Monday, 11 November 2013

மின்மினியே! மின்மினியே!


















மின்மினியே! மின்மினியே!  
நின்பட்டு மேனியின் 
மின்னுமொளி கொண்டு
மின்னிமின்னிப் பறந்து
கண்சிமிட்டி கண்சிமிட்டி
காரிருளை வெட்டுகிறாய்!
நின்னொளியே விளக்காய்
நிதம்குஞ்சு வளர்க்க
பன்னெடுங்காலம் எங்கு 
பயின்றதோ தூக்கணாம் குருவி!
                                         
இனிதே,
தமிழரசி.

Sunday, 10 November 2013

அருளினைப் பொழிவாய்!

உள்ளமே சோதியாய் உள்நின்று எரிகையில்
கள்ளமே செய்யும் கரும்புலன் ஐந்தும்
துள்ளியே ஆடும் துடுக்குகள் மாய்ந்திட
அள்ளியே பருக அருளினைப் பொழிவாய்!

Saturday, 9 November 2013

என்ன சத்தோம்

நாடா [Photo: source Wikipedia]

மனித வாழ்வுக்கு மிகவும் தேவையான பொருட்டகள் மூன்று. அந்த மூன்றையும் நம் முன்னோர் உணவு, உடை, உறையுள் என்ற மூன்று ‘உனா’க்களில் அழைத்தனர். ‘ஆடை இல்லாதவன் அரைமனிதன்’ என்ற  பழமொழியும் அதனால் எழுந்தது. அவர்கள் பலவிதமான ஆடைகளை நெய்தனர் அவற்றில் ஒன்று பருத்தி ஆடை. பருத்திச் செடியில் இருந்து கிடைக்கும் பருத்திப் பஞ்சை நூலாக நூற்றனர். அதற்கு சாயம்போட்டு பலநிறங்களில் பருத்தி நூல்களை உண்டாக்கினர். 

அந்தப் பருத்தி நூல்களைக்கொண்டு  பல நிறப்பருத்தித் துணிகளை நெய்து எடுத்தனர். துணிகளை தறியில் நெய்வதற்கு வேண்டிய பாவு நூலைப் பெண்களும், ஊடு நூலைப் பிள்ளைகளும் தடியில் சுற்றி வைப்பர். நூலைச் சுற்றும் பொழுது களைப்பு தெரியாமல் இருப்பதற்காகப் பாடிப் பாடி சுற்றுவர்.  இது அந்நாளில் மன்னாரில் வாழ்ந்த பெண்கள் தம் பிள்ளைகளுடன் சேர்ந்து பாடிப்பாடி நூல் சுற்றிய கிடைத்தற்கு அரிய நாட்டுப்பாடலாகும்.  

இந்த நாட்டுப்பாடலில் தமிழுக்கே உரிய இரட்டைக்கிளவி [ஒரே ஒலியுடைய இரு சொற்கள் இணைந்த சொல் இரட்டைக்கிளவி எனப்படும். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பொருள் காண முடியாது.] பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் நாட்டுப்பாடலில் அரிதாகவே காணக்கூடிய ஒன்றாகும். இந்நாட்டுப்பாடலில் வரும் கலகல, கடகட, கொறகொற, கொதுகொது, சலசல, சடசட, படபட, பறபற என்ற எட்டு இரட்டைக்கிளவியையும் ஒலியின் வேறுபாட்டை சிறு பிள்ளைகளுக்கு உணர்த்தவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சாயவேர்ச் செடி 

நூல் நுணக்கும் என்றால் நூலை நுண்மையாக திரித்தல். அதாவது நூல் நூற்றல். நாட்டுவழக்கில் நுணக்கு என்பர். இது கைவினைத் தொழிலாளர் பயன்படுத்தும் சொல்லாகும். சாயவேர் என்பது ஒருவகைச் செடி. அரையடி உயரம் வரை வளரக்கூடியது. வெள்ளை நிறப்பூ பூக்கும். இதன் வேரிலிருந்து செந்நிறச் சாயத்தை நம் முன்னோர் எடுத்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது மன்னார் யாழ்ப்பாணத்து தீவுப்பகுதி போன்ற இடங்களில் இருந்து வெளிநாட்டிற்கு சாயவேர் ஏற்றுமதி செய்யப்பட்டது. சாயவேரைக் கொத்தி எடுத்தோரை அவர்கள் செய்த வேலைக்கு அமைய வேர்க்கொத்திகள் என அழைத்தனர். அன்றைய நெசவுத்தொழிலுக்கு அவர்கள் வளம் சேர்த்தனர்.   இந்த நாட்டுப்பாடல் ஈழத்தமிழரின் நெசவுத்தொழில் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது.

பெண்களும் பிள்ளைகளூம்: 
          கலகலக்குது என்ன சத்தோம்
          காத்தசையிற பஞ்சு சத்தோம் 
          காத்தசையிற பஞ்சு சத்தோம் 

          கடகடக்குது என்ன சத்தோம்
          நூல்நுணக்கு பஞ்சு சத்தோம் 
          நூல்நுணக்கு பஞ்சு சத்தோம் 

          கொறகொறக்குது என்ன சத்தோம்
          சாய்வேர் கொத்து சத்தோம்
          சாய்வேர் கொத்து சத்தோம்

          கொதுகொதுக்குது என்ன சத்தோம்
          சாயவேர் கொதிக்கு சத்தோம்
          சாயவேர் கொதிக்கு சத்தோம்

          சலசலக்குது என்ன சத்தோம்
          சாயநூல் அலசு சத்தோம் 
          சாயநூல் அலசு சத்தோம்

          சடசடக்குது என்ன சத்தோம்
          சாயநூல் காயும் சத்தோம்
          சாயநூல் காயும் சத்தோம்

          படபடக்குது என்ன சத்தோம்
          பாவில்நூல் ஓடு சத்தோம்
          பாவில்நூல் ஓடு சத்தோம்

          பறபறக்குது என்ன சத்தோம் 
          பருத்திதுணி பறக்கு சத்தோம்.
          பருத்திதுணி பறக்கு சத்தோம்.
                                 -  நாட்டுப்பாடல் (மன்னார்)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறிப்பு:
தறியில் நீள் வாக்கில் இருக்கும் நூலைப் பாவு நூல் என்றும், பாவு நூலுக்குக் குறுக்காக மேலும் கீழும் செல்லும் நூலை ஊடு நூல் என்றும்  அந்த ஊடு நூல் சுற்றிய கட்டையைப் போடும் கருவியை நாடா [Suttle with bobin] என்றும் அழைப்பர்.
இனிதே,
தமிழரசி.

Friday, 8 November 2013

குறள் அமுது - (79)


குறள்:
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”                                  - 1
பொருள்:
எழுத்துகளுக்கு தொடக்கமாகவும் அவற்றுடன் கலந்தும் அகரம் இயங்குவது போல உலகம் ஆதிபகவனைத் தொடக்கமாகக் கொண்டு இயங்குகிறது.

விளக்கம்:
அகரம் என்று சொல்லப்படும் ‘அனா’ என்ற எழுத்து எழுத்துகளுக்கு முதலாவதாக இருக்கிறது. அத்துடன் அவ்வெழுத்தின் ‘அ’ என்ற ஓசை, தமிழ் எழுத்துக்களான உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து யாவற்றுடனும் சேர்ந்து முதலில் ஒலிக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல உலகில் உள்ள ஒலிகள் யாவற்றுள்ளும் ‘அ’ எனும் ஒலி கலந்தே நிற்கிறது.

ஆக்குதல், செய்தல் என்றால் ஒன்றை தோற்றுவிப்பதாகும். முதன்முதலில் ஒன்றை ஆக்கியவன் ஆதியானவன். ஆதி என்பது தொடக்கம், மூலம் என்ற கருத்தைத்தரும். பகவன் என்னும் சொல் வடமொழிச்சொல் அல்ல தமிழ்ச்சொல்லே. பகு எனும் வினை அடிச்சொல்லால் பிறந்தது. பகு, பகுத்தல் அதாவது பிரித்தல். எல்லா உயிர்க்கும் பகுத்து கொடுப்பவனே பகவன். இன்னொரு வகையில் சொல்வதானால் எமக்கு எல்லாம் படி அளப்பவன் பகவன். 

கடவுள் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு பிறமதங்கள் தோன்றத்தோன்ற அம்மதங்களை உருவாக்கிய தலைவர்களும் பகவன் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். உதாரணமாக தற்காலத்தில் வாழ்ந்த சத்திய சாயி பாபா கூட பகவன் என அழைக்கப்பட்டார். இவர்களில் இருந்து இறைவனைப் பிரித்துக்காட்டவே ஆதிபகவன் என்ற பெயரால் அழைத்தார்.  

அகரம் எல்லா எழுதுக்களுக்கும் முதலாவதாகவும் ஏனைய எழுத்துக்களொடு கலந்தும் நிற்பது போல ஆதியாகிய இறைவனும் உலக தோற்றத்திற்கு முதலாகவும், உயிர்கட்கு உயிராகவும், உயிரற்ற பொருட்களை இயக்கும் இயக்கனாகவும் நிற்பான் எனக்கூறும் குறள். 

Wednesday, 6 November 2013

புங்குடுதீவு மக்கள் வளர்த்த கொட்டி!

புங்குடுதீவு மக்கள் வளர்த்த கொட்டி இப்போது மீன் தொட்டியில்
கிழங்கோ! கிழங்கு!!
தமிழ் இலக்கிய உலகில் உலாவரும் யாவரும் அறிந்த பெரும் புலவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரின் மகன் அம்பிகாபதியையும் பலரும் அறிவர். அவன் சோழ அரசனின் மகள் அமராவதியைக் காதலித்தான். அவன் தனது காதலியைப்  பார்த்துப் பாடிய 
இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய”
என்ற ஈரடியும் யாவரும் அறிந்ததே. இந்த ஈரடியைத் தொடர்ந்து கம்பன் “கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!!” என்று பாடினானே, அந்தக் கொட்டிக் கிழங்கை தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேர் இன்று அறிவோம்?

மேலை நாட்டார் எமக்கு அறிமுகம் செய்துவைத்த உருளைக்கிழங்கு, பீட்ரூட்கிழங்கு என எத்தனையோ வகையான கிழங்குகளை உண்ணும் நாம், நம் முன்னோர் உண்ட கொட்டிக் கிழங்கை அறியமாட்டோம். அது கொடியா? செடியா? என்பதும் எமக்குத் தெரியாது. நாம் ஏன் இப்படி நம் முன்னோரின் உணவுகளைப் புறக்கணித்தோம்? நம் அறிவீனமா? எமது சோம்பலா? நம் தமிழ் முன்னோர் ஏதும் அறியாதவர்கள் என்ற எண்ணமா? பிறநாட்டார் மோகமா? எது காரணம்? இதற்கான பதில் யாருக்காவது தெரியுமா? நம்மை நாம் புறக்கணிப்பதே அதற்குக் காரணம். 

கொட்டிக்கிழங்கு எங்கு வளரும் என்பதை எம் தமிழ் மூதாட்டியான ஔவையார் சொல்லிச் சென்றுள்ளார். ஔவையார் பாடிய நூல்களில் ஒன்று மூதுரை. அதில் நமது உறவினர்களில் யார் யார் உண்மையான உறவினர்கள் என்பதைக் கண்டறிவது எப்படி என்பதைக் கூறுமிடத்தில் கொட்டியையும் கூறுகிறார்.
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு”                                     - (மூதுரை - 17)

நீர் அற்ற குளத்திலிருந்து [அற்ற குளத்தின்] பறந்து செல்கின்ற [அறு -நீங்கிப்போகும்] நீர்ப்பறவை போல் 
வறுமை வந்த போது [உற்றூழி] தீர்வார் [நீங்குவோர்] உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
நீங்காமல் [ஒட்டி] துன்பதை அனுபவிப்பார் [உறுவார்] உறவினராவர்[உறவு]”  

‘குளத்தில் நீர் இருந்த போது நீரில் நீந்தி, மூழ்கி, ஆடிப்பறந்து மகிழ்ந்து வாழ்ந்த பறவைகள் யாவும் குளத்து நீர் வற்றி இல்லாமல் போனதும் பறந்து போய்விடும். அதுபோல துன்பம் வந்த போது நம்மைவிட்டு நீங்கிப் போவோர்கள் உறவினராகமாட்டார்களாம். அதே குளத்தில் வளர்ந்த கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் தண்ணீர் உயர்ந்திருக்கும் போது உயர்ந்தும், குறைந்து இருக்கும் போது தாழ்ந்தும், நீர் அற்று வறண்டு போனாலும் தாமும் வறண்டு கிடந்து, மீண்டும் மழை பொழிந்து குளம் நிறம்ப துளிர்த்து வளர்வது போல நமது இன்பத்திலும் துன்பத்திலும் ஒட்டி உறவாடுபவர்களே உண்மையான உறவினர்கள் ஆவர்’ என்கிறார்.

கொட்டி - Aponogeton natans [Photo source: Wikipedia]

ஔவையார் கூறிய கொட்டி, ஆம்பல், நெய்தல் மூன்றும் நீர்த்தாவரங்கள். இந்தக் கொட்டியே கொட்டிக்கிழங்கைத் தருவது. யாரும் நடாமலே நீர் நிலைகளில், வயல் வெளிகளில் தானாகவே வளரும். அப்படித் தானாக வளர்ந்து கொட்டிக்கிடந்ததால் அதற்கு கொட்டி என்று பெயர். மேலேயுள்ள படத்தைப் பாருங்கள் கொட்டி என்ற பெயருக்கு எற்றவாறு கொட்டிக் கிடக்கிறதே! நெற்பயிரிடையே களைகளாக கொட்டிக்கிழங்கு வளர்ந்திருப்பதை எங்கள் காணியிலும் [அநுராதபுரத்தில்] தஞ்சாவூரிலும் கண்டிருக்கிறேன். 

நீர்ச்சால் [Photo: source: Agroecology Lab]

அந்நாளில் யாழ்தீவகப்பகுதி மக்கள் வெங்காயக் கூடை போன்று ஆனால் மெல்லியதாகப் பின்னிய முளைக்கூடைகளில் கொட்டியைப் போட்டுக் கட்டி நீர் இறைக்கும் சால்களில் போட்டுவிடுவார்களாம். அது நீர்ச்சாலில் கிடந்து ஊறி முளைக்கும். முளைக்கும் கிழங்கை எடுத்து நீர்ச்சாலில் குளங்குட்டைகளில் நட்டு வளர்த்து, உண்பதர்க்குத் தேவையான கொட்டிக்கிழங்கை எடுப்பார்களாம். தனது சிறுவயதில் கொட்டிக்கிழங்கு இட்ட முளைக்கூடையை எடுத்துச் சென்று நீர்ச்சாலில் போட்டுவைத்ததாக என் தந்தை [பண்டிதர் மு ஆறுமுகன்] சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலாம் இரண்டாம் உலகப்போரின் போது  தீவுப்பகுதி மக்களின் உணவாகவும் கொட்டிக்கிழங்கு இருந்ததாம். ஆனால் இந்நாளில் வயல்களில் அது தானாக முளைத்தாலும் களையெனக் கூறிப் பிடுங்கி எறிகிறோம். இதுவே மேல்நாட்டு மோகம் தந்த வளர்ச்சி.

இயற்கைத் தேர்வாய், இலங்கையிலும் தமிழர் வாழிடமான தென் இந்தியாவிலும்  வளர்ந்த கொட்டியை  பண்டை நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மேலும் கிழக்காக அமெரிக்காவுக்கும் தமிழன் கொண்டு சென்றான். (மாயா இனமக்கள் [Maya Civilization] தாம் கிழக்கே இருந்து வந்ததாகச் சொல்கின்றனர்). கொட்டிக்கிழங்கு நீர்நிலைகளில் வளரும் ஒருவகைப் பாசியை வளரவிடாது. அதனால் மலேரியா நோயைத் தரும் நுளம்புகள் குளங்குட்டைகளில் முட்டை இடாது என்பதையும் நம்முன்னோர் அறிந்திருந்தனர். நாமோ கொட்டியை மறந்து கொட்டும் நுளம்பால் டெங்குக்காய்சலில் அவதிப்படுகின்றோம்.

