குறள்:
“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”
- 1032
பொருள்:
உழவர் உழவுத் தொழிலைச் செய்யமுடியாதோரைத் தாங்குவதால் உலகில் வாழ்வோர் யாவருக்கும் அச்சாணி போன்றவராவர்.
விளக்கம்:
இத்திருக்குறள் உழவு என்னும் அதிகாரத்தில் வருகின்றது. நிலத்தை உழுது பயிர் செய்வோரே உழுவார். உழவுத்தொழிலைச் செய்வதற்கு உடலில் ஆற்றல் இருக்க வேண்டும். உடலாற்றல் இல்லாதவர்களால் உழவுத்தொழிலை செய்ய முடியாது. அத்தகையோர் உழவுத்தொழிலை செய்ய முடியாது எழுந்து செல்வாராதலால் எழுவார் என்று இக்குறளில் திருவள்ளுவர் கூறுகிறார். உழவுத் தொழிலைச் செய்யாது உலகில் வாழும் மனிதரை உழவர்களே தாங்குகிறார்கள். ஏனெனில் மனிதவாழ்வுக்கு மிகவும் தேவையான உணவு, உடை இரண்டும் உழவுத்தொழிலாலேயே கிடைக்கிறது. ஒரு வண்டிச்சில்லின் அச்சாணி எப்படி வண்டிலைத் தாங்குகின்றதோ அப்படி உலகோருக்கு வேண்டிய உணவு, உடை இரண்டையும் கொடுத்து உழவர்கள் தாங்குகிறார்கள்.
பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு அவ்வண்டியின் அச்சு உறுதியாக இருக்க வேண்டும். வண்டியின் கட்டமைப்பையும், ஏற்றும் பொருட்களையும், வண்டி ஓட்டுபவரையும் தாங்குவது அச்சு. அச்சில் பூட்டியிருக்கும் வண்டிச் சில்லுகள் கழன்று போகாது காப்பது அச்சாணியாகும். அந்த அச்சாணியை திருவள்ளுவர் இக்குறளில் ஆணி என்கிறார். அதனைக் கடையாணி என்றும் சொல்வர். வண்டி ஓடும் வேகத்துக்கு அமைய நிலத்தோடு ஏற்படும் அதிர்வலைகளையும் சில்லின் சுழற்சியின் போது ஏற்படும் உராய்வுகளையும் அச்சாணி தாங்குகிறது.
பார்ப்பதற்குத் தேவையற்ற பொருள் போல் அச்சாணி தோன்றினாலும் அது இல்லை எனின் வண்டிச் சில் கழன்று விழ வண்டி பொருட்களோடு சாய்ந்து கிடக்கும். வண்டியையும் வண்டியின் ஓட்டத்தையும் தாங்கி, வண்டி இயங்க உதவும் அச்சாணி போல் உலகில் வாழ்வோரின் இயக்கத்துக்கு அச்சாணியாக இருப்போர் உழவரே.
உலகில் வாழும் மனிதரின் இயக்கத்திற்கு சக்தி வேண்டும். அந்த சக்தியைத் தருவது உணவே. மனிதரின் உணவுக்கு வேண்டிய தானியங்களை பயிரிட்டு; ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து பால், தயிர், நெய், முட்டை போன்ற உணவுகளையும் சேர்த்து தருபவர்கள் உழவர்களே. உழவுத்தொழிலைச் செய்து உழவர்கள் உணவைத் தராவிட்டால் உலகில் வாழும் மற்றைய மனிதரின் நிலை என்னாகும்? நாட்டைவிட்டு நகரைவிட்டு காட்டுக்குச் சென்று காயும் கனியும் மானும் மரையும் தேடவேண்டி இருக்கும்.
உலகின் காலநிலை மாற்றங்களில் இருந்து மனித உடைலைக் காப்பது உடைகளே. உடைகளுக்கு வேண்டிய பருத்தி, பட்டு, செம்மறி ஆட்டின் மயிர் போன்ற பலவற்றை உழவர்களே தந்து உதவுகிறார்கள். அவர்கள் இல்லையேல் மனிதன் ஆடையின்றி பனியிலும், குளிரிலும் வெப்பத்திலும் தவித்து விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்திருப்பான்.
எனவே உலகில் வாழ்வேருக்கு உணவை, உடையைக் கொடுத்து தாங்கிக்காப்பதால் உழவர்கள் அச்சாணி போன்றவர்கள் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment