பல சந்ததியினரை, பல நாடுகளைக் கூட  எரித்து முடித்திருக்கிறது.

பற்றி எரியக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஒரு சிறு நெருப்புப் பொறியால் பெரிய காட்டையே எரித்து சாம்பலாக்க முடியும். ஆனால் ஒரு கண நேரத்தில் மனிதருக்கு வரும் கோபத்தீயோ வாய்ப்புகள் இல்லா இடத்தில் அடங்கி இருந்து, பல நூற்றாண்டுகளின் பின்னர் கூட மாபெரும் அழிவை ஏற்படுத்தும். கோபப்படுவதால் எவருக்கும் ஒருவித நன்மையும் கிடைப்பதில்லை.

எனவே எமக்கு எத்தகைய கொடிய தீமை செய்தவர் மேலும் நாம் கோபம் கொள்ளல் ஆகாது, கோபத்தால் எதுவித நன்மையும் உண்டாவதில்லை,  என்பதைச்  சொல்லாமல் சுட்டும் குறள்.
“இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று” 

இயேசு நாதர் ‘உன்னை ஒருவன் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு’ எனச் சொன்னதாக பைபிளின் புதிய ஏற்பாடு [மத்தேயு 5: 39] சொல்கிறது. கோபம் மனிதருக்கு தீமையை உண்டாக்கும் என்றே இயேசுவும் அதனைக் கூறினார். கோபம் இருப்பவரிடம் அன்பையும் கருணையையும் காண்பது அரிதாகும். உண்மையில் இயேசு விண்ணக வாழ்வுக்கு வழிகூறியவர். திருவள்ளுவர் வையக வாழ்வுக்கு வழிகூறியவர். ஆதலால் நாம் கோபம் கொள்ளாதிருக்க கற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment