Saturday 1 March 2014

பனியில் விளையாடி கதிரில் கவிபாடியோர்

மேற்குலக நாடுகளில் வாழும் நாம் பார்க்கும் இடமெங்கும் பஞ்சுபோல் வெண்பனி கொட்டிக் கிடப்பதை பனிக் காலத்தில் காண்கிறோம். நமது குழந்தைகளும் குதூகலமாக பனிப்பந்து [Snow Balls] அடித்தும், பனிப்பாவை செய்தும் விளையாடி மகிழ்கிறார்கள். நமது குழந்தைகள் பனிபெய்யும் நாடுகளில் வாழ்வதால் வெண்பனியால் பலவிதமான பனிப்பாவைகள் செய்கிறார்கள். இலங்கையிலோ தமிழகத்திலோ இருந்திருந்தால் பனிப்பாவை செய்து விளையாட முடியுமா?  அங்கிருக்கும் தற்போதைய காலவெப்பநிலை அதற்கு இடமளிக்காது.

இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னர் நம்நாட்டில் வாழ்ந்த எமது மூதாதையர்களான பண்டைய தமிழர் பனிப்பொழிவை, வெண்பனியைப் பார்த்திருப்பார்களா? பனிப்பாவை செய்திருப்பார்களா? இவற்றை அறிய அவர்கள் எமக்காக விட்டுச் சென்ற சங்க இலக்கியத்தோடு, தேவாரத்தையும் கொஞ்சம் பார்ப்போமா?

“நீர்செறி நுங்கின் கண்சிதர்ந்தவை போல்
சூர்ப்பனி பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப்பெயல் அழிதுளி தலைஇ”                
                                            - [அகநானூறு 304: 24]


“நீர்செறி நுங்கின் கண்சிதர்ந்தவை [சிதறியவை] போல்
சூர்ப்பனி [கடும்பனி] பன்ன தண்வரல் [குளிர்வாட்ட] ஆலியொடு                                                                              [ஆலங்கட்டியொடு]
பரூஉப்பெயல் [பெரிய மேகங்கள்] அழிதுளி [வெண்பனி] தலைஇ                                                                                      [பெய்தது]” 

இதிலே ‘கடும் பனியின் குளிர் வாட்ட, நுங்கின் கண்கள் சிதறிக்கிடப்பதைப் போல் ஆலங்கட்டியுடன் [Hail] கூடிய பெரும்பனியை மேகம் சொரிந்தது' என்று சங்ககாலப்புலவரான இடைக்காடனார் ஒரு காட்சியைக் காட்டுகிறார். அழிந்து போகும் துளி எனும் கருத்தில் வெண்பனியை அளிதுளி.

அன்றைய காலநிலை குறித்து கன்னியர் இருவர் பேசிக்கொள்வதை கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் சொல்கிறார். ஒருத்தி மற்றவளைப் பார்த்து, குளிர்ச்சியான குளத்தில் உள்ள மலர்கள் உதிர்ந்து போகும்படி வரவிருக்கும் கடும்பனி நாளில் (நாம்) யாது செய்வோம் தோழி!’ எனக் கேட்டதை

“யாங்குச் செய்வாம் கொல் தோழி
ஈர்ங் கயத்துத் துய்ம்மலருதிர
முன்னா தென்ப பனிக்கடு நாளே”        - (குறுந்தொகை: 380:57)
 என்கிறார்.


“யாங்குச் செய்வாம் கொல் தோழி
ஈர்ங் கயத்துத் [குளிர்ந்தகுளம்] துய்ம்மலருதிர
முன்னா தென்ப பனிக்கடு [கடும்பனி] நாளே”

குறுந்தொகையில் இப்படிச் சொன்னவர், அகநானூற்றில் ‘கருமையான அடிமரமுடைய இலவமரத்தில் ஆண் யானை தன் முதுகினை உராய, வெண்பஞ்சுடன் கூடிய விதைகள், பனி பெய்வது போல் வீழ்ந்து கொண்டிருக்கும் எனக் கூறியிருக்கிறார். எனவே சங்க காலத்தில் குளத்து மலர்களை உதிரச் செய்யும் இலவம் பஞ்சு போன்ற வெண்பனி, நம் நாட்டிலும் பெய்திருப்பதை நாம் அறியலாம்.

“களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்”           - (அகம்: 309: 78)


“களிறுபுறம் உரிஞ்சிய [உராய்ந்த] கருங்கால் [கருமையான அடிமரம்]  இலவத்து
அரலை [விதை] வெண்காழ் [பஞ்சு] ஆலியின் தாஅம்”

புகையாகப் புதரைச் சூழ்ந்து, பூவாய்க் குவிந்து, வெண்ணிறப் பல்லின் நுனிகள் ஒன்று சேர்ந்தாற் போல் இறுகி, உறைந்து துருகல்லாய் [பாறையாய்] மாறிப் போன கடும்பனியை பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற அரசனே சித்திரித்திருப்பதை நீங்களே பாருங்கள்.

“புகையெனப் புதல் சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகை வெண்பல் நுதி பொர முற்றிய கடும்பனி”           
                                                    - (கலி: 31: 19 - 20)


“புகையெனப் புதல் [புதர்] சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா [குவிதல்]
முகை [துருகல் - பாறை] வெண்பல் நுதி [நுனி] பொர முற்றிய [இறுகிய] கடும்பனி”  

இந்த இரண்டு வரிப் பாடலை விட மிகவும் துல்லியமாகப் பனிப்பொழிவை யாரும் விபரித்திடமுடியுமா?

சங்ககாலக் கணவன் ஒருவன் பொருள் தேட வெளிநாட்டிற்குச் செல்ல இருந்தான். அவன் பிரிந்து செல்வதை நினைத்து அழுது அழுது அவனது மனைவி, பனிநீர் உருகி பனிப்பாவையை மாய்த்தது [அழித்தது] போல நிலை குலைந்து போனாள். அவளது எழிலார்ந்த உருவம் அழகிழந்து இருப்பதை அவன் கண்டான். தீட்டிய ஓவியம் என்ன சொல்கிறது என்பதை பார்த்து அறிவது போல் மனைவியின் நிலையை உணர்ந்தான். ஆதலால் அவன் பொருள் தேடப் போவதைக் கைவிட்டான்.

“…..ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி 
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு…
மணியுரு இழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே…”                    
                                            - (அகம்: 5: 20 - 21;  25 - 26)


“…..ஓவச் [ஓவியம்] செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி [அறிந்து]
பாவை மாய்த்த [அழித்த] பனிநீர் நோக்கமொடு [அதைப் போல]…
மணியுரு [அழகிய உருவம்] இழந்த அணியழி [உருக்குலைந்த] தோற்றம்
கண்டே கடிந்தனம்  செலவே…” 

இந்த சங்ககாலக் கணவன் மனைவி இடையே வார்த்தைகள் பரிமாறப்படாத போதும் அவர்களிடையே இருந்த உண்மையான அன்பின் பிணைப்பை மட்டும் ஒரு காட்சியாக இப்பாடலில் சங்ககாலப்புலவர் படம்பிடித்துக் காட்டவில்லை. அதற்கும் மேலே சென்று சங்கத் தமிழர்கள் ஓவியம் கீறியதையும், ஓவியம் என்ன சொல்லும் என்பதை உய்த்துணர்வதையும், பனியை உருட்டித் திரட்டி பனிப்பாவை செய்ததையும்  பண்டைத் தமிழரின் வரலாறாகக் காட்டியுள்ளார். 

குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
          நகைநாணாது உழிதரு வேனை
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில்    
         தெளித்துத் தன் பாதம் காட்டித்
தொண்டெல்லாம் இசைபாடத் தூமுறுவல் 
          அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டெல்லாம் அறியாதே பனிநீரால்
          பாவைசெய்யப் பாவித்தேனே!               
                                                         - (திருமுறை: 4: 5: 4)

தலையில் உள்ள தலைமயிரை ஒவ்வொன்றாகப் பறித்தெடுத்து தலையை மொட்டையாக்கும் [தலைபறித்து] சமணர்களோடு சேர்ந்து, குண்டனாய் பெண்களின் [குவிமுலையார்] ஏளனச்சிரிப்பையும் பொருட்படுத்தாது [நகைநாணாது] திருநாவுக்கரசு நாயனார், திரிந்தாராம். முன்னர், திருவாரூர் இறைவனின் அருட்கருணையை அறியாது வீணாகச் சமணசமயத்தில் இருந்து பனிநீரால் பாவை செய்ய என்னை நான் உபயோகித்தேன் என சமணர்களோடு திரிந்ததை நினைத்து அவரே கூறிக் கலங்குகிறார்.

இவற்றிலிருந்து சங்ககாலத்தில் மட்டுமல்ல திருநாவுக்கரசு நாயனார் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டில் கூட தமிழ்நாட்டில் வெண்பனியும் பனிப்பாவையும் இருந்ததை நாம் அறியலாம். ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் இருந்த இயற்கையின் காலநிலையை மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியும், உலக நகரமயமாக்கலுக்காக காடுகள் மலைகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களும் உருக்குலைத்திருக்கின்றன.

எனினும் பண்டைத்தமிழரும் பனியில் விளையாடி கதிரில் கவிபாடித் திரிந்திருக்கின்றனர்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment