Sunday 1 January 2017

புங்குடுதீவின் கள்ளிக்காட்டின் பெருமை


அகிலம் தமிழனின் சொத்து. அதலேயே தமிழன் அகிலமெங்கும் பரந்து வாழ்கின்றான் என்றும் சொல்லலாம். உலகை அகிலம் என்ற சொல்லால் அழைத்தவன் தமிழன். அகிலம் என்ற சொல்லை எப்படி தமிழன் உருவாக்கினான்? அச்சொல் உருவாக எது காரணம்? அகிலம் என்ற சொல்லை தமிழுக்குக் கொடுத்த பெருமை கள்ளிக்காடுகளுக்கே உரியதாகும். அதனால் புங்குடுதீவின் கள்ளிக்காடும் அந்தப் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. எப்படி கள்ளிக்காடுகளுக்கு அப்பெருமை கிடைக்கும் என நினைக்கிறீர்களா! 

ஏனெனில் இந்தப்பூமியில் இருக்கும் கற்பாறைகளைக் கனியவைத்து மண்ணாக மாற்றித் தருவதில் கள்ளி இனத்துக்கும் ஒருசிறிய பங்கு இருக்கிறது. இப்பூமி தோன்றி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் என்றும் மண் பிறந்து [Pedogenesis] 410 மில்லியன் வருடங்கள் எனவும் கூறும் இன்றைய விஞ்ஞானிகள், வேர்விடும் தாவரங்கள் தோன்றி 375 மில்லியன் வருடங்கள் என்கின்றனர். விஞ்ஞானிகள் தமக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டே இவற்றைச் சொல்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் படி கள்ளி இனம் தோன்றி ஏறக்குறைய 35 மில்லியன் வருடங்கள். ஆனால் மனித இனம் தோன்றி 1.8 மில்லியன் வருடங்களே.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”                                         
                                                  - (பு. வெ. மாலை: 35: 3- 4)
இவ்வுலகில் மலை உண்டாகி [கல்தோன்றி] மண் உண்டாக முன், அதாவது உலகின் பெரும்பகுதி குறிஞ்சிநிலமாக இருந்தகாலத்தில் முதலில் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி எனப்பெருமை பேசுகிறது புறப்பொருள் வெண்பாமாலை. 

உலகம் தோன்றிய காலத்தில் உலகின் பெரும்பகுதி கற்காடாக இருந்தது.  மலை மண்ணாக மாறமுன், பாறைக்கற்களாய் கற்காடுகளாய் இருந்த இடங்களை ‘கடறு’, ‘கடம்’ என்ற பெயர்களால் நம் முன்னோர் அழைத்தனர். அதனைச் சீத்தலைச் சாத்தனாரும்
“வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை”                                     
                                                 - [அகநானூறு: 53]
என அகநானூற்றில் கூறுவதால் அறியலாம். இதிலே ‘கள்ளிஅம் காட்ட கடத்திடை’ எனக் கடறு இடையே [கடத்திடை] அழகிய கள்ளிக்காடு இருந்ததைக் கூறியுள்ளார்.

கடறுக் காடு     [Photo: source - nationalgeographic.com] 

கல்லால் ஆன இந்த உலகத்தின் கடறை அரையில் கட்டிய மிகப்பழைய ஓர் ஊரை
“கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த
தொல்புகழ் மூதூர்”
                                                 - [ப.பத்து: 6: 53: 4 - 5]
எனப்பதிற்றுப்பத்து காட்டுகிறது. அந்தக் கடறுகளையே கள்ளிகள் தமது வேர்களால் நல்ல மண்ணாக மெல்ல மாற்றின. இன்றும் கல்லை மண்ணாக்கிக் கொண்டு கடறு இடையே இருக்கும் கள்ளிச் செடியை கீழே உள்ள படத்தில் பாருங்கள். கள்ளிவேர்களின் ஆற்றலே கல்லை மண்ணாக மாற்றுகிறது. 

மரவேர்கள் கல்லை, பாறைகளை கனியவைத்து உடைக்கும் என்தை நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்தனர். அதை
“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் 
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிரும்பு
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”                                    
                                         - [நல்வழி: 33]
“வெட்டக்கூடியவை மென்மையானவற்றை வெற்றிகொள்ள முடியாது. யானையின் உடலை ஊடுருவிக் கொல்லும் வேல், பஞ்சை ஊடுருவிச் செல்லாது. இரும்பால் செய்த கடப்பாரைக்கு இளகாத கற்பாறை, பச்சை மரங்களின் வேருக்கு இளகும்” என்று ஔவையார் கூறியுள்ளார். ஔவையாரின் இக்கூற்றை, ‘பாறைகளை கள்ளிவேர்கள் நெகிழ்விக்கும்’ என்ற Dr Yoav Bashan அவர்களின் இன்றைய கண்டுபிடிப்பு உண்மையாக்கியுள்ளது. 

[Photo:  Dr Yoav Bashan] 

கள்ளி இனங்களை ஆய்வு செய்த தாவரவியல் விஞ்ஞானியான Dr Yoav Bashan “அனேகமான தனிப்பட்ட கள்ளி இனங்கள் மண்ணற்ற பாறைகளில் மட்டுமல்ல செங்குத்தான பாறைகளிலும் வளர்வதை அவதானித்தோம். கள்ளி இனங்களின் விதைகளில் இருக்கும் பற்றீரியாவே பாறைகளை நெகிழவைத்து வேர்கள் செல்ல வழிவகுக்கிறது. வேர்கள் பாறையைத் துளைத்துச் செல்ல பாறை வெடித்துச் சிதறுகிறது. கள்ளிகளும் பாறையில் இருந்து மண் உருவாக உதவுகின்றன” எனக் கூறுகிறார், [BBC Earth News - 2009]. எனவே கள்ளி இனங்கள்  கற்பாறைகளை மண் ஆக மாற்றும் வேலையை 35 மில்லியன் வருடங்களாகச் செய்து வருகின்றன.

இன்றைய உலகில் கள்ளி இனங்களின் பிறப்பிடம் தென் அமெரிக்கா என்று கூறப்பட்டாலும் பண்டைய உலகில் கிழக்காபிரிக்கா, மடகஸ்கார், இலங்கை இந்தியா போன்ற இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான கள்ளி இனங்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய ஆய்வுகள் எதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை என்பதே உண்மை. இவ்விடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டால் கள்ளி இனங்களின் வயதை மேலும் அவை கூட்டக்கூடும்.

சங்கச் சான்றோர்கள் தம் பாடல்களில் கள்ளிகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறியிருக்கிறார்கள். நாம் ஆலமரநிழலில் இருக்கும் பிள்ளையாரை வணங்குவது போல சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளிச்செடி நிழலில் இருந்த கடவுளை வணங்கியதை
“கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”  
                                              - [புறநானூறு: 260: 6]
எனப் புறநானூறு காட்டுகிறது. எனவே கடவுளை வைத்து வணங்கக் கூடிய அளவிற்கு கள்ளிச் செடி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாய் இருந்ததை நாம் அறியலாம். ஆயிரத்து ஐஞ்ஞூறு வருடப் பழமைவாய்ந்த தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கள்ளில் கோயில் தலவிருட்சம் கள்ளிமரமே. நம் தமிழ் முன்னோர் கள்ளிமரத்தின் கீழே கடவுளை வைத்து வணங்கியதற்கு இன்றும் எடுத்துக்காட்டாகத் திருக்கள்ளில் கோயில் விளங்குகிறது.

இப்போ நாம் வளர்க்கும் கற்றாழையில் கூட எத்தனையோ வகைகள் இருந்தன. அவை வருடங்கள் செல்லச் செல்ல மரம் போல வளரும். நாமோ அவற்றை அதிக வருடங்களுக்கு வளர விடுவதில்லை. பத்து வருடங்களுக்கு 1.5 அங்குலம் வளருகின்ற கள்ளி இனம், 25 வருடத்தில் 8 அடி உயரத்தை அடைந்து 50 வருடத்தில் 30 - 40 அடி உயரத்தைக் கூட அடையும். புல் இனத்தைச் சேர்ந்த தென்னை, பனை போன்றவை உயர்ந்து வளர்வதால் நாம் அவற்றை மரம் என அழைப்பது போல கள்ளிச் செடியையும் கள்ளிமரம் என்கிறோம்.

கள்ளியில் குடியிருக்கும் ஜோடிப்புறா

சங்ககாலப் பெண்பாற்புலவரான வெண்பூதியார் ‘மழை அற்றுப்போன வறண்ட நிலம். அங்கே கிளைவிட்ட முட்களையுடைய கள்ளிக் காய் பெரிய ஒலியோடு வெடித்துச் சிதறுகிறது. அந்த ஒலியைக் கேட்டு அக்கள்ளிச் செடியில் குடியிருந்த ஜோடிப் புறா பறந்து போகும்’ என்கின்றார்.
“பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்…”     
                                                     - [குறுந்தொகை: 174: 1 - 3]
வறண்ட நிலங்களில் மட்டுமல்ல காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திலும் [புறவு] குறுகிய கிளைகளும் [குண்டைக் கோடு] குறுகிய முட்களுமுள்ள கள்ளி வகைகள் வளரும் என்பதை
“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளி” 
                                                     - [அகநானூறு: 184: 7 - 8]
என மதுரை மருதன் இளநாகனார் சுட்டிக் காட்டியுள்ளார். 

மரங்கொத்திப் பறவையும் அதன் தலை போன்ற கள்ளியும்

‘பாறைக்கற்கள் [பரற்கற்கள்] நிறைந்த நிலத்தில் மரங்கொத்திப் பறவையின் [சிரல்] தலை போல இருக்கும் கள்ளிச் செடிகளின் மேலே மிக்க நறுமணமுள்ள முல்லைமலர்க் கொடிகள் படர்ந்திருக்கும்’ என்கிறது நற்றிணை.
“பரற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை” 
                                                   - [நற்றிணை: 169: 4 - 5]

தொலைக்காட்சியின் Discovery Channelல் புலி  மானைப் பிடித்துத் தின்று மிஞ்சிய இறைச்சியை விட்டுச்செல்வதப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கள்ளிக் காட்டில் புலி வேட்டை ஆடுவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதர்களாகிய நாம் காலங்காலமாக இருந்த கள்ளிக் காட்டையே அழித்துவிட்டோமே! எப்படி அங்கே புலி, மானை வேட்டையாடுவதைப் பார்ப்பது? ஆனால் கள்ளிக்காட்டில் புள்ளிமானைத் துரத்திச் சென்று, மானின் கொம்பு உதிர்ந்து விழ வேட்டையாடித் தின்ற மிச்ச இறைச்சியை விட்டுச் சென்ற [துறந்த], புலியைப் பார்த்த மாமூலனார் [2250 வருடங்களுக்கு முன்] அதனை எமக்காக எழுதிவைத்துள்ளார்.
“கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை”
                                                 - [அகநானூறு: 97]

இலங்கையும் ஒரு காலத்தில் கடறாக இருந்தது. இலங்கையின் கடற்கரை ஓரமாக நடந்து பார்த்தால் பண்டைய கடறுகளின் எச்சங்கள் தேய்வடைந்த நிலையில் மணலுள் புதையுண்டு இருப்பதை இன்றும் பார்க்கலாம். திரிகோணமலை, காலி கடற்கரை ஓரம்மெங்கும் கடறுத் தேய்மானங்களை அதிகம் காணலாம். உலகிற்கு அகிலம் என்ற பெயரை சூட்டக் காரணமாய் இருந்தவை கடறுக்காட்டுக் கள்ளிகளே. கள்ளிச்செடிகள்  முள் நிறைந்தவை. முள் என்பதை அக்கு என்றும் சொல்வர். வன்னி மக்கள் மரமுட்களால் ஆன வேலியை அக்கு வேலி என்பர். அக்கு + இல் =  அக்கில் ஆகி அகில் ஆயிற்று.

கள்ளியிலிருந்து அகில் பிறப்பதை
“கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான்வயிற்றில்
ஒள்அரிதாரம் பிறக்கும் பெருங்கடல் - உள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்ஆள் பிறக்கும் குடி” 
                                                - [நான்மணிக்கடிகை: 6]
என விளம்பி நாகனார் கூறியிருப்பதால் அறியலாம். 

 கள்ளிமரத்தின் வெளிப்பகுதி உக்கிப்போக பேயைப் பிளந்தது போல்அகில்பிளவு தெரிகிறது

கள்ளி மரத்தின் நடுவே எப்படி அகில் கட்டை உண்டாகும் என்பதைக் கம்பரும்
“பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும்”
                                                 - [கம்பராமாயணம்: 1: 7: 8: 1-2]
பேயின் உடலை பிளந்தது போல நிற்கும், உலர்ந்து போன பெரிய கள்ளியின் முதிர்ந்த மரம், பல பிளவுகளாகப் பிளவுபட, தாய் மரத்தின் வெளிப்பக்கம் உக்கி விழும், அப்படி விழும்பொழுது உள்ளே இருந்து கரிய அகில் கட்டைகள் கிடைக்கும் என விரிவாக இராமாயணத்தின் பாலகாண்டத்தில் கூறுகிறார். இன்றும் கம்பர் கூறியது போல நிற்கும் கள்ளிமரத்தையும் அதன் நடுவேயிருக்கும் அகில் பிளவுகளையும்  மேலேயுள்ள படத்தில் பாருங்கள்.

கற்காடாக - கடறுகளாக இவ்உலகம் இருந்த போது கள்ளிக்காடுகள் யாவும்  அகில் மணத்தது. அகில் நிறைந்த உலகைத் தமிழர் ‘அகிலம்’ என அழைத்தனர். [அகில் + அம் = அகிலம்]. கள்ளி வயிற்றில் பிறந்த அகிலே, அகிலம் என்ற பெயரை உலகிற்குக் அளித்ததால் கள்ளிக்காடுகள் பெருமை பெற்றன. அகிலம் என்பது சமஸ்கிருதச் சொல் எனச் சிலர் சொல்கிறார்கள். அது பிழையான கருத்து. சமஸ்கிருதத்தில் அகரு என்பர்.

“நிரைகழல் அரவம்” என்ற தேவாரத்தில் திருக்கோணேச்சரக் கடற்கரையில் 
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்”
                                              - [ப.திருமுறை: 3: 123: 1: 5]

வந்து மோதுகின்றன என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார் அல்லவா! அந்தக் ‘கார் அகில் பிளவை’ கள்ளிச் செடிகளே தந்தன. இன்றும் திரிகோணமலையின்  China Bay, Marble Point, Malay cove, திருக்கைக் குடா போன்ற பகுதிகளில் கள்ளிமரங்களைக் காணலாம். நானும் திரிகோணமலை நிலாவெளிக் கடற்கரை மணலில் ‘அகிலம்’ என எழுதி மகிழ்ந்தேன்[முதற்படம்]. 

புங்குடுதீவின் கள்ளிக்காட்டின் பெருமை இன்று எப்படி இருக்கிறது? அகிலின் பெருமையை உலகம் மறந்தது ஏன்? தெரியுமா? கதறும் கள்ளியின் நிலை காண்போம்.... 
இனிதே,
தமிழரசி.

4 comments:

  1. அருமையான பதிவு
    பயனுள்ள தொகுப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எல்லோருக்கும் எமது வாழ்த்து.

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் மங்கலப்புத்தாண்டு வாழ்த்து சகோதரரே!

      Delete