Saturday, 8 March 2014

பெண்மை என்னும் புதுவெள்ளம்

அன்பும் அரவணைப்பும் பெண்மையின் இருகண்கள் எனக்கூறலாம். அசையும் உயிர் அனைத்திற்கும் இது பொதுவானதாகும். உதாரணத்திற்கு விலங்குகளையோ பறவைகளையோ எடுத்துப் பார்த்தாலும் அவற்றின் குட்டிகளையும் குஞ்சிகளையும் உணவூட்டிப் பாதுகாத்து, உணவு தேடுவது எப்படி என்பதையும் கற்றுக் கொடுப்பது பெண்ணினமே. உலகின் பெரும்பான்மையான உயிர்களுக்கு இது பொருந்தும். இந்த உண்மையை யாரும் மறுப்பதற்கு இல்லை.

மானுட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் தாய் என்ற உறவே முதலில் அறியப்பட்டதாக இருக்கிறது. ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடு இல்லாது, காட்டில் வாழ்ந்த ஆதிமனித இனத்தின் ஆண் பெண் உறவில் பிறந்த குழந்தை தாயிடமே இருந்தது. தன்னைப் பெற்ற தாய் யார் என்று அறிந்திருந்த குழந்தைக்கு, தனது தந்தை எவர் என்பது தெரியாதிருந்தது. குடும்பக் கட்டமைப்பு தோன்றும் வரையும் அந்நிலை நீடித்திருந்திருக்கிறது. பண்டைய மானுடரின் அறிவு சார்ந்த வளர்ச்சியும் உலக உயிர் நேயமும் பெண்களிலேயே தங்கியிருந்திருக்கிறது. பெண் தன்னை ஒறுத்து பொதுநலம் பேணியமையே அதற்குக் காரணம் எனலாம். ஆதலால் ஆதிமனித வாழ்க்கையின் தொடக்கத்தில் அதாவது காட்டுவாழ் சமூகமாக இருந்த மானிடரை நாட்டுவாழ் சமூகமாக மாற்றியதன் பெரும்பங்கு பெண்களையே சாரும்.

மனிதன் காடுவாழ் சமுகமாக இருந்த காலத்தில் வாழ்ந்திருந்த பெண்களின் அரிய கண்டுபிடிப்பே வேளாண்மை என்பது உலகவரலாற்று அறிஞர் கூறும் கருத்தாகும். ஓரிடத்தில் நிலைத்து வாழாது காடோடியாய்த் திரிந்த பண்டைய மனிதனை ஓரிடத்தில் நிலைத்து வாழவைத்தது பெண்களின் கண்டுபிடிப்பாகிய வேளாண்மையே ஆகும். பண்டைக்காலத்தில் உலகெங்கும்  பெண்ணைத் தெய்வமாக வணங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். கொடிய விலங்குகளான யானை, புலி, பன்றி போன்றவை வந்து திரிந்து பயிர்களையும் அவர்களின் உயிர்களையும் அழிப்பதைக் கண்டு பெண்கள் வாளும் வேலும் வில்லும் ஏந்திப் போரிட்டனர்.


இவ்வாறு மானுட சமூதாயத்தின் வளர்ச்சிக்குப் பெண்கள்பொங்கிப் புது வெள்ளமாய்  முக்கிய பங்கு ஆற்றியமையால் அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு பெண் தெய்வங்களாகப் போற்றப்பட்டார்கள்.

தொல்காப்பியரும் கொற்றவைநிலை என பெண்தெய்வ வழிபாட்டைக் கூறியிருப்பது தமிழினமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதற்கு வலுச்சேர்க்கிறது. அதனாற் தான் என்னவோ தமிழரின் மனிதநேயத்தை வளர்க்க அரிய கருத்துக்களைக் கொட்டித்தந்த திருவள்ளுவரும் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ எனத் தன்னையே கேள்விகேட்டு வியந்து கடைசியில் ‘பெண்ணிற் பெருந்தக்கது இல்’ என்று சொன்னார் போலும்.

1789 ம் ஆண்டு நடந்த பிரான்ஸ் புரட்சியே இன்றைய உலகமகளிர் தினம் தோன்ற மூலகாரணமாகும். அன்றைய மேற்குலகப் பெண்கள் ஆண் ஆதிக்கர்களிடம் இருந்து சமத்துவமும் சுதந்திரமும் கேட்டு போர்க்கொடி தூக்கினர். ஆனால் இந்த நிகழ்வுக்கு 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் அரசர்களுக்கே புத்திமதி கூறுபவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஔவையார், குறமகள் இளவெயினி போன்ற பல சங்ககாலப் பெண்புலவர்களின் பெயர்களைச் சொல்லலாம். 

பாரதியார் பாடியது போல “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த நிலையோ” “ஏட்டையும் பெண்கள் தொடாத நிலையோ” சங்ககாலத் தமிழரிடம் இருந்திருக்கவில்லை எனலாம். அப்படி இருந்திருந்தால் சங்க இலக்கியத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்புலவர்கள் உலகுக்கு நீதி கூறி தம் கருத்துக்களை கவிதையில் வடித்திருப்பார்களா? அதுமட்டுமல்ல தமிழரிடம் இருந்த மருத்துவம், சோதிடம், தத்துவம், கணிதம் போன்றவற்றைக் கற்பித்த  ஏட்டுச்சுவடிகள் யாவும் பெரும்பாலும் சுடர்தொடி கேளாய்! வேயன்ன தோளாய்! என பெண்களை விழித்தே கற்பிக்கின்றன. சங்க இலக்கிய நூல்களான பதினெண் கணக்கு நூல்களுள் நாலடியார், ஏலாதி போன்ற நூல்களும் பெண்களுக்கு கல்விபுகட்டி இருப்பதைக் காணலாம்.

நாலடியாரில் கல்வியைப் பற்றிக்கூறும் அதிகாரத்தின் முதலாவது பாடலே
“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”                                  - (நாலடியார்: 131)
என்று கல்வி அழகை பெண்களுக்கும் எடுத்துச் சொல்லி இருக்கிறது. இதில் மஞ்சள் அழகு என்பது பெண்ணையே சுட்டி நிற்கிறது. 

அத்துடன் 
டை வனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு 
எழுத்தின் வனப்பே வனப்பு”                         - (ஏலாதி : 34)
என்ற இந்த ஏலாதிப் பாடல் சங்ககாலத்திலேயே பெண்களுக்கு எண்ணையும் எழுத்தையும் கற்பித்தார்கள் என்பதை எடுத்துச் சொல்கிறது. 

இதனால் 
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென வாழும் உலகு”
என்று வள்ளுவர் சொன்னது 'பெண் உலகையே’ என்பது பெறப்படும். உலகிற்கு கண்ணாக வாழ்பவள் பெண் தானே! பெண்  அறிவுள்ளவளாக இருந்தால் தான் அவள் குழந்தை அறிவுள்ளவனாக, தெளிந்த சிந்தனை ஆளனாக வளருவான் என்ற சிந்தனைத் தெளிவு நம் முன்னோரிடம் இருந்தது. அதனாலேயே பெண்கல்வியைச் சிறப்பித்துப் போற்றினர்.

அன்றைய பெண்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்கினர். பண்டைத் தமிழர் வரலாற்றில் ஆண்கள் கால்பந்து [football] விளையாடியதற்கு எங்காவது குறிப்பு இருக்கிறதா? ஆனால் சங்ககாலப் பெண்கள் கால்பந்து விளையாடியதை 
"ஆடு பந்து உருட்டுநள் போல் ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!"           
                                                      - (நற்றிணை:  324: 7 - 9)
என நற்றிணை வரலாற்றுப் பதிவாகச் சொல்கிறது. அத்துடன் ஆயிரவருடங்களுக்கு முந்திய கஜுராஹோ சிற்பத்தொகுதியில் உள்ள கல் தூணில் ஒரு பெண் இடையை வளைத்து இடையால் பந்தடிக்கப் போகும் சிற்பமும் இருக்கிறது.


ஔவையார் இந்த உலகத்தைப் பார்ர்து, ‘நாடாக இருந்தால் என்ன! காடாக இருந்தால் என்ன! பள்ளமாக இருந்தால் என்ன! மேடாக இருந்தால் என்ன! ஆண்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படி உலகும் இருக்கும்’ என்று சொன்னதை

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி ஆடவர் நல்லவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”                 - (புறம்: 187)
எனப் புறநானூறு சொல்கிறது.

தலைவன் ஒருவன் பொருள்தேடிப் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை தோழி தலைவிக்குச் சொல்கிறாள். அதற்கு அவள் ‘இவ்வுலகில் பொருளையே பெரிய பொருளாகாக் கருதி ஒருவன் போவானே ஆனால் உலகில் அருளே இல்லாமல் அழிந்து போகாதா?’ எனக் கேட்கிறாள். அருள் என்பது இங்கு திருவருளைச் சொல்லவில்லை. அன்பை, கருணையை, மனிதநேயத்தையே அருள் என்னும் சொல்லால் வெண்பூதியார் என்ற சங்ககாலப் பெண்புலவர் கூறியிருக்கிறார்.

“பொருள்வயிற் பிரிவாராயின் இவ்வுலகத்து
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற யாருமில்லதுவே”       - ( குறுந்தொகை: 174: 5 - 7)

பொருள் பொருள் என்று மனிதன் ஓடுவானாயின்  அருளாகிய மனிதநேயத்தைக் காக்க யாருமில்லாதுமல் அது இந்த உலகைவிட்டு அழிந்து போகாதா என்றகவலை வெண்பூதியாருக்கு அன்றே இருந்திருக்கிறது. இப்படி எல்லாம் உலகைப் பற்றிய சிந்தனையோடு பொங்கிப் புதுவெள்ளமாய்ப் பாய்ந்த தமிழ்ப் பெண்களின் அறிவு இன்று ஊர் வம்பு பேசி, மூடநம்பிக்கைகளில் மூழ்கி, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் முடங்குதல்  தகுமா?

பண்டைய தமிழ்ப் பெண்கள் போல இன்றைய உலக மகளிர் தினத்திலிருந்து பொங்கும் புது வெள்ளமாய் மனித நேயத்துடன் நம் தமிழ் இனத்தை வாழ்விக்கப் புறப்பட்டால் என்ன? இந்த உலகு வாழும்வரை பெண்மை என்னும் புதுவெள்ளம்  பாய்ந்து உலகை வாழ்விக்கும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment