Thursday, 5 May 2022

மறையது பகர்வாய் மறையோளே!

ஒருவளென நினைந்து உருகு மடியவர்

  உளம் உறை உமையோளே

திருவென வந்து திகழ்விழி மலர

  திருவருள் பொழியும் அழகோளே

பெருவரை வெற்பின் அரையன் றன்மகளாய்

  பிறந்தருள் புரிந்த இறையோளே

முருகென நின்று முறுவலது மிளிர

  மறையது பகர்வாய் மறையோளே

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சொல்விளக்கம்

ஒருவள் - ஒருத்தி

உமையோள் - உமையவள்

திருவென - இலட்சுமி

திகழ்விழி - ஒளிபொருந்திய கண்

மலர - விரிய

அழகோளே - அழகையுடையவள்

பெருவரை - மாமேரு

வெற்பு - மலை

அரையன் - அரசன்

இறையோள் - இறைவி

முருகென - அழகாக

முறுவல் - சிரிப்பு

மிளிர - பற்கள் ஒளிர

பகர்வாய் - சொல்வாய்/உணர்த்துவாய்

மறை - வேதம் [அறம், பொருள், இன்பம், வீடு]

மறையோள் - வேதங்களை அறிந்தவள்.

Sunday, 1 May 2022

தொழிலாளி எனும் ஒரு சொல் மட்டுமா உண்டு?


ஒரே ஒரு கணம் என் கண்கள் விரிய மேலே படத்தில் இருப்பதைப் படித்தேன்.    என்னால் நம்பமுடியவில்லை. தமிழில் உள்ள லகர, ழகர, ளகர என்ற மூன்று எழுத்துக்களையும் உடைய ஒரே சொல்தொழிலாளிஎன்ற கூற்றுச் சரியா? இன்னும் அந்த அளவுக்கு தமிழ்மொழி தன் சொல்வளத்தில் வறண்டு போய்விடவில்லை.

இன்று தொழிலாளர் தினம். ஆதலால் தொழிலாளரை முதன்மைப்படுத்த அப்படி எழுதினாரா! விளங்கவில்லை. ஏனெனில் தொழிலாளர் தினத்தில் எழுதிய தொழிலாளி என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். தொழில் என்ற சொல்லின் அடியில் இருந்தே

1. தொழில்கள்

2. தொழிலாளி

3. தொழிலாளன்

4. தொழிலாளர்

5. தொழிலாளர்கள்

எனச் சொற்கள் பிறப்பது தெரியவில்லையா? இந்தச் சொற்களிலேயே , , என்ற மூன்று எழுத்துக்களும் வருகின்றனவே. அப்படியிருக்க எப்படி ஒரே சொல் தொழிலாளி என எழுதமுடியும்? 

குழல் ஊதும் கண்ணனின் பெயர்களில் ஒன்று குழலாளன். பெரியாழ்வார் பெரிய திருமொழியில் கண்ணனை

பனியிருங் குழலாளன் என்கிறார். அவரே இன்னொரு பாசுரத்தில்

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப 

- (பெரிய திருமொழி: 1462)

எனப் பெண்கள் பல்லாண்டு பாடியதையும் பதிவுசெய்துள்ளார். குழலார்கள் போல கள் விகுதியில் முடியும் குழல்கள், கழல்கள், மழலைகள், பலாப்பழங்கள் எத்தனை எத்தனை சொற்கள் தமிழில் இருக்கின்றன. இவை மட்டுமா!

1. நிழலளி - காடுகளின் குளிர்ச்சியான நிழல்

2. அளிநிழல் - குளிர் நிழல்

3. சுழலளறு - சேற்றுச் சுழி

4. களத்தழல் - களத்தின் வெப்பம்

5. மழலைமேளம் - ஒரு இசைக்கருவி

6. குதலைமொழியாள் - பெயர்

7. மலர்விழியாள் - பெயர்

8. எழில்வேள் - பெயர்

9. மொழியியலாளர்

10. வளையெழில் - தோள்வளையின் அழகு 

இப்படித் தொடர்ந்து எழுதலாம்.


கவிஞர் கண்ணதாசனும்

வண்ணமார்பும் வளையெழில் தோள்களும்

  வார்த்து வைத்த சிலையெனுந் தோற்றமும்

என வளையெழிலைப் பாடி மகிழ்ந்தார். ஆதலால் நாம் அறியாத எத்தனையோ சொற்கள் தமிழில் புதையுண்டு கிடக்கின்றன. அதனை மனதிற் கொண்டு தேடிப்பார்த்து எழுதுவது தமிழுக்கும் எமக்கும் தமிழைப் படிப்போருக்கும் கைகொடுக்கும்.

இனிதே,

தமிழரசி. 

Monday, 11 April 2022

பைந்தமிழ்த்தேனை பொழிவாய்!


அன்றே உனக்காட்பட்டே அவனிமிசைப் பிறந்தேனை

  அன்பெனும் கருணைப்பெருக்கால் அணைத்திடும் அன்னையே

நன்றே செய்வாய்யென்றே நம்பியே இருந்தேனை

  நையப்புடைத்து நலித்தெடுத்து நயப்பதும் நன்மையே

இன்றே உணர்தேனுன்றன் இன்னருட் பெருந்தேனை

  இயற்கையே காட்டிடக்கண்டே மகிழும் என்னையே

பொன்றே போகுமுன்னே வந்து பைந்தமிழ்த்தேனை

  பொழிவாய் என்சிந்தை உள்ளே நிறைத்தே!
இனிதே, 
தமிழரசி. 

Wednesday, 6 April 2022

தயிர் தித்தித்ததே!

 'தித்தித்த' என ஆடும் பதினெண்கரமுடைய நடராசர்

பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் என்னும் புலவர் வாழ்ந்தார். தமிழ் மேல் பற்றுக் கொண்டவர். தன்னைவிட தமிழ் தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்ற செருக்கும் அவரிடம் இருந்தது. வரபதி ஆட்கொண்டான் என்னும் அரசனின் அரச அவைப்புலவராக இருந்தார். அதனால் மற்றத்தமிழ்ப் புலவர்களை கவிதைப் போட்டிக்கு அழைப்பார். எவரின் கவிதையில் பிழை இருக்கிறதோ அவர்களின் காதை வெட்டி எடுத்துவிடுவார். அதற்காக காதுபோல் வளைந்த சிறிய கத்தியுள்ள துறட்டி ஒன்றை வைத்திருந்ருந்தார். அது பிழைவிடும் புலவோர் காதை ஒட்ட நறுக்க உதவியது. புலவர்களை வம்புக்கு இழுப்பதே அவரின் வேலையாக இருந்தது.

அருணகிரிநாதரின் புகழ் அவரின் காதுக்கு எட்டியது. உடனே அருணகிரிநாதரைத் தேடி திருவண்ணாமலை சென்று அவரை போட்டிக்கு அழைத்தார். அருணகிரிநாதர் தானும் அவரைப் போல் துறட்டி வைத்திருக்க வேண்டும் என்றார். வில்லிபுத்தூரார் பாடலில் பிழைவிட்டால் காதை ஒட்ட வெட்டவேண்டாமா? அதற்கே அத்துறட்டி அருணகிரிநாதருக்கு தேவைப்பட்டது. வில்லிபுத்தூராரும் உடன்பட்டார். போட்டி தொடங்கியது.

பிரபுடதேவ மகாராசன் அவையில் போட்டி நடந்தது. அருணகிரிநாதர் பாடும் பாடல்களுக்கு வில்லிபுத்தூரார் பொருள் கூறவேண்டும். சரியான பொருள் கூறாவிட்டால் வில்லிபுத்தூரார் காது அருணகிரிநாதரின் சொத்தாகிவிடும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியைப் பாடப்பாட வில்லிபுத்தூரார் பொருள் கூறிவந்தார். ஐம்பத்து நான்கு பாடல்களுக்கு சளைக்காமல் பொருள்கூறி வந்த வில்லிபுத்தூரார் தகர வரிசையில் அருணகிரிநாதர் பாட அப்பாடலுக்கு பொருள் கூறமுடியாது தடுமாறினார்

அருணகிரிநாதரின் முதலாவது திருப்புகழான 

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர

பாடவே தடுமாறிய எம்மால் தகர வரிசைப்பாடலைப் படிக்கமுடியுமா? ஒருக்கால் வாசியுங்கள்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததீ தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

பாடல் புரிந்ததா? வில்லிபுத்தூராரருக்கும் புரியவில்லை. அந்த அவையில் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அந்தாதியையும் வில்லிபுத்தூராரின் பொருளையும் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த பத்து வயதுச் சிறுவன் பாடலின் பொருள் விளங்கப் பாடலைப் பிரித்துக் கூறி பொருளும் சொன்னான். அருணகிரிநாதரின் இப்பாடலுக்கு முருகனே சிறுவனாக வந்து பொருள் கூறியதாகச் சொல்வர்.

வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அருணகிரிநாதர் வில்லிபுத்தூராரின் காதை வெட்டவில்லை. “உலகிற்கு உங்கள் தமிழ் வேண்டும். உங்கள் காதுகள் என் சொத்து. அவை தமிழைக் கேட்டு இன்பமடையட்டும். தமிழைப் பாடி மகிழுங்கள் எனக்கூறிஅவரை வணங்கினார். அதன் பின்னர் வில்லிபுத்தூரார் இயற்றியதேவில்லி பாரதம்என்னும் நூல்.


அப்பாடலை பொருள் விளங்க பிரித்துப் படிப்போம்.

திதத்தத் தத்தித்த[த்] திதி தாதை தாத துத்தி[த்] தத்தி தா

தித[த்] தத்து அத்தித் ததி தித்தித்ததே து[த்] துதித்து இதத்து

தி தத்தத்து அத்தித் தத்தை தாத தீதே துதை தாது அதத்து

தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்தது

சொற்களைப் பிரித்துப் படித்தும் புரியவில்லையா? என்ன பாடினார் என்பதைப் பார்ப்போம்.

திதத்தத் தத்தித்த எனும் தாளத்துடன் நடனமாடி உலகைக் காக்கும்[திதி]  தந்தை[தாதை] ஆகிய சிவனும் பிரமனும்[தாத] படத்தில் புள்ளியுள்ள[துத்தி] பாம்பின்[தத்தி] மேற்பரப்பில்[தா] நிலையாக[தித] அலைபாயும்[தத்து] கடலில் பாயாகத்[அத்தி] துயில் கொள்ளும் தயிர்[ததி] தித்தித்தது  [தித்தித்ததே] என்று  உண்ட[து] கண்ணனனாகிய திருமாலும் வணங்கும்[துதித்து] பேரின்ப வடிவான[இதத்து] முதல்வா[ஆதி] தந்தமுள்ள[தத்தத்து] ஐராவதம்[அத்தி] வளர்த்த கிளி[தத்தை] போன்ற தெய்வயானைக்கு அடிமையானவனே[தாத] தீதே நெருங்கிய[துதை] தாதுக்களால்[தாது] ஆன இறப்பு[அதத்து] பிறப்பு[உதி] எனும் தத்துக்களோடு[தத்தும்] சேர்ந்த[அத்து] எலும்புகளை[அத்தி] மூடிய உடல்[தித்தி] நெருப்பில்[தீ] எரியும்[தீ] அந்நேரம்[திதி] உன்னை வணங்கும்[துதி] எனது புத்தி[தீ] உன்னுடன் ஒன்றவேண்டும்[தொத்தது].

இனிதே,

தமிழரசி.