Wednesday, 12 March 2014

தமிழை உண்ண வாரிக் கொடுத்த வள்ளல் நீயே!

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் 
நூறாவது பிறந்த நாள்

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் புங்குடுதீவின் முதற் பண்டிதர் என்ற பெருமைக்குரியவர். புங்குடுதீவின் முத்துடையார் வழித்தோன்றலான நீலயினார் முத்துக்குமார் அவர்கட்கும் ஆறுமுகம் நாகம்மை (சிதம்பரநாயகி)அவர்கட்கும் ஐந்தாவது மகனாக 12/03/1914  அன்று பிறந்தார். குமாரசுவாமி, தியாகராஜா, பொன்னம்மா, கணபதிப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை, நாகரத்தினம், பாலசுந்தரம் ஆகியோர் அவருடன் பிறந்தோராவர்

மலேசியா புகழ் வைத்தியரும், பல்கலை விற்பனருமான அவரது தந்தை முத்துக்குமார் அவர்களிடம் மிகச்சிறுவயதில் தமிழ், இலக்கியம், இதிகாசம், சமயம், இசை, சோதிடம், வைத்தியம், சித்திரம் போன்றவற்றைக் கற்றார். ஆறுமுகனின் வசிகரமான தோற்றமும், பேச்சாற்றலும் இளவயதில் புராண படனம் செய்ததும் பல அறிஞர்களின் அன்பை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. மகாவித்துவான் கணேசையரிடம் இலக்கண நூல்களைக் கற்றதோடு, பண்டிதமணி அவர்களிடம் சங்க நூல்களையும், காப்பியங்களையும், புராணங்களையும், பிரபந்தங்களையும் நன்கு கற்றுத்தெளிந்தார். பதினான்கு வயதில் எஸ் எஸ் ஸி பரீட்சையில் அதிவிசேட சித்தியடைந்தார்

அவரது திறமையைக் கண்ட சைவ வித்தியா விருத்திச் சங்க திரு தவராசரத்தினம், யாழ் முத்துத்தம்பி வித்தியாலயத்தில் ஆசிரியராய் அமர்த்தினார். அந்நாளில் யாழ்ப்பாணத்தில் முதன் முதல் பதினைந்து வயதில் ஆசிரியரானார் என்ற பெருமையும் அவருக்குக்கிடைத்தது. தீவுப்பகுதியில் ஆசிரியர்கள் பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவோ பண்டிதர்களாகவோ இருக்கவில்லை. ஆறுமுகன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் படித்து பதினெட்டு வயதில் (1932ல்) பயிற்சி பெற்ற ஆசிரியரானார். அதனால் மிக இளவயதில் பயிற்சி பெற்ற ஆசிரியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. பயிற்சி பெற்ற ஆசிரியராக அவர்  படித்த புங்குடுதீவு கணேச வித்தியாசாலையில் ஆசிரியபணியைத் தொடர்ந்தார்.

யாழ்ப்பாணத்தில் படிப்பித்த பொழுது  யாழ்ப்பாணம் போல் புங்குடுதீவும்  வளர்ச்சி அடையவேண்டும் என அவர் விரும்பினார். புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்று படியாது பத்துப் பதினைந்து வயதாகியும் விளையாடித் திரிந்தவர்களை படிப்பிப்பதே அதற்குச் சிறந்த வழி எனக்கண்டார். அதற்கு என்ன செய்தார்? அதில் வெற்றி பெற்றாரா? அதை  

பண்டிதரின் பழைய வீடு ஒரு குருகுலம் போன்றே விளங்கியது. வீட்டின் முகப்பில் ஒரு கொட்டகை. இரவு முழுவதும் பெற்றோமாக்ஸ்ஒளி தந்து கொண்டிருக்கும். என்னைப் போன்ற நாற்பது ஐம்பது மாணவர்கள் இரவு வேளைகளிலும், சனி, ஞாயிறுகளிலும், விடுதலைக் காலங்களிலும் அவருடைய கொட்டகைப் பந்தலில் அமர்ந்து படிப்போம். படிக்கும் ஒவ்வொரு மாணவர்க்கும் ஒரு குப்பி விளக்கில் திரி போட்டு எண்ணெய் விட்டுத் தருவார். அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று அந்த எண்ணெய் முடியும் வரை படிப்போம். அவர் அளித்த ஊக்கம் புங்குடுதீவில் ஒரு ஆசிரிய சமுதாயத்தை உருவாக்கியது. ‘ஒருமரமும் தோப்பாமோஎன்பது பல ஆண்டுகளின் முன்னரே அவர் எனக்கு அறிவுறுத்திய தொடர். அவர் ஓர் ஆலமரம். எம்மைப் போன்ற பல மரங்களை உருவாக்கினார். அவருடைய தோப்பில் வளர்ந்து - கிளைத்து ஓங்கிச் செழித்து நிற்கும் மரங்கள் பலப்பல. அவர் கனவை நனவாக்கிவிட்டோம். பன்மரங்கள்! பல தோப்புக்கள்! பார்த்து மகிழ்ந்தார் பண்டிதர்.” என அவருடைய மாணவன் வித்துவான் சி ஆறுமுகம் போற்றியுள்ளார்.

ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் படித்த பொழுது பலமுறை இந்தியாவுக்கு சென்று வந்ததால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாருடன் தன் நட்பை வளர்த்துக் கொண்டார். அந்நாளில் இந்தியா செல்ல விசாஎடுக்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆதலால் தீவுப்பகுதி மக்களுக்கு தலைவாசலும் வீடும் போலவே இந்தியா இருந்தது. அது அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. பண்டித பரீட்சை எழுத விரும்பினார். எனினும் தந்தையின் விருப்பத்திற்காக இந்தியா சென்று ஹோமியோபதி மருத்துவம் கற்று, முதல் மாணவனாக தங்கப்பதக்கம் வென்று தேர்ச்சியடைந்தார். அவர் ஹோமியோபதி மருத்துவத்தில் தங்கப்பதக்கம் பெற்ற செய்தி இலங்கையின் பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் அவரது படத்துடன் வெளிவந்தது. அதன் பின்னர் பண்டித பரீட்சை எழுதி சித்தி எய்தி புங்குடுதீவின் முதல் பண்டிதர் என்ற பெருமையையும் அடைந்தார்

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் 18 வயதில் பயிற்சி பெற்ற ஆசிரியராய் வந்ததற்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் தங்கப்பதக்கம் வென்றதற்கும் சேர்த்து அவரது அண்ணன் நீ மு தியாகராஜா அவர்கள் வெளியிட்ட 
POST CARD இது [1932]
இருப்பவர்கள்: பண்டிதர் மு ஆறுமுகன், நீ மு தியாகராஜா
நிற்பவர்கள்: கந்தையா பெரியையா, வேலாயுதபிள்ளை பெரியையா
இந்நால்வரும் மூன்று சகோதரிகள் பெற்ற பிள்ளைகள்.

இந்திய இசைவானில் பவனிவந்த M L வசந்தகுமாரி அவருடன் இசை(வாய்ப்பாட்டு) பயின்றவரில் ஒருவராவார். அந்த நட்பின் காரணமாக அவர் நடாத்திய மகாநாடுகளில் M L வசந்தகுமாரி பணம் பெறாது பாடிச் சென்றார். அவர் பண்டிதராக முன்பு சங்கீதம் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை, உ வே சுவாமிநாதையர் போன்ற பேரறிஞர்கள் எழுதிய கட்டுரைகளுடன் உரைநடைச் சிலம்புஎனும் நூலில் வெளிவந்தது. அந்நூல் இந்தியாவிலும் இலங்கையிலும் உயர்வகுப்பு பாடநூலாக 1958 வரை இருந்தது

