Sunday 23 September 2012

எவரும் யாதும் யானாகும் பேரின்ப நிலை



மனித மனம் மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போன்றது. அது ஒரு கண நேரம் கூட ஓரிடத்தில் நிலைத்து நிற்காது. கற்பனைக் குதிரையில் தாவி ஏறி அண்ட கோளங்களையே ஒரு கணத்தில் சுற்றி வரும். அப்படிப்பட்ட மனித மனம் எனும் சிந்தனை செதுக்கப்பட்டதாலேயே இன்றைய மனிதர்களாகிய நாம் இயற்கையுடன் போட்டி போட்டு, இயற்கையை அழித்து எம் வசதிகளைப் பெருக்கி வாழ்கின்றோம். இந்த வசதி வாய்ப்புகள் யாவும் ஒருசில மனிதரின் சிந்தனையின் வெளிப்பாட்டாலாயே எமக்குக் கிடைத்திருக்கின்றன. எதுவித சிந்தனையும் அற்று, மற்றையோரின் எண்ணத்தால் கிடைத்தவற்றை பணம் கொடுத்து வாங்கி மகிழ்கிறோம். 

உதாரணமாகச் சொல்வதானால் தொலைக்காட்சி (TV) எப்படி வேலை செய்கின்றது? அதனை யார் கண்டுபிடித்தார்? என்னென்ன தொழில் நுட்பங்கள் அதற்குத் தேவை? அத்தொழில் நுட்பங்கள் எப்படி தொழிற்படுகின்றன? போன்ற பலவாறன கேள்விகளுக்கு விடை தெரியாமலே அதனைப் பார்த்து இரசிக்கிறோம். மனிதர் கண்டுபிடித்த பொருட்களையே எவையெவை, என்ன செய்கின்றன என்பதை அறியாமலே வாழும் நாம், உலகப் பொருள்கள் யாவும் எமது என்றும், எனது என்றும் இறுமாந்து வாழ்கிறோம். இந்த இறுமாப்பை செருக்கு என்றும் சொல்வர்.

பொருள்களின் மேல், உறவுகளின் மேல், மொழியின் மேல், நாட்டின் மேல் ஏன் நம் மதத்தின் மேலும் ஆழ்ந்த பற்று வைத்து நம்மை நாமே அறியாதவர்களாக இருக்கிறோம். இந்தப் பற்று இருவகைப்படும்.   யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. ஆசையே பற்றுகளுக்கு காரணம். ஆசை விலக விலக பற்று அற்றுப்போகும். எதற்காக பற்றுக்களை நீக்க வேண்டும்? அதனால் அடையும் பயன் என்ன? பற்றுக்கள் நீங்கினால் வானவர்க்கும் அதாவது தேவர்க்கும் கிடைக்க முடியாத உயர்ந்த உலகமாகிய முத்தி உலகம் கிட்டும் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”

இந்த யான் எனது ஆகிய இரு பற்றுக்களும் நீங்கினால் பார்க்கும் இடம் எங்கும் கடவுள் இருக்கும் கருவறையாகத் தெரியுமாம் என்கிறார் தாயுமானசுவாமிகள்.
என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின்
சன்னதியாம் நீ பெரிய சாமி பராபரமே”                                     
                                                - (பராபரக் கண்ணி)

இப்படி பார்க்கும் இடம் எங்கும் கடவுளாகத் தெரியக் காரணம் என்ன?  எனது என்பதும் யான் என்பதும் வேறாக நீங்கிப் போக, எவரும் யாதும் யானாகும் தன்மை வருமாம். எவரும் என்று அழைக்கப்படுகின்ற உயர்திணை உயிர்களும், யாதும் என்று சொல்லப்படுகின்ற அஃறிணைப் பொருட்களும் தானே என உணரும் நிலைவரும். எப்பொருளும் தானாகும் நிலையே அது. அது கற்பனைக்கு எட்டாத நிலையாகும். அதனை
எனது யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
          இதய பாவன அதீதம் அருள்வாயே!”                
                                               - (திருப்புகழ்)
என அருணகிரிநாதர் காட்டுகிறார். எனது யான் என்று சொல்லப்படுகின்ற அகப்பற்றும் யாதும் எனச் சுட்டப்படும் புறப்பற்றும் வேறாக அற்றுப்போக, எவ்வுயிரும் எப்பொருளும் ஒன்றாகி மனதால் எண்ணிப் பார்க்கமுடியாத அந்தநிலையை நானாகின்ற [நான் அடைகின்ற] தன்மையை (எனக்குக் கிடைக்க) அருள்வாய். அந்த நிலையே  இன்பநிலை. அதுவே பேரின்ப நிலையாகும்.
இனிதே,
தமிழரசி.

 பக்திச்சிமிழ் - 37

No comments:

Post a Comment