Sunday, 9 September 2012

குறள் அமுது - (43)



குறள்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.                                    - 396

பொருள்:
மணற்கேணியில் இருக்கும் மணலைத் தோண்டத் தோண்ட அதில் ஊறிவருகின்ற நீரின் ஆழம் கூடிக்கொண்டு போவது போல மனிதர் கற்கக் கற்க அவரது அறிவும் கூடும்.

விளக்கம்:
கல்வி என்னும் அதிகாரத்தில் இருக்கும் இத்திருக்குறள் எமது அறிவை எப்படி வளர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. சிறுகுளம், தடாகம் போன்றவை கேணி என அழைக்கப்படும். அதனை கருங்கல்லால் கட்டியிருந்தால் பொக்கணை என்பார்கள். புளியம் பொக்கணை, குட்டம் பொக்கணை போன்றவை அவை. அப்படிக் கட்டாது மணலாலே ஆனதாக இருந்தால் மணற்கேணி என்பார்கள். 

மணற்கேணியில் உள்ள நீர் வெயிற் காலங்களில் வற்றிப்போவதால், குறைந்த ஆழமுள்ள நீரே அக்கேணியில் நிற்கும். கேணியின் அடியிலுள்ள மணலைத் தோண்டி எடுக்க எடுக்க அக்கேணியின் நீரின் ஆழம் கூடும். எவ்வளவுக்கு எவ்வளவு மணலைத் தோண்டி எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரின்  ஆழம் மிகக்கூடி இருக்கும். இதேபோல் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் அறிவும் பெருகும்.

ஒருவர் பத்தாம் வகுப்புப் படித்தபோது இருந்த அறிவைவிட பட்டப்படிப்பின் பின்னர் அறிவு கூடியவராக இருப்பார் அல்லவா? சிறுவயதில் படிக்கும் காலத்தில் மணற்கேணியை தோண்டுவது போல தொடர்ந்து கற்போம். அதனால் நம் அறிவு பெருகும். படியாத சாதாரணமாக மனிதர்கூட ஐந்து வயதைவிட ஐம்பது வயதில் அறிவு கூடியவராக இருப்பர். கற்றதால் பெற்ற அறிவுக்கும், வாழ்வின் இன்ப துன்ப அனுபவங்களால் பட்ட அறிவுக்கும், நிறையவே வேறுபாடு உண்டு. திருவள்ளுவர் இக்குறளில் கற்பதால் பெறப்படும் அறிவைப்பற்றியே சொல்கிறார்.

பட்டப்படிப்புக்கள் மட்டும் எமக்கு கல்வியறிவைத் தந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டிய விடயங்கள் இந்த உலகில் நிறையவே இருக்கின்றன. சரஸ்வதி சொல்கிராள் என ஔவையார் சொன்னது போல் 
“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவென்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்" 
இருக்கின்றன. 

எனவே எமக்கு விரும்பிய புதுப் புது விடயங்களாகப் பார்த்து ஆராய்ந்து ஆராய்ந்து கற்கக் கற்க அறிவும் மணற்கேணியின் நீர் போல் பெருகும்.

Friday, 7 September 2012

விடிவெள்ளி வந்தேறுமா?


தீர்க்காத தீர்வெல்லாம் திண்டாடுது
          தினமேங்கி தமிழ்நெஞ்சம் புண்ணாகுது
நீர்க்கோலம் போன்ற நிலையானது
          நன்றென்றால் நாளை என்னாவது
ஊர்கோலம் காணவே மனமேங்குது
          உரிமைக்கு விடிவெள்ளி வந்தேறுமா
போர்கால மேகங்கள் புறம்போகுமா
          பொன்னான எதிர்காலம் உடனாகுமா
இனிதே,
தமிழரசி.

Monday, 3 September 2012

அடிசில் 34

சுண்டைக்காய் பிரட்டல் 
                                                       - நீரா -















தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்  - 300 கிராம்
வெட்டிய வெங்காயம்  -  1
செத்தல் மிளகாய்  - 5
வெந்தயம்  -  2 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி
சின்னச் சீரகம்  -  1 தேக்கரண்டி
புளி  - 15 கிராம்
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு   
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை: 
1.  சுண்டைக்காய்களை நன்றாகாக் கழுவி தண்ணீர் இல்லாது காய்ந்ததும், கிரண்டரில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்க.
2.  புளியை தண்ணீரில் ஊறவிட்டு கரைத்துக் கொள்க.
3.  செத்தல் மிளகாயையும் வெந்தையத்தையும் பொன்னிறமாக வறுத்து தூளாக, இடித்துவைக்கவும்.
4.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
5.  அதனுள் நறுவல் துருவலாக அரைத்துள்ள சுண்டைக்காயை போட்டு வதங்க விட்டு, உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் வேகவிடவும். 
6.  வெந்ததும் கரைத்த புளியையும், இடித்த தூளையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து பிரட்டலாக வரும்பொழுது இறக்கவும்.

Saturday, 1 September 2012

ஆண்டு! வருடம்! தமிழா?


பண்டைக்காலத் தமிழரில் விண்வெளி அறிஞர் பலர் இருந்ததை முதுகண்ணன் சாத்தனார் என்னும் சங்ககாலப் புலவர்
“செஞ்ஞாயிற்றுச் செலவும் 
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்பாரும் உளரே”                - (புறம்: 30)

என புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளார். 

இப்பாடலில் ‘சிவந்த சூரியன் செல்கின்ற வீதியும், அந்தச் சூரியனின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும் காற்றுவீசும் திசையும், ஒருவித ஆதாரமும் இன்றி நிற்கின்ற வானமும் ஆகிய இவற்றை தாம் நேரே சென்று அளந்து அறிந்தவர் போல் இதுஇது இப்படிப்பட்டது என்று சொல்வாரும் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார். 

ஆனால் இன்றோ ஆண்டு என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும், வருடம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும் இருக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்திருக்கும் தமிழும், தமிழரும் காலக்கணிதத்தை அறியவில்லை என்பது அவர்களது முடிபு. அந்த முடிவுக்கு அவர்கள் வர அவர்களது அறியாமைமட்டுமல்ல, தமிழர்களாகிய எமது அறியாமையும் காரணமாகும்.

எது எமது அறியாமை? எமது முன்னோர் அறிந்திருந்தது என்ன? அவர்கள் சொல்லிச் சென்ற அநுபவ உண்மைகள் என்ன? அவர்கள் காண்டறிந்தவை என்ன? என்பவற்றை நாமும் அறியாது, அவற்றை தேடி எடுத்து எம் தமிழ்க்குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்காது இருப்பது எமது அறியாமை தானே? காலம் கடந்துவிடவில்லை நாம் இவற்றை இப்போதும் செய்யலாம்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல்  நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”                
                                                  - (குறுந்தொகை: 40)

இது உங்களில் பலருக்குத் தெரிந்த பாடல், குறுந்தொகையில் உள்ளது. இந்தக் குறுந்தொகைப் பாடல் வரிகளை, ’இருவர்’ படப்பாடலான “நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்” என்றபாடலில் வைரமுத்து புகுத்தி இருக்கிறார். நறுமுகையே பாடலை விரும்பிக் கேட்டோருக்கு இந்தவரிகள் தெரிந்திருக்கும். இவ்வரிகள் இரண்டாயிர வருடப் பழமையானவை. இதில் வரும் யாயும் ஞாயும் என்பது தாயும் தாயும் என்றே பொருள் தரும். பழந்தமிழர் சொன்ன யாய், யானை, யாடு போன்ற சொற்களை யாய் - தாய், ஆய் ஆகவும், யானை - ஆனை ஆகவும், யாடு - ஆடு ஆகவும் நாம் மாற்றிக் கொண்டது போல ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லை ஆண்டு என்கிறோம்.

புறநானூற்றில் பிசிராந்தையார் என்ற சங்கப்புலவர் வயது முதிர்ந்த பின்பும் தாம் இளமையாக இருப்பதற்கான காரணத்தைக் கூறுவதாக ஒரு பாடல் வருகின்றது. அப்பாடலில் 
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்” 
எனக்கூறுமிடத்தில் ஆண்டுகள் பல கடந்தும் நரை இல்லாது இருப்பது எப்படி எனக்கேட்பீர்கள் ஆனால் எனத் தொடங்குகிறார். யாண்டு எனப் பண்டைத்தமிழர் அழைத்த சொல்லே ஆண்டு ஆகியது என்பதற்கு பிசிராந்தையாரின் இப்பாடலை விடவும் ஆதாரம் இன்னும் வேண்டுமா?
பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலத்தின் எல்லைகள்


பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலத்தின் எல்லைகளைச் சொல்லும் புறநானூற்றுப்பாடல்
“வடாது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாது உருகெழு குமரியின் தெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் 
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் 
என நான்கு திசைகளையும் சொல்கிறது. இதில் வடக்கு, தெற்கு தவிர்ந்த குணக்கு - கிழக்கு திசையையும் குடக்கு - மேற்குத் திசையையும் குறிக்கும்.  

மேலேயுள்ள முதற்பாடலில் முதுகண்ணன் சாத்தனார் 
‘வளிதிரி தரு திசையும்’
எனக் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அவர் குறிப்பிடும் காற்று திரியும் திசையை அதாவது காற்று வீசும் திசையைக் கொண்டே ஒவ்வொரு திசையாலும் வரும் காற்றுக்கு ஒவ்வொரு பெயரிட்டு தமிழர் அழைத்தனர். 

குடக்கில் (மேற்கில்) இலிருந்து வீசும் காற்று குடக்காற்று ஆயிற்று. அதுவே கோடைக்காற்று.
குணக்கில் (கிழக்கில்) இருந்து வீசும் காற்று கொண்டல் ஆயிற்று. 
வடக்கில் இருந்து வீசும் காற்று வாடை ஆயிற்று. 
தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் ஆயிற்று.
இப்படி எல்லாம் மிக நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துப் பெயர் வைத்த நம் முந்தையோருக்கு ஆண்டு, வருடம் எனப் பெயரிடத் தெரியாமல் போயிற்றா? 

வருடு வருடல் என்பன தடவு, தடவுதல் எனும் கருத்தில் வரும் சொற்களாகும். தென்றல் மெல்ல உடலை வருடத் தொடங்கும் காலத்தில் வருடம் தொடங்குவதால் அதற்கு 'வருடம்' எனப்பெயரிட்டிருக்கலாம். நம் முந்தையோர் வைத்த பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கின்றன. 

அதனால் சங்ககாலப் புலவர்களிடம் இருந்து ஏதும் தரவுகளைப் பெறமுடியுமா பார்ப்போம். பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி படுத்திருந்த கட்டில் விதானத்தில் புதிதாக மெழுகுபூசிச் செய்த  திரைச்சீலை கட்டியிருந்தது. அதில் ஓர் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியம் உறுதியான கொம்புள்ள ஆடு என்ற இராசியைத் தொடக்கமாகக் கொண்டு விண்ணில் சுற்றிவருகின்ற ஞாயிற்று மண்டலத்தையும் அந்த ஞாயிற்றைவிட மாறுபட்ட சிறப்புடைய திங்களாகிய சந்திரன் செல்லும் பாதையில் விலகாது நிற்கும் ரோகிணி என்ற நட்சத்திரத்தையும் கொண்ட ஞாயிற்றுத் தொகுதியைக் காட்டியது. இதனை


“புதுவது இயன்ற செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடுதலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி”
                                                     - (நெடுநல்வாடை: 159 - 163)
என நெடுநல்வாடை சொல்கிறது. 