அவர் புங்குடுதீவில் கல்வி கற்பித்த நாட்களில் ஒரு நாள் புங்குடுதீவில் உள்ள வெட்டுக்குளத்திற்கு நீந்திக் குளிப்பதற்குச் சென்றார். அங்கே ஓர் இளைஞன் இனிமையாகப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவ்விளைஞனை மீண்டும் மீண்டும் பாடும்படி கேட்டு மகிழ்ந்தார். அவ்விளைஞனைப் பற்றி தன் நண்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் கூறி கணேசவித்தியாசாலையில் பாடவைத்து, பொற்கிழி வழங்கி இந்தியாவுக்கு சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார். அந்த இளைஞனே, பின்னாளில் புங்குடுதீவின் சங்கீத ஆசிரியராக இருந்து பல இசைக்கலைஞர்களை உருவாக்கிய இராசலிங்கம் ஆசிரியர்.

பண்டிதருக்கு முத்தமிழும் கைவந்தது. அவரது இளமைக்காலத்தில் புங்குடுதீவின் அடப்பனான் வளவுஎனும் இடத்தில் அரிச்சந்திரன் நாடகம், சாவித்திரி சத்தியவான் நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் போன்ற பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தார். அந்நாளைய நாடகங்கள் பாடல்களாலேயே வடிவமைக்கப்பட்டதால் அவரெழுதிய நாடகங்களும் பாடல்கள் கலந்தே இருந்தன. அவரது கம்பீரமான காணீரென்ற குரல் பாடல்கள் பாட ஏற்றதாக இருந்தது.

சப்ததீவுகளிலும் அந்நாளில் (1939) சாதி, சமயப் பெருமை காணப்பட்டதால் சாதிமான்கள் பலர் தங்கள் பிள்ளைகளுடன் மற்றைய பிள்ளைகள் ஒன்றாகப் படிப்பதை விரும்பாது பாடசாலைகளை உடைத்தும், ஆசிரியர்களை அடித்தும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். அது சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினருக்கு தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தது. திரு தவராசரத்தினத்திடம் அந்தப் பிரச்சனையை தன்னால் தீர்க்க முடியும் என்றும், சிறுவயதில் புராண படனம் செய்து சப்ததீவு மக்களின் உள்ளங்களை வென்றிருப்பதால் தன்னை எவரும் அடிக்க மாட்டார்கள் என்றும், எது நடந்தாலும் தன்னால் எதிர்த்து நிற்க முடியுமென பண்டிதர் ஆறுமுகன் கூறினார். அவரின் விருப்பப்படி கிழமையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீவாகச் சென்று, அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்பித்ததோடு, கல்வியின் தேவையையும், சங்கத்தமிழ், பெரியபுராணம் போன்றவற்றை மேற்கோள்காட்டி தமிழர் சாதி, மதம் கடந்தவர்கள் என்பதையும் எடுத்துச் சொன்னார். பெண்கல்வியின் அத்தியாவசியத்தை தீவுப்பகுதி மக்களிடம் விதைத்தார்

அந்நாளில் சப்ததீவுக்கும் தோணிகளிலும் வள்ளங்களிலும் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. எப்போது காற்றடிக்கும், கடல் கொந்தளிக்கும், திசைதெரியாது கருமேகம் சூழ்ந்து மழை பொழியும் என்பவற்றை அறியமுடியாத காலமது. அதுவும் நெடுந்தீவு, அனலைதீவு, எழுவதீவு செல்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஒவ்வொரு நாளும் பிராயாணம் செய்வதை அவரின் தந்தை விரும்பாத போதும், அவரின் தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து நாகனாதி என்ற என்ற சுழிகாரரோடு அனுப்பி வைத்தார். அதனால் கொந்தளிக்கும் கடலில் நீந்தவும், சுழியோடவும் கற்றுக்கொண்டார். பின்னாளில் அதனைத் தன் தம்பிமாருக்குக் கற்றுக்கொடுத்ததோடு எனக்கும் கற்றுத்தந்தார்

அப்பிரயாணங்களின் பொழுது பல இன்னல்கள் அவருக்கு ஏற்பட்டபோதும் நயினை நாகமணிப்புலவர் போன்ற அறிஞர் பலரின் அன்பும் ஆசியும் கிடைத்தது. பத்திரிகைகளில் நயினை நாகமணிப்புலவரின் பாடல்களுக்கு  விளக்கங்களை எழுதியதோடு, சப்ததீவுகளுக்கும் புராணங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் எழுதினார். அவர் பண்டிதமணி அவர்களை அழைத்துச் சென்று சப்ததீவுகளையும் காட்டியதை என்னை அழைத்துச் சென்று மண்டைதீவு தொடக்கம் எல்லாத்தீவுகளையும் தரிசிக்கச் செய்து, ஆங்காங்குள்ள விசேடங்களுக்கு விளக்கம் தந்து பிரமுகர் பலருடன் பழகவைத்து, நீண்ட தலயாத்திரை செய்தது போன்றதொரு உணர்ச்சியை என் மனத்தில் இருத்தியது. அது இன்றும் பசுமையாக இருக்கிறது.” என பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவில் அவரிடம் கற்றவர்களில்  
சி குமாரசுவாமி (முன்னாள் விரிவுரையாளர் - கோப்பாய் ஆசிரியபயிற்சிக் கலாசாலை)
பண்டிதமா மணியுடன் தொடர்பு கொண்டாய்
          பாங்காக நயங்களெல்லாம் விரிக்கும் பண்பு 
கொண்டனை நின் உரைவன்மை தருக்கவன்மை
          கோலமுறு கவிவன்மை மேடை யெல்லாம்
கண்டுவந்தோம் பிறவி ஆசிரிய னென்று
         காட்டி நின்றாய் கற்கும்மா ணவர்க்கெல்லாம்
மண்டுபெருங் காதலொடு தமிழை உண்ண
         வாரிவாரிக் கொடுத்த வள்ளல் நீயே
எனப் பாராட்டியுள்ளார்.

அவர் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் (இணுவில் இந்துக்கல்லூரி - இன்று) கற்பித்த போது வீரமணிஐயர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது சிறுவனான வீரமணி ஐயருக்கு தமிழ் கற்பித்ததோடு திருக்குறளில் பாடல்கள் எழுதவும் கற்பித்தார். வீரமணி ஐயரின் ஆடல் திறமையைக் கண்டு புங்குடுதீவு முற்றவெளியில் வீரமணிஐயரின் நாட்டிய(அந்நாளில் கூத்தென்றே அழைக்கப்பட்டது) நிகழ்ச்சியை நடாத்தி காசுசேர்த்து பொற்கிழியாகக் கொடுத்து இந்தியா சென்று படிக்க ஒழுங்கு செய்தார்.

மன்னார் விடத்தத்தீவில் கற்பித்த காலத்தில் கந்தையா வைத்தியநாதன் போன்றோருடன் சேர்ந்து
திருக்கேதீஸ்வரத்து தொல்பொருள் ஆய்விலும், அங்கு சைவ மகாநாடு நடைபெறுவதற்கும் உதவினார். சுவாமி சரவணமுத்து அடிகளார் அவர்களூம் அடியேன் 1944ம் ஆண்டு ஈழத்து சிவனடியார் திருக்கூட்டத்தை ஆரம்பித்தது முதல் 1948ல் திருக்கேதீஸ்வரத்தில் கூட்டிய சைவமகாநாட்டிக்கு சொல்லாலும் செயலாலும் அளப்பரிய தொண்டு செய்தவர். 1962ம் ஆண்டு திருவாசக மடத்தில் ஆரம்பித்த திருவாசக விழா தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சிரமம் இருந்தாலும் அவைகளை மறந்து அருமைக் குழந்தை தமிழரசியுடன் வருகை தந்து சொற்பெருக்காற்றியும் புராணத்துக்கு பயன் சொல்லியும் தொண்டு செய்தார். அவரின் குணம், செயல், பண்பு, பணிவு, தொண்டு இவைகளை எழுதுவதற்கு தனியே ஒரு நூல் உருவம் வேண்டும்.” எனக் கூறியுள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் கள ஆய்வு நடந்த நாளில் திருக்கேதீஸ்வரம் - மாந்தை பற்றிய ஆய்வு நூலை எழுதி மறைந்த மாநகரம்என்ற பெயரில் வெளியிட்டார்.  

இசையிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் கொண்ட காதலால் ஈழத்தின் பல பகுதியிலும் சென்று, முதியோரிடமும் கலைஞரிடமும்  சேகரித்த 3000 த்திற்கும் மேற்பட்ட நாட்டுப் பாடல்களை ஒரு தேட்டமாக வைத்திருந்தார். அவர் எழுதிய நாட்டார் பாடல் கட்டுரைகள், சங்கத்தமிழ் கட்டுரைகள் டாக்டர் (PhD) பட்டம் பெறுவதற்கு உதவியிருக்கின்றன. பெண்கல்வி, சாதிஒழிப்பு, சங்க இலக்கியம், பெரியபுராணம், சைவசித்தாந்தம்கோயில் வரலாறு, யாழ்ப்பாணத்திலும் தீவுப்பகுதியிலும் வாழ்ந்த அறிஞர்களின் வரலாறுகளையும் வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும், விழா மலர்களிலும் எழுதினார்.

Dr. A C கனகசபை அவர்களின் பேத்தியும், ஓவசியர் தம்பிப்பிள்ளை பசுபதியம்மா தம்பதியினரின்  மகளுமான மகேஸ்வரிதேவியை அனுராதபுரத்தில் திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் புதுமண மக்களாய் புங்குடுதீவுக்கு வந்த போது கணேசவித்தியாசாலையில் புங்குடுதீவே திரண்டு நிற்க திரு பசுபதிப்பிள்ளை, சின்னத்துரை விதானையார் போன்றோர் வரவேற்பளித்தனர். அவரது திருமண வாழ்வில் பெற்ற ஒரே மகளுக்கு தமிழரசி என்று பெயரிட்டு தனது தமிழ் மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்.

பண்டிதர் அவர்கள் தமிழ்த்தாய்க்குச் செய்த சில பணிகளை தமிழ் மறைக் கழகத்தை 1952 இல் கொழும்பில் நிறுவுவதற்கு என்னுடன் சேர்ந்து அயராது உழைத்த பதினொருவரில் பண்டிதர் மு ஆறுமுகம் அவர்களும் ஒருவராவார். தமிழ்மறைக்கழகம் தொடங்கிய காலம் தொடக்கம் ஐந்தாண்டுகள் பொருளாளராகப் பணிபுரிந்த பெருமைக்கும் உரியவராவார். திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு விழாவினையும் தமிழ்மறைக்கழகத்தின் பதினாறாவது திருக்குறள் மகாநாட்டினையும் கிளிநொச்சியில் 1969 வைகாசித் திங்களில் சிறப்பாக நடத்துவதற்கும் அவர் அயராது உழைத்தார். அவ்விழாவிலும், மகாநாட்டில் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு  மலரின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். புங்குடுதீவுக்குப் புகழ் சேர்த்த சிலப்பதிகார விழாவினைச் சிறப்பாக அறிஞர் வியக்கத்தக்க முறையில் நடத்துவதற்கு  முன்னனியில் நின்று உழைத்தவர் ஆவார். முற்போக்கான கொள்கைகளை ஆதரித்து அவற்றைப் பரப்புவதற்கு சிறிதும் அஞ்சாமலும், அசையாமலும் அவர் உழைத்தவர். அவருடைய எழுத்தும் பேச்சும் இதற்கு சான்று பகர்கின்றன. தமிழ்த்தாயின் வாழ்வுக்கும் வளத்துக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கும் விருத்திக்கும் ஆர்வத்துடன் உழைத்தவர்.” என பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார்

