Saturday, 3 November 2018

எவர்களால் உலகம் வாழ்கிறது?



உலகம் என்பது என்ன? அதற்கான விளக்கமாக 
நிலம் தீ நீர் வளி விசும்பு ஓடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”         
                                                            - (தொல்:பொருள்:635) 
எனக்கூறும் தொல்காப்பியர், உலகம் என்பது நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களால் உண்டான கலவை என்கிறார். அப்படியானால் பொதுவாக நாம் கூறும் உலகம் என்பது என்ன? இந்தப் பூமிப்பந்தா? அல்லது அதில் வாழும் உயிர்களா? அன்றேல் அதில் வாழும் மனிதர்களா? பூமி ஒரு சடப்பொருள். அது இயற்கையாக அழிந்தால் அல்லாமல் மனிதரைப் போல் மற்றைய உயிர்களால் அதனை அழித்துவிட முடியாது. 

அதனால் நம்முன்னோர் உலகம் என்பதை மனிதரைக் கொண்டே கணித்தார்கள். அதிலும் உலக வழக்கத்தை, நடைமுறையை எத்தகைய மனிதரை வைத்துக் கணித்தார்கள் என்பதை
வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான”              
                                                              - (தொல்:பொருள்:638)
என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார் தொல்காப்பிர். உலகவழக்கு என்பது உயர்ர்ந்தோர் மேலேயே தங்கியிருக்கின்றதாம். அதன் நிகழ்வுகள் அவர்களால் நடைபெறுகின்றனவாம். இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழருக்கு இருந்த அறிவுத் தெளிவு அப்படிச் சொல்ல வைத்தது. 

வள்ளுவரும்
பண்புடையார்ப் பட்டுண்டு உலகு அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்”                         - (குறள்: 996)
என்றார். 

பண்பு என்றால் என்ன? மனிதத்தன்மைய அறிந்து ஒழுகல், உலக உயிர் நேயத்தைப் போற்றி பிறவுயிர் படும் துன்பத்தையும் தந்துன்பமாக உணர்ந்து போற்றுதல் பண்பாகும். அத்தகைய பண்பு மனிதரிடம் இல்லாவிட்டால் இவ்வுலகம் மண்ணுக்குள் மண்ணாகப் புகுந்து அழிந்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் வள்ளுவர். 

ஒன்றைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் கூட எத்தகையோரைப் பார்த்து சொல்ல வேண்டும் எழுத வேண்டும் என்று தமிழ் இலக்கண நூலான நன்னூல் சொல்கிறது.
"எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"          
                                                               - (நன்னூல்: 388)
அப்படிச் சொல்வதும் மரபே’ எனதுச்சுட்டி, பண்டைய மரபுவழியாக வருகிறது என்கிறார் நன்னூலார். அவர் கூறும் உயர்ந்தோர் யார்? 

எவர்களால் உலகம் வாழ்கிறது? என்பதைப் பேசும் இடத்தில் கடலுள் மாய்ந்த இள்ம்பெருவழுதி என்னும் அரசன்
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”   
                                                               - (புறாநானுறு: 182)
எனக் கூறுகிறான். அதாவது இந்திரருடைய அமிழ்தம் கிடைத்தாலும் இனிமையானது எனத் தாமே உண்ணார், சினம் கொள்ளார், பிறர் பயப்படுவதைப் பார்த்து தாமும் பயந்து சோம்பி இரார். புகழுக்காக உயிரையும் கொடுப்பர். பழிவருமானால் உலகம் முழும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளார். மனக்கவலை [அயர்வு] இல்லார். இப்படி மாட்சிமை உடையோராய் வாழ்வோர் உயர்ந்தோர் ஆவர். அவர்கள் தமக்கென எதுவும் செய்யாது பிறர்க்கென உண்மையாய் வாழ்வதால் இவ்வுலகம் வாழ்கிறதாம். 

இத்தகைய உயர்ந்த பண்பில் வாழ்ந்த நம் முன்னோர் எங்கே? நாம் எங்கே? எமது வருங்கால இளம் தலைமுறையினருக்கு எவற்றை விட்டுச் செல்லப் போகிறோம்? எத்தகையோரை மிகஉயர்ந்தோராய் மதிக்கவேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறோம்? கொஞ்சம் சிந்தனை செய்து பார்ப்போமா? தற்போது இலங்கையில் என்ன நடைபெறுகிறது? உலகம் முழுவதையும் கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என்றா எமது அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? 

அரசியல், சினிமா, கலை, விளையாட்டு, தொழிற்றுறை போன்றவற்றால் பணத்தைப் பெருக்கிய பணமுதலைகளையே உயர்ந்தோராய் மதிக்கிறோம். அவர்களைக் காணவும் அவர்களோடு selfie எடுக்கவும் எவ்வளவு பணத்தை அள்ளி இறைக்கிறோம். அவர்களை அழைத்து மேடை ஏற்றி அழகு பார்க்கிறோம். இவர்களில் எத்தனை பேரை உயர்ந்தோர் வரிசையில் வைத்துப் போற்ற முடியும்? என்பதை நாமே சிந்தனை செய்ய வேண்டும். உலக உயிர்நேயம் உள்ளவர்களால் உலகம் வாழ்கிறது என்பதை மறவாது இருப்போம்.

இனிதே,
தமிழரசி.

Friday, 2 November 2018

பன்றிக்குட்டியை ஏன் எரித்தீர்?



உலக உயிர்கள் வாழ உணவு தேவை. அந்த உணவுக்காக பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது நம் முன்னோர்கள் கண்ட அறம். அதனை நாம் மீறலாமா? 
"கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்பது வான்மறை தந்த வள்ளுவன் வாக்கு. அப்படியிருக்க நாம் தொழும் தெய்வமே பன்றிக்குட்டியை எரித்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா! தெய்வம் எரித்தால் அது அறமாகுமா?

சிவன், தாய்ப்பன்றி ஒன்று இறந்த பொழுது அப்பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தார். இக்கதை திருவிளையாடற் புராணத்தில்பன்றிக் குட்டிகளுக்கு முலை கொடுத்தபடலத்தில்இருக்கிறது. அப்படிப்பட்ட சிவன் பன்றிக்குட்டியை எரிக்கலாமா?எதற்காக பன்றிக்குட்டியை எரித்தீர்? எனக் காளமேகப் புலவர் கேட்கிறார்.  


"கண்ண னிடுங்கறியும் காட்டுச்சிறுத் ரொண்டரன்பிற்
பண்ணுசிறு வன்கறியும் பற்றாதோ - தண்ணோடு
மட்டியையுஞ் சோலை மருதீச ரேபன்றிக்
குட்டியையேன் தீய்த்தீர் குறித்து?" 
                                                              - காளமேகம் தனிப்பாடல் 

தண்மையான தேன்[மட்டு] நிறைந்திருக்கும் சோலையை உடைய மருதூரின் ஈசனே! கண்ணப்பநாயனார் இட்ட இறைச்சியும் திருச்செங்காட்டங்குடி[காட்டு] எனும் ஊரில் வாழ்ந்த சிறுத்தொண்டநாயனார் சமைத்துக் கொடுத்த பிள்ளைக்கறியும் [சிறுவன்கறியும்] உமக்குக் காணாதோ[பற்றாதோ]! என்ன காரணத்திற்காக பன்றிக் குட்டியை எரித்தாய் [தீய்த்தீர்]? இதுவே காளமேகப் புலவரின் கேள்வி.

எனது சிறுவயதில் இப்பாடலை படித்த பொழுதுசிவனுக்கு இறைச்சிக் கறியில் பேராசையோஎன நினைத்தேன். ‘சிவன் வேடுவனாகத் திரிந்த போது பன்றிக்குட்டியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டாரா? என்று என் தாயைக் கேட்டேன். 

எங்க பார்த்தீங்க?’ என்றார். 

காளமேகப் புலவர் பாடல்என்றேன்.

பாடலைப் பார்க்காமலேயேமகள்! அது காட்டுப் பன்றிக்குட்டி இல்லை. அது தேவலோகப் பன்றிக்குட்டிஎன்றார்.

"தேவலோகத்தில் காராம்பசு இருக்கிறது, அங்கு பன்றி இருக்கா?"  என்றேன்.

வைகுண்டத்தில் வாழ்கிறதுஎன்று என்னைக் கொஞ்சியபடி,

வைகுண்டத்தில் வாழும் திருமால் எடுத்த பத்து அவதாரத்தில் ஒன்று பன்றி அவதாரம் [வராக அவதாரம்]. திருமாலின் பிள்ளை மன்மதன். மன்மதனே அந்தப் பன்றிக்குட்டி. மன்மதனைச் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த கதையை பாடியிருக்கிறார். பன்றியைக் கொன்றால் அதன் தோலை உரிக்க முடியாது. அதனால் பன்றியின் தோலில் உள்ள மயிரை நெருப்பில் பொசிக்கி எடுப்பார்கள். மன்மதனை  நெற்றிக் கண்ணால் தீய்த்தது, பன்றியின் தோலை தீய்ப்பதற்கு சிலேடையாக வருகிறதுஎன்றார்.

வசைபாடக் காளமேகம் என்ற பெயருக்கு ஏற்ப கண்ணப்பன் கொடுத்த இறைச்சியும் சிறுத்தொண்டரின் பிள்ளைக்கறியும் உண்ட ருசியில்பன்றிக்குட்டியையும் எரித்தீரோஎன்ற ஐயப்பாடுபற்றாதோஎன்ற கேள்வியில் தொக்கிநிற்கிறது.
இனிதே,
தமிழரசி.

Thursday, 1 November 2018

வண்டூதிய சங்கு


தமிழின் சுவைகளில் சிறந்த சுவை கவிதைச் சுவை. அதனாலேயே தமிழைச் சுவைத்தோரை சுவைஞர் என்ற பெயரில் திருநாவுக்கரசு நாயனார் அழைத்தார் போலும். கவிதையின் சுவை கவிதைக்குக் கவிதை மாறுபடும். சொல், பொருள், சந்தம், உவமை அணிகள் போன்றவற்றால் வரும் இனிமை கவிதைக்குச் சுவையைத் தருகிறது. சிறந்தனவற்றை எடுத்துக்கூறும் கவிதைகளே என்றும் நின்று நிலைபெறுகின்றன.

நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவரும்
சொல்லால் பொருட்கிடனாக உணர்வின் 
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்   
                                                                         - (நன்னூல்: 268)
என்றார்.

உலக இயற்கையை அதுதரும் இன்பத்தை மிக நுட்பமாகப் பார்த்து வியப்போரும் சுவைதரும் கவிதைகளைப் புனைந்திருக்கின்றனர். ஒருவரின் ஆழ்மனத் தேடலின் உணர்வின் வெளிப்பாடே கவிதையாய் மலர்கின்றது. அத்தகைய கவிதை மலர்களை புகழேந்திப் புலவரும் நளவெண்பாவில் நிறையவே தந்திருக்கிறார்.  

பாண்டிய நாடு மல்லிகைக்குப் புகழ்பெற்ற நாடு. இன்றும் மதுரை மல்லிகையின் (மதுரை மல்லி என்பர்) மணத்திற்கு ஏதும் ஈடாகாது. நல்ல மதுரை மல்லிகைப் பூவை தலையில் சூடி இரண்டு மூன்று நாட்கள் சென்றாலும் கூந்தலில் அதன் நறுமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். புகழேந்திப் புலவர் பாண்டிய அரசனின் அரசவையில் தலைமைப் புலவனாய் இருந்தவர். அவர் மல்லிகை, முல்லை பூக்களின் நறுமணத்தைப் பெரிதும் விரும்பினார். சோழ நாட்டில் சிறைப்பட்டிருந்த போதும் கூட சிறைக்குள்ளும் பூந்தொட்டியில் மல்லிகையை வளர்த்தவர்.

மேற்கே செக்கர் வானம் பட்டுக்கம்பளம் விரித்துக் கொண்டிருந்தது. இயற்கை எனும் சூரியன் மெல்லச் சாயும் அந்திப் பொழுதும் வந்தது. புகழேந்திப் புலவர் அதனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். மல்லிகைப் பூவின் நறுமணம் அவரை இழுத்தது. மெல்லத் திரும்பி முல்லைப் பந்தரின் அருகே இருந்த மல்லிகைச் செடியைப் பார்த்தார். அச்செடியில் தேன் பருக வந்த வண்டு வட்டமடித்து மல்லிகையில் அமர்ந்து ரீங்காரம் செய்வதைக் கண்டார்.

புகழேந்திப் புலவரின் கவி உள்ளத்தின் நெஞ்சிலே - ‘பகல் முழுவதும் பல வண்ண மலர்களில் தேனருந்திய வண்டு அல்லவா அது! மல்லிகை, முல்லை வெண்மலர்கள் விரிந்து மணம் கமழ, அந்தி மாலைப் பொழுது அரச கம்பீரத்துடன் மெல்ல நடந்து செல்கிறதேஎன்ற உணர்வலைகள் அலை மோதின. அவற்றின் வெளிப்பாடாய் பிறந்ததே இந்த வெண்பா.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கரும்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது                                
                                                       - (நளவெண்பா: 106)

மல்லிகைப் பூவை வெண்ணிறச் சங்காய் தேன் வண்டு ஊதி முழங்க, வெண்கரும்பு வில்லை உடைய மன்மதன் (வெண் நிறத்தை தமிழில் வால் என்பர். வால் + கரும்பு = வான்கரும்பு எனப்புணரும்.  கரும்பின்  மேல் வெண்சாம்பல் இருப்பதால் வான்கரும்பு என்பர்)அம்புகளை தெரிந்தெடுத்துக் கொண்டு மெய்காப்பாளனாக பக்கத்தே வர, மென்மையான முல்லை மாலை தோளில் அசைய, சிறுபொழுதாகிய  மாலைக் கால (புன்மாலை) அந்திப்பொழுது மெல்ல நடந்து செல்கிறதேஎன்கிறார்.

புகழேந்திப் புலவரின் இப்பாடலைக் கேட்ட ஓட்டக்கூத்தர்பாடல் நன்றெனினும் கருத்துப் பிழை உண்டுஎன்றார். 

பக்கத்தே இருந்த புலவர்கள்என்ன கருத்துப் பிழையைக் கண்டீர்என்றனர்.

அதற்கு ஒட்டக்கூத்தர்வண்டு பூவின் விரிந்த பக்கத்தில் ஊதும். சங்கின் அடியில் ஊதியே முழங்க முடியும். வண்டால் பூவின் அடியில் ஊத முடியுமா?” என்றாராம்.

அதற்கு புகழேந்திப் புலவர்பகல் முழுவதும் பறந்து பறந்து எத்தனை மலர்களில் மது அருந்தி மதுமயக்கத்தில் இருந்த வண்டு. அதற்கு மல்லிகைச் சங்கின் அடியும் நுனியும் தெரியுமா?” என்றாராம். 

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த குழோத்துங்க சோழனும் புகழேந்திப் புலவரைப் புகழ்ந்து பொற்கிழி கொடுத்தான் என்பர்.

புகழேந்திப் புலவர் பாடிய இவ்வெண்பாப் பாடல் 'தூதுவந்த நளனைக் கண்ட தமயந்தி அவனை நினைந்து வருந்தும்' மாலை நேரத்தைக் காட்டவே நளவெண்பாவில் வருகிறது. 
இனிதே,
தமிழரசி.

Wednesday, 31 October 2018

குறள் அமுது - (137)


குறள்:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு                                  - 841

பொருள்:
அறிவு இல்லாமையே இல்லாமைகளில் பெரிய இல்லாமையாகும். மற்றைய பொருட்கள் இல்லையெனினும் உலகம் அதனை இல்லாமையாகக் கொள்ளாது.

விளக்கம்:
இத்திருக்குறள் புல்லறிவாண்மை எனும் அதிகாரத்தில் முதலாவது குறளாக உள்ளது. அறிவு அற்றோர் தம்மை அறிவுள்ளவராகக் கருதும் செருக்குபுல்லறிவாண்மைஎன்று கூறப்படும். ஆராய்ந்து அறியும் அறிவற்றோரை புல்லறிவு அல்லது சிற்றறிவு உடையோர் எனவும் கூறுவர்.

சிலர் புல்லறிவையும் பேதமையையும் ஒன்றெனக் கருதுகின்றனர். இரண்டும் அறிவின்மை ஆதலால் அப்படிக் கருதுகின்றனர். திருவள்ளுவர் பேதமையை எண்பத்து நான்காவது அதிகாரத்திலும் புல்லறிவாண்மையை எண்பத்து ஐந்தாவது அதிகாரத்திலும் பிரித்துக் கூறியுள்ளார். இவை அறிவின்மையின் வெவ்வேறு தன்மைகளாகும். தனக்கு நன்மை தருவது எது என்பதை அறிய முடியாதிருக்கும் தன்மை பேதமையாகும்.

பேதையர் புல்லறிவு உடையோராய் இருப்பர். ஆனால் புல்லறிவு உடையோர் யாவரும் பேதையர்களாக இருப்பர் என்று கூறமுடியாது. நாலடியாரில் ஔவையார் 
கற்றதும் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்                                  
                                               - (நாலடியார்: 314)
என அறிவற்ற பேதையரின் புல்லறிவைக் கூறியுள்ளார். பேதை கற்றறியாது ஆசிரியர் மனப்பாடம் செய்யவைத்ததால் தெரிந்து வைத்திருந்த ஒரேயொரு சூத்திரத்தை நன்கு படித்தோர் இடையே வெட்கப்பாடாமல் சொல்லி தனது அறிவின்மையைக் காட்டிக் கொள்வானாம். அறிவின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இதனை ஔவையார் கூறியுள்ளார்.

திருவள்ளுவரோ ஔவையாருக்கு ஒருபடி மேலே சென்று அறிவு இன்மையே இல்லாமைகளில் பெரிய இல்லாமை என்கிறார். ஏனெனில் பணம் இல்லை, பொருள் இல்லை, பிள்ளை இல்லை, வீடு இல்லை, காணியில்லை, ஊரில்லை, நாடில்லை என்று சொல்கின்ற எல்லா இல்லாமைகளையும் பண்பட்ட உலகம் இல்லாமையாகக் கருதுவதில்லை. எனவே அறிவின்மையே மிகப்பெரிய இல்லாமையாகும். ஆதலால் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Saturday, 14 April 2018

சித்திரை மங்கை வந்தனளே!



பொன்னும் பொருளும் பொலிந்திட
புவியிற் புதுவெள்ளம் பாய்ந்திட

கன்னலும் செந்நெலும் விளைந்திட
காடுகள் மேடுகள் செழித்திட

அன்பும் அருளும் ஓங்கிட
ஆனந்த வாழ்வே மலர்ந்திட

மன்னும் உயிர்கள் மகிழ்ந்திட
மேன்மைகள் யாவும் நிறைந்திட

சொன்ன சொற்கள் இனித்திட
சேர்ந்தே மனங்கள் களித்திட

சுன்னைத் தேர் ஏறியே
சித்திரை மங்கை வந்தனளே!

இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
சுன்னை  -  வட்டம், இயற்கைவட்டம்

Sunday, 25 March 2018

செங்கரம் தந்து காத்தருள்வாயே!


நோயிற் கிடந்து  நோன்மை இழந்து
          நாளும் நாளும் நெஞ்சம் நொந்து
பாயிற் கிடந்து பாரோர் பகரும்
     பழிச்சொற் கேட்டு பதையா நிலையை
தாயிற் சிறந்த தயா நிதியே!
     தருவாய் எமக்கே! தத்துவ ஞான
சேயிற் சிறந்த செவ்வடிவேளே!
      செங்கரம் தந்து காத்தருள் வாயே!

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
நோன்மை: பெருந்தன்மை/மேன்மை