aquariumplants.com என்ற வலைத் தளத்தில் சென்று பாருங்கள் கொட்டிக் கிழங்கின் பிறப்பிடம் நம் இலங்கை என்பதை அறிவீர்கள். மேல் நாட்டார் கொட்டியை எடுத்து வந்து நன்னீர் மீன் தொட்டிகளிலும், செயற்கை நீர்நிலைகளிலும், நீர்வாழ் உயிரினங்களின் காட்சிச் சாலைகளிலும் வளர்க்கிறார்கள். ஏனெனில் நீர்வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஒட்சிசனைக் கொடுப்பதோடு தொட்டியில் வளரும் பாசியையும் அகற்றும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். நம்மில் எத்தனை பேர் அது கொட்டிக்கிழங்கு என்று தெரியாமலே மீன் தொட்டிகளில் கொட்டியை வளர்க்கிறோம்? அதனால் இன்றைய தமிழர்களாகிய நாம் 'கொட்டிக்கிழங்கா? அது என்ன கொட்டைக் கிழங்கா?' எனக்கேள்வி கேட்கிறோம். 


கொட்டி, கருங்கொட்டி, பேய்க்கொட்டி, காறற்கொட்டி, வன்கொட்டி, தாடுவன்கொட்டி, தண்டற்கொட்டி, குளக்கொட்டி எனக் கொட்டிக்கிழங்கில் முப்பதிற்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. இக்கிழக்கு இயற்கையாகவே கொஞ்சம் இனிப்புத் தன்மையுடையது. இக்கிழங்கை மரவள்ளிக்கிழங்கு போல் அவித்தும், கறியாக சமைத்தும் உண்பர். கொட்டிக்கிழங்கைக் காயவைத்து மாவாக்கி, அந்த மாவில் கூழ், கஞ்சி, களி போன்றவை செய்தும் உண்பர். 

என் தந்தையுடன் தஞ்சாவூர் [1972] சென்ற போது திரு இராஜன் அவர்கள் வீட்டில் நானும் கொட்டிக் கிழங்குக் களி உண்டிருக்கிறேன். சுவையாக இருந்தது. கிரந்தி, கரப்பான், வெள்ளைபடுதல் போன்ற நோய்களை நீக்கும் மருந்தாக கொட்டிக்கிழங்கின் மாவைச் சூரணமாக்கிக் கொடுப்பர். எனவே நம் முன்னோர் கொட்டிக்கிழங்கை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர் என்பதை இதனால் அறியலாம்.
கொட்டி

இவ்வளவு நன்மை தரும் கொட்டிக்கிழங்கை நாம் மறந்தாலும் தமிழ் புலவோரும் மருத்துவரும் எம் சந்ததியினருக்காக அவற்றைக் கட்டிக் காத்து வைத்துள்ளனர்.  அறிஞர் நாவில் சுவைத்த கொட்டிக் கிழங்காதலால் கம்பனுக்காக சரஸ்வதியும் கொட்டிக் கிழங்கு சுமந்தாளோ! 

மூன்றாம் குலோத்துங்க சோழனின் அரண்மனை. அங்கே பலநாட்டு அரசர்களுக்கும் புலவர்களுக்கும் மாபெரும் விருந்து கொடுத்தான் சோழன். சோழனின் மகள் அமராவதியும் விருந்துக்கு வந்திருந்தாள். அந்த விருந்தில் கலந்துகொள்ள சோழ அரச அவைப்புவரான கம்பரும் அவர் மகன் அம்பிகாபதியும் சென்றனர். சென்றவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அம்பிகாபதியை அமராவதி கண்டாள். அவனுக்கு உணவு பறிமாறுவதற்காக உணவு வைத்திருந்த வட்டிலை கையில் எடுத்தாள். இடை அசைய மெல்ல நடந்தாள். [உணவுப் பொருட்கள் வைக்கும் வட்டமான பாத்திரம் வட்டில் என்று அழைக்கப்பட்டது. அதனைத் தேவைக்கு ஏற்ப பொன், வெள்ளி, மண், மரநார், ஓலை, பிரம்பு போன்றவற்றால் செய்தனர்.]  

கொட்டிக்கிழங்கு 

கவிஞனான அம்பிகாபதி தன் காதலி வட்டிலைச் சுமந்து நடந்து வருவதைக் கண்டான். காதல் மயக்கத்தில் அங்கே கூடியிருந்த விருந்தினரையும் மறந்தான்.
“இட்டஅடி நோவ எடுத்தஅடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய” 
எனப் பாடினான். அவன் யாரைப் பார்த்துப் பாடுகிறான் என்பதை உணர்ந்த கம்பர் அவனின் பாட்டின் இடையே புகுந்து
                                                 - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெறும்”
என்று பாடினார். கம்பர் இடையே புகுந்து பாடியதும் அம்பிகாபதி தன் தவறை உணர்ந்து அமைதியானான். 

‘வைத்தஅடி நோக [இட்டஅடி நோவ] நடக்கத் தூக்கியஅடி [எடுத்தஅடி] கொப்பளிக்க
வட்டில் சுமந்து இடை அசைய [மருங்கசைய] - கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று சொல்பவளது [கூறுவாள்] நாவில்
வருமோசை [வழங்கோசை] உலகிற்கு [வையம்] ஈடாகும் [பெறும்]’

ஆனால் குலோத்துங்க சோழனோ கம்பரைப் பார்த்து ‘இந்த விருந்து மண்டபத்தில் வட்டில் சுமந்து கொட்டிக்கிழங்கு விற்பது யார்?’ என்று கேட்டான். கம்பனும் ‘அதோ கேட்கிறதே கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!’ என்று கூறுவது என்றான். கம்பன் சொன்னது போலவே பக்கத்துத் தெருவில் ஒருத்தி 'கொட்டிக் கிழங்கோ! கிழங்கு!' என்று கூறுவது எல்லோருக்கும் கேட்டது. கம்பனுக்காகச் சரஸ்வதி வட்டிலில் கொட்டிக் கிழங்கு சுமந்து விற்றாள் என்பர். இலக்கியச் சுவை மிக்கதும் நமது முன்னோர் சுவைத்ததுமான கொட்டிக் கிழங்கை புங்குடுதீவு மக்கள் எப்போ சுவைக்கப் போகிறோம்?
இனிதே, 
தமிழரசி.

Tuesday, 5 November 2013

ஆனந்தமான முருகா!




கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                        - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

















ஓராத பேர்வாழ உத்தமர் மனம்நோவ
          உவத்தல் நின்னியல்பு தானோ
ஒருமாவின் வடிவான முதுசூ ரழித்தவா
          ஓங்கார ஒளி ரூபனே
பாராத பார்வையை என்மீது வைப்பதோ
          பாவி மீதருளி ல்லையோ
பிரமனைச் சிறையிட்டு உலகம் படைத்தருள்
          பன்னிரு விழிக் கருணையே
ஆராதனை செய்தயர்ந்தே னலால் நின்
          அடியிணை பிடிக் கிலேனே
அண்டங் கடந்தபர வெளியாகி ஒளியாகி
          ஆனந்த மான முருகா
தீராத வினையெலாந் தீர்த்தருளி நிறைசெல்வம்
           சித்திக்க அருள் ஈகுவாய்
திருமருவு கிளிநொச்சி சேர்கந்த கோட்டத்து
           இருந்தருளு கந்த வேளே!

Sunday, 3 November 2013

பெற்றபிள்ளையைக் கொடுப்பார்களா?



இளவரசன் ஒருவன் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். மான் வேட்டைக்குச் சென்றவனுக்கு  முன்னே, மான் போல் துள்ளிக்குதித்து ஓடிய மான் விழியாளைக் கண்டான். காதல் கொண்டான். அவள் மேல் கொண்ட காதலை அந்நாட்டு அரசனான தன் தந்தைக்குச் சொன்னான்.  தனது நாட்டின் வெங்கை மாநகரத் தலைவனின் மகள் அவளென்பதை ஒற்றர்களால் அரசன் அறிந்து கொண்டான். அவளை இளவரசனுக்கு மணம் பேசி, அவளின் தந்தைக்குத் தூது அனுப்பினான். தூதுவன் சென்று அவளின் தந்தையிடம் தூதோலையைக் கொடுத்தான்.
அந்நாட்டு அரசன் தன் மகளை இளவரசனுக்குத் திருமணம் செய்யக் கேட்டு அனுப்பிய தூதோலையை வாசித்த வெங்கை மாநகரத் தலைவன் சினந்து கொதித்து எழுந்தான். ‘எவனாவது அரசர்களுக்கு பெண்கொடுப்பானா? அரசர்களை மணந்த பெண்களின் நிலை என்னாயிற்று? தன் மனைவியை விற்றவன் யார்? அரிச்சந்திரன். [ ஓர் அரசன் அல்லவா?], பாதி உடையுடன் [கலை] காட்டில் [வனத்தில்] மனைவியை அழவிட்டவன் யார்? நளமகாராசன். [அவனும் ஓர் அரசன் தானே!], தனது மனைவியை அசோகவனச் சிறையில் இருக்கவிட்டவன் யார்? [இராமன் தசரதமகாராசன் மகன் அல்லவா?], மனைவியின் உடையை மற்றவர்கள் உரிவதைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தவர்கள் யார்? [பஞ்சபாண்டவர்கள் அரசர்கள் தாமே!]. அப்படியிருக்க இனிமேலும் தமக்கு மனைவி வேண்டுமென்று அரசர்கள் பெண்களைத் திருமணம் செய்தல் முறையாகுமோ! காறித் துப்பெடா! திருணம் என்று சொன்ன அந்த வாயைக் கிழித்து, ஓலையைக் காற்றில் பறக்கவிடடா.

நாங்கள் யார் தெரியுமா? வெங்கை மாநகர் வேடர்கள் நாம்.கடவுளாகிய சிவபெருமானே எங்களிடம் வந்து மகிழ்வோடு எங்களின் எச்சில் உணவை [கண்ணப்ப நாயனார் சுவைபார்த்துக் கொடுத்த எச்சில் உணவை] உண்டபின்னர், அவர் வெற்றெடுத்த முருகனுக்கு போனால் போகுது பாவம் என்று நாங்க வளர்த்த பெண்ணைக் [வள்ளியைக்] கொடுத்தோம். அப்படிப்பட்ட நாம் பெற்றெடுத்த பிள்ளையைக் கொடுப்போமா? உனக்கென்ன பேயா பிடித்திருக்கிறது?’ எனத் தூதுவனை வேடுவதலைவன் துரத்தினான் என சிவப்பிரகாச சுவாமிகள் பாடியிருக்கிறார். 
விற்றதார் கலை பாதியோடு 
          வனத்திலே அழவிட்டதார்
வெஞ்சிறை புக விட்டதார் 
           துகில் உரியவிட்டு விழித்ததார்
உற்றதாரமும் வேண்டும் என்றினி 
            மன்னர் பெண்கொளல் ஒண்ணுமோ!
உமியடா! மணமென்ற வாய்கிழித்து
           ஓலை காற்றில் உருட்டடா!
வெற்றியாகிய முத்தி தந்தருள்
           வெங்கை மாநகர் வேடர்யாம்
விமலரானவர் எமையடுத்து இனிது
            எங்கண் மிச்சில் மிசைந்தபின்
பெற்றவேலர் தமக்கு யாமொரு
           பெண் வளர்ப்பினில் ஈந்தனம்
பெற்றபிள்ளை கொடுப்பரோ! ஈதென்
           பேய் பிடித்திடு தூதரே!!                            - (திருவெங்கைக் கலம்பகம்: 101)
இப்பாடலைப் நன்றாகச் சுவைத்துப் படித்த பின்னர் எவராவது அரசர்கட்கும் கடவுளர்க்கும் தாம் பெற்றபிள்ளையைக் கொடுப்பரோ! 
இனிதே, 
தமிழரசி.