Saturday, 19 March 2022

எந்தமிழர் தாயானாள்

திருமணக்கோலத்தில் காரைக்கால் அம்மையார்

முத்தமிழின் தாயாகி

  மூதறியஞர் தொழநின்றாள்

பத்திமையும் பழவினையும்

  பாங்குடனே சொல்லிச்சென்றாள்

சித்தமிசை குடியிருந்த

  சிவனவனின் தாயாகி

எத்திசையும் புகழ்பரப்பி

  எந்தமிழர் தாயானாள்


இன்று காரைக்கால் அம்மையார் குருபூசை ஆதலால் இப்பாடலை எழுதினேன். ‘முத்தமிழின் தாயவள்என்னும் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்பு எழுதியுள்ளேன். இப்பாடலின் விளக்கத்தை காரைக்கால் அம்மையாரின் பாடல்களுடன் கீழே தருகிறேன்.


பக்தி இலக்கியத்தில் முத்தமிழின் சாற்றை  தன் பாடல்களில் முதன்முதல் வடித்துத் தந்திருப்பவர் காரைக்கால் அம்மையாரே. காரைக்கால் அம்மையார் பிறந்த காரைக்கால் மண்ணை மிதிக்கவும் திருஞானசம்பந்தர் பயப்பட்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார் போன்ற மூதறிஞர் பலரும் அம்மையாரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். 


காரைக்கால் அம்மையார் தாம்பாடிய திருஇரட்டை மணிமாலையில் பக்திசெய்வது எப்படி என்பதை 

ஈசன் அவன் அல்லாது இல்லை யெனநினைந்து

கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி

மறவாது வாழ்வாரை மண்ணுலத்து என்றும்

பிறவாமை காக்கும் பிரான்

- (திருஇரட்டைமணிமாலை: 2)

என மிக்கதெளிவாகக் கூறிச் சென்றுள்ளார். கடவுளை மனதில் வைத்து எமக்கு வேண்டிய யாவற்றையும் கடவுளுடன்  பேசமுடியும் என முதலில் தொட்டுக் காட்டியவரும் காரைக்கால் அம்மையாரே. பழவினையை அகற்ற அம்மையார்

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே

ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்

கூற்றானை கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு

நீற்றானை நெஞ்சே நினை 

- ( திருஇரட்டைமணிமாலை: 12)

தன் நெஞ்சிற்குக் கூறியதை  இப்பாடல் சொல்கிறது.

சிவமெருமானால் 'அம்மையே' என அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர் என்கிறார்சேக்கிழார். காரைக்கால் அம்மையார் தன் சிந்தையில் சிவம் இருப்பதை

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது

காண்பார்க்குங் காணலாம் காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச்  சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்

- (அற்புதத்திருவந்தாதி: 17)

எனப்பாங்குடன் பாடிவைத்துள்ளார்.

முத்தமிழை நன்கு அறிந்த தாயாக மிக நுட்பமான அறிவு உடையோர்களாகிய திருஞானசம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் போன்றோர்[மூதறிஞர்] வணங்க நின்றவளும்  எப்படி பக்தி செய்யவேண்டும்[பத்திமையும்] என்பதையும் நாம் முற்பிறவியில் செய்தவினை[பழவினையும்] பற்றியும் அழகாகக்[பாங்குடனே] கூறிச்சென்றவளும். தனது சித்தத்தில்[சித்தமிசை] குடியிருந்த சிவனிற்குத் தாயாகி[சிவனவனின் தாயாகி] எல்லாத் திசைகளிலும் தன்புகழைப் பரப்பி [இலங்கையிலும், கம்போடியாவிலும், மெக்சிக்கோவிலும்] தமிழர்களின் தாயாக விளங்குபவளும் காரைக்கால் அம்மையாரே ஆவார். 

இனிதே,

தமிழரசி.

Friday, 18 March 2022

தாயன்பிற் கனிந்த தோன்றலே!

 

நாற்பது வயதாகும் நாயகனே!

  நற்பண்புநிறை சேயவனே!

தோன்றிற் புகழுடன் தோன்றி

  தாயன்பிற்கனிந்த தோன்றலே!

போற்றிடும் பொருள் யாவும்

  பொற்புடனே பெற்றிடுவாய்!

நாற்றிசையும் புகழ் மணக்க

  நானிலத்தே வாழ்ந்திடுவாய்!

