Thursday, 19 April 2012

பக்திச்சிமிழ் - 23

தீராநோய் தீர்த்தருள வல்லான்
- சாலினி -
மனித ஆற்றலுக்கு அப்பால் உலகை இயக்கும் சக்தியை இறைவன் என நாம் அழைக்கிறோம்.  அந்த சக்தியை போற்றினால் - தொழுதால் அது எம்மைக் காக்கும் என நம்புகிறோம். அதனாலேயே எம்மால் தீர்க்கமுடியாத துன்பம் எம்மை அணுகும் போதெல்லாம் இறைவனிடம் முறையிடுகின்றோம். தீராத நோயை தீர்த்தருள் என முறையிடுவோரே உலகில் அநேகர்.  உலகைக் காக்கும் சக்தி எம்மைக் கைவிடாது என்னும் திடநம்பிக்கை எம்மிடம் இருப்பதாலேயே அப்படி முறையிடுகிறோம். தீராத நோயைத் தீர்த்தருள் என முறையிட்டு, இறைவனிடம் கையேந்தி நின்றோர் மருந்து ஏதுமின்றி நோய் நீங்கி, சுகமாக வாழ்வதைக் கண்டனர். அதனால் இறைவனை நோய் தீர்க்கும்  வைத்தியன் எனப்போற்றத் தொடங்கினர். இறைவனுக்கு வைத்தியநாதன், வைத்தீஸ்வரன் எனப்பல பெயர்களைச் சூட்டினர். 
திருநாவுக்கரசு நாயனார் வரலாறு இறைவனை வைத்தியனாகாக் கோடிட்டுக் காட்டுகின்றது. சமண மதத்தின் தலைசிறந்த போதகராக, தருமசேனர் என்ற பெயருடன் வாழ்ந்த திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயத்தவராகவும், சிவனடியாராகவும் மாறக் காரணம் என்ன? அவருக்கு வந்த சூலை நோய் சிவனருளால் மாறியதால் அல்லவா அவர் மீண்டும் சைவனாக மாறினார். அவர் சூலை நோயின் வயிற்று வலியால் துடி துடித்ததை முதலாவது திருப்பதிகத்தில் 'ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே' என்றும் 'சூலை தவிர்த்தருளீர்' என்றும் கூறியுள்ளார். அதன் முதலாவது தேவாரமான ‘கூற்றாயினவாறு’ எனும் தேவாரத்தில் ‘வயிற்றின் உள்ளே குடலோடு தொடங்கி முடக்கி குத்தியெடுப்பதை (இடத்தல் - இட)
“தோற்றாது என் வயிற்றின் அகம்படியே 
          குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
          வீரட்டானத் துறை அம்மானே”                       - (ப.திருமுறை: 4: 1: 1)
எனக் கூக்குரலிட்டு சொல்லியுள்ளார்.
அப்படி சூலை நோயால் துடித்த திருநாவுக்கரசு நாயனாரின் சூலை நோயை நீக்கிய சிவனை 
“பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்”                    - (ப.திருமுறை: 4: 58: 8)
என எமக்குக் காட்டித் தந்துள்ளார்.
பிணிதீர்க்கும் அந்த வைத்தியநாதன் எங்கே இருக்கின்றான்? தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோயில் என்றதுமே திருப்புள்ளிருக்குவேளூர் கோயிலே எல்லோருக்கும் ஞாபகம் வரும். அந்தக் கோயிலில் இருக்கும் இறைவன் பெயர் ஶ்ரீவைத்தியநாத சுவாமி. அதனால் அக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஶ்ரீவைத்தியநாதன் தீராத நோய்களை தீர்ப்பான் என்பதையும் அப்படிபட்ட இறைவனை தான் புறக்கணித்து வாழ்நாளை வீணாக்கியதை
“பேராயிரம் பரவி வானோரேத்தும்
          பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
          மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
          திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
          போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே”                - (ப.திருமுறை: 6: 54: 8)
எனப்பாடி திருநாவுக்கரசு நாயனார் வருந்தியுள்ளார்.

Tuesday, 17 April 2012

நெஞ்சக் கனல் - 1

இந்த நூற்றாண்டில் வாழும் தமிழர் நெஞ்சம் எரிமலையாய் வெடித்துச் சிதறி ஆண்டுகள் மூன்று முடிவடைகின்றது. [தற்போது பன்னிரெண்டு ஆண்டுகள் கரைந்து விட்டன] எனினும் அந்த எரிமலையின் அனற்குழம்பு எல்லோர் நெஞ்சங்களிலும் இன்னும் தகித்து ஓடிக்கொண்டே இருக்கின்றது. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் இதயம் துடிக்க கண்கள் பனிக்க ஈழத்தை நினைத்துப் பார்க்கிறோம். இன்று ஈழத்து மண்ணில் தமிழர் உணவுக்காக ஏங்கி, வயிற்றுப்பசியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள். பன்னெடுங் காலமாக தமிழனின் குருதியோடு கலந்த மண்ணில் வாழ்வோ சாவோ எது என்றாலும் தன்மானம் பெரிதென வாழ்ந்த தமிழ்க்குடி இன்று கருவறுக்கப்படுகின்றது. நாம் எப்படி வாழ்ந்தோம்?  
கொஞ்சம் திரும்பிப் பார்போமா? கடல் பொங்கி எழுந்து பல நாடுகளை தன் வயிற்றினுள் விழுங்கிய மாபெரும் கடல்கோள் கி மு 1250ல் நடந்ததாக The Anchor Bible Dictionary கூறுகின்றது. அது கூறும் கடல்கோள் நடந்து மூவாயிரத்து இருநூற்று ஐப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தக்  கடல் கோளையே சங்ககாலப் புலவர்கள் எடுத்துச் சொல்கிறார்கள் எனக்கொள்ளலாம். சேர இளவரசனாக  இருந்த இளங்கோஅடிகளும் கூட
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி”           - (சிலம்பு:)
என சிலப்பதிகாரத்தில் கடல் கோள் நடந்ததைக் கூறி, கடல்கோளால் நாடு அழிந்ததால் நாட்டு மக்களைக் காப்பாற்ற  பாண்டிய அரசன் இந்தியாவின் வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான் என பாண்டியனின் வீரத்தை புகழ்கிறார். 


அவன் பஃறுளி ஆற்றுக்கும் தெற்கே இருந்தே ஆண்டான். அந்தக் காலத்தில் அப்பாண்டியனின் நாட்டின் தெற்குப் பகுதியின் வடக்கு எல்லையாக பஃறுளி ஆறு இருந்ததை  சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் ‘அக்காலத்து அவர் நாட்டு தென்பாலி முகத்துக்கு வட எல்லையாகிய பஃறுளி எனும் ஆற்றுக்கும்’ என தனது உரையில் எழுதியுள்ளார். எனவே இளங்கோஅடிகள் கூறிய தென்னவனாகிய பாண்டியன் தற்போதைய தமிழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பது உறுதியாகின்றது. அத்துடன் வட எல்லையாகிய பஃறுளி எனச்சுட்டுவதால் அவ்வாற்றுக்கும் தெற்கேயும் நிலம் இருந்தது என்பதும் உறுதியாகின்றது. அப்படி ஒரு நிலம் இருந்து அதில் ஓடிய ஆற்றின் ஆற்றிடைக்குறையே இலங்கை என்பதை இலங்கை என்ற பெயரே சொல்கிறது. ஆதலால் தமிழரின் தாயகம் ஈழமே. 
இலங்கையின் பல பெயர்களில் சேரன் தீவு என்பதும் ஒன்று. அப்பெயர் முற்காலச் சேரர்கள் இலங்கையில் இருந்து அரசாண்டதை எடுத்துச் சொல்கின்றது. சங்கப் பாடல்களும் சேரர்களின் நாடாக இலங்கையைக் காட்டுகின்றன. சேர அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஈழத்திலிருந்து அரசாண்டதையும் அவனின் போர்த்திறமையையும் பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார்  “ உமது அரசன் யாரென்று கேட்பீராயின் கடல் நடுவே இருக்கும் தீவிலிருந்து பகைவரது இடத்துக்குச் சென்று வெற்றி கொண்டு அவரது காவல்மரமாகிய கடம்பு மரத்தை வெட்டி அழிக்கும் நெடுஞ்சேரலாதன் என்கிறார். அதை பதிற்றுப்பத்து
 “ நுஞ்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச் சென்று 
 கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன்”                        - (பதிற்றுப்பத்து:2: 20: 1- 5)
எனச்சொல்கிறது.   

துருத்தி என்றால் ஆற்றிடைக்குறை. ஆற்றிடைக்குறைக்கு இன்னொரு பெயர் இலங்கை. துருத்தி, இலங்கை ஆகிய இரண்டும் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலத்தையே குறிக்கும். ஆனால் இப்பாடலில் முந்நீர் துருத்தி என கடலினுள் இருக்கும் இலங்கையைச் சொல்கிறார். ஆற்றுநீர், ஊற்றுநீர், உப்புநீர் ஆகிய மூன்றும் சேர்ந்தது கடல்நீர் ஆதலால் அது முந்நீர் எனப்படும். நெடுஞ்சேரலாதன் கடல்கோளின் பின்னர் இலங்கையில் இருந்து ஆண்ட அரசன் என்பதையே இப்பாடலின் வரிகள் சுட்டுகின்றன.
வடநாட்டு அரசர்கள் தென்நாட்டு அரசர்களோடு எந்நாளும் மோதிக்கொண்டே இருந்தார்கள் அதனால்சினம் அடைந்த நெடுஞ்சேரலாதன் கப்பல் படையோடு ஈழத்தின் மாந்தையில் இருந்து சென்று வடநாட்டு அரசர்களை வென்று அவர்களை அடக்கினான். இமயமலையில் வில் அடையாளத்தைப் பொறித்தான். வட அரசர் பணிந்து திறையாகக் கொடுத்த பொருட்களை கப்பலில் ஏற்றி மாந்தைக்கு கொண்டு வந்தான். அப்பொருட்களில் இருந்து ஆம்பல் பெறுமதியான அதாவது நூறு திரிலியன் செல்வத்தை மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் அழிந்து போகுமாறு கைவிட்டான் என்பதை மாமூலர்
“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் 
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்  செய்பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவை இ அன்றவன் 
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”             
                                                        -- (அகம்: 127: 3-10)
என அகநானூற்றில் கூறியுள்ளார்.

மாமூலனார் ‘நன்னகர் மாந்தை’ எனத் தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்ட போதும் இலக்கிய ஆய்வாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ஏனோ ஈழத்தின் மாந்தையைக் கண்டு கொள்வதில்லை. மாந்தையை மரந்தை என எழுதுகின்றனர். சங்ககால அரசர்கள் ஈழத்தில் இருந்து தமிழகத்தை ஆண்டார்கள் எனச்சொல்வது அவர்களுக்கு இழுக்காக இருந்திருக்கலாம். அல்லது ஈழத்தையும் தமிழகத்தையும் ஒரே நாடாகச் சேர்த்துப் பார்க்க அவர்கள் தவறி இருக்கலாம். எப்படி இருப்பினும் இன்று இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் இன அழிப்புக்கு அவர்களின் வரலாற்று உதாசீனம் ஒரு முக்கிய காரணமாகும்.
ஈழத்தில் வாழ்ந்த சங்ககாலத் தமிழர் டைட்டானிக் படத்தில் நீங்கள் பார்த்த கப்பலைவிட பெரிய கப்பல்களைக் கட்டினர். அக்கப்பல் உலகமே சேர்ந்து எழுந்து செல்வது போல் இருந்ததாம். அதனை ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்”      - (அகம்: 255: 1)
எனச் சங்கப்பாடல் சொல்கிறது. 
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு முன் எம் மாவீரர்களால் கட்டப்பட்டு குறையோடு நிற்கும் நீர் மூழ்கிக் கப்பலை, இலங்கை இராணுவம் பார்த்து ஆச்சரியப்பட்டு படம்பிடித்து வலைத்தளங்களில் போடுகிறது. தெற்கே இருந்து வந்து, அந்த நீர்மூழ்கியை பார்க்கும் மக்களிடம் அரசாங்கம் காசு வாங்குகிறது. ஏனெனில் அதுவும் உலகு கிளர்ந்தன்ன நிற்கும் நீர்மூழ்கி. 
சங்ககாலத் தமிழர் ஈழத்தில் விளைந்த உணவை கப்பல்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அதை பட்டினப்பாலையில் கடியலூர் உத்தரங் கண்ணனார்
“ஈழத்து உணவும் காளகத்து ஆக்கமும்”       - (பட்டினப்பாலை: 191)
எனச்சொல்வதால் அறியலாம். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே ஈழத்து உணவை வெளிநாட்டிற்கு அனுப்பிய ஈழத்தவர்கள் நாம். ஆனால் இன்று உணவுக்கு கையேந்தும் நிலையில் நிற்கிறோம். நெஞ்சக்கனல் வீசாதிருக்குமா?
இனிதே, 
தமிழரசி. 

Sunday, 15 April 2012

மாளும் தரிசாச்சு

நம்மூர்

கண்ணின் நீர் வற்றி
          காலம் பலவாச்சு
எண்ணி மனம் மகிழ
          ஏதும் இல்லாச்சு
விண்ணின் மழை கூட
          வீழா நிலமாச்சு
மண்ணின் செழுமை போய்
          மாளும் தரிசாச்சு.
                                               - சிட்டு எழுதும் சீட்டு - 28 
இனிதே,
தமிழரசி.

Saturday, 14 April 2012

அடிசில் 21

விளாம்பழப் பானம்

                                                - நீரா -




















தேவையான பொருட்கள்:
விளாம்பழம்  -  3
பால்  - ½ லீற்றர்
சீனி/ சர்க்கரை/தேன்  -  2 மேசைக் கரண்டி
ஏலப்பொடி  -  1 சிட்டிகை
உப்பு  - ½ சிட்டிகை
வனிலா ஐஸ்கிரீம் - விரும்பிய அளவு.
செய்முறை:
1.   விளாம்பழத்தை உடைத்து உள்ளே இருக்கும் விளாம்பழச்சதையை எடுக்கவும்.
2.   அத்துடன் பால், சீனி, எலப்பொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுக்கவும்.
3.  அடித்த கலவையை கிளாசில் விட்டு ஐஸ்கிரீம் இட்டு பரிமாறவும்.
குறிப்பு
1.  பாலுக்குப் பதிலாக தேங்காய்ப் பால் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
2.  தேங்காய்ப் பாலைச் சேர்ப்பதாயின் வெய்யில் நேரம் சேர்க்கவும். 
3.  உங்கள் சுவைக்கேற்ப இனிப்பைக் கூட்டிக் குறைக்கலாம்.
4.  அதுபோல் பானத்தின் தடிப்பையும் பால்விட்டு கூட்டிக் குறைக்கலாம்

Friday, 13 April 2012

கருவென இருந்தவன்

   


மானினம் பாய மயிலினம் ஆடும்
          மலர்ச் சோலையில் மருவியே நின்று
கானினிடை முனிவர் காட்சியில் கலந்து
          காவியம் படைத்திட கருவென இருந்தவன்
மானுடமெனும் தோற்றத்தைப் போக்க
          மனத்திடை இவர்ந்து மகிழ்ச்சியைச் சுரந்து
தேனிடை உள்ள சுவையென ஊறி
          தானென தென்னும் தன்மையைத் தந்தான்.
இனிதே,
தமிழரசி.

தனி உலக்கை போடலாமா?



பொலநறுவையில் வாழ்ந்த அழகான இளமங்கை ஒருத்தி தனியாக நின்று உரலில் மா இடித்தாள். தனியாக இடித்ததால் அவளின் முகத்திலிருந்து வியர்வை சிந்தியது. உலக்கையை மேலும் கீழுமாகத் தூக்கியதால் அவளது மார்பும் குலுங்கியது. அருகே யாரும் இல்லாது அவள் தனியே நின்று இடிப்பதை ஒரு வாலிபன் பார்த்தான். அழகி ஒருத்தி வியர்வை சிந்த, மார்பு குலுங்க தனியே உலக்கையால் இடிப்பதைக் கண்ட துடுக்கான வாலிபன் சும்மா போவானா?  எனவே அவளைப்பார்த்து         
ஆண்:  முத்தான முத்துருள
                     முகத்திலுள்ள வேர்வை சிந்த
           தங்கப்பொன் மார்குலுங்க
                     தனி உலக்கை போடலாமா? 
எனப் பாடினான். 

அவளுக்கு வந்ததே கோபம். மா இடித்த உலக்கையை திருப்பிப் பிடித்தாள்.  தனி உலக்கை ஆனாலும் பூண் உலக்கை பாரடா! பெண் என்ற எண்ணமா? என அந்த வாலிபனை அடிக்கப் போனாள். அவளின் கோபமும் நாட்டுப் பாடலாக எழுந்தது.
பெண்:  தனி உலக்கை ஆனாலும்
                      பூண் உலக்கை பாரடா!
            ஏழையென்ற எண்ணமோ
                      எட்டி நடை போடெடா!
                                                -  (நாட்டுப்பாடல் (பொலனறுவை)
                                                - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இளம் பருவ வயதின் சீண்டலையும் சீறலையும் இந்த நாட்டுப்பாடல் இரண்டும் எடுத்துச் சொல்கின்றன. 

சங்ககாலத்தில் ஓர் ஊரிலிருந்த சிற்றிளம் பெண்கள் காஞ்சிமர நிழலில் தமது வளத்தை பாடியபடி மீன் முட்டை போன்ற வெண்மணலைக் குவித்து வெள்ளியாலான சிறிய பூண் போட்ட கரும்பு உலக்கை கொண்டு இடை ஒடிய  ஒடிய இடித்ததை அகநானூறு காட்டுகிறது.
"வெள்ளி விழுத்தொடி மென்கரும்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க
மீன்சினையன்ன வெண்மணல் குவைஇக்
காஞ்சி நீழல் தமர்வளம் பாடி
ஊர்க்குறு மகளிர்"                                            - (அகம்: 286 : 1 - 5)

இனிதே,
தமிழரசி.

Wednesday, 11 April 2012

குறள் அமுது - (29)



குறள்:
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்”                               - 484

பொருள்:
தகுந்த காலத்தை அறிந்து ஆற்றலுடன் தொழிற்பட்டால் உலகத்தை அடைய நினைத்தாலும், அதனை அடையலாம்.
விளக்கம்:
காலம் என்பது எப்பவும் எமக்காகக் காத்திருப்பதில்லை. அது ஓடிக்கொண்டே இருக்கும். எனவே நாம் காலத்தை வீணாக்காக் கூடாது. அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களை எம்விருப்பம் போல எமக்கு வேண்டிய நேரங்களில் செய்ய முடியாது. 
நாம் நெல் விதைக்கப் போகிறோம் என வைத்துக் கொள்வோம். நெல் விதைக்க வேண்டிய காலத்தில் வீணே காலத்தை போக்கிவிட்டு  நல்ல காற்றோடு மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் விதைத்தால் நெல்லை அறுவடை செய்ய முடியுமா?  நெல் முளைக்க முன்னே மழை வெள்ளம் அடித்துச் சென்று விடாதா? இதனையே ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பார்கள். எனவே நாம் செய்யும் எந்தச் செயலுக்கும் காலம் மிக முக்கியமானது.  
இடம், இடன், இடத்து என்பன வலிமை, ஆற்றல் என்ற கருத்துக்களையும் தரும். உலகையே தன் வசப்படுத்த நினைப்பவனுக்கு மிக்க ஆற்றல் இருக்க வேண்டும். பிற ஆற்றல்களை விட ஒருவரின் மன ஆற்றலே எடுத்த செயலை முடிக்கவைக்கும். மன ஆற்றலுடையவராலேயே மற்றைய ஆற்றல்களையும் பெருக்கிக் கொள்ளமுடியும்.  
எனவே உலகையே வெல்ல வேண்டும் என்று கருதுகிறீர்களா! அதை அடைய உங்களால் முடியும். மறந்துபோகாமல் அதற்கு ஏற்ற காலம் கனிந்துவரும் பொழுது உங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தொழிற்படுங்கள். நீங்கள் விரும்பியது போல் உலகமே உங்கள் கையில் இருக்கும் என்கிறது இத்திருக்குறள்.