Tuesday, 24 February 2015

இசைத்தமிழின் இராகம் - 2


தமிழ்நாட்டை ஆண்ட தெலுங்கு மன்னர்களாகிய விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் [கி பி 1529] பின் நடந்த இசை வளர்ச்சியைப் பற்றியே பெரும்பாலானோர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அப்படி எழுதுவோர் கர்நாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் முதன்மைப்படுத்தி எழுதிவருகின்றனர். இந்த இருட்டடிப்பு எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை? இசை என்பது மனிதப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. இசைப் பண்பாட்டில் மூழ்கிய மனித இனங்களில் தன் மொழியின் கூறாக - பகுதியாக - முத்தமிழில் ஒன்றாக இசையைப் போற்றி வருகின்றது தமிழினம். அப்படியிருக்க மிக நீண்ட வரலாற்றை உடைய தமிழிசையின் வரலாற்றை மூழ்கடிப்பது சரியா?

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னரே ஏழிசை நூற்சங்கம் நடத்தியவர்கள் தமிழர்கள். அவர்களிடம் பெருங்குருகு, பெருநாரை, நூல், வரி, சிற்றிசை, பேரிசை, தாளவகை யோத்து போன்ற பல இசை இலக்கண நூல்கள் இருந்ததை பண்டைத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் எடுத்துச் சொல்கின்றன. அதனால் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல் தமிழ் இசைக்கும் இலக்கணம் எழுதி அதன்படி இசைக்கருவிகளை இசைத்தும் பாடியும் வந்தவர்கள் தமிழர் என்பதற்கு எத்தனையோ நூல்களும் இசைக்கருவிகளும் பாடல்களும் சான்றாக இன்றும் இருக்கின்றன. 

அத்துடன் தமிழிசையானது பெருநரங்களிலும் சிற்றூர்களிலும் பரவிக் கிடந்ததைக் காணமுடிகின்றது. அரசன் முதல் ஆண்டிவரை ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி இசையை அறிந்திருந்தனர். அக்கால கட்டத்தில் இந்த நிலைப்பாடு உலகின் எந்த மொழி இசைக்கும் இருக்கவில்லை எனலாம்.  இசை அறிந்த புலவர்களை, பாணர்களை, பாடினிகளை தமிழ் அரசர்கள் போற்றிப் பாதுகாத்ததோடு பொருட்களை வாரிக் கொடுத்தனர் என்பதையும் பண்டைத் தமிழ் இலக்கிய வரலாறு சொல்கிறது.

ஆனால் சிலர் இந்துஸ்தானி இசைக்கும், கர்நாடக இசைக்கும் பரத முனிவர் எழுதிய பரதசாஸ்திரம் இலக்கண நூலாகும் என்கின்றனர். உண்மையில் பரதசாஸ்திரம் ஒரு நாட்டிய இலக்கண நூலாகும். நாட்டிய சாஸ்த்திரம் என்பதே அதன் பெயர். பரதமுனிவர் இயற்றியதால் பரத சாஸ்த்திரம் என்றும் கூறுவர். நாட்டியத்துக்கு தேவையான நாட்டியக் கரணங்களையும், பாவங்களையும், அலங்காரம், உடை போன்றவற்றையும், இசை நுணுக்கங்களையும், இசைக்கருவிகளையும் அரங்க அமைப்பையும் நாட்டிய சாஸ்த்திரம் கூறுகிறது. எனவே இந்துஸ்தானி இசையும் கர்நாடக இசையும் எப்போ பிறந்தன என்பதைச் சிறிது பார்ப்போமா?

மத்திய ஆசியாவிலிருந்து வந்து முகலாய பரம்பரையை இந்தியாவில் உருவாக்கியவர் சாகிருதீன் பாபர் ஆவார். இந்த பாபரின் மகன் ஹுமாயூன் [கி பி 1530] ஆப்கானிஸ்தான், அன்றையவட இந்தியா [இன்றைய பாக்கிஸ்தான் உட்பட] ஆகியவற்றை ஆண்ட பேரரசனாவான். இவனது காலத்தில் ஆப்கானிய இசையும் வட இந்தியக் கோயில்களில் பாடப்பட்ட துருபத் இசையும் சேர்ந்து உருவாகிய இசையே இன்றைய இந்துஸ்தானிய இசையாகும். அதாவது கி பி 1530 க்கு பின்னர் முகலாய மன்னர்களின் சபையில் பாடப்பட்ட இசையில் இருந்து பிறந்ததே இந்துஸ்தானிய இசை.

வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை கருநாடகர்கள் என அழைத்தார்கள். அதாவது இப்போது பிரிந்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்றிருக்கும் யாவற்றையும் கருநாடகம் என்றே அழைத்தனர். அதுவே வரலாறுகாட்டும் உண்மையாகும். கர்நாடக இசையின் பிதாவாக [தந்தையாக] போற்றப்படுபவர் புரந்தர தாசர் ஆவார். அவர் பிறந்ததே கி பி 1484ம் ஆண்டில் தான். அத்துடன் இன்றைய கர்நாடக இசைக்கு மூலமாகக் கருதப்படும் நூல் சங்கீதரத்னாகரமாகும். அதை எழுதிய சாரங்க தேவர் கி பி 13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சையில் வந்து தங்கியிருந்து தேவரப் பண்களை ஆய்வு செய்து எழுதிய நூல் சங்கீதரத்னாகரம். அதில் இராகங்களை அதன் பிரிவுகளைக் கூறும் அவர் இராகங்கள் எப்படிப் பிறக்கும் என்னும் கணிதக் கூறுபாடுகளைக் கூறவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கர்நாடக சங்கீதம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கவுமில்லை. அதனாலேயே கி பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த புரந்தரதாசரை கர்நாடக இசையின் தந்தை என்கின்றனர்.

இந்துஸ்தானி சங்கீதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும்  முதன்மைப்படுத்திக் கூறுவோர் சொல்வதில்  ஒன்று ‘ராகம்’ என்ற சொல் தமிழில் இல்லை என்பதாகும். பண்டைத்தமிழர் தாம் பயன்படுத்திய 103 பண்களில் நிருபதுங்கராகம், நாகராகம், கின்னராகம், சீராகம், தக்கராகம், சோமராகம், மேகராகம், துக்கராகம், மேகராகக்குறிஞ்சி, சூர்தூங்கராகம், பழந்தக்கராகம், நட்டராகம், மாதுங்கராகம் ஆகிய பண்களின் பெயர்களை ராகம் என்ற சொல்லைச் சேர்த்தே அழைத்திருப்பதைக் காணமுடிகின்றது. தமிழ் இசையின் பண்களைப்பற்றி கி பி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் மிகவிரிவாகச் சொல்கிறது.

சிவனை நாம் சங்கராபரணன் என்றும் காம்போதியன் என்றும் கூறுகிறோம் அல்லவா? அது போல 'அந்தளி ராகம்' போலும் வடிவானவர் சிவன் என திருநாவுக்கரசு நாயனார் தனது தேவாரத்தில் சொல்கிறார்.
“எந்தளிர் நீர்மை கோலமேனி என்று இமையோர் ஏத்தப்
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தினாலுந் தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளி ராகம் போலும் வடிவர் ஆரூரனாரே” 

அந்தளி என்பது என்ன? பண்ணா? இராகமா? பண்டைத்தமிழரின் 103 பண்களில் ஒன்றாக ‘அந்தாளி’ கூறப்பட்டுள்ளது. அதனையே நாவுக்கரசர் அந்தளி ராகம் என்கின்றார். திருநாவுக்கரசர் கி பி 660ல் வாழ்ந்தவர்.

தொல்காப்பியருக்கு முன்வாழ்ந்தவர் அகத்தியர் என்பது இலக்கிய ஆய்வாளர்கள் கண்டமுடிவு. அவர் கி மு 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பர். அகத்தியர் காலத்தில் தமிழிசை மட்டுமல்ல ராகம் என்ற சொல்லும் இருந்ததை
தக்கராக நோதிறம் காந்தாரம் பஞ்சமமே
துக்கம் கழிசோம ராகமே - மிக்கதிறற்
காந்தாரம் என்றைந்தும் பாலைத் திறமென்றார்
பூந்தார் அகத்தியனார் போந்து”
என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் எடுத்துக்காட்டும் இப்பாடல் காட்டுகிறது.

மேலே உள்ள பாடலில், பாலை பண்ணின் திறங்கள் ஐந்தின் பெயர்களையும் அகத்தியர்  தக்கராக நோதிறம், காந்தாரப் பஞ்சமம், துக்கம், கழிசோமராகம், காந்தாரம் என்று கூறினார் என்கிறது. இதில் கூறப்படும் பண்களாகிய தக்கராகம், கழிசோமராகம் இரண்டும் ‘ராகம்’ என்ற சொல்லைக் கொண்டே முடிகின்றன. அகத்தியர் காலத்திலேயே இராகம் என்ற சொல் இருந்ததை இப்பாடல் எடுத்துச் சொல்கிறது. அதுமட்டுமல்ல இப்பாடல் சொல்லும் துக்கம், துக்கராகம் என்றும் காந்தாரம், காந்தாரராகம் எனவும் அழைப்பட்டது. 

அப்படியிருக்க கி பி 16ம் நூற்றாண்டில் பிறந்த இந்துஸ்தானிய சங்கீதமும் கி பி 13ம் நூற்றாண்டில் தவழ்ந்து 15ம் நூற்றாண்டில் வளரத்தொடங்கிய கர்நாடக சங்கீதமும் ‘ராகம்’ என்ற சொல்லைத் தமிழுக்குத் தந்தனவா!? கொஞ்சம் சிந்தனை செய்தால் என்ன? 
இனிதே,
தமிழரசி.

3 comments:

  1. Thank you for the information about "Ragam" Thamilarsi.Very interesting.

    ReplyDelete