இனிதே,

தமிழரசி.

Tuesday, 15 March 2022

கனிந்ததேன் அறியேன்

 

வல்லவேல் முருகன் அவன்

  வண்ணமயில் மீதில் வந்தான்

சொல்லவே வார்த்தை இல்லை

  சோதி வடிவம் கண்டேன்

முல்லை முறுவல் காட்டி

  மோனத் தவத் திருந்தான்

கல்லை நிகர்த்த நெஞ்சம்

  கனிந்த தேன் அறியேன்

இனிதே,

தமிழரசி.

Saturday, 5 March 2022

சமய நெறிகள் பலவாயினும் அறம் ஒன்றே

 

இயற்கையின் சீற்றத்திற்கு பயந்து வாழ்ந்த மனிதன் தன்னைவிட ஆற்றலுள்ள இயற்கையை வழிபடத் தொடங்கினான். தன் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சுழன்று மாறி மாறி மீண்டும் மீண்டும் வருவதைக் கண்டான். இவற்றை மனிதனுக்கு செல்வமும் வறுமையும், வெற்றியும் தோல்வியும், நட்பும் பகையும் கொடுத்தன. அதனால் தான்படும்  துன்பம் மற்றவர் அடையக்கூடாது எனக்கருதி இல்லாதோருக்கு கொடுத்து வாழத்தொடங்கினான். அது களவு, கொள்ளை, போட்டி, பொறாமை எனப்பல வடிவங்களில் அவனை வாட்டி வதைத்தது. அவற்றைக் கண்டு சிந்தித்த மனிதர் பலராவர். அவற்றுக்கு பேராசையும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தனர். அவர்களால் பிறந்ததே பலவித சமயக் கொள்கைகள்.

எல்லாவித சமயக் கொள்கைகளின் நோக்கமும் இறைவனை அடைதலே ஆகும். சமயக்கொள்கைகள் சமயநெறிகளை - மதங்களை உருவாக்கின. எல்லா சமயநெறிகளும் பெரும்பாலும் உலக உயிர் நேயத்தைப் பேணுகின்றன. சைவம், சாக்தம், வைஷ்ணவம், பௌத்தம், இஸ்லாம், இந்துமதம், கிறிஸ்த்தவம் யாவுமே அறத்தைப் போற்றுகின்றன. உலக உயிர்களைக் காத்து அவற்றை இன்பமாக வாழவைக்கஅறம் செய்எனத் தூண்டுகின்றன. அறம் செய்வது கொடுப்போருக்கும் பெறுவோருக்கும் பேராசையைக் குறைத்தது.

அறம்  பலவழிகளில் செய்யப்பட்டாலும் அறம் என்பது ஒன்றே. சமய நெறிகள் பலவாயினும் அவையாவும் ஒரு அறத்தையே கூறுகின்றன. எப்படி அறம் ஒன்று என்பதை அறிவது?

ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த

பால்வேறு உருவின அல்லாவாம் - பால்போல்

ஒருதன்மைத்து ஆகுமறம் நெறி ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு - (நாலடியார் - 180)

பசுவை என்பர். பசுக்கள் வெள்ளை, கறுப்பு, சிவப்பு, கட்டை, உயரம். சீமைப்பசு, நாட்டுப்பசு எனப் பல உருத்தில் இருந்தாலும் பசு தரும் பால் (பயந்த பால்) வேறு வேறு வடிவத்தில் இருப்பதில்லை (அல்லாவாம்). பாலைப் போல ஒரு தன்மை உடையது அறமாகும். ஆனால் இங்கே சமயநெறிகள் பசுக்களைப் போல பல வடிவங்களில் இருக்கின்றன, என்கின்றது நாலடியார்.

அறங்கள் முப்பத்திரண்டு எனச்சொல்லப்பட்டாலும் அவை உலக உயிர் நேயத்தை ஊட்டும் தன்மையால் ஒன்றாகின்றன. எத்தனை எத்தனை பாத்திர வடிவங்களில் அள்ளி அள்ளி பாலைச் சொரிந்தாலும் பால் ஒன்றே. பாலைப் போல அள்ளி அள்ளிக் கொடுக்கும் அறமும் ஒன்றே. ஆதலால் சமயநெறிகள் பலவாயினும் அறம் ஒன்றே! இன்றே செய்க! நன்றே செய்க!!

இனிதே,

தமிழரசி.

பக்க்திச்சிமிழ்-6