Saturday, 13 September 2014

புங்குடுதீவு கல்விப்பாரம்பரியத்தின் முதுபெரும் சொத்து

எழுதியவர் - பேராசிரியர் கா குகபாலன், யாழ் பல்கலைக்கழகம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக்கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டு பாய்க்கப்பலின் உருவத்தைப் போன்ற நிலத்தோற்றத்தினைக் கொண்டு உள்ள தீவாகும். இத்தீவு வாழ்மக்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தொடர்பினைப் பேணிவந்துள்ளதை பல்துறைசார் அறிஞர்களால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் இந்தியாவில் ஏற்பட்ட பௌதிக மற்றும்  அரசியல் மாற்றங்களால் தமிழக மக்களில் குறிப்பிடத் தக்கோர் புங்குடுதீவு உட்பட்ட தீவுப்பகுதிகளில் வந்து குடியேறிய சந்தர்ப்பங்கள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பியாங்கு தீபம் காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாக தெரிவிக்கின்றனர். தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்பின் விளைவாக, அவர்களது கொடுமையின் காரணமாக தப்பி தமது கன்னிப் பெண்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட பூங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது எனக்கொள்வாரும்  உளர். ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் கொங்கடிவா (Congardiva) ஒல்லாந்தர் மிடில்பேக் (Middleburg) எனவும் பெயரிட்டு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவுக் கிராமத்தில் 1901ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் 5201 மக்கள் வாழ்ந்தனர் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு 14622 மக்களாக அதிகரித்த போதிலும் 1980களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக புங்குடுதீவிலிருந்து 1991ம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் மக்கள் வெளியேற்றத்தினால் 2012ம் ஆண்டு 4750 மக்களே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுக் காலத்திருந்து இத்தீவில் வாழ்ந்து வந்த மக்கள், வாழ்வியலில் விவசாயத்தை  முதன்மைப்படுத்தி தமது பொருளாதாரத் தேட்டத்தினை பெற்றுக்கொண்ட சமூக அமைப்பில் கல்விப்பாரம் பரியமும் மக்களோடு இணைந்து வளர்ந்து வந்ததை வரலாற்றுக் காலங்களிலிருந்து செவிவழிச் செய்திகளாக, ஆவணங்களாக எம்மூத்தோர் தொகுத்து அளித்துள்ளதை காணமுடிகின்றது. 

குறிப்பாக குருசீட பரம்பரையாக திண்ணைப்பள்ளிகள், நிலாப் பள்ளிகள், குருகுலப்பள்ளிகளை நிறுவி கல்வியில் ஆர்வம் உள்ளோரின் கல்விவளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளனர். உதாரணமாக ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்னர் சட்டம்பி சேதுகாவலர், பெருங்காடு புட்டினிக் குளத்தின் வடகரையில் திண்ணைப்பள்ளி நிறுவி கல்வி போதித்தார் என வரலாறு கூறுகின்றது. இவர்களைத்தவிர குமரகுரு சட்டம்பியார், பரமானந்த சட்டம்பியார், சி கணபதிப்பிள்ளை, நீ சேதுபதி, வைத்தியர் வே கணபதிப்பிள்ளை, நீ ஆறுமுகவாத்தியார், நாகமணியர், நா தில்லையம்பலவாத்தியார் போன்ற பலர் 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புங்குடுதீவுக் கிராமத்துக் கல்வியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர் எனலாம். 1830களைத் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியில் கத்தோலிக்க மற்றும் அமெரிக்க மிசனரிமார் மடத்துவெளி, சந்தையடி, பெருங்காடு, சின்ன இறுப்பிட்டி கிராமங்களில் முறைசார்ந்த கல்விக்கூடங்களை நிறுவினர். றிச்சட் கணபதிப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து பொன்னையா வாத்தியார், அமரசிங்க வாத்தியார் போன்றோர் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்பினை நல்கினர். 

இந்நிலையில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தற் பொருட்டு கல்வியியாளர்கள் பசுபதிப்பிள்ளை விதானையாருடன் சேர்ந்து சைவப் பாடசாலைகளை நிறுவ முயற்சி செய்து 1910ம் ஆண்டு புங்குடுதீவு கணேசவித்தியாசாலையினை ஆரம்பித்தார்கள்.  இதனைத் தொடர்ந்து படிப்படியாக இந்துப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 1940களில் ஒன்பதாக இருந்துள்ளது. இவை தவிர 1945ம் ஆண்டு மூன்று அரசபாடசாலைகளை அரசு ஆரம்பித்ததன் விளைவாக 1990ம் ஆண்டு புங்குடுதீவுக் கிராமத்தில் 15 பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. 1991ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் தற்போது எட்டுபாடசாலைகளே இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பௌதீக ரீதியாக பலம் குறைந்த புங்குடுதீவுக் கிராமத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மக்கள் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்துக் கொண்டு செல்லவே சகலரும் விவசாயத்தில் ஈடுபட்ட போது அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு உற்பத்திகள் போதுமானதாகவிருக்காத நிலையேற்படவே திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க யாழ்குடாநாட்டிற்கும், நாட்டின் ஏனையபகுதிகளுக்கும் தொழில்நிமித்தம் இடம்பெயரத் தொடங்கிய போதிலும் அவ்விடப்பெயர்வு தற்காலிக இடப்பெயர்வாகவே காணப்பட்டது. 

இவை தவிர இக்கிராம மக்கள் தமது பிள்ளைகளை கல்வியினூடாக வளம்முள்ளவர்கள் ஆக்கவும் முயற்ச்சி செய்யலாயினர். இதன் விளைவாக இக்கிராமத்தினைச் சேர்ந்த பலர் ஆசிரியர்களாகவும் அரச தொழில்களில் ஈடுபடுபவர்களுமாக உருவெடுத்தனர். குறிப்பாக மருத்துவம், பொறியியளாளர், கலை, விஞ்ஞானம், இயல், இசை, நாடகத்துறைகளில் கணிசமானவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்நிலையானது 1940களிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1960களைத் தொடர்ந்து புங்குடுதீவு மாணவர்களின் கல்வி மேன்மையுறலாயிற்று எனலாம். இவர்களின் கல்வி, கலாச்சார, பண்பாட்டு வளர்ச்சிக்கு இக்கிராமத்தில் வாழ்ந்த பலர் தமக்குரிய பங்களிப்பை நல்கி உள்ளனர். அவர்களின் கிராமத்து வாசம் கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகத்தினை உருவாக்குவதற்கு பெரிதும் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிகின்றது.

இவர்களில் புங்குடுதீவுக் கிராமத்தின் கல்விப்பாரம்பரியத்தில் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் பண்டிதர் முத்துக்குமாரு ஆறுமுகன் அவர்களாவர். இக்கிராமத்தின் கல்வி கேள்விகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களின் கல்வி, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராக திகழ்ந்தமையினால் உள்நாட்டிலும் தமிழகத்திலும் கல்விப் புலத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். தீவகத்தில் சமூக அடக்குமுறைக்கெதிராக குரல் கொடுத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கல்வியை வேண்டி நிற்போருக்கு தனது பட்டறிவைக் கொண்டு கல்விச்செல்வத்தை வழங்கியவர்.

இவ்வாறான பல்முகப்பார்வை கொண்டவராக வாழ்ந்த உயர்திரு பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இக்கிராமத்தின் முதுபெரும் சொத்தாக விளங்கியவர். படோபாகாரத்தை விரும்பாது தனது அறிவையும் ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு வாழ்நாள் முழுதும் வழங்கியவர். நாட்டில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலைகளினால் அவரால் வெளியிடப்பட்ட ஆய்வுகளை முழுமையாகப் பெற முடியவில்லை. குறிப்பாக அவரது சமகாலத