Friday, 1 May 2020

புங்குடுதீவின் அடப்பனான், மணியகாரர் இருவரும் யார்?

புங்குதீவின் கடலினுள் இருக்கும் உயிருள்ள பவளப்பாறை
பேரன் மயன் பார்க்கிறார்


இன்றைய புங்குடுதீவின் கடற்கரை எங்கும் சிப்பியும் சோகியும் சங்கும் உடைந்து சிறு சிறு சிதலங்களாய் விரவிக் கிடக்கின்றன. இன்று மட்டுமல்ல காலங்காலமாக விரவிக்கிடக்கும் அந்தச் சிதலங்களைப் பார்த்ததுண்டா? உங்கள் கால்களை நெருடும் போது அவை சொன்னது என்ன?

இறந்த பவளப்பாறைகள் மட்டும் அல்ல உயிருள்ள பவளப்பாறைகளும் அங்கு இருப்பதை என் புங்குடுதீவு உறவுகளில் எத்தனை பேர் அறிவீர்கள்? எம்மூரின் பவளப்பாறைகள் உங்களில் எவருக்காவது ஏதாவது சேதி சொன்னதுண்டா? யாராவது அவை ஏன் இருக்கின்றன என எப்போதாவது எண்ணிப் பார்த்தீர்களா? சிப்பித்துறை எங்கே போயிற்று? நாம் ஏன் சிப்பித்துறையை மறந்தோம்? அங்கிருந்து முத்தும் பவளமும் எகிப்துக்கும் ரோமுக்கும் சென்றதே!

இவற்றை நாம் தெரிந்து கொள்வதற்குக் காரணமாக வாழ்ந்த அடப்பனானும் மணியகாரரும் எங்கே? புங்குடுதீவில் அடப்பனான், அடப்பனான் வளவாகவும், மணியகாரர், மணியகாரர் வளவாகவும் இன்றும் வாழ்கின்றனர் என்பது தெரிகின்றது. அவர்கள் யார்? அவர்களின் சந்ததியினர் எவராவது புங்குடுதீவில் அல்லது உலகின் எந்த மூலையிலாவது வாழ்கின்றீர்களா? இருப்பீர்களேயானால் எனக்கு அறியத் தாருங்கள். நான் எழுதும் புங்குடுதீவின் வரலாற்று நூலுக்கு மிகவும் வேண்டிய செய்தியை உங்களிடம் பெறவேண்டும். 

இனிதே,                                                                                         

தமிழரசி.

Wednesday, 15 January 2020

மங்கல மங்கையர் பொங்கிய பொங்கல்



பொங்கிடும் பொங்கல் இனிப்பது போல்
          பொதுநலம் எங்கும் இனித்திடவே
திங்களும் மும்மாரி பெய்து நன்றாய்
          தேசத்துப் பயிர்கள் செழித்திடவே
தங்கத் தமிழ் மணம் வீசுபுகழ்
          தரணி யெல்லாம் ஒலித்திடவே
மங்கல மங்கையர் பொங்கிய பொங்கல்
          மகிழ்ச்சியை யள்ளிப் பொழிந்திடுமே!
இனிதே,
தமிழரசி.

Sunday, 5 January 2020

சொல் விளையாட்டு



நான்கெழுத்துச் சொல்லாம்
      முதல் எழுத்துப் போய்விட்டால்
            பெண்ணாகும்
      இரண்டாம் எழுத்துத் தனிநின்றால்
            ஒரு திங்கள்
      அவ்வெழுத்து ஓடிவிட்டால்
            கடுங்காற்றாம்
      முதலும் ஈறும் ஒன்றிணைந்தால்
            மாட்டுணவாம்
      முதலிரண்டும் ஒன்றானால்
            மண்ணில் மூடல்
உங்கள் அறிவைத் தோண்டி 
       நன்கு ஆய்ந்தறிந்து
            விடை பகர்வீர்!
இனிதே,
தமிழரசி.

Friday, 3 January 2020

களித்திங்கு வந்து இருப்பாயினி!



நாராயணி என்னும் பூவாரணி
நளினமலர் நயனப் பாராயணி
வாராயினி வரந் தாராயோநீ
வண்ணமலர் அமர் வரதாயிணி
ஏராரணி மனத் தமராயோநீ
எண்ணதுள் புகுந் தருளாயோநீ
காராயணி கருணை பொழியாயோநீ
களித்திங்கு வந்து இருப்பாயினி
இனிதே,
தமிழரசி.

Tuesday, 31 December 2019

வாராய்! புத்தாண்டே! வாராய்!!



கீற்றென மின்னல் மின்னிட
கொட்டியே மேகம் முழங்கிட
ஆற்றினில் அருவி பாய்ந்திட
ஆனந்த வெள்ளம் தவழ்ந்திட
காற்றினில் கீதம் பரவிட
கானகம் மெல்ல விழித்திட
போற்றியே உயிர்கள் களித்திட
பொன்னும் மணியும் பொலிந்திட
நாற்றிசை எங்கும் புகழ்ந்திட
நன்றாய் நம்மவர் வாழ்ந்திட
வெற்றியே என்றும் சூழ்ந்திட
வாராய்! புத்தாண்டே! வாராய்!
இனிதே!
தமிழரசி.

Thursday, 12 December 2019

வயலூர் மைந்தாய்!



நைந்துனையே நினைந்தறியா
       நம்பன் அருணகிரிக்கு
பைந்தமிழின் சுவையறிய
       சந்தத்தமி ழருளி
முந்தைவினை போயகல
       முத்தைதரு கொடுத்த
விந்தையென் சொலாய்
        வயலூர் மைந்தாய்!
இனிதே,
தமிழரசி.

Sunday, 1 December 2019

வேலொடு வந்தான்




மாவிலைப் பந்தரின் தோரணம் ஆட
மரகத வீணையின் பண்ணொலி கேட்க
ஆலிலைத் துயின்றவன் காவிலை நண்ணி
ஆனந்த வெள்ளத்து அருவியில் மூழ்கி
மூவிலைச் சூல முக்கணன் மகனாம்  
முருகனை எண்ணி முறையினிற் றொழுதும்
கோவிலைக் காணா கருத்தழிந் தழவே
கோவண ஆண்டி வேலொடு வந்தான் 
இனிதே,
தமிழரசி