இரண்டாம் உலகமகா யுத்தத்தின் பின்னர், அவரது அண்ணன் நீ மு தியாகராஜா விவியன்எனும் பெயர் உடைய சிறு கப்பல் [Coastal ship] ஒன்றை வாங்கி இருந்தார். புங்குடுதீவில் நடந்த சிலப்பதிகார விழாவுக்கு அந்த ‘விவியன்’  சிறுகப்பல் மூலமும் இந்திய அறிஞர்கள் அழைத்து வரப்பட்டனர்

அனுராதபுரம் எல்லாளன் ஆண்ட தமிழ்மண் என்ற காரணத்தால் அங்கே திருக்குறள் மகாநாடு நடக்க வேண்டும் என அவர் விரும்பினார். அவரது மனைவியின்  பாட்டனார் Dr. A C கனகசபை புகழோடு அனுராதபுரத்தில் வாழ்ந்ததால் அக்குடும்பத்தினர் அங்கே பெருமதிப்புடன் வாழ்ந்தனர். அவர் அந்தச் செல்வாக்கை திருக்குறள் மகாநாடு நடாத்த பயன்படுத்திக் கொண்டார். அதனால் 1954ல் தமிழ் மறைக் கழகத்தின் திருக்குறள் மகாநாடு அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருக்குறள் ஏட்டுச்சுவடியை கதிரேசன் கோவில் யானையின் அம்பாரியில் வைத்து மகாநாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இலங்கை இந்திய அறிஞர்கள் அம்மகாநாட்டிற் பங்குபற்றினர் எனினும் தீவுப்பகுதியிலும் யாழ்ப்பாணத்திலும் தன்னிடம் படித்து வித்துவான், பண்டிதர் பட்டம் பெற்ற வித்துவான் சி ஆறுமுகம், பண்டிதை புனிதவதி போன்றவர்களையும் அவ்விழாவுக்கு அழைத்துப் பெருமைப்படுத்தினார். 

 அனுராதபுரத்தில் நடந்த மகாநாட்டைப் பற்றி அவர் இறந்த பொழுது, பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம் (நீர்வேலி பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றுத் தமது இல்லத்தில் அனைவருக்கும் உணவும் தங்குமிடமும் கொடுத்து உதவிய காட்சி இன்றும் மனக்கண் முன் நிழலாடுகின்றது. அவருடைய அருமை மனைவியாரும் அவருடன் சேர்ந்து அனைவரையும் உபசரித்தமை எல்லோருடைய மனத்தையும் கவர்ந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பின் அனுராதபுரத்தில் அத்தகைய ஒரு தமிழ்மகாநாடு நடக்கவேயில்லை. இனி நடக்குமா? காலம் தான் பதில் தர வேண்டும்.

பண்டிதர் மு ஆறுமுகம் அவர்கள் 1952ல் கொழும்பில் நடந்த தமிழ்மறைக் கழகத்தின் முதலாவது திருக்குறள் மகாநாட்டிற்கு வீணை வாசிப்பதற்காக தன்னை முதன் முதல் கொழும்புக்கு அழைத்து வந்ததோடு, தமிழகத்து அறிஞர்களை அழைத்ததையும் லால்குடி ஜெயராமனின் சகோதரி வீணைக் கலைஞர் பத்மாவதி அவர்கள் சமீபத்தில் நினைவுகூர்ந்தார்கள்

கொழும்பு நில்வீதி மத்திய கல்லூரியின்(அன்றைய) தமிழ்த்துறைத் தலைவராக, விரிவுரையாளராக பணிபுரிந்த காலத்தில் இலங்கை வானொலியின் கல்விச்சேவைப் பகுதிக்கு பல விரிவுரைகளை வழங்கினார். அந்நாளில் அவரிடம் படித்து மெருகேற்றப்பட்டு வானொலிக்கு சென்றவர்களே எழுத்தாளர் சண்முகமும், திருமதி இராஜேஸ்வரி சண்முகமும் ஆவர். பண்டிதரின் மறைவின் போது தனது அளப்பரிய அன்பை இலங்கை வானொலியில் கொட்டித்தீர்த்தார் திருமதி இராஜேஸ்வரி சண்முகம்

அவர் பொலநறுவையில் அதிபராக இருந்த காலத்தில் [1957] ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது பொலநறுவைக் காட்டில் யானைக் கூட்டத்திலிருந்து தவறி கல்லிடையே அகப்பட்டு இருந்த யானைக் கன்று ஒன்றை காப்பாற்றி வளர்த்தார். பின்னர் அதனை தெகிவளை மிருகக்காட்சிச் சாலைக்குக் கொடுத்தார். அது மெனிக்காஎன்ற பெயருடன் அங்கு பலகாலம் வாழ்ந்து இறந்தது. இது அவரது மிருக நேயத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

1964ல் வடகிழக்கு மாகாணத்தை கதிகலக்கிய சூறாவளி வீசிய போது மல்லாவியில் அதிபராய் இருந்தார்அங்கும் சூறாவளியால் வீடிழந்தோரை பாடசாலையில் தங்கவைத்த தோடு, தான் சங்க இலக்கியத்தில் கற்ற தேற்றாங்கொட்டையை (தேத்தா) பாவித்து  குடிநீரை தெளியவைத்துக் கொடுத்தார். அதனால் அவரது மாணவர் பலர் வாந்தி பேதியில் இருந்து தப்பினர்.

கிளிநொச்சியில் குருகுலத்தை அவரது மாணவன் திரு கதிரவேல் (அப்பு) உருவாக்கிய நாள் தொட்டு அவருக்கு  துணையாக இருந்தார். உருத்திரபுரம் மகாவித்தியாலயத்திற்கு வந்தபின்னர் அவர் செய்த பணியை அவரது நண்பர் ஏ கே இராசேந்திரம் அவர்கள் புனித திரேசா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பாலபண்டித, பண்டித வகுப்பிலும், வளர்ந்தோர்க்கான உயர்கல்வி வகுப்பிலும், போட்டிப் பரீட்சைகளுக்கான வகுப்புகளிலும் ஒருசதமேனும் வாங்காது ஊக்கமாகவும் ஒழுங்காகவும் தமிழ் இலக்கண இலக்கியம் கற்பித்தார். இந்நாள் ரியூசன்ஆசிரியர்களுக்கு அவர் சிம்மசொப்பனம். கல்விபுகட்டக் காசோ? என்று பேசுவார். முத்திறம்கண்ட வித்தகர்; தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டு, சமூகத்தொண்டு என்று வாழ்ந்து காட்டிய வள்ளல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பற்றி அவரது பெறாமகன் யோகி 
எனது பெரியப்பா ஆறுமுகன். நான் அவரில் கண்டது நூறு முகம். அன்பில் ஒருமுகம். அறிவில் இன்னொரு முகம். அரவணைப்பில் அவருக்கு என்று முகம். பகுத்தறிவில் பக்க சார்பு அற்ற முகம். பண்பில் அவர் ஒரு பண்டிதர். பாசம் என்று வந்தால் பண்டிதர் முகம் தான் எனக்கு வரும். அன்று ஒரு நாள்நான் அரைக் காற்சட்டை அணிந்து கொண்டு, ஆண்டவன் தான் கதி என்று என் இளமைக் காலத்தை சீரழித்திருப்பேன். அன்று வந்த பண்டிதரின் நூறு முகத்தில் ஒரு முகம் கோபக் கணைகளை என்னில் வீசியது. ‘காலத்தை அறிந்து கொள். உன் கனவுகளை நிறைவேற்றிக் கொள். காலம் கடந்த இந்த கற்பனை உலகில் மிதந்து கொள்ளாதே. விழித்தெழு. நாளைய உலகை நினைத்துப் பார்.’ என என் கண்களைத்திறந்த இன்னொரு முகம் அது. அந்தப் பாண்டித்தியம் பெற்ற பெருங்கடலில் நீந்திக்கரை சேர்ந்த ஒரு காகிதஓடம் நான் என்பேன்என்கிறார்

தான் நினைத்தவற்றை உடனே செய்துமுடிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அவரது மரணத்தின் போதும்  என் மகளே சுடலை சென்று கொள்ளி வைக்க வேண்டும், முழு மரணச்சடங்கும் அவளே செய்ய வேண்டும், என் மனைவி, வெள்ளைச் சீலை உடுக்கக் கூடாது, பூவும், பொட்டும் அழியாது இருக்க வேண்டும், எனது மரணவீட்டில் எவரும் அழவேண்டாம், பறை மேளம் அடிக்க வேண்டாம், சங்கும் சேமக்கலமும் போதும், சலவைத்தொழிலாளியோ, முடிதிருத்துபவரோ சுடலையில் செய்யும் காரியங்கள் செய்யத் தேவை இல்லைஎன தனது மரணச்சடங்கிலும் பல புதுமைகளை செய்யும்படி எழுதிவைத்தார்.

அவர்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்” 
என்னும் வள்ளுவன் வாய்மொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.

அவரிடம் படித்து அறிஞராய் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கானவர்களில்  வித்துவான் ஆறுமுகம், வித்துவான் வேலன், பண்டிதர் கந்தசாமி, பண்டிதை புனிதவதி, கவிஞர் நாக சண்முகநாத பிள்ளை, திருப்பூங்குடி ஆறுமுகம், இணுவில் வீரமணிஐயர், மு தளையசிங்கம், மு பொன்னம்பலம், திருமதி இராஜேஸ்வரி சண்முகம், நீதவான் சிவபாலசுந்தரம் போன்ற பலரைக் குறிப்பிடலாம். தமிழும் கல்வியும் கருந்தனம் என்பதை நன்கறிந்து மாணவர்க்காக வாழ்ந்த அந்த ஞானச்சுடர் [25-07-1982]ல் அணைந்த போது, பண்டிதரின் நண்பரான ஆத்மஜோதி ஆசிரியர் திரு நா முத்தையா அவர்கள் 

கலைஉளங் கொண்டநின் கருத்தின் ஆழமும்
அன்பும் அறிவும் அருளுங் கூடிய
இன்ப நலன்களின் இணையிலாச் சேர்க்கையும்
எம்மால் எப்பவும் மறக்கவும் படுமோ!
பண்டிதன் ஆறு முகவன் என்றும்
பண்டித மணியின் அருமைச் சீடனென்றும்
நண்பினர் யாவரும் நானிலம் முழுவதும்
பண்பொடு உரைத்த உரையும் போமோ!
பொன்னாடு புக்குப் புகழினை எய்தினோய்
என்னாடு தானும் மறக்குமோ உன்னை
எனச் சொல்லி மனம் கலங்கினார்.

ஈழமெங்கும் தமிழை அள்ளி அள்ளிக் கொடுத்துப் பல அறிஞர்களை உருவாக்கி அவர்கள் வாழ்த்த வாழ்ந்த என் தந்தைக்கு மகளாய் என்னைப் படைத்திட்ட இயற்கை என்னும் பெரும் சக்தியைப் போற்றுகிறேன். 
இனிதே, 
தமிழரசி.

2 comments:

 1. தோழி! இது நல்ல பதிவு. வாழ்த்துகள்.
  முனைவர் ப. சரவணன்.

  ReplyDelete
  Replies
  1. நான் வெளிநாடு சென்றிருந்ததால் உங்கள் வாழ்த்தைப் பார்க்கவில்லை. உங்கள் வாழ்த்திற்கு என் அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
   இனிதே,
   தமிழரசி.

   Delete