பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் என்னும் புலவர் வாழ்ந்தார். தமிழ் மேல் பற்றுக் கொண்டவர். தன்னைவிட தமிழ் தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்ற செருக்கும் அவரிடம் இருந்தது. வரபதி ஆட்கொண்டான் என்னும் அரசனின் அரச அவைப்புலவராக இருந்தார். அதனால் மற்றத்தமிழ்ப் புலவர்களை கவிதைப் போட்டிக்கு அழைப்பார். எவரின் கவிதையில் பிழை இருக்கிறதோ அவர்களின் காதை வெட்டி எடுத்துவிடுவார். அதற்காக காதுபோல் வளைந்த சிறிய கத்தியுள்ள துறட்டி ஒன்றை வைத்திருந்ருந்தார். அது பிழைவிடும் புலவோர் காதை ஒட்ட நறுக்க உதவியது. புலவர்களை வம்புக்கு இழுப்பதே அவரின் வேலையாக இருந்தது.
அருணகிரிநாதரின் புகழ் அவரின் காதுக்கு எட்டியது. உடனே அருணகிரிநாதரைத் தேடி திருவண்ணாமலை சென்று அவரை போட்டிக்கு அழைத்தார். அருணகிரிநாதர் தானும் அவரைப் போல் துறட்டி வைத்திருக்க வேண்டும் என்றார். வில்லிபுத்தூரார் பாடலில் பிழைவிட்டால் காதை ஒட்ட வெட்டவேண்டாமா? அதற்கே அத்துறட்டி அருணகிரிநாதருக்கு தேவைப்பட்டது. வில்லிபுத்தூராரும் உடன்பட்டார். போட்டி தொடங்கியது.
பிரபுடதேவ மகாராசன் அவையில் போட்டி நடந்தது. அருணகிரிநாதர் பாடும் பாடல்களுக்கு வில்லிபுத்தூரார் பொருள் கூறவேண்டும். சரியான பொருள் கூறாவிட்டால் வில்லிபுத்தூரார் காது அருணகிரிநாதரின் சொத்தாகிவிடும். அருணகிரிநாதர் கந்தர் அந்தாதியைப் பாடப்பாட வில்லிபுத்தூரார் பொருள் கூறிவந்தார். ஐம்பத்து நான்கு பாடல்களுக்கு சளைக்காமல் பொருள்கூறி வந்த வில்லிபுத்தூரார் தகர வரிசையில் அருணகிரிநாதர் பாட அப்பாடலுக்கு பொருள் கூறமுடியாது தடுமாறினார்.
அருணகிரிநாதரின் முதலாவது திருப்புகழான
“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர”
பாடவே தடுமாறிய எம்மால் தகர வரிசைப்பாடலைப் படிக்கமுடியுமா? ஒருக்கால் வாசியுங்கள்
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததீ தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”
பாடல் புரிந்ததா? வில்லிபுத்தூராரருக்கும் புரியவில்லை. அந்த அவையில் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அந்தாதியையும் வில்லிபுத்தூராரின் பொருளையும் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்த பத்து வயதுச் சிறுவன் பாடலின் பொருள் விளங்கப் பாடலைப் பிரித்துக் கூறி பொருளும் சொன்னான். அருணகிரிநாதரின் இப்பாடலுக்கு முருகனே சிறுவனாக வந்து பொருள் கூறியதாகச் சொல்வர்.
வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அருணகிரிநாதர் வில்லிபுத்தூராரின் காதை வெட்டவில்லை. “உலகிற்கு உங்கள் தமிழ் வேண்டும். உங்கள் காதுகள் என் சொத்து. அவை தமிழைக் கேட்டு இன்பமடையட்டும். தமிழைப் பாடி மகிழுங்கள் எனக்கூறி” அவரை வணங்கினார். அதன் பின்னர் வில்லிபுத்தூரார் இயற்றியதே ‘வில்லி பாரதம்’ என்னும் நூல்.
அப்பாடலை பொருள் விளங்க பிரித்துப் படிப்போம்.
திதத்தத் தத்தித்த[த்] திதி தாதை தாத துத்தி[த்] தத்தி தா
தித[த்] தத்து அத்தித் ததி தித்தித்ததே து[த்] துதித்து இதத்து ஆ
தி தத்தத்து அத்தித் தத்தை தாத தீதே துதை தாது அதத்து உ
தி தத்து அத்து அத்தி தித்தி தீ தீ திதி துதி தீ தொத்தது
சொற்களைப் பிரித்துப் படித்தும் புரியவில்லையா? என்ன பாடினார் என்பதைப் பார்ப்போம்.
திதத்தத் தத்தித்த எனும் தாளத்துடன் நடனமாடி உலகைக் காக்கும்[திதி] தந்தை[தாதை] ஆகிய சிவனும் பிரமனும்[தாத] படத்தில் புள்ளியுள்ள[துத்தி] பாம்பின்[தத்தி] மேற்பரப்பில்[தா] நிலையாக[தித] அலைபாயும்[தத்து] கடலில் பாயாகத்[அத்தி] துயில் கொள்ளும் தயிர்[ததி] தித்தித்தது [தித்தித்ததே] என்று உண்ட[து] கண்ணனனாகிய திருமாலும் வணங்கும்[துதித்து] பேரின்ப வடிவான[இதத்து] முதல்வா[ஆதி] தந்தமுள்ள[தத்தத்து] ஐராவதம்[அத்தி] வளர்த்த கிளி[தத்தை] போன்ற தெய்வயானைக்கு அடிமையானவனே[தாத] தீதே நெருங்கிய[துதை] தாதுக்களால்[தாது] ஆன இறப்பு[அதத்து] பிறப்பு[உதி] எனும் தத்துக்களோடு[தத்தும்] சேர்ந்த[அத்து] எலும்புகளை[அத்தி] மூடிய உடல்[தித்தி] நெருப்பில்[தீ] எரியும்[தீ] அந்நேரம்[திதி] உன்னை வணங்கும்[துதி] எனது புத்தி[தீ] உன்னுடன் ஒன்றவேண்டும்[தொத்தது].
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment