Wednesday, 23 May 2012

ஆமைபோல் தெளிவிலாதேன்


தேவாரம் பாடிய மூவரில் திருநாவுகரசு நாயனார் வயதால் மூத்தவர். அவர் தமிழரின் வரலாற்றை தமது  தேவாரங்களில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலத்து தமிழரின் பண்பாடு, அரசநீதி, சமயக்கொள்கை, சிற்பம், இசை, நாட்டியம், உணவு, உடை போன்ற சமூக வாழ்வியலை அவரின் தேவாரங்களில் இருந்து நாம் வடித்தெடுக்கலாம். அன்றைய தமிழர் சைவ உணவை மட்டும் உண்டு வாழவில்லை. அவர்கள் புலால் உணவும் உண்டிருக்கிறார்கள். அதிலும் ஆமையை இறைச்சியை  உண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத் தமிழரில் சிலர் கடலாமை உண்பார்கள் என நினைக்கின்றேன். 1970 களில் கோவில் வீதியும், ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகே கடலாமைகள் விற்பனைக்காக மல்லாத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அவற்றைப் பார்த்ததும், ‘எப்படி அவற்றின் ஓட்டை கழற்றி இறைச்சியை எடுப்பார்கள்?‘ என என் மனத்துள் கேள்வி எழுந்தது. ‘பென்னம் பெரிய கடலாமைகளின் ஓடுகளை வாளல் அரிந்து கழற்றி எடுப்பார்களா?’ என, என் தந்தையிடம் கேட்டேன். அவர் வாய்விட்டு சிரித்தார். நீ பார்த்தவை பென்னம் பெரிசா என்றார். நான் பார்த்தனவற்றை விட நான்கு ஐந்து மடங்கு பெரிய கடலாமைகள் இருப்பதாகக் கூறி, ஆமை இறைச்சியை எப்படி எடுப்பார்கள் என்பதை எனக்கு விளங்கவைக்க ஒரு பாடலைப் பாடினார். நான் முன் எப்போதும் கேட்காத பாடலாக அது இருந்தது. எனக்கு அப்பாடல் பிடித்திருந்தது. என்ன பாடல்? யார் பாடியது என்றேன்? தெரியவில்லையா என்றார். மீண்டும், மீண்டும்  பாடினார்

“வளைத்து நின்று ஐவர் கள்வர்
          வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றித்
          தழலெரி மடுத்த நீரில் 
திளைத்து நின்று ஆடுகின்ற
          ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன்
           என்செய்வான் தோன்றினேனே”

முன் எப்போதும் இப்பாடலை படியாதவர் இது என்ன பாடல் என ஊகிக்க முடியுமா? இது தேவாரம்.  திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது. நான்காம் திருமுறையில் இருக்கிறது. இத்தேவாரத்தின்  எந்த ஒரு சொல்லாவது கடவுளைக் குறிக்கிறதா? மிக அருமையாக மனிதவாழ்வைச் சித்தரிக்கிறது. ‘மெய்(உடம்பு), வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்கள் எனச்சொல்லப்படும் கள்வர்கள் வந்து, என்னை சுற்றி வளைத்து நின்று அச்சத்தை தருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். 
ஐம்புலன்களும் நல்லவர்கள் அல்லர். கள்ளர்கள். அவரிடம் இருக்கும் நல்லனவற்றைப் பறித்து எடுப்பதே அவர்களின்  நோக்கம். ஐம்புலன்களாகிய ஐந்துபேரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று அவரை  கொள்ளையடிக்க சுற்றிவளைத்ததால் பயத்தால் நடுங்குகிறார். உயிரோடு ஆமையைக் கட்டி உலையில் போட்டு அடுப்பில் ஏற்றி தீமூட்டுவர். உலைநீர் மெல்ல சூடாகத் தொடங்க, ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி அந்த இதமான சூட்டின் இன்பத்தில் திளைத்து நின்று ஆடுகின்றது. உலைநீர் சூடாகிக் கொண்டிருப்பதையோ அதனால் வரப்போகும் மரணத்தைப்பற்றியோ அது அப்போது அறியாது. ஏனெனில் அதனை அறியும் அறிவு அதற்கு இல்லை. அந்த ஆமை ஐந்து உறுப்புக்களையும் வெளியே நீட்டி எப்படி ஆடுகின்றதோ அது போல அவரும் அறிவுத் தெளிவு இல்லாமல் ஐம்புலங்களால் கவரப்பட்டு சோர்ந்து நின்று ஆடுகிறார். மனிதனாய் பிறந்துவிட்டார் என்ன செய்யமுடியும்?
நாம் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு காரணம் ஐம்புலங்களே. அறிவில்லாத ஆமை உலைநீரில் நின்று ஆடுவது போல் நாம் எல்லோரும் அறிவுத்தெளிவு இல்லாமல் ஐம்புலன்களுக்கு அடிமையாய் ஆடுகிறோம். இந்த விளக்கத்தை தரும் இடத்தில் அந்நாளைய தமிழர் எப்படி ஆமையைக் கொன்றனர் என்பதைக் காட்டி தமிழர் ஆமை இறைச்சி உண்டதை வரலாற்றுப் பதிவாகத் தந்துள்ளார். 
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
சொல்விளக்கம்:
வளைத்து நின்று - சுற்றி வளைத்து நின்று
ஐவர் - ஐம்புலன்கள்
நடுக்கம் செய்ய - நடுங்கச் செய்ய
தளைத்து - கட்டி
தழலெரி மடுத்த - தீமூட்ட
திளைத்து - இன்பத்தில் திளைத்து (மூழ்கி)
இளைத்து - சோர்ந்து
தோன்றினேனே - பிறந்தேனே

Monday, 21 May 2012

குறள் அமுது - (33)



குறள்:
“செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்”                     - 412
பொருள்:
காதுக்கு உணவு கிடைக்காத போது வயிற்றுக்கும் கொஞ்சம் உணவு கொடுக்கலாம்.

விளக்கம்:
நாம் உண்ணும் உணவு வயிற்றைச் சென்றடைவதால் வயிற்றிற்கே உணவு கொடுக்கிறோம். ஆனால் வள்ளுவரோ இயற்கைக்கு மாறாக செவிக்கு உணவு கிடைக்காவிட்டால் வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுக்கப்படும் என்கிறார். 
செவி உண்ணுமா? வள்ளுவரே இன்னொரு குறளில் ‘செவிகைப்ப’ என்பார். செவிகைக்கும் சொற்களைக்கேட்டால் எமக்குக் கோபம் வரும். செவிக்கு உறைத்தால் எமக்கு அழுகை வரும். இனிமையாக இருந்தால் மகிழ்ச்சி அடைகிறோம். இப்போது சொல்லுங்கள் நாக்கு மட்டுமா சுவைக்கின்றது! செவியும் சுவைகின்றதல்லவா? 
இசையைக் கேட்டவாரோ, படம்பார்த்த படியோ, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டோ அன்றேல் ஆழ்ந்து படிக்கும் போதோ நாம் பசியை உணர்வதில்லை. காரணம் செவிப்புலனோடு நாம் ஒன்றும் போது மணத்தை மூக்கு முகரவும், சுவையை நா அறியவும் நேரம் எடுக்கும். விழி பார்ப்பினும் செவி கேட்பதையே நாம் உணர்வோம். 
செவி கேட்பது நின்றதும் வயிறு பசி பசி என பிட்சை கேட்கத் தொடங்கிவிடும். பிச்சை எடுப்பவர்க்கு யாரும் கொட்டியா கொடுப்பார்கள்? ஆதலால் ‘சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்றார். எனவே பிறந்ததன் பயன் உண்பதும் உறங்குவதும் என இருப்பது நல்லதல்ல. நல்லனவற்றை செவிமடுத்து எங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். 
செவிக்கு உணவாகின்ற கேள்விஞானம் கிடைக்காத போது உடல் உயிர்வாழ வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம்.

Sunday, 20 May 2012

உருகிறன்ரி உன்னால!


ஆசைக்கவிதைகள் - 32




பண்டைக்காலத்தில் ஈழத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக பாலிநகரம் இருந்தது. பாலி ஆற்றங்கரையோரம் இருந்த நகரமே பாலிநகரம். பாலிநகரத்தில் இருந்த சிவன் கோயிலின் சிவலிங்கமும் அதன் கேணியும் இன்றும் அங்கு இருக்கிறது. அந்தப்பாலி நகரே இன்றைய  வவுனிக்குளப் பகுதியாக இருக்கிறது. 

பாலியாற்றங் கரையில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் ஒரு நங்கையைக் காதலித்தான். அவளின் குணநலன்கள் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் நினைவுகளில் அவள் அவனுடன் வாழ்ந்தாள்.    அவள் குணமோ மல்லிகை, மருக்கொழுந்து, சண்பகம் போல் நன்றாக இருந்தது. இரவில் அல்லிபோலும் பகலில் தாமரைபோலும் அவன் பார்க்குக்கும் போதெல்லாம் அவள் அழகாகத் தெரிந்தாள். வாழைப்பழம் போன்ற நிறமுடையவள். வலது கையில் இருக்கும் சர்க்கரை போலும், உள்ளங்கையில் இருக்கும் தேன் போலும் இனிமையானவள். இருந்தும் அவனால் அவளை அடைய முடியவில்லை. அதனால் அவளை நினைந்து, நினைந்து உருகி, உருகி அலைந்தான். அவன் நிலையை அவனே நாட்டுப்பாடலாக வடித்து வைத்துள்ளான்.

ஆண்: மல்லி மருக்கொழுந்தே
                     மணமான சண்பகமே
            அல்லியே தாமரையே
                     அலைகிறன்ரி உன்னால!
ஆண்: வாழைப்பழமே வலது
                    கையில் சக்கரையே
           உள்ளங்கைத் தேனே
                    உருகிறன்ரி உன்னால! 
                                         - நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                              - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
பாலியாற்றங்கரைக் காதலனைப் போலவே சங்க இலக்கிய காலத்திலும் காதலனொருவன் இருந்திருக்கிறான். காசு பொருள் ஏதும் இல்லாத ஒருவன் இன்பங்களுக்கு ஆசைப்படுவது போல அவனும் கிடைக்க முடியாத ஒன்றை விரும்பினானாம். அவனது காதலி நல்லவளாக இருப்பதை மட்டும் அவன் அறிந்திருந்தானாம்.  அதுபோல அவள் கிடைத்தற்கு அரியவள் என்பதை அவன்  அறியவில்லையாம், என்று தன் நெஞ்சிற்கு சொல்வதாக பரணர் கூறியுள்ளார்.
“இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு 
அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதள் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே”              - (குறுந்தொகை: 120)

இனிதே,
தமிழரசி.

Saturday, 19 May 2012

அடிசில் 24

வெந்தயக்கீரை உருளைக்கிழங்குக் கூட்டு

                                                                                                 - நீரா -
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை  -  2 கட்டு 
உருளைக்கிழங்கு  -  150 கிராம்
வெட்டிய வெங்காயம்  - 1 பெரியது
வெட்டிய பச்சைமிளகாய்  -  2
மிளகாய் தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள்  -  ½ தேக்கரண்டி
கடுகு  -  ½ தேக்கரண்டி
கறுவாப்பட்டை  -  1” துண்டு
கருவேப்பிலை  -  சிறிதளவு 
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு 



செய்முறை:
1.   வெந்தயக்கீரையை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும்.
2.   உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்து பிட்டுப் போல் உதிர்த்திக் கொள்ளவும்.
3.   சூடான பாத்திரத்தில் எண்ணெய்யை விட்டு  கடுகு, கறுவாப்பட்டை, கருவேப்பிலை போட்டு தாளித்து, கடுகு வெடித்ததும் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.  வெங்காயம் பொன்னிறமாக வரும்போது கீரையைப் இட்டு கிளறி வதங்கவிடவும். 
5.  கீரை சிறிது வதங்கியதும் உப்பு, மஞ்சள், மிளகாய் தூள்  போட்டு வேகவிட்டு, உதிர்த்திய உருளைக் கிழங்கை சேர்த்து மெதுவாகக் கிளறி நீரற்று உதிர்ந்து வரும் போது இறக்கவும்.
6.  தண்ணீர் வேண்டுமானால் சேர்க்கலாம்.

குறிப்பு:
உருளைக்கிழங்குக்குப் பதிலாக அவித்த பருப்பு, பயறு சேர்க்கலாம்.

Friday, 18 May 2012

புத்தன் புனிதன் தானா!



முதலில் அவன் மானுட தர்மத்தை மறந்தவன்,
பிறந்ததோ அரச குடி, அந்தக் குடிக்கு 
ஆற்ற வேண்டிய கடமையை அவன் மறந்தான்,
மணந்தான் அரசகுல மகளை, அவளுக்கு
செய்து கொடுத்த சத்தியத்தை அவன் மறந்தான்,
பெற்றான் ஒரு மகனை, அவனுக்கு
செய்ய வேண்டிய நன்மையை அவன் மறந்தான், 
இப்போது உங்கள் மனதைத் தொட்டு
சிந்தித்து சொல்லுங்கள் புத்தன் புனிதன் தானா?
புத்தன் புனிதன் என்ற பெயரால் உலகினில் 
காலங்காலமாக எத்தனை கோடி உயிர்ப்பலி!
புத்தன் சொன்னதை புவனம் நன்றே கேட்டதா?
புத்தனின் நிர்வாணம் எத்தர்களின் புரிதலில்
புல்லும் ஆடை நீக்கும் நிர்வாணம் ஆனதா?
கொல்லா அறக்கொள்கை எங்கே போனது?
பதில் சொல்லுங்கள் புத்தன் புனிதன் தானா!
இனிதே,
தமிழரசி.

Wednesday, 16 May 2012

திருக்கோணேஸ்வர நாதர்

 திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]



“எத்தனை சென்மங்கள் அழுது தொழுதேன் ஐயா
                    இதயம் கசிந்த துண்டோ
          இறைவனே செல்வமருள் என்றே இரந்தவற் 
                    இழிவான வறுமை ஈந்தீர்
முத்தான வாழ்வை யான் வாழ முடியாமலே
                     முயற்சி செய்தே பிழைத்தேன்
          முதல்வனே முயல்வார் படும்பாடு கண்டு யான்
                     முன்னின்று தொண்டு செய்தேன்
மெத்தவுடல் நொந்த நான் வீரமருள் என்றேன்
                     மேலுமெனை மெலிய வைத்தாய்
           மேதினியி லென் செய்வேன் பணிந்தே நடந்தனன்
                      மேலோர் தம்வரிசையீந்தார்
அத்தனே உன்னை யான் கேட்டவை யளித்திடின் 
                     அகந்தையால் அழிந்திருப்பேன்
          ஆதியே தென்கைலை அப்பனே அடைகலம்
                     அறிந்து நீ அருள்க நன்றே”
                                   
மனதை இந்த நிலையில் உயர்த்தி மகிழ்வுற வைத்துக் கொள்ள வேண்டும். உண்மை வாழ்வு இது தான். “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து” 
இனிதே,
தமிழரசி.

Tuesday, 15 May 2012

தமிழீழத் தேசியக் கொடி

















செந்தமிழ் அன்னையின் செழுமையைக் காட்டி
செஞ்சுடர் வீசிப் பறக்குது பாரீர்
வஞ்சியாம் அவளின் வன்மையைக் காட்டி
வெஞ்சுடர் வீசிப் பறக்குது பாரீர்
கார்த்திகைப் பூவின் கவின் எழில் காட்டி
கதிரெழில் வீசிப் பறக்குது பாரீர்
மாவீரர் தம்மின் மாண்மையைக் காட்டி
மாணொளி வீசிப் பறக்குது பாரீர்
வேங்கைகள் நாமென்ற வேட்கையைக் காட்டி
வெய்யொளி வீசிப் பறக்குது பாரீர்
ஓங்கு தமிழரின் உயர்வினைக் காட்டி
ஓங்கெழில் வீசிப் பறக்குது பாரீர்
தமிழீழ மண்ணின் தகைமையைக் காட்டி
தண்ணொளி வீசிப் பறக்குது பாரீர்
தமிழீழத் தேசியக் கொடி இது பாரீர்
தரணியோர் ஒன்றாய் வணங்குவம் வாரீர்.
 - (1991ல் வீரமரணம் எய்திய எனது தம்பி சிவகெங்காதரன் (நெல்சன்) அவர்களுக்கு கண்ணீர்க்  காணிக்கையாக அவனின் வீரமரணத்தின் போது எழுதியது)