இன்றைய தமிழர்களாகிய நாம் மேடராசி என்று அழைக்கும் இராசியை பண்டைய தமிழர் ஆடு என அழைத்தனர். ஆடு என்ற இராசியை (மேடராசியை) தொடக்கமாகக் கொண்டே வான்வெளியில் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும் சுற்றுகின்றன எனக் கணிக்கப்பட்டன. எனவே ஆடு எனும்  இராசியைத் தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று ஆண்டு ஆயிற்று என்பதை நாம் அறியலாம்.
                                    
                            வரை ஆடு[வருடை]                                    

இது போல் வரைஆடு என மலை ஆட்டை அழைத்தனர். வரை என்றால் மலை. வரைஆடு சங்கத் தமிழரால் வருடை எனவும் அழைக்கப்பட்டது. மேடராசியை வருடை எனக்காட்டும் சங்ககாலப் புலவரான நல்லந்துவனார் கோள்கள் சில வான்வெளியில் எந்தெந்த ராசியில் நின்றன என்பதையும் காட்டியுள்ளார். அவர் கூறியதை வைத்து அந்த வானியல் நிகழ்ச்சி கி மு 161ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் நாள் வியாழக்கிழமை நடந்ததாக சைவசித்தாந்தக்கழக நூற்பதிப்பில் 1969ல் வெளிவந்த சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூறப்பட்டுள்ளது. நல்லந்துவனார் 
“விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப 
எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதின் இருக்கையுள் 
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப........”                                         
                                                  - (பரிபாடல்: 11: 1 - 7)
என விரிவாக சொல்கிறார். இதில்
“வருடையைப் படிமகன் வாய்ப்ப”
என்று வருடை ராசிக்கு (மேடராசிக்கு) செவ்வாய் (படிமகன்) வந்ததை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வருடை இராசியை (மேடராசியை) தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று வருடம் ஆயிற்று. 

சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் யாடு - ஆடு; வருடை என மேடராசியை அழைத்தனர். அதனால் சங்கப் புலவர் வாயிலாக யாடு - ஆடு ஆகி, யாண்டு - ஆண்டு ஆகி, வருடை - வருடம் ஆனதையும் கண்டோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து சொல்லப்படும் ஆண்டு, வருடம் தமிழா! எனக்கேட்போருக்கு என்ன பதில் சொல்லலாம்?
 இனிதே,
 தமிழரசி. 

Thursday, 30 August 2012

தாயே மீனாட்சி!


தாயே மீனாட்சி! தரணியெங்கும் பாழாச்சி!
மாயே நீயானால் மாற்றிடுவாய் எமதாட்சி!
பாயே படுக்காத பாவியார் உளராச்சி!
நோயே இலாது நோன்பிருப்பார் யாராச்சி!
வாயே திறந்து வரம்தரவே வாஆச்சி!
காயே ஆனாலும் கனியாய் தாஆச்சி!
தீயே நீயானால் தீண்டுவார் யாராச்சி! 
நீயே ஆதாரம் நிம்மதியை தாஆச்சி!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 29 August 2012

உள்ளம் உருக உணர்மின்கள்! - 2



தேவாரம் பாடிய மூவரிலே சுந்தரமூர்த்தி நாயனார் இளவரசனாக வளர்ந்தவர். அதனால் இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர். தனது இன்பவாழ்க்கைக்குத் தேவையானவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற்றார் என்பதை அவர் பாடிய தேவாரப் பதிகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 

சுந்தரமூர்த்திநாயனார் கணிகையர் குலத்தைச் சேர்ந்த பரவையாரை திருமணம் செய்து திருவாரூரில் வாழ்ந்து வந்தார். மழை இன்மையால் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழமை போல சுந்தரரும் உணவுக்கு வழி செய்யும்படி இறைவனிடம் கேட்டார். கேட்டதும் கொடுத்தால் யார் கடவுளை நினைப்பார்? எனவே இறைவனும் சுந்தரரிடம் அன்புடையவராய் இருந்த குண்டையூர்க் கிழார் என்பவர் வீட்டில் நெல்லை மலையாக குவித்தார். குண்டையூர்க்கிழாரும் அந்த நெல் மலையை வந்து எடுத்திப்போகும் படி சுந்தரருக்கு செய்தி அனுப்பினார். 

அந்த நெல்மலையை சுந்தரரால் தனியே எடுத்துச்செல்ல முடியுமா? எனவே திருவாரூரில் இருந்து குண்டையூர் செல்லும் வழியில் திருகோளிலி என்னும் கோயிலுக்கு சென்றார். அந்த திருக்கோளிலி இறைவனிடம் ‘கோளிலியில் குடியிருக்கும் பெருமானே! அடியவனாகிய நான் மிகவும் நீளாமாக நினைந்து உன்னை ஒவ்வொரு நாளும் வணங்குவேன். வாள் போன்ற கண்ணை உடையவளான பரவையார் பசித்துன்பத்தில் வாடாதிருக்க குண்டையூரில் கொஞ்சம் நெல்லைப் பெற்றேன். கொண்டு வர ஆளில்லை. அவற்றைக் கொண்டுவந்து சேர்க்க எவருக்காவது கட்டளை இடு’ என்கிறார். இதனையே ‘நீள நினைந்தடியேன்‘ தேவாரம் சொல்கிறது. தேவாரத்தைப் பாருங்கள்

“நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே!”          
                                                - (பன்னிரு.முறை: 7: 20: 1)

நாம் விரும்பும் பெண்ணுக்காக நாமும் குண்டையூரில் நெல்லுப் பெற்று, அவற்றை எடுத்துவர ஆள் இல்லாது இத்தேவாரத்தைப் பாடினால் இறைவனும் ஆட்களை அனுப்பி வைப்பார். நாமோ எதுவித குறிக்கோளும் இன்றி இத்தேவாரத்தை பாடுகிறோம். இதனால் நாம் அடையும் பயன் என்ன? நாம் பாடும் தேவாரத்தின் கருத்து அறிந்து பாடினால் நன்றல்லவா?

இத்திருக்கோயில் தேவாராரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் இரண்டு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடி இருக்கின்றனர். சுந்தரர் பாடிய பதிகத்தில் கடைசித் தேவாரம் தவிர்ந்த மற்றைய தேவாரம் யாவும் நெல்லைக் கொண்டு வந்து சேர்க்க கட்டளை இடு எனக் கேட்பதாகவே இருக்கின்றன. 

எனவே திருக்கோளிலிப் பெருமானைப் பாடிய சம்பந்தரின்
“நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் அடல்நெஞ்சே அரன்நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமானே”              
                                                - (பன்னிரு.முறை: 1: 62: 1)
என உள்ளம் உருக இந்தத் தேவாரத்தையோ அன்றேல் அப்பரின்

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன் சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே!”                        
                                                 - (பன்னிரு.முறை: 5: 57: 1)
என்ற தேவாரத்தையோ அல்லது

“மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடை முடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீலகண்டனை நின்று நினைமினே!”             
                                                 - (பன்னிரு.முறை: 5: 56: 8)
எனும் தேவாரத்தையோ நாம் பாடலாமே!

ஒருவர் எம்மிடத்து எப்படி அன்புடையராக இருக்கிறார் என்பதை நாம் உணரலாமே அல்லாமல் காட்டமுடியாது. அதுபோல் இறையருள் என்பது ஓர் உணர்வு. அதனை எமது நினைவில் நிள நினைந்து நினைந்து சுவைக்கமுடியும். அந்த நினைவின் சுவையை நாம் பக்தி என்கின்றோம். அதுவே பக்திச்சுவை. 

நினைந்து நினைந்து உணர்ந்து
          நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்
          நீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே
          நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை
          நாயகனே என்று .....”
இறவனை உள்ளம் உருக உணர்மின்கள்.

திருக்கோளிலி கோயிலை திருக்குவளை என்றும் அழைப்பர். இக்கோயில் சுந்தரர் வாழ்ந்த இடமான திருவாரூரில் இருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலும் அவர் நெல் பெற்ற குண்டையூரில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்திலும் இருக்கிறது. இங்கு இருக்கும் சிவலிங்கம் வெண்மணலால் ஆனது.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 28 August 2012

காவியமே! நீ உறங்கு!


ஈழத்து நாட்டுப்பாடல்களில் ஒன்றான தாலாட்டு பாடல்கள் தாய்மாரின் அறிவையுயும், கற்பனையையும், நாட்டின் நிலைமையையும் பொறுத்து பாடப்பட்டு வந்தன. அப்படிப் பாடப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் அந்தந்தக் கால ஈழத்தமிழரின் நாட்டு நிலைமையை பண்பாட்டை எடுத்துச் சொல்கின்றன. இந்த நாட்டுப்பாடல் 1940ல் பூநகரியில் பாடப்பட்டு வந்த தாலாட்டுப்பாடலாகும். 

இந்தத் தாலாட்டுப்பாடல் தைப்பூச நாளில் குழந்தையைத் தொட்டிலில் முதன்முதல் வளர்த்துவதையும், குழந்தை பிறந்ததை எல்லோர்க்கும் சொல்வதையும், மாமன் மகனை திருமணம் செய்வதையும், பிறந்த குழந்தைக்கு மாமன் அல்லது மைத்துனன்  சித்திரை மாதத்தில் சீர் கொடுப்பதையும் ஈழத்தமிழர் குறிப்பாக பூநகரியைச் சேர்ந்த தீவுப்பகுதி மக்கள் தமது பண்பாடாகக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.  

ஆரிராரோ! ஆராரோ!
ஆரிராரோ! ஆராரோ!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
கண்மணியே! கண்ணுறங்கு! 
காவியமே! நீ உறங்கு!
தைமாதம் பொறந்தவளே!
தங்கவள போட்டுவச்சோம்!
                                       - கண்மணியே! 
மைபூசு கண்ணாளே!
மாவிளக்கே! கண்ணுறங்கு!
தைப்பூசம் வந்தாக்கா
தொட்டிலிடக் காத்திருக்கோம்
வையத்திலுள்ளார்க்கு உம்
வரவு சொல்லிவச்சோம்
வையத்தின் இரத்தினமே!
வடிவழகே! கண்ணுறங்கு!
                                      - கண்மணியே! 
மைத்துனன் மாமன் பையன்
மணமுடிக்க காதிருக்கார்
சித்திரை வந்தாக்கா
சீரோடுதான் வருவார்
நித்திரையில்லாம நீர்
நித்தமும் அழலாமோ!
சிந்தூரப் பசும்பொன்னே!
செம்பகமே! கண்ணுறங்கு!
                                       - கண்மணியே!
                                                  -  நாட்டுப்பாடல் (பூநகரி)
                                   - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

ஈழத்தில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டத்தின் நிலையை எடுத்துச் சொல்லும் இன்றைய தலாட்டுப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

கண்மணியே! கண்ணுறங்கு!
காவியமே! நீ உறங்கு!
பொன்முடிசூடிய பூச்சரமே! - என்றன்
பூங்குயிலே! இன்று கண்ணுறங்கு!
                                             - கண்ணுறங்கு!
நாய்கள் குரைகுது இராவினிலே - இந்தி
இராணுவம் போகுது வீதியிலே
வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள் 
வாசலில் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுதுபார் - எட்டு
திக்கிலும் போர்குரல் கேட்குதுபார்
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான்
பாலுடன் ஊட்டுவன் வாயினிலே
                                                 - கண்மணியே!
செல் வந்த வேளையில் நீ பிறந்தாய் - இன்று
செல் வந்து உன்னப்பன் போய் முடிந்தான்
வல்லவர் யாவரும் காட்டினிலே - கொடும்
வானரக் கூட்டங்கள் நாட்டினிலே
அப்பன் தமிழ்க்கவி வாணனடா - உன்
அண்ணன் ஒரு புலி வீரனெடா
இப்போது மட்டுமே தூங்கிவிடு! - தமிழ்
ஈழத்துக்காகவே வாழ்ந்து விடு!                              
                                                 - கண்மணியே!
இனிதே,
தமிழரசி.