Sunday 5 July 2015

இன்றைய காதலர்க்கு!

காதலர்கள் காலங்காலமாக வாழ்கிறார்கள். ஆனால் காதலர்கள் தம் காதலை வெளிப்படுத்தும் பாங்கோ வேறு வேறாக இருக்கிறது. அவர்கள் வளரும் சூழல், அறிவு, ஆற்றல், மனநிலை என்பவற்றை பொறுத்து காதலைச் சொல்லும் பாங்கு வேறு படலாம். காதலன் பணக்காரணாக இருந்தால் விலையுயர்ந்த பொருட்களைப் பரிசளித்து தமது காதலை வெளிப்படுத்துவான். வாய்ச்சாலம் உள்ளவன் தன் வார்த்தைகளாலே காதலியை மடக்குவான். எழுத்தாற்றல் உள்ளவன் எழுதுவான். கவிஞனாக இருந்தால் காதலியின் அழகை கவிதையில் வடிப்பான். இதுவே காலங்காலமாக நாம் காணும் காதலர் நிலை. இதற்கு முரணான காதலர்களும் இருந்திருக்கிறார்கள். இன்றைய காதலர்க்கு அத்தகைய ஒரு காதலனை காட்டலாம் என நினைத்தே இதனை எழுதுகிறேன்.

காதல் வயப்பட்ட ஒருவன் தன் காதலியிடம் பலமுறை தன் காதலை சொன்னான். அவளோ ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள். காதல் வேதனையால் உண்டான தவிப்பை இனியும் தாங்க முடியாது என்பதை கவிதையாக எழுதி அவளிடம் கொடுத்தான். அந்தக் காதற் கவிதையை இன்றைய காதலர்களாகிய உங்களுக்காகத் தருகிறேன். கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
    சகிக்க முடியாதினி என்சகியே மானே!
                                                      (- விவேகசிந்தாமணி: 18)

இந்தக் காதற்கவிதை புரிந்ததா? புரியவில்லையா? இக்கவிதையில் அக்காதலன் தன் காதலிக்கு “கன்னியே கேள்! உண்மையாய் உன் சிவந்தவாயைக் கேட்கிறேன், உன் பதிலைச் சொல்லவாயா? நான் சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாயானால் வெற்றி பெறுவாய் பெண்ணே! இதற்குப்பின் இன்று ஏதும் சாக்குப் போக்குச் சொல்லவேண்டாம். என் தோழியே! மான்போன்றவளே! மன்மதன் படுத்தும் பாட்டால் இனியும் காம வேதனையை என்னால் சகிக்க முடியாது” என்றே எழுதியுள்ளான்.

என்ன? ஒரே எண்கணிதமாக இருக்கின்றது என நினைக்கிறீர்களா? எண்கணிதம் மட்டுமல்ல இக்கவிதையில் சோதிடத்தையும் காதலையும் சேர்த்தே எழுதியிருக்கிறான். காதல், கணிதம், காலக் கணிப்பு மூன்றும் சேர்ந்த ஓர் அற்புதமான காதற்கவிதை இது. 

இக் கவிதையை எழுதிய காதலனுக்கு கணிதமும் சோதிடமும் தெரிந்தது போல கவிதையைப் படிக்கும் காதலியும் கணிதமும் சோதிடமும் எழுதியதை வாசிக்கவும் தெரிந்தவளே. எனவே இக் கவிதை, தமிழ்ப் பெண்கள் கணிதம் சோதிடம் என்பவற்றை கற்றவர்களாக இருந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. தொல்காப்பியர் சொன்னது போல காதலனும் காதலியும் ஒத்த அறிவுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். உங்களைப் போல் ஒத்த அறிவுள்ள காதலர்களைக் காதலியுங்கள் என்று இன்றைய காதலர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கவிதையைக் கொஞ்சம் பார்ப்போம்.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே = 4 + [½ + ½] + 1 = 6
சோதிடத்தில் வரும் பன்னிரெண்டு இராசியில் ஆறாவது இராசி கன்னிராசி. ஆதலால் கன்னியே கேளாய்! என்கின்றான்.

ஐயரையும் அரையும் = [5  x ½] +½ = 3
கிழமைகளிலே மூன்றாவதாக இருப்பது செவ்வாய். உண்மையாய் செவ்வாயை [சிவந்த வாயை] கேட்டேன் எனச் சொல்கிறான்.

இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் = [2 x 4] + 3 + 1 = 12
நட்சத்திரங்களிலே பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம். உத்தரம் என்றால் பதில். உன் பதிலைச் சொல்வாய்.

இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் = சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாய் ஆனால்

பெருநான்கும் அறுநான்கும் = 4 + [6 x 4] = 28
வருடங்களில் இருபத்தெட்டாவது வருடம் ஜெய வருடம். ஜெயம் என்றால் வெற்றி. வெற்றி பெறுவாய் பெண்ணே.

பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே = இதற்கு பின்னும் இன்று ஒன்றும் சொல்லவேண்டாம்.

சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே = 4 + 10 + 15 = 29
வருடங்களில் இருபத்தொன்பதாவது வருடம் மன்மதவருடம். மன்மதனாலே, மன்மதன் படுத்தும் பாட்டால்,
சகிக்க முடியாதினி என்சகியே மானே!

இப்போது காதலனின் கவிதையை அந்தக் காதலியாய் இருந்து படித்துப் பாருங்கள்
      
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே [கன்னியே] கேளாய்
    உண்மையாய் ஐயரையும் அரையும் [செவ்வாய்] கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் [உத்தரம்] சொல்லாய்
    இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் [பதில் தந்தாய்]ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் [ஜெயம்] பெறுவாய் பெண்ணே
    பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே [மன்மதனாலே]
             சகிக்க முடியாதினி என்சகியே மானே!
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. அருமையான விளக்கம் திரு.தமிழரசி அவர்களே. நன்றி.

    ReplyDelete