Friday, 15 April 2016

அடிசில் 97

வாழைப்பூ வறை
- நீரா -

தேவையான பொருட்கள்: 
வாழைப்பொத்தி [பூ]  -  1
துருவிய தேங்காய் பூ  - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ¼ தேக்கரண்டி
வெங்காயம்  -  1
பச்சைமிளகாய்  -  3 
ஒடித்த செத்தல்மிளகாய்  -  2
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் அரைக் தேக்கரண்டி உப்புப் போட்டு வைக்கவும்.
2. வாழைபொத்தியின் காய்ந்த மேல் மடல்களை நீக்கி, அடித்தண்டில் பிடித்துக் கொண்டு நுனியைச் சுற்றிக் கொத்திக் குருணலாக வெட்டி எடுத்து உப்புக்கலந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.
3. பின்னர் நீரில் கழுவிப்பிழிந்து எடுத்து, தேங்காய்ப்பூ, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அளவான உப்புச் சேர்த்துப் பிசிரி வைக்கவும்
4. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் குறுணலாக வெட்டவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் சீரகம், செத்தல் மிளகாய், வெட்டியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6. தாளிதம் பொன்னிறமாக வரும் பொழுது, பிசிரி வைத்துள்ள கலவையை இட்டுக் கிளரி, சிறிது தண்ணிர் தெளித்து மெல்லிய நெருப்பில் வேகவிட்டு, நீர்த்தன்மை அற்று வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:
குறுணலாக வெட்டி எடுக்கும் வாழைப்பூ கயறுபிடிக்காதிருக்க உப்புக்கலந்த நீரில் ஊறவிட வேண்டும். உப்பு நீரில் ஊறவிடுவதால் கழுவிப் பிழிந்தெடுத்தபின் போடும் உப்பைச் சிறிது குறைவாகப் போட வேண்டும்.

Thursday, 14 April 2016

சித்திரைப் புத்தாண்டில் சித்திரக் கவிதை வாழ்த்து!

இன்பச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் உறவினர்க்கும், நண்பர்க்கும், வாசகர்கட்கும், என் மாணவர்கட்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. தமிழ் கூறும் நல்லுலகிற்காக என் இனிய வாழ்த்தை ஒரு சித்திரத் தேரினில் சித்திரக் கவிதையாக அனுப்புகிறேன். வாசித்துப் பார்த்து மகிழுங்கள்!
சித்திரத்தேரினுள் சித்திரக்கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்காக நான் கீறிய சித்திரத் தேரினுள் இருக்கும் எனது சித்திரக் கவிதை இதோ!
ஆயதமிழிசை நாடுவா ரானந்த மெல்லாம்
தூயஏழிசை போலமின்னும்நற் றமிழ்புத்தாண்டி - லேயபுவிமிசை
மேழியோர் ஏத்தயின்ப மனையறம் பொழிய
வாழிய தமிழ்போல் வாழிய!

சித்திரத்தேரினுள் இருக்கும் சித்திரக் கவிதையை எப்படி வாசிப்பது என்று சொல்லவா!

இந்தச் சித்திரத் தேரின் இடது சில்லில் இருந்து தொடங்கி மேலேறி வலது சில்லில் இறங்கி, அடித்தட்டின் வலது நுனியிலேறி இடப்புறமாகச் சென்று, அதற்கு மேல் தட்டின் இடது நுனியிலிருந்து வலப்புறமாகச் சென்று, வலது நுனியிலேறி முன்போல் மாறி மாறி ஒவ்வொரு தட்டாக ஏறி தேரின் உச்சிக்குச் சென்று, நடுவழியாக நேரே கீழே இறங்கி வரவும். இக்கவிதையின் கடைசி அடியிலுள்ள ‘வாழிய தமிழ்போல் வாழிய’ எழுத்துக்கள் யாவும் முதல் மூன்று அடியிலும் மறைந்து கிடக்கிறது. இதுவே இச்சித்திரக் கவிதையின் சிறப்பாகும்.

ஆயதமிழ் இசையை விரும்புவோர்[நாடுவார்] ஆன்ந்தம் எல்லாவற்றையும்
தூய ஏழிசை போலமின்னும் நற்றமிழ் புத்தாண்டில் - உலகத்து[ஏயபுவிமிசை]
உழவர்கள்[மேழியோர்] போற்ற[ஏத்த] இன்ப இல்லறம்[மனையறம்] நிறைய[பொழிய]
வாழிய! தமிழ்போல் வாழிய!

தமிழிசையை விரும்புவோர் யாவரும் எல்லா ஆனந்தத்தையும் ஏழிசை போல மிளிரும் தமிழ்ப் புத்தாண்டில் உலகத்தில் உள்ள உழவர்கள் போற்ற இன்ப இல்லறம் நிறைய வாழ்க! தமிழ்போல் வாழ்க!

எமக்கு உணவு கொடுப்பவர்கள் உழவர்கள். ஆதலால் உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் மனம் நிறைந்து போற்ற வாழ்தலே சிறந்த வாழ்வாகும்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 12 April 2016

நெஞ்சகம் வெந்ததே!


யாழகம் தன்னில் நூலகம் 
         இருந்தது வையகம் அறியும்
தாயகம் தன்னில் நூலகம் 
         எரிந்தது சேயகம் அறியும்

ஊரகம் தன்னில் நூலகம்
         ஒழிந்திட நெஞ்சகம் வெந்ததே!
தீயகம் தன்னால் நூலகம்
         தீய்ந்திட போரகம் எழுந்ததே!

குறிப்பு:
வானொலிக்காக 31- 05- 2012 எழுதியது. [எரியூட்டப்பட்டு 31வது வருடம்]

Monday, 11 April 2016

ஈழத்து மாந்தை முற்காலச்சேரரின் மாந்தை

ஈழத்தின் மாந்தை முற்காலச்சேர அரசரின் மாந்தை 

இலங்கையை முற்காலச் சேரர்கள் ஆண்டார்கள். அதுவும் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே ஆண்டார்கள். அதனால் இலங்கையை சேரன்தீவு எனவும் அழைத்தனர். ஆனால் நாம் ஆயிர வருடங்களுக்கு முன் வாழ்ந்த சோழர்களைப் பற்றி பேசும் அளவுக்கு ஏன் இலங்கையை ஆண்ட முற்கால சேர அரசர்களைப் பற்றி பேசாதிருக்கிறோம். அவர்கள் ஈழத்தை ஆண்டதற்கு சங்ககால நூல்களில் நிறையவே சான்றுகள் இருக்கிறன.  
 சேர அரசனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஈழத்திலிருந்து அரசாண்டதையும் அவனின் போர்த்திறமையையும் பதிற்றுப்பத்தில் குமட்டூர்க் கண்ணனார்  “உமது அரசன் யாரென்று கேட்பீராயின் கடல் நடுவே இருக்கும் தீவிலிருந்து பகைவரது இடத்துக்குச் சென்று வெற்றி கொண்டு அவரது காவல்மரமாகிய கடம்பு மரத்தை வெட்டி அழிக்கும் நெடுஞ்சேரலாதன்" என்கிறார். 

அதை பதிற்றுப்பத்து
 “ நுஞ்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச் சென்று 
 கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன்”                        - (பதிற்றுப்பத்து:2: 20: 1- 5)

எனச்சொல்கிறது. '[நுங்கோ] உமது அரசன்  யாரென கேட்பீராயின் [எங்கோ] எமது அரசன் [இரு] பெருங் [முந்நீர்] கடல் இடையே [துருத்தியுள்] பவளப்பாறை நிறைந்த தீவில் (இலங்கையில்) இருந்து [முரணியோர்] பகைவரின் தலை [இடத்திற்குச்] சென்று [கடுஞ்சின] கடுங்கோபத்துடன் [கடம்பு முதல் தடிந்த] கடம்பு மரத்தை வெட்டியழித்த நெடுஞ்சேரலாதன்' என்று சொல்கிறது.

துருத்தி என்றால் ஆற்றிடைக்குறை. ஆற்றிடைக்குறைக்கு இன்னொரு பெயர் இலங்கை. துருத்தி, இலங்கை ஆகிய இரண்டும் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலத்தையே குறிக்கும். துருத்தி - பவளம். பவளப்பாறை உள்ள தீவுகள் துருத்தி எனவும் அழைக்கப்படும். அதனால் இப்பாடலில் முந்நீர் துருத்தி என கடலினுள் இருக்கும் இலங்கையைச் சொன்னார் என்பது தெளிவாகிறது.

பதிற்றுப்பத்து மட்டுமல்ல சேரலாதன் ஈழத்தின் மாந்தை  நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் பெறுமதியான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்ன கைவிட்டான் என்பதை  

“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”
என அகநானூறு மிக விரிவாகச் சொல்கிறது.

சங்ககால நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட தொகைநூலாகிய முத்தொள்ளாயிரமும் மன்னாரில் உள்ள மாந்தையை சேரனின் மாந்தையாகச் சொல்கிறது.

நாகமரம் (இலங்கையின் தேசியமரம்)

ஈழத்தின் மாந்தையில் வாழ்ந்த இளம் மங்கை ஒருத்தி சேரனைக் காதலித்தாள். அவளின் காதலை அவளது தோழிமாரும் அறிவர். இரவு பகலாக அவனின் நினைவாகவே வாழ்ந்தாள். சேரனின் நினைவில் தோழிமாரைக் கண்டாலும் பேசமாட்டாள். சேரனின் நினைவோடு தூங்கி எழுபவளின் கனவில் ஒரு நாள் இரவு அவன் வந்தான். அவளைத் தடவித் தழுவினான். சேரனின் தழுவலின் மயக்கத்தில் தூங்கி எழுந்தவள் மகிழ்ச்சியோடு இருந்தாள். தோழிமாரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள். அவளின் மகிழ்ச்சிக்காண காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிமார், ‘சேரமாராசன் என்ன சேதி சொன்னார்?” எனக் கேலி செய்தனர்.
புன்னைப்பூ

அவள் திகைத்துப்போனாள். “என் கனவில் சேரன் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?” அவளது திகைப்பை முத்தொள்ளாயிரம் ஒரு பாடலாகச் சொல்கிறது.

“புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன் - என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
எங்கொல் இவரறிந்த வாறு”               - (முத்தொள்ளாயிரம்: 5)

‘புன்னைமரச் சோலையும் [புனல்]  நீர் நிறைந்த [தெங்கு]தென்னஞ் சோலையும் சூழ்ந்த மாந்தை நகரத்தையும் நல்ல நாகமரம் [நின்றலரும்] பூத்துக் குலுங்கும் நல்ல நாட்டையும் உடைய சேர அரசன் [கங்குல்] ஒரு நாள் இரவு கனவில் வந்து [என்னாகம்] என்னுடலைத் [தைவந்து] தடவித் தழுவினான். அது [என்கொல்] எப்படி இவர்களுக்குத் தெரியவந்தது.’ என நினைத்தாள்.
நாகப்பூ

இப்பாடல் அவளின் திகைப்பைமட்டும் கூறவில்லை. அவள் குறிப்பிடும் மாந்தை ஈழத்தின் மாந்தை என்பதையும் மெல்லக் கோடிட்டுச் சொல்கிறது. இலங்கையின் தேசிய மரமாகிய நாகமரம்  தொன்று தொட்டு இலங்கையில் இருக்கிறது. இப்பாடல் சொல்லும் புன்னை, தென்னை, நாகமரம் மூன்றையும் இன்றும் மாந்தையில் காணலாம். எனவே சேர அரசர்கள் ஈழத்தின் மாந்தையை ஆண்டதை இந்த முத்தொள்ளாயிரப் பாடலும் எடுத்துச் சொல்கிறதல்லவா! இயற்கை தேர்வாய் மாந்தையில் பலவண்ண இலைகளோடு வெண்ணிறப்பூவுமாய் பூத்துக் குழுங்கும் நாகமரத்தின் அழகை இரசிக்க ஆயிரம் கண் வேண்டும். அந்த அழகுக் கம்பிரத்தை நாம் எம் அறியாமையால் வெட்டி அழிக்கின்றோம். 

நாகலிங்கப்பூ

நாகமரம் மாந்தையில் மட்டுமல்ல இலங்கையின் கடற்கரையை அண்டிய காடுகளில் பலவண்ண இலைகளோடு சிலிர்த்து நிறப்தைக் கண்டிருக்கிறேன். 9 பாதை வழியாகச் செல்வோர் நாகமரத்தை முருகண்டி பிள்ளையார் கோயிலில் கால்கழுவும் இடத்தினருகே பார்க்கலாம். புங்குடுதீவில் பருத்தியடைப்புக்கு சற்றுக் கிழக்கே நின்றது. தற்போதும் அங்கு நிற்கும் எனநினைக்கிறேன். ஈழத்து மாந்தை முற்காலச்சேரரின் மாந்தைதான் என்று எடுத்துச் சொல்வதற்கு நாகமரத்தை வெட்டாது பாதுகாப்போமா?

குறிப்பு:
ஈழத்து மாந்தை முற்காலச்சேர அரசரின் [சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை] மாந்தை என்பதை அறிய 2013ம் ஆண்டு நான் எழுதிய "கண்கள் உறங்கிடுமா?" என்னும் ஆய்வையும் பாருங்கள்...

https://inithal.blogspot.com/2013/01/1_20.html

இலங்கையின் பல பகுதியிலும் நாகமரம் இருக்கிறது. ஆனால் இப்போ அருகி வருகிறது. புன்னைமரமும், நாகமரமும் வெவ்வேறானவை என்பதை இரண்டு மரங்களையும் இப்பாடல் எடுத்துச் சொல்வதால் அறியலாம். சிலர் நாகமரத்தை நாகலிங்க மரமாகாவும்  கருதுகின்றனர். நாகமரத்தின் இலை வெவ்வேறு வண்ண நிறமாக உதடுபோல் இருக்கும். நாகலிங்க மரத்தின் இலை அப்படி இருக்காது. இம்மூன்று மரங்களின் பூக்களையும் பார்த்து அவற்றின் வேறுபாட்டை அறிந்து கொள்க.
இனிதே,
தமிழரசி.

Saturday, 9 April 2016

மகுடி கேட்டு ஆடல் ஏனோ!


பாம்பாட்டி மகுடி கேட்டு
         ஓடிவந்த பாம்பு பார்த்தேன்
பாம்புக்கோ காது இல்லை
         நாடிவந்த வேகம் பார்த்தே
பாம்பாட்டி கட்செவி யென்ன
         ஆடிவந்த நல்ல பாம்பே
பாம்பாட்டி இசைக்கும் இனிய
         மகுடிகேட்டு ஆடல் ஏனோ!
                                    - சிட்டு எழுதும் சீட்டு  113

Thursday, 7 April 2016

கசிந்திடும் கண்ணே!

மதுரை வெள்ளியம்பலம் 
கால்மாறி ஆடிய நடராசர்

சொந்தமில் குணம் களை சொக்கனே
         சொக்கியே நின்று சேவித் தெழுந்து
அந்தமில் ஆனந்த அற்புதத் தாண்டவ
         அழகினைக் கண்டு ஆனந்தம் கொண்டு
பந்தமில் மனத்து பரிந்துனை வைத்து
         பைந்தமிழ் தேனை சொரிந்துனை போற்றி
கந்தமில் உள்ளக் கோயிலின் உள்ளே
         கண்டு கண்டு கசிந்திடும் கண்ணே!
இனிதே,
தமிழரசி.

Tuesday, 5 April 2016

அடிசில் 96

ரவைப் பொங்கல்
- நீரா -


தேவையான பொருட்கள்: 
ரவை  -  1 கப்
வறுத்த பயறு  -  ½ கப்
முந்திரிப் பருப்பு  -  15 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய்  -  1 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி  -  ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை கொஞ்சம்
நெய்  -  1 மேசைக் கரண்டி
மிளகு  -  1 தேக்கரண்டி
சீரகம்  -  1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  -  ½ தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை: 
1. வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்விட்டு பாதியாக உடைத்த முந்திரிப்பருப்பைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
2. அப்பாத்திரத்துள் ரவையைப் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
3. அப்பாதிரத்துள் பயற்றையும்,மஞ்சள் தூளையும் இட்டு ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பயறு வெந்ததும் அதை நன்கு மசித்தெடுக்கவும்.
4. மசித்து எடுத்த பயற்றுடன் இன்னும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
5. கொதிக்கும் பயற்றினுள் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறி வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
6. அடிப்பக்கம் தடித்த வாயகன்ற பாதிரத்தை அடுப்பில் வைத்து மிகுதியாக இருக்கும் நெய்யைவிட்டு சூடாக்கி கறிவேப்பிலை, மிளகு, சீரகம் சேர்த்து தாளித்து, மிளகு நெய்யில் மிதக்கும் போது இஞ்சு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு இட்டு வதக்கவும்.
7. அதற்குள் வேகவைத்திருக்கும் ரவைக்கலவையைக் கொட்டிக் கிளறுக. யாவும் ஒன்றகக் கரண்டியுடன் சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.

குறிப்பு:
பயற்றைப்போல் மூன்று மடங்கு தண்ணீரும் ரவையைப்போல் இரு மடங்கு தண்ணீரும் அவிப்பதற்கு விடவேண்டும்.