Sunday 14 December 2014

குறள் அமுது - (99)

குறள்:
மக்கள்மெய் தீண்டல் உடகின்பம்       
                                         மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு                                
                                                   - 65

பொருள்:
பிள்ளைகளின் உடலைத்தொடுதல் உடலுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. அவர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பத்தைக் கொடுக்கிறது.

விளக்கம்:
திருவள்ளுவர் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் பிள்ளைகளால் பெற்றோருக்குக் கிடைக்கும் இன்பம் பற்றி இக்குறளில் கூறியுள்ளார்.

இளம் தாய் தந்தையர் குழந்தை பிறந்ததும் குழந்தையைத் தழுவியே ஆனந்தம் அடைகின்றனர்.  ஐந்து ஆறு மாதம் செல்ல அக்குழந்தை மெல்ல மழலை பேசத் தொடங்குகிறது. குழந்தை சொல்லும் எதுவித கருத்தும் அற்ற சொற்களுக்கு ஏற்ப தாமும் கதைத்து இன்பம் அடைவர். குழந்தைகளின் மழலை பெற்றவர்களை மட்டும் இன்பம் அடையச் செய்வதில்லை. அது கேட்போர் எவரையும் இன்பம் அடையச் செய்யும். அதனை
“நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை”      
                                                    - (அகம்: 16: 4 - 5)
என அகநானூறு குறிப்பிடுகிறது. நாக்கைப் பயன்படுத்தாமல் 'ப்பு' 'பும்பு' 'ப்ர்' என்றெல்லாம் சிரிப்பை உண்டாக்கும் இனிய சொல்லைச் சொல்லும் குழந்தைகளை யாவரும் விரும்புவராம்.

குழந்தையின் இன்பமான சொற்களைக் கேட்டும் கொஞ்சியும் மகிழ்ந்த தாய் தந்தையர், தம் பிள்ளைகள் வளர்ந்த பின்பும் அவர்களை அணைத்துக் கொஞ்சி மகிழவும், அவர்கள் சொல்லும் அறிவார்ந்த சொற்களைக் கேட்டு மகிழவும் ஆசை கொள்வர். ஆதலால் “பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு” என்னும் பழமொழிக்கு அமைய கல்லுமனப் பிள்ளைகளாய்  இருப்பது நன்றல்ல. 

அதுவும் படிப்பிற்காகவும் உழைப்பிற்காகவும் உயிருக்காகவும் புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் வயதான தாய் தந்தையரின் இந்த ஆசைகளை பிள்ளைகள் உணர்வதில்லை. உங்கள் பெற்றோரிடம் மின்னஞ்சலில் சுகம் கேட்காது, அலைபேசியில் அவர்களுடன் பேசி உங்கள் குரலைக்கேட்டு இன்பம் அடையச் செய்வதோடு உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று கொஞ்சி மகிழவும், சொற்களைக் கேட்டு மகிழவும் செய்யுங்கள். உங்களுக்கும் முதுமை வரும். ஆதலால் பிள்ளையைத் தழுவும் போது உடலுக்கு இன்பமும் சொற்களைக் கேட்கும் போது செவிக்கு இன்பமும் கிடைக்கிறது என்பதை மறவாதீர்கள்.

No comments:

Post a Comment