Saturday, 5 October 2024

ஆதிசக்தி தாயே ஆரணப் பொருளே


ஆதிசக்தி தாயே ஆரணப் பொருளே
            ஆரணங்கே ஆன்மநடம் ஆடிட வாராய்
சோதிசக்தி நீயே சாக்தத்தின் மருளே
            சொக்கனும் சொக்கநடம் ஆடிட வாராய்
வேதிசக்தி மாயே வேதாந்தம் அருளே
            வீரையாய் வெற்றிநடம் ஆடிட வாராய்
நீதிசக்தி ஆயே நேர்மையின் நருளே
            நெஞ்சினில் நின்றுநடம் ஆடிட வாராய்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஆரணம் - வேதம்
ஆரணங்கு - தெய்வப் பெண்
ஆன்மநடம் - ஆன்மீக நடனம்
சோதிசக்தி - ஒளிச்சக்தி
சாக்தம்  - சக்தியை வழிபடும் சமயம்
மருள் - வியப்பு
சொக்கன் - சிவன்
சொக்க - மயங்க
வேதிசக்தி - இராயன சக்தி
மாயே - மாயைகளைச் செய்பவள்
வேதாந்தம் - உலகை - இயற்கையை கடவுளாக காணும் அறிவு
வீரை - வீரம் உள்ள பெண் 
ஆயே - ஆராய்ந்து அறிபவள்
நேர்மை - நேர்வழியில் செயற்படும் தன்மை/ பக்கச்சார்பு அற்றதன்மை.
நருள் - ஒலி

Thursday, 3 October 2024

ஓங்கார சக்தி


ஓங்கார சக்தி அவள் தாள் தொழுதே
            ஓம் சக்திசக்தி யென்றே கூவி அழைத்தோம்
பாங்கார பக்தர் எலாம் பரவி நின்றே
            பழந்தமிழ் பண்ணிசைத்து கூடி அழைத்தோம் 
ஆங்கார நாயகியாய் ஆடி வரும் சக்தியென்றே
            ஆனந்தப் பாட்டிசைத்து கூவி அழைத்தோம்
தீங்காரச் செய்வாரை திருத்திடும் சக்தியென்றே
            தேந்தமிழ் பாட்டிசைத்து கூடி அழைப்போம்
இனிதே,
தமிழரசி

சொல்விளக்கம்:
பாங்கார - நல்ல நிறைந்த
பக்தர் - அடியவர்
பரவி - வழிபாடு
ஆங்கார நாயகி - காளி
தீங்காரச் - தீமைகளை மிகுதியாகச்
தேந்தமிழ் - தேன் போல இனிக்கும் தமிழ்

Tuesday, 1 October 2024

முதுமை என்பது ஒரு கவிதை

 


முதுமை என்பது ஒரு கவிதை

            முந்தைப் பிறவிதனின் சுவையாகும்

பதுமை என்றே நின்ற உடலம்

            பாங்காய்க் கொஞ்சம் தளரும்

அதுமெய் என்பதை மெல்லச் சுருக்கி

            அறிவை நன்றாய் வளர்க்கும்

பொதுமை என்பது அதன் பெருமை

            பொழுதும் இனிமைதனைச் சேர்க்கும்

இனிதே,

தமிழரசி.

Sunday, 1 September 2024

கந்தா நின்றன் கந்தம் கமழுமணம்


கந்தா நின்றன் கந்தம் கமழுமணம்
            காற்றில் கலந்து கடுகி வந்தே
அந்தா என்றன் அகந்தனில் புதுமணம்
            ஆற்ற கண்ணானந்த அருவிநீர் சொரிய
செந்தா மரைமலர் செய்ய பதம்
            சேவித்து எழுந்து சீர்மேவு நல்லைக்
கந்தா என்பாரைக் கணத்தில் கைதூக்கிக் 
            காக்கும் நின்கைக் கனக வேலே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கந்தம் - சந்தனம்
கமழும் - வீசும்
கடுகி - விரைவாக
அந்தா - வியப்பாக/அற்புதமாக
அகந்தனில் - மனதில்/எண்ணத்தில்
ஆற்ற - பரப்ப/நிரப்ப
செய்யபதம் - சிவந்த அடி
சேவித்து - வணங்கி
சீர்மேவு - செல்வம் நிறை
கணத்தில் - கணப்பொழுதில்

Friday, 9 August 2024

ஒண்தமிழை ஓதி வாராய்

கண்ணழகு கண்டே களி கொண்டே
            களி வண்டாய் வலம் வந்தேன்
விண்ணழகு மிளிரும் முகம் பார்த்தே
            விரை கழல் தொழுது நின்றேன்
பெண்ணழகு பேசி பொழுது கழித்தே
            பண் ணழகு பாடல் சமைத்தேன்
ஒண்ணழகு இடை ஒடிய நடந்தே
            ஒண் தமிழை ஓதி வாராய்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
களி கொண்டே - மகிழ்ந்தே
களி வண்டாய் - தேனருந்திய வண்டாய்
மிளிரும் - துலங்கும்/ஒளிவீசும்
விரை கழல் - நறுமணம் கமலும் திருவடி
சமைத்தேன் - புனைந்தேன்/செய்தேன்
ஒண்ணழகு - இயற்கையழகு
இடைஒடிய - இடையே அறுதல்/வளைதல்
ஒண்தமிழை - இயற்தமிழை
ஓதி - சொல்லுதல்

Monday, 1 July 2024

உன்றன் அறிவு எனதாகுமா

மனமே உன்றன் மலர்க் கோயில்

            மனத்தே வைத்து மகிழ்ந் திருந்தே

சினமே கொள்ளா சிந்தைய ளாகி

            சித்தத்தே நின்னை சிறை வைத்தே

கனமே பண்ணி கை தொழுதே

            கழல் கண்டு கரைந்தே மா

உனமே யாய் உன்னை அறிவனோ

            உன்றன் அறிவு எனதாகுமா

இனிதே,

தமிழரசி.

சொல் விளக்கம்:

சினம் - கடுங்கோபம்

சிந்தை - எண்ணம்

சித்தம் - உள்ளம்

கனம்பண்ணுதல் - மதித்தல்

கழல் - திருவடி

கரைந்தே - உள்ளம் நெகிழ்ந்தே

உனம் - ஆழ்ந்து சிந்தித்தல்

மாஉனமேயாய் - மௌனமேயாய் [நீளநினைத்தலால் மௌனமாதல்]

உன்றன் அறிவு - பேரறிவு


Wednesday, 26 June 2024

உள்ளம் மாண்டதுவே

 

அவமே நாளைக் கழித்துகந்து
           ஆங்காரத்துள் ஒளித்திருந்தே
பவமே புணரும் காரணத்தால்
           பாவப்புணையுள் வீழ்ந்திருந்தேன்
தவமே அறியாத் தடுமாறி
           தானெனஎண்ணி மகிழ்ந்திருந்தே
சிவமே உணராச் சிந்தையதாய்
          சோர்ந்தெனதுள்ளம் மாண்டதுவே!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
அவம் - வீணாக
கழித்து - போக்கி
உகந்து - மகிழ்ந்து
ஆங்காரத்துள் - செருக்கினுள்
ஒளித்திருந்தே - மறைந்திருந்தே
பவம் - பிறப்பு
புணர்தல் - பொருந்துதல்
பவமே புணரும் - பிறப்புகளுடன் சேரும்
பாவப்புணை - பாவமாகிய தெப்பத்துள்
மாண்டதுவே - இருண்டது/அழிந்தது