Sunday, 3 April 2016
Saturday, 2 April 2016
சுவர்க்கம் செல்லலாமே!
இந்த உலகில் உள்ள எந்தச் சமயமாவது மனிதர் மிக இலகுவாக சுவர்க்கம் செல்வதற்கு வழி சொல்லியதா? சுவர்க்கம் செல்ல வேண்டுமா? ஆசையை விடு, போகத்தைவிடு என்று கூறினால் முடிகிற காரியமா? எவரால் அவற்றை மிக இலகுவாக கைவிட்டுவிட முடியும்? அதற்காக உண்மைத் துறவறத்தை மேற்கொள்ள முடியுமா? ஆசை, போகங்களைத் துறந்து துறவறத்தை மேற்கொண்ட சுவாமிமாரால் கூட அதில் நிலைத்து நிற்க முடிவதில்லை. எம்போன்றவரால் இயலுமா?
ஆசை, போகங்களைக் கைவிடாமலேயே சுவர்க்கம் செல்ல வழி சொல்கிறார் சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதிய காரியாசான். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் காரிநாயனார். காரியாசானே காரிநாயனார் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். காரிநாயனாரே 'கணக்கதிகாரம்' என்ற கணித நூலையும் எழுதியவர். அந்நூல் பெண்களுக்கு கணிதத்தைக் கற்பிக்கவே எழுதப்பட்டது என்பதை அச்செய்யுள்களில் இருக்கும் "நேரிழையாய்" "பெய்வளையாய்" போன்ற சொற்கள் எடுத்துச்சொல்கின்றன. தமிழால் இறைவன் திருவடி அடைந்த நாயன்மார்களில் ஒருவராக காரிநாயனாரை சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். எனவே சுவர்க்கத்தை - இறைவன் திருவடியை - முத்தியை அடைந்த காரியாசான் எமக்கும் சுவர்கம் செல்ல வழி சொல்லித் தந்திருப்பதில் வியப்பில்லை.
அவர் சொன்ன வழி மிகவும் இலகுவானது. எவரும் எப்போதும் செய்யக்கூடியது. அதிலும் பொதுச்சேவை செய்வோர்கள் அந்தவழியைப் பின்பற்றினால் உண்மையாய் சுவர்க்கம் செல்வார்கள். அதுமட்டுமல்ல உலக உயிர்கள் யாவும் அவர்களைப் போற்றி வணங்கும். இந்த உலகும் செழிப்பாய் மாதம் மும்மாரி பொழிந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாய் காட்சி அளிக்கும்.
அதற்காக முப்போதும் திருநீறு பூசவோ, கோயில்கள் கட்டி குடமுழுக்குச் செய்யவோ, பண்டைய ஆலயங்கள் தோறும் சென்று வீழ்ந்து கும்பிட்டு எழவோ, சுவாமிமார், பூசாரிமார், ஐயர்மார் கால்களில் வீழ்ந்து வணங்கி பொன்னாடை போர்த்தி மகுடம் சூட்டவோ, தான தர்மம் செய்யவோ காரிஆசான் சொல்லவில்லை. தமிழால் முத்தியடைந்தவராதலால் மேலே சொன்ன எவையும் அவருக்கு சுவர்க்கத்துக்கு செல்லும் வழியைக் காட்டவில்லைப் போலும். இந்த உலக இயற்கையை நன்கு இரசித்து, புசித்து இன்பமாய் சுகத்துடன் உயிர்களின் நன்மைக்காக வாழ்ந்து சுவர்க்கம் செல்ல அருமையான வழியைக் காட்டுகிறார்.
சிறுபஞ்சமூலத்தில் காரியாசான் சொன்ன சுவர்க்கும் செல்லும் வழியைப் பார்ப்போமா?
“குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்ஐம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது”
- (சிறுபஞ்சமூலம்: 66)
“குளம்தொட்டுக்[தோண்டி] கோடு[மரக்கிளை] பதித்து[நட்டு] வழிசீத்து[வழியமைத்து]
உளம்தொட்டு[தரிசுநிலத்தைக் கிண்டி] உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்[வளப்படுத்தி]
பாகுபடும்[சுவர்கட்டிய] கிணற்றோடு என்று இவ்ஐம்பால்[ஐந்தையும்] படுத்தான்[செய்தவன்]
ஏகும்[செல்லும்] சுவர்க்கத்து இனிது”
இன்றைய காலகட்டத்தில் என்னை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்த ஒரு பாடல் இது. அதாவது மக்கள் கமத்தொழில் செய்வதற்கு வேண்டிய தண்ணீரை அள்ளிவழங்கும் பெருங் குளங்களைத் தோண்ட வேண்டும், கோடுகளான மரக்கிளைகளை நட்டு வளர்த்து மக்களுக்கு குளிர் நிழல் தரும் சோலைகளை உண்டாக்க வேண்டும், கட்களும் முட்களும் இன்றி மக்கள் நடப்பதற்கு, வண்டி ஓட்டுவதற்கு ஏற்றவாறு வழியமைத்துக் கொடுக்க வேண்டும், மக்கள் பசியின்றி வாழ கட்டாந்தரையாய் காய்ந்து கிடக்கும் நிலத்தை, உழு நிலமாக்கி, பின்னர் விளைநிலமாக்க வேண்டும். மக்களின் குடிநீர் தேவைக்கு வேண்டிய கிணறுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இந்த ஐந்தையும் தன்நலம் கருதாமல் உலக நலன் கருதிச் செய்பவனே இனிதாகச் சுவர்க்கம் செல்வான்.
மேலோட்டமாக இப்பாடலைப் படித்தாலே குளத்தை வெட்டி, மரத்தைநட்டு, தெருப்போட்டு, தரிசு நிலத்தைக் கழனியாக்கி, கிணத்தை வெட்டினால் சுவர்க்கம் போகலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஆனால் இன்றைய உலக சூழலில் இப்பாடல் எவ்வளவு முதன்மை வாய்ந்தது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இராசாயனக் கலவையையும், எண்ணெயையும், உப்பையும் கலப்பதால் எமக்குப் புதுப்புது நோய்கள் உண்டாகின்றன. எமது முன்னோருக்கு இருந்த உடல் நலம் எமக்கு இல்லை. இராசாயனக் கலப்படம் இல்லாத நல்ல உணவை நாம் உண்ண வேண்டுமானால் கமத்தொழில் சிறக்க வேண்டும். அதற்கு குளங்கள் வேண்டும்.
வெப்பநிலை ஏற்றம், மழை இன்மை, சுவாசிக்கும் காற்றில்மாசு இவற்றுக்குக் காரணம் என்ன? மரங்களை வெட்டி சுவர்கட்டினோம். காடுகளை அழித்து நாடாக்கியதால் திண்டாடுகிறோம். அதனால் பசுமைப்புரட்சிக்காக உலகெங்கும் மரம் நடும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்காக மரக்கிளைகளை நட்டு சோலைகளை உண்டாக்க வேண்டும். அதனால் பூமியின் வெப்பமயமாதலைத் தடுக்கலாம். வானமும் மழையைப் பொழியும். இயற்கை தரும் நல்ல உணவை உண்டு மக்களும் நோயின்றி வாழ்வர்.
வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர், பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆலயம் என்றல்லாம் சென்றுவர கரடுமுரடு அற்றதாய் பாதைகள் இருக்க வேண்டும். நாம் நடக்கும் பாதைகளில் முள் மரம், செடி, கொடிகளை வளரவிட்டும், அடுத்த வீட்டுத் தெருவில் குப்பையைக் கொட்டி வைத்தும் அழகு பார்த்தல் நல்லதா? இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தெருக்களை அழகுபடுத்தி வாசனை கமழவைத்த தமிழினம் இன்று, தமது தெருக்களை பாழ்பட விடுதல் நன்றா! நல்ல பாதைகள் அமைத்தல் வேண்டும்.
தரிசு நிலத்தை உழுவயலாக்கி நன் செய்நிலமாக்க எவ்வளவு பாடுபடவேண்டும் தெரியுமா? எழுதுவது போலோ சொல்வது போலோ மிக இலகுவான செயல் அல்ல. உடல் உழைப்பும் பணவசதியும், நீர்வசதியும் இருந்தால் மட்டும் போதாது. நிலம் ஏன் தரிசு நிலமானது என்ற காரணத்தை முதலில் அறிய வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தரிசு நிலத்தை விளைநிலமாக்கித் தீருவேன் என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலமாக்கி கமத்தொழிலில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் போது வறுமைக்கே வறுமை வரும்.
உலக உயிர்கள் உயிர்வாழ காற்று, உணவு, குடிநீர் மூன்றும் தேவை. நீர் இல்லாமல் எம்மால் வாழமுடியாது. எனவே கிணறுகளை உண்டாக்கி குடிநீர் வசதிசெய்து கொடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான இந்த ஐந்து வசதிகளையும் செய்து கொடுப்போர் சுவர்க்கம் செல்லாமல் வேறு எங்கே செல்வர்?
ஒரு நாடு சிறப்புற விளங்க நீர்ப்பாசன வசதிகளும், நிழல் தரும் மரங்களால் நிறைந்த சோலைகளும், மனிதர் பயமின்றி நடமாடக்கூடிய தெருக்கள் அமைந்த சாலை வசதிகளும், பயிர் செய்ய இயலாத தரிசு நிலங்களை பண்படுத்தி உண்டாக்கிய நல்ல விளை நிலங்களும், குடிநீர் வசதியும் இருக்க வேண்டும். இந்த ஐந்து வசதிகளும் இருந்தாலே அந்த நாட்டு மக்கள் நல்ல காற்றைச் சுவாசித்து, பயிர் செய்து, வறுமை இன்றி, நோய் நொடி இன்றி இன்பமாய் வாழ்வர். மனித குல மேம்பாட்டிற்காக ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பே இத்தகைய கருத்தைச் சொன்ன காரியாசானை நாம் போற்ற வேண்டும்.
புங்குடுதீவு ஓர் ஊரல்ல. அது ஒரு நாடு. புங்குடுதீவை நாடு எனச்சொல்லல் மிகப்படுத்திக் கூறியதல்ல. ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புக்கள் எவை என திருவள்ளுவர் சொல்கிறார்.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” - 737
கிணற்று நீரும் குளத்து நீரும் ஆகிய இரண்டு நீரும் [புனலும்], நல்ல மலையும், அம்மலையில் இருந்து வருகின்ற ஆற்று நீரும், வலிமையுடைய அரணும் நாட்டின் உறுப்புக்களாகும் என்கிறார். ஒரு நாட்டிற்குத் தேவையாய் திருவள்ளுவர் சொன்ன உறுப்புக்கள் யாவும் புங்குடுதீவில் இருக்கின்றன. புங்குடுதீவில் கிணறுகளும், குளங்களும், மலையும், மலையில் இருந்து வரும் ஆறும், கடலால் ஆன அரணும் உண்டல்லவா? மலையும் ஆறும் புங்டுதீவில் எங்கே என்று பார்க்கிறீர்கள்? நாம் அவற்றை புறக்கணித்து விட்டோம். நம் முன்னோர்கள் அவற்றைப் பேணிப் பாதுகாத்தார்கள். இப்போதும் அவற்றை நாம் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
புங்குடுதீவின் மேட்டுப்பகுதியாய் இன்றும் வீராமலை இருக்கிறது. அந்த வீரமலையில் இருந்து உற்பத்தியாகிய ஒரு சிற்றாறு போக்கத்தைக்கூடாக சென்று கள்ளி ஆற்றில் வீழ்ந்தது என்று என் தந்தை சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இது பற்றி அறிய விரும்புவோர் யாழ் பல்கலைக் கழக புவியியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா குகபாலன் அவர்களைக் கேட்கலாம். அவரும் இதுபற்றி என்னிடம் கூறினார். அந்த ஆறு சென்ற தடத்தை அறிந்து தூர்வாரி மீண்டும் அவ்வழியே ஓடச்செய்யலாம். குளங்களைத் தூர்வாரலாம். கொப்புகளை நட்டும், மரங்களை வளர்த்தும் சோலைகளை உண்டாக்கலாம். தெருக்களை சீர்திருத்தலாம். குடிநீர் வசதிகளை உண்டாக்கலாம். பயிர் செய்வோர் இன்றி பாழாகும் நிலங்களை மீண்டும் கழனிகள் ஆக்கலாம்.
இந்த ஐந்து அறங்களையும் புங்குடுதீவு வாழ் மக்களுக்காக உலகெங்கும் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள், நலன்புரிச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், உலக மையம், புதிய ஒளி யாவும் சேர்ந்தோ தனித்தனியாகவோ செய்தால் காரியாசான் சொன்ன சுவர்க்கத்தை புங்குடுதீவிலேயே நாம் காணலாம்.
இனிதே,
தமிழரசி.
Friday, 1 April 2016
திருவள்ளுவரா வைத்தார்!
ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!
SOAS, University of London
திருக்குறள் முழுவதையும் எப்போ படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்கு திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும் போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுட்டி குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் இரு அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. சாதாரண எம்போன்ற மனிதரின் மனக்குறிப்பை திருவள்ளுவர் அறியாமலா இருப்பார்?
‘மூதுரை’ என்பது ஔவையார் எழுதிய ஒரு நூலாகும். அதில் காட்டில் கிளைவிட்டு நிற்கும் மரங்கள் நல்லமரங்கள் அல்ல பிறரின் குறிப்பை அறிய முடியாதவனே மரம் என்று பாடியுள்ளார்.
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் …………..
…… குறிப்பறிய மாட்டாதான் மரம்”
இப்படிப் பாடிய ஔவையார் எப்படி ஒரு பெயரில் இரு அதிகாரம் இருக்கும் திருக்குறளை “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுட்டி குறுகத் தறித்த குறள்” என்று புகழ்ந்திருக்க முடியும்?? எனவே ஔவையாரின் காலத்திற்குப் பின் எங்கோ இத்தவறு நடந்திருக்கிறது.
திருக்குறளிலே நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்கள் இருக்கின்றன. அந்த நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் 71, 110 ஆகிய இரு அதிகாரங்களும் “குறிப்பு அறிதல்” என்ற தலைப்போடு இருக்கின்றன. ஒன்று பொருட்பாலில் வருகின்றது. மற்றது இன்பத்துப்பாலில் வருகின்றது. ஒருவர் ஒன்றைச் சொல்லாமல் அவரது மனக்கருத்தை அறிபவரது தன்மைபற்றி பொருட்பாலின் ‘குறிப்பறிதல்’ என்ற அதிகாரத்தில் [71] சொல்கிறார். காதலியின் காதல் குறிப்பை அறிதல் பற்றி இன்பத்துப்பாலின் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரத்தில் [110] சொல்கிறார். பரிமேலழகரைப் பின்பற்றி எண்ணூறு வருடங்களுக்கு மேலாக திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய யாவரும் இவ்விரு அதிகாரங்களின் பெயர்களையும் ‘குறிப்பறிதல்’ என்றே எழுதி வருகின்றனர்.
‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி” என்னும் நூலை நான் எழுதிய நேரம், நம் பெரியோரைப் பின்பற்றி இவ்விரு அதிகாரங்களின் தலைப்பையும் ‘குறிப்பறிதல்’ என்றே எழுதினேன். அப்படி எழுதிய போதும் அது சரியென்று எனக்குப்படவில்லை. நூலை மீள்பதிவு செய்த போது அதனைத் திருத்தி எழுதினேன். அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.
71ம் அதிகாரத்தில் வரும் ஐந்து குறள்களில் உணர்தல் என்னும் சொல்லை திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார்.
“ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்” - 702
“குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்” - 703
“குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்” - 705
“முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்” - 708
“பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்” - 709
ஐந்து குறள்களில் உணர்தல் என்ற சொல் வருவதால் இந்த அதிகாரம் ‘குறிப்பு உணர்தல்’ என்று இருந்திருக்குமா? என்ற எண்ணம் எமக்கு எழலாம். அது இயல்பே. ஆனால் திருவள்ளுவர் அப்படி பெயர் வைத்திருக்கமாட்டார். அதுவே திருவள்ளுவரின் தனித்தன்மையாகும்.
பொருட்பாலில் உள்ளவை யாவும் மன்னர்க்கும், மன்னரோடு வேலை செய்வோர்க்கும் கூறிய அறிவுரை என்னும் கருத்து நிலவுகிறது. எனவே மன்னரோடு வேலை செய்வோர் மன்னரின் குறிப்பை உணர்ந்து செயல்படும் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அது அவர்களின் தலைக்கே உலைவைத்துவிடும். ஏனெனில் உணர்தல், அறிதல் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருவதுபோல இருப்பினும் இருவேறு கருத்து உடையன.
உதாரணமாக நாம் ஓரிடத்தில் நிற்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஏதோ ஒரு பொருள் வீழ்ந்த ஒலி கேட்டாலோ, எரிந்த மணம் வந்தாலோ அது என்ன என அறிய முற்படுவோம். முதல் அந்த ஒலியையோ மணத்தையோ உணர்ந்த நாம் பின்னர் என்ன நடந்தது? என்பதை அறியப்பார்க்கிறோம். எமது அச்செய்கை உணர்தல் வேறு, அறிதல் வேறு என்பதை வேறுபடுத்திக் காட்டுகின்றதல்லவா?
எனவே மன்னர்களின் முகக்குறிப்பை, சைகையை, சொற்களின் கருத்தை உணர்ந்தால் மட்டும் போதாது நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பே செயல்பட வேண்டும். ஆதலால் பொருட்பாலில் வரும் திருக்குறளின் 71ம் அத்தியாயத்திற்கு திருவள்ளுவர் ‘குறிப்பு அறிதல்’ என்ற பெயரையே வைத்திருப்பார்.
இன்பத்துப்பாலில் உள்ள திருக்குறளின் 110ம் அதிகாரம் மனிதரின் காதலை - காமத்தைப் பற்றிச் சொல்கிறது. காதலோ காமமோ இரண்டும் உணர்ச்சியின் சங்கமம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த அதிகாரம் பண்டைத் தமிழரின் களவுநிலைக் காதலில் முன்பின் அறிந்திராத ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்கும் கணத்தில் நிகழும் உணர்வின் பரிமாற்றம் பற்றியே கூறுகிறது. இதிலுள்ள பத்துக் குறளில் ஒன்பது குறள் காதலியின் பார்வை[நோக்கு] பற்றியே சொல்கிறது. காதலுக்கு ஒருவரோடு ஒருவர் பேசவேண்டியதில்லை என்பதை கடைசிக் குறளில்
“கண்ணோடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”
எனத் திருவள்ளுவர் சொல்லும் பாங்கு உணர்வின் ஐக்கியத்தால் காதல் கனிவதை எடுத்துக் காட்டுகிறது.
எனவே திருக்குறளின் இன்பத்துப்பாலில் உள்ள ‘குறிப்பு அறிதல்’ என்னும் அதிகாரத்தை ‘குறிப்பு உணர்தல்’ என்றே திருவள்ளுவர் அழைத்திருக்க வேண்டும். அதனை திருக்குறளுக்கு உரையெழுதிய காலிங்கரின் உரை மிகத்தெளிவாகக் காட்டுகிறது. அதில் திருக்குறளின் 110ம் அதிகாரம் ‘குறிப்பு உணர்தல்’ என்றே இருக்கிறது. காலிங்கர் பரிமேலழகருக்குக் காலத்தால் முந்தியவர். எனவே பரிமேலழகரோ அல்லது அவரது ஏட்டை மீள்பதிவு செய்தோரோ ‘குறிப்பு உணர்தல்’ என்பதை தவறுதலாக ‘குறிப்பு அறிதல்’ என்று எழுத, பரிமேலழகரின் உரையைப் பின்பற்றி எழுதியோர் யாவரும் அதே தவறைச் செய்ததால் அது நீள் கதையாக தொடர்கிறது எனக் கொள்ளலே நன்று.
ஆதலால் இனிமேலாவது திருக்குறள் பற்றி எழுதுவோர், உரை எழுதுவோர் யாராயினும் இன்பத்துப்பாலில் உள்ள ‘குறிப்பு அறிதல்’ என்ற 110வது அதிகாரத்தை காலிங்கரைப் பின்பற்றி ‘குறிப்பு உணர்தல்’ எனும் பெயரில் எழுதுங்கள் என்று அன்புடன் கேட்கிறேன்.
இனிதே,
தமிழரசி.
Wednesday, 30 March 2016
Tuesday, 29 March 2016
அரற்றி மகிழ்வேன்
அழகர்மலைக் கோயிலிலே ஆடி மகிழ்ந்தேன்
அங்கே கள்ளழகன் காட்சி தர
ஆடி வந்தாண்டி
குழகனவன் குறும்பதனை பார்த்து மகிழ்ந்தேன்
குண கடலும் குட கடலும்
குமைய நின்றாண்டி
மழகர்மலை மயிலிறகை சூடி மகிழ்ந்தேன்
மன மகளாம் எனைக் கண்டு
மயங்கிப் போனாண்டி
அழகர்மலை வாயிலிலே கூடி மகிழ்ந்தேன்
அனு தினமும் அவன் பெயரை
Monday, 28 March 2016
குறள் அமுது - (113)
குறள்: இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றுஅந்நோய் மருந்து
- 1091
பொருள்: இவளுடைய மைதீட்டிய விழிகளில் இரண்டு வகையான பார்வைகள் உள்ளன. ஒரு பார்வை நோயை உண்டாக்கும். மற்றப் பார்வையோ அந்த நோய்க்கு மருந்தாகும்.
விளக்கம்: இத்திருக்குறள் ‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. ஆனால் குறிப்பறிதல் என்ற பெயரில் திருக்குறளில் இரண்டு அதிகாரங்கள் இருக்கின்றன. இவ்வதிகாரங்கள் இரண்டும் ஒரே பெயரைக் கொண்டிருப்பதற்கான காரணத்தை அறிய கீழுள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும்.
இன்பத்துப்பாலில் உள்ள குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் முதலாவது திருக்குறள் இது. ஒர் இளம் பெண்ணின் இருவகையான பார்வை பற்றி இக்குறள் சொல்கிறது. காலங்காலமாக இவ்வுலகின் ஒரு தனிப் பொது மொழியாக இருப்பது காதல் மொழியே. அதற்கு இன, மத வேறுபாடு தெரியாது. அந்தக் காதல் மொழிக்கு வரிவடிவம் கொடுத்த பெருமை நயன மொழிக்கே உண்டு. விருப்பு, வெறுப்பு, கருணை, காதல் போன்ற ரசங்களைப் பேசுவது கண்கள் தானே.
இளைஞன் ஒருவன் ஓர் இளமங்கையைக் கண்டான். அதற்கு முன்பும் அவன் பல மங்கையரைக் கண்டிருக்கிறான். அந்த மங்கையர்களில் காணத ஏதோ ஒன்று, அவளிடம் அவனை ஈர்த்தது. மீண்டும் பார்க்கத் தூண்டியது. பார்த்தான். அவளின் மைதீட்டிய விழிகளின் கண்வீச்சில் தான் சிக்குண்டை உணர்ந்தான். அவளது பார்வை என்னைக் கொல்லுதே! என்று சொன்னபடி அவளை திரும்பவும் பார்த்தான். அவளின் பார்வை அவனை மெல்லத் தடவிச் சென்றது. அவனுக்கு அவனது கண்களையே நம்பமுடியவில்லை.
அந்த மங்கையின் முதல் கண்வீச்சு அவனுள் காதல் கிருமிகளைத் தூவிச்சென்றுவிட்டது. அவன் காதல் நோயால் தவித்தான். தவித்தவன் நினைவில் அவளது இரண்டாவது கண்வீச்சு மெல்லத் தடவிக் கொடுத்தது. அந்தக் கண்வீச்சின் வருடல் குளிர்ச்சியைக் கொடுத்து இதமாய் அவனின் காதல் நோய்க்கு மருந்தானது.
“மைதீட்டிய விழிகளையுடைய இவளிடம் இரண்டு பார்வைகள் உள்ளன. ஒன்று காதல் நோயைத் தரக்கூடியது. மற்றொன்று காதல் எனும் நோய்க்கே மருந்தாகக் கூடியது” எனக் கூறுகிறான்.
Sunday, 27 March 2016
அடிசில் 95
பாதாம் அல்வா
- நீரா -
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு - 1 கப்
சீனி - ½ கப்
பால் - ½ கப்
நெய் - ½ கப்
குங்குமப்பூ - ½ சிட்டிகை
ஏலப்பொடி - ½ சிட்டிகை
உப்பு - ¼ சிட்டிகை
செய்முறை:
1. பாதம் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி எடுத்தவும்.
2. தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து ரவையைப் போல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
3. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைவாசி நெய்விட்டு மிதமான நெருப்பில் சூடாக்கி, அதனுள் அரைத்த பாதாம் விழுதைப் போட்டு கிளரவும்.
4. விழுது இறுகிவரும் போது மீதி சீனியையும் குங்குமப்பூவையும் சேர்த்து கிளரவும். மீண்டும் கலவை இளகி இறுகத்தொடங்கும் போது உப்பையும் ஏலப்பொடியையும் சேர்க்கவும்.
5. நெருப்பைக் குறைத்து, மிகுதி நெய்யையும் சேர்த்து அடிப்பிடியாது தொடர்ந்து கிண்டவும். கலவை கரண்டியோடு திரண்டு வரும் போது இறக்கவும்.
குறிப்பு:
சூடாக உண்டால் சுவையாக இருக்கும்.
பாதாம் பருப்புக்குப் பதிலாக முந்திரிப் பருப்பும் பாவிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)







