Monday, 23 January 2017

அஞ்சாத சிங்கம் என் காளை


இக்காளையைப் போல் ஆனால் கருநிறம் இன்றி இருந்தது

நான் “கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங்
          காடுஞ் சுனையும் கடந்து வந்தேன்” 
எனப் பாடியபடி, கல்லும் மலையும் குதித்து காடுஞ் சுனையும் கடந்து திரிந்த காலம் அது. அப்படிப் பாடித்திரிந்த காலத்தில் ஒரு காளையை நான் வளர்த்தேன். மாணவர்களால் ஜல்லிக் கட்டுக்காக சென்னை மரீனா கடற்கரையில் நடைபெறும் புரட்சிப்போராட்டம் அந்தக் காளையின் நினைவலைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைத்தது. அத்துடன் நேற்று[21/01/2017] நடைபெற்ற ‘London Arena to Chennai Marina’ நிகழ்ச்சி அந்தக் காளையைப்பற்றி எழுதத் தூண்டியது.


சிந்துவெளி நாகரிக காலத்து மாடுகளின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுவது சிந்து இனமாடுகளாகும். இன்றும் அவ்வின மாடுகள் அப்பகுதியிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வின மாடுகள் நீளமாகவும் உயரமாகவும் சந்தன நிறம்கலந்த செந்நிறத்துடனும் இருக்கும். இவற்றிற்கு மிகச் சிறிய ஆடுகொம்புகள் இருக்கும். பசுக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10 - 12 லீற்றர் பால் கொடுக்கும். இவ்வின மாடுகளைச் சங்ககாலத் தமிழரும் வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் அப்பசுக்களை ‘சேதா’ என அழைத்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. செவ்விய - செந்நிறப் பசுவை சேதா என்பர்.

சங்ககாலப் புலவரான கபிலர் 
“சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா”  
                                            - ( நற்றிணை: 359: 1)
என மலையில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய செவ்விய பசுவைக் குறிப்பிடுகிறார். அத்தகைய சிந்து இனத்தைச் சேர்ந்த கலப்பினப் பசுவொன்றை என் தந்தை வாங்கி இருந்தார். அப்பசுவே எங்கள் வீட்டுப் பட்டியில் இருந்த நூற்றுக்கனக்கான மாடுகளில் உயரமாய் சந்தன நிறத்தில் மிக அழகாய் இருந்தது. அதை இலட்சுமி என்றே எல்லோரும் அழைப்போம். லட்சுமி ஈன்ற முதற்கன்றை ‘கப்பல்’ என்று அழைத்தனர் என நினைக்கிறேன். நான் சிறுமியாக இருந்ததால் அதைப்பற்றிய நினைவுகள் என்னிடத்தில் இல்லை. 

அதன் பின் லட்சுமி ஈன்ற கன்றேயே ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என்று சொல்லி வளர்த்தேன். அக்கன்று எப்போது நிலத்தில் கால் பதித்து தள்ளாடி வீழ்ந்து எழுந்து நின்றதோ அக்கணம் முதல் அது என் காளை ஆயிற்று. கன்றாக இருக்கும் பொழுதே அதுவும் மற்றக்கன்றுகளைவிட உயரமாகவும் நீளமாகவும் அதன் இனத்தைப் போல் இருந்தது. அதனைச் சின்னக்கப்பல் என்று எல்லோரும் அழைப்போம். வெள்ளையோடு வெளிர் peach நிறம் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. 

லட்சுமி கன்றை[சின்னக்கப்பலை] நினைத்து கமறிக்கொண்டு ஓடிவரும் பொழுது அதன் முலைகளால் பால் வடிந்து நிலத்தில் கோலமிடும். இப்படி கன்றை நினைத்து பால் வடியவடிய ஓடிவந்த பசுக்களை சீத்தலைச்சாத்தனாரும் 
“குவளை மேய்ந்த குடக்கட் சேதா
முலைபொழி தீபால் எழுதுகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர”           
                                       - ( மணிமேகலை: 5; 130 - 132)
‘குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலையிலிருந்து பொழிகின்ற இனிமையான பால் நிலத்திலிருந்து மேல் எழும் புழுதியை அடக்க, கன்றுகளை நினைந்து  கமறும் குரலோடு மன்று இருக்கும் வழியால் செல்ல’ என மணிமேகலையில் ஒரு காட்சியாகக் காட்டுகிறார். 

கன்றைத்தேடி ஓடிவரும் லட்சுமியின் மடியிலிருந்த பாலை ஒரு பக்கம் சின்னக்கப்பல் குடிக்க, மறுபக்கம் நானும் சுவைத்துக் குடித்திருக்கிறேன். சின்னக்கப்பலில் ஏறி சவாரி செய்வேன். அப்படிச் சவாரி செய்யும் பொழுது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் பி சுசிலா குழுவினர் பாடிய

“அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்கவிடும் ஆளை

வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசை கொண்டு வீராப்பு பேசிக்கொண்டு

மாட்டை பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு
ஆண் வாடை கண்டாலே ஆகாதது
இது ஆவேசம் கொண்டாலே பொல்லாதது”
என்ற பாடலைப் பாடித்திரிந்தேன். அந்த பாடலுக்கு ஏற்ப அதுவும் அஞ்சாத சிங்கமாகத்தான் வளர்ந்தது. அதனுடன் விளையாடுவது எனது பொழுது போக்காகவே இருந்தது. நான் மெல்ல நடந்தால் அதுவும் மெல்ல நடக்கும். ஓடினால் ஓடி வரும். நின்றால் நிற்கும். எப்போதும் என்னுடன் துணைக்கு வரும்.

சென்னை மரீனா கடற்கரையில் சல்லிக்கட்டுப் போராட்டம் நடக்க முன்னரே 10/10/2016 அன்று, காளை பற்றிய பாடல் ஒன்றை எழுதினேன். அதில் சின்னக்கப்பலை நினைத்துப் பார்க்காமலேயே அதன் குணத்தை பதிவு செய்திருந்தேன் என்பதை பின்னால் புரிந்து கொண்டேன்.
“வெள்ளை நிறக் காளை இது
  வைக்கல் உணும் காளை இது
கொள்ளை இன்பம் கொண்ட துமே
  கொஞ்சி மகிழ் காளை இது

துள்ளி ஓடும் காளை இது
  துணைக்கு வரும் காளை இது
அள்ளி முத்தம் இட்ட துமே
  அன்பாய் முட்டும் காளை இது

வெள்ளி நிறக் காளை அது
  வயல் உழும் காளை அது
தள்ளி நின்று தொட்ட துமே
  தலை யாட்டுங் காளை அது

தள்ளை போன்ற காளை அது
  தொல்லை தராக் காளை அது
பிள்ளை எனைக் கண்ட துமே
  பையப் போகும் காளை அது
இப்படி நானும் வளர அதுவும் என்னுடன் சேர்ந்தே வளர்ந்தது. 

அப்போது என் தந்தை வவுனியா பாவற்குளத்தில் அதிபராய் இருந்தார். விடுமுறை ஒன்றின் போது வவுனியாவில் இருந்து கிளிநொச்சியில் இருக்கும் எங்கள் வீட்டிற்குச் சென்றோம். என்னைக் கண்டதும் என்னிடம் ஓடி வந்தது. அது என்னை விட உயரமாக வளர்ந்து இருந்தது. முன்போல் அதன்மேல் ஏற முடியவில்லை. ஏற முயன்று நான் கீழே விழுந்ததைப் பார்த்து நிலத்தில் படுத்துக்கொண்டது. நான் அதன் மேல் ஏறி இருந்ததும் என்னைக் கொண்டு பவனி வந்தது. அந்த வயதில் அதைவிடக் கொள்ளை இன்பம் ஒன்றும் எனக்கு இருக்கவில்லை. சின்னக்கப்பலின் செய்கையைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தனர்.

அதைப்பார்த்ததும் அம்மாவின் தந்தை ‘இந்தக் காலத்தில் இந்தக் காளையை அடக்கிறவன் யார்? இதற்கும் ஆண்களைக் கண்டால் பிடிக்காது’ என்றார். அவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது புரியவில்லை. என் தந்தையிடம் கேட்டதற்கு கலித்தொகையின் 104 பாடலின் விளக்கத்தை எனக்குக் கதையாகச் சொன்னார்.

அக்கதை மதுரையிலிருந்த ஓர் ஊரில் பெருவிழாவாக ‘ஏறு தழுவுதல்’ நடந்தை மிகவிரிவாக எடுத்துக் கூறுகிறது. அப்பாடலின் தொடக்கத்தில்
“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவின்றி மேல் சென்று மேவார் நாடு இடம்பட” 
                                                - (கலி: 104: 1 - 2)
ஆழிப்பேரலை பாண்டிய நாட்டை விழுங்க, சேரசோழ நாடுகளை வென்று, புதிய பாண்டிய நாட்டை உருவாக்கி இயற்கையின் சீற்றத்தையும் வெற்றிகொண்டான் பாண்டியன் என  அவனின் புகழைச் சொல்கிறது.

கொம்பால் குத்திக் கொல்லும் காளையின் கொம்பைக் கண்டு பயப்படுபவனை சங்ககால ஆயர்குலப் பெண்கள் திருமணம் செய்ய விரும்பவில்லை என்பதையும்
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”                                      
                                                     - (கலி: 103: 63 - 64)
என கலித்தொகை கூறுகிறது. 
ஏறுதழுவும் கல்வெட்டு

சங்ககால மக்கள் வீரத்துக்கு முதன்மை அளித்ததால் படித்த அறிவுள்ளவனாக இருந்தாலும் கோழைகளைப் பெண்கள் விரும்பவில்லை. அதனால் முல்லை நில மக்கள் தங்கள் பெண்கள் வளர்க்கும் காளையை அடக்குபவனுக்கே அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். காதலித்திருந்தாலும் அவனும் காளையை அடக்கினாலே அவளைத் திருமணம் செய்யமுடியும். தாம் காதலித்தவன் காளையை அடக்கவேண்டுமே என்ற தவிப்போடு ஏறு தழுவுவதைப் பெண்கள் பார்ப்பதையும் கலித்தொகையில் காணலாம்.

என் தந்தை எனக்காக விடுமுறை முடிந்து செல்லும் போது சின்னக்கப்பலையும் பாவற்குளம் கொணர்ந்தார். வீட்டிலிருந்து மாங்குளம் வரை ஒரு லொறியிலும் மாங்குளத்திலிருந்து பாவற்குளத்திற்கு இன்னொரு லொறியிலும் ஏற்றிக் கொண்டு வந்தார். அங்கே பாடசாலை விட்டதும் நானும் எனது சிறுவயதுத் தோழி முத்தரசியும் அதனுடன் விளையாடுவோம். முத்தரசிக்கும் என்னைப் போல் அது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இப்படிக் காலம் மெல்ல ஓடியது.

நாங்கள் தைப்பொங்கலுக்கு கிளிநொச்சி வந்தோம். அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு கரும்பு, வாழை நட்டு, மாவிலைத் தோரணம் கட்டி பொங்கற்பானையை அடுப்பில் வைக்கும் நேரம் பட்டியில் இருந்த லட்சுமி கமறத்தொடங்கியது. அதனால் பட்டி மாடுகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. லட்சுமியின் கமறல் வரவரக்கூடியது. அரிசி கொதிக்கும் போது இன்னொரு கமறல் சத்தம் தூரத்தே கேட்டது. நான் சின்னக்கப்பல் வருகிறது என்றேன். வீட்டார் நம்பவில்லை. சிறிது நேரத்தில் படலையில் சின்னக்கப்பல் ஓடிவந்து நின்றது. லட்சுமியும் பட்டியின் வேலிக்கு மேலால் பாய்ந்து சென்று அதனை நக்கியது. அன்று விலங்குகளுக்கும் தாய் மேல் அன்பும் பாசமும் இருப்பதை நேரிலே கண்டேன்.

எனது அம்மாவிடம் “நீங்க தைப்பொங்கலுக்கு உங்க அம்மாவைத்தேடி வந்தது போல அதுவும் தன் தாயைத்தேடி வந்திருக்கிறது” என்று என் தந்தை கூறினார். நானும் ஓடிச் சென்று சின்னக்கப்பலைக் கட்டிக்கொண்டேன். பாவற்குளத்தில் அதைக் கட்டிவைத்திருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு, அறுந்த கயிறும் நிலத்தில் இழுபட ஓடி வந்திருக்கிறது. அதன் உடம்பு முழுவதும் புழுதி படிந்து இருந்தது. அதனை வீட்டில் நின்றவர் குளிப்பாட்டிய பின், பொங்கல் உண்ணக் கொடுத்தேன். அது ஒரு வாழைப்பழம் கொடுத்தால் எப்பவுமே உண்ணாது. சீப்பு வாழைப்பழமாக அல்லது குலையாகக் கொடுத்தாலே உண்ணும். அன்றும் ஒரு வாழைக்குலை கொடுத்தேன் உண்டது. அதுவே அதற்கு நான் கடைசியாகக் கொடுத்த வாழைக்குலை. நாங்கள் பாவற்குளத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆகமுன்னர் என்னைத்தேடி கிட்டத்தட்ட 90 கி மீ தூரத்தை ஓடியும் நடந்தும் வந்திருந்தது. 

ஆனால் நாங்கள் மீண்டும் பாவற்குளம் சென்ற போது அதனைக் கொண்டு செல்லவில்லை. ஒரு கிழமைக்குப் பின்னர் சின்னக்கப்பலைக் காணவில்லை என்று தந்தி வந்தது. ‘அது என்னைத் தேடி பாவற்குளம் வருகின்றதோ! வரும் வழியில் ஏதும் நடந்ததோ!’ என்று முதலில் நினைத்தனர். அது உயரமாகவும் கொழுகொழு வென்று இருந்ததால் அதைக் களவெடுத்துக் கொண்டு சென்று அடிமாட்டிற்கு விற்றுவிட்டார்கள் என்பது தெரியவந்தது. அதனைக் களவு எடுத்தவர் தோலையும் தலையையும் புதைத்து வைத்திருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். ஆண்களால் அதனைப் பிடிக்க முடியாது. அதனால் அது படுத்திருக்கும் போது அதனை மயங்கவைத்து கடத்திச் சென்று கொன்றதை பொலிசாரின் விசாரணையில் அறிந்தோம்.

அழகும் எடுப்பும் அஞ்சாமையும் உடைய என் காளையை இழந்தேன். அதன் பின்னர் மீன்களைத் தவிர எந்தவொரு விலங்கையும் நான் வளர்த்ததில்லை. தமிழ்ப்பெண்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ‘அஞ்சாத சிங்கம் என் காளை’ என காளைகளை வளர்த்து வருவதற்கு, கடந்த காலத்தில் நானும்   என்காளையும் ஒரு சாட்சியாய் இருந்தோம். 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment