Sunday, 1 February 2015

முத்தமிழ் இன்பம்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[வீரகேசரி, கொழும்பு  - 1939]



இருந்தமிழே உன்னாலிருந்தேனே தேவர்
விருந்தமுதம் ஆயிடினும் வேண்டேன்”
என்கிறார் சங்கச் சான்றோராய கபிலதேவர்.

“தமிழுக்கு அமிழ்தென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என பொற்காலக் கவிஞர் பாரதிதாசனும் புகன்றுள்ளார்.

“பொருப்பிலே பிறந்து தென்னன் 
        புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே இருந்து வைகை 
        ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் 
        நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை
        மருங்கிலே வளருகின்றாள்"
                             - (வில்லி பாரதம்: சிறப்புப்பாயிரம்) 
என நந்தீந்தமிழுக்கு ஒரு சரித்திரச் சுருக்கமும் இருக்கிறது.

இத்தகைய அரிய செந்தமிழ் - இயல், இசை, நாடகம் என மூன்று திறம்பட இயல்கின்றது. இவை மூன்றும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களைப் பற்றியும் துருவித் துருவி ஆராய்ந்து போதிக்கின்றன. தமிழ் இலக்கண இலக்கிய நூற்கடல்கள் யாவும் இயற்தமிழின் பாற்பட்டன. அறிவுத்துறைகளை - ஒழுகலாறுகளை, மனிதவாழ்வுக்கு இன்றியமையாத பண்பாடுகளை எல்லாம் எடுத்து இயம்புவது இயற்றமிழ் என்க.

இடார்வின் அவர்களின் அறிவுண்மைகளுக்கு நந்தீந்தமிழ்ச் சான்றோர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் …………
எல்லாப் பிறப்பும் பிறந்து இழைத்த”
தாக மணிவாசகர் திருவாசகம் செய்துள்ளார். வள்ளுவப் பெருந்தகையாரும் தெள்ளுதமிழ் மறை புகன்று உலகத்தார் உள்ளுவதெல்லாம் உரைத்து முப்பாலில் நான்கறம் புகட்டிப் பேரின்பப் பெருவாழ்வுக்குத் தமிழ் மக்களை வழிநடத்திச் சென்றனர்.

கபிலதேவரும் சங்கச் செய்யுட்கள் மூலம் தமிழனின் நாகரிக உயர்வைச் சித்தரித்து பலப்பல அமிர்தக் கவிதைகள் புகன்று வைதனர். அவற்றுள் ஒன்று அவர் பாரிமகளிர்க்கு சொன்ன 
“மாயோன் அன்ன மால்வரைக் கவான் 
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம்மலைக் கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந் தளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”

என்னும் அருமந்த செய்யுளாகும். ஒரு கன்னிப் பெண் எவ்வாறு தனக்கு ஒரு வரனைத் தேடவேண்டும் என ஆராய்கிறார், அந்தக் கபிலத்தமிழ் முனிவர்.

தன்னுடன் பின்னி வாழ ஒருவனைத் தெரிவதானால் முதலில் அவனது குணங்களை ஆராயட்டுமாம். பின்னை தம் அன்னை, தந்தை, சகோதரர், பெரியோரிடமும் ஆராயட்டுமாம். அத்துடன் அறிவு அறிந்து - அறிவு மயங்காது அளவளாவட்டுமாம். பெரியோர் வரிசையில் நின்று நாடி நட்புப் பூண்க - நட்புப் பூண்டபின் நாடற்க. இவற்றை - இந்த அறிவுரைகளை எவராலும் மறுக்க முடியாது என்றும் வற்புறுத்துகின்றார்.

இவ்வரிய அறிவுரைகளை எல்லாம் கற்பதன் பயன் மெய்யறிவறிந்து பேரானந்தப் பெருவாழ்வை எய்தவே.
“கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்”
எனத் தேவரும் அருளிச் செய்தனர்.

முத்தமிழின் முடிபெல்லாம் மக்களை மாக்கள் நிலையின் நின்று உயர்த்தி, ஒழுகலாறுகளைப் பண்படுத்தி உடல் வளர்த்து உயிர் பூரித்து, உவகை இன்பம் பெறவாழ்ந்து, பிறவா நெறியை நல்கும் வீட்டின்பம் பெறச் செய்வதேயாம்.

“தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாக” மனிதன் எத்தனையோ கோடி யோனி பேதங்களில் பிறந்து இறந்து இருவினை புரிந்து மனிதப் பிறவி பெற்றே பக்குவமடைகின்றான்,” என்கிறார் மணிவாசகர்.

இயற்றமிழை உடலென எடுத்துக் கொண்டால் அதனைப் பல வழிகளிலும் இசைவிப்பது எது? அது, உயிர். அந்த உயிர் போன்று இயற்றமிழ் மூலம் மக்கள் அறிந்து கொண்ட ஒழுகலாறுகளை அனுபவங்களை உயிராய் நின்று இசையைச் செய்வது இசைத் தமிழ் என்க. ஆன்மாவின் குரலே இசை என்பர் சான்றோர். தெய்வத்தை அடைய இசைத்தமிழ் தோன்றியது என்றுங்கூடச் சொல்லலாம்.

கண்ணனின் குழலோசை கைலாசபதியை உருக்கியமையால் உலகினைக் காக்கும் பதத்தினை பெற்றனன் என்பர். அந்த முரளீகானம் கோபியர்களையும் இன்பமயக்கத்தில் சொக்க வைத்ததுடன் அமையாது எல்லா உயிர்களையும் வேறுபாடற்று மெய்மறக்க வைத்தது. புலியும் பசுவும் ஒருங்கு நின்று இசை கேட்டனவாம். மயில்கள் மீது மாநாகங்கள் மயங்கி வீழ்ந்து மெய்மறந்தனவாம். இசைத்தமிழில் இசையாத உள்ளங்களே இல்லை எனலாம்.

இராவணன் இசைத்தமிழின் தலைவன் எனக் கருதப்படுகின்றான். 
“ஏழிசையாழ் இராவணனே”
எனத் திருஞான சம்பந்தரால் வாழ்த்தப்பட்ட பேரருளாளன். பெரிய சிவபக்தன். ஆணவமலையின் கீழ் அகப்பட்டு வீணாகானத் தமிழ் செய்து பெருவரம் பெற்றவன்.

பொன்னான பொதியமலை முனிவர் இசைத்தமிழ் மூலம் பெறற்கரிய பெரும் பேறு பெற்றவர். கோடானுகோடி பக்தர்கள், அருளாளர்கள் தமது இன்பப்பொழுது போக்குக்காக இறைவனைத் தம்முள் இசைவிக்கும் கருவியாக இசைத்தமிழையே பெரிதும் போற்றினர். உடலுழைப்பாளருங்கூட தனது வருத்தம் நீங்க இசைத்தமிழையே துணைக்கொண்டனர். இன்று ஒவ்வொரு மக்களும் இசைத்தமிழை மாந்தி இன்புறுகின்றனர்.

இசையுடன் கூடிய இயல் ஆன்மாவில் பதியுந் தன்மையை அடைகின்றது. பண்டைத் தமிழ் மன்னர்கள் இசையில் வல்ல ஒரு பிரிவினரையே வாழ்வித்தனர். பெரும்பாணர், சிறுபாணர் என்போர் அத்தகையினர் என்க. அவர்களில் விறலியர் விறல் தோன்ற - இசையின் இயலின் கருத்தை உடலால் வெளிப்படுத்தி நடமாடினர்.

பெருநாரை, பெருங்குருகு, முதுனாரை, முதுகுருகு போன்ற இசை நூல்களும் முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், நூல் முதலிய நாடக நூல்களும் பண்டைத் தமிழர் இசைக்கும் நாடகத்திற்கும் கொடுத்த மதிப்பை எமக்கு அறிவிப்பன ஆயின. சமயகுரவர் நால்வரும் பிற்காலத் தமிழ் இசைக்குப் புத்துயிர் ஈந்த புனிதர்களாவர். 
“தமிழோடிசைபாடல் மறந்தறியேன்” 
என்றல்லவா திருநாவுக்கரசர் அருளியுள்ளார்.

இயல், இசை இவ்வளவிற்றாக நாடகத்தமிழ் இயலையும் இசையையும் கொண்டு மேலும் ஒருபடி உயர்ந்து உயிர் போன்ற இசைக்கும், உடல் போன்ற இயலுக்கும் முழுத்தெளிவும் கொடுத்து இறை போன்று நடம்புரிவதாகின்றது. அந்தத் தமிழ் இல்லையேல் உலக வாழ்வு பூரணம் அடையாது. நாடகன் கடந்த கால நிகழ்ச்சிகளைச் ஒன்பான் சுவைகள் மூலம் மக்கள் முன் நடித்துக் காட்டி எல்லா மக்களுக்கும் பூரண அறிவு பெறவைக்கின்றான்.

இயல் இசையால் இழுந்த ஒழுகலாறுகளை மக்களுக்கு மிக மிக நுணுக்கமாய் உணர்ச்சி வேறுபாடுகளுடன் உணர்த்த எழுந்ததே நாடகத் தமிழ். அதனை

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் “
எனப் பண்டைதமிழ் இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரும் சொல்லிப் போந்தார்.

இறவனுக்குமே ‘நடனராசர்’ - ‘மாணிக்கக்கூத்தர்’ - ‘ஆனந்தக்கூத்தர்’ எனப்பல அன்புப் பெயரிட்டுப் போற்றினர். 
“முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்” 
என மலைகிழவோனை அருணகிரி பணிகின்றார். ஔவைத் தமிழம்மையார் நான்கு அமுது ஈந்து முத்தமிழையும் விநாயகப் பெருமானிடம் இரந்து வைத்திருக்கிறார்.

உலக இன்பம் முற்றி பேரின்பம் பெற வழிவகுப்பன நம் முன்னோர் போற்றிய முத்தமிழுமே. எனவே இவை இன்பமெனில் யாம் சொல்ல வல்லது இது ஒன்றே அது முத்தமிழ் இன்பமாம்.

No comments:

Post a Comment