Thursday 18 December 2014

அருட்திரு அந்தாதி


உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து
கள்ள மலத்து கழிவை அகற்றி
தெள்ளு தமிழில் தினமும் பாட
அள்ளி எனக்கு அருளைத் தாராய்.

தாராதிருந்தால் தளர்ந்தே போவேன்
வாராய் இங்கே வடிவேல் அழகா
ஊரார் பலரும் உவப்ப என்றும்
தீரா வினைகள் தீர்த்து அருள்வாய்.

அருளாதொழிந்தால் அலைந்தே போவேன்
மருளால் மயங்கி மமதை கொண்டே
பொருளாம் இன்பப் பொருளை எண்ணி
இருளில் மூழ்கி இருத்தல் நன்றோ

நன்றேயாயின் நயந்தே செய்க
ஒன்றேசொல்வன் உளத்துள் வைக்க
கன்றே தாயைக் கதறி அழைத்து
நன்றே பாலை நயத்தல் அறிவாய்.

அறிவாய் என்னும் அறிவைத் தந்தாய்
பொறிவாய்ப் பட்டு புழுவாய்த் துடித்து
நெறியை மறந்து நிலத்துள் உலந்து
பறியாம் உடலை புதைத்தல் அழகோ

அழகே ஆயினும் அளந்தே செய்க
உழவுக்கு பாச்சும் உவப்பு நீரை
விழலுக்கு இறைத்தல் விரயம் தானே
நிழலாய் நின்று நினைவில் நிலைப்பாய்

நிலைப்பாய் ஆயின் நெஞ்சம் உவக்க
கலைகள் பயின்று கவலை இன்றி
இலைகொள் மரத்தின் இசைவாய் இருக்க
அலையாய் அருளை அள்ளித் தருவாய்

தருவாய் என்னும் தகைமை அறிந்து
திருவாய் மலரும் திருவே உன்னை
முருகாய் எண்ணி மனத்துள் வைத்தேன்
பருகா இன்பம் பருகிட வைப்பாய்

வைப்பாய் என்றே வைப்பாம் உன்னை
துப்பாய் நினைத்து துதிக்கும் என்னை
தப்பாய் எண்ணி தள்வாய் ஆயின்
உப்பாய் கரையும் உடலும் வெந்து

வெந்து உடல் வீழ்ந்து நீறாய்
சந்ததி தொழும் சமாதி யாகுமுன்
பந்தம் அறுத்து பரிவொடு அருளை
செந்தமிழ் தேனாய் சொரிக உள்ளத்து

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கள்ளமலத்து - ஆணவமலத்தின்
அலைந்து - தாழ்ந்து 
மருளால் - மாயையால்
மமதை - செருக்கு
நயந்தே - விரும்பியே
பொறிவாய்ப்பட்டு - ஐம்பொறிகளிடையே அகப்பட்டு
உலந்து - காய்ந்து
பறியாம் - பை போன்ற [மீன் போடும் பை]
இலைகொள் மரத்தின் இசைவாய் இருக்க - இலை நிறைந்த மரத்தில் கனிகள் இருப்பது தெரிவதில்லை, அவை போலிருக்க
அலையாய் - கடல் அலைபோல் மீண்டும் மீண்டும்
தகைமை - தன்மை
பருகா இன்பம் - முத்தி இன்பம்/பேரின்பம்
வைப்பாம் - அடைதற்கரிய பொருளாகிய
துப்பாய் - அறிவாய்

No comments:

Post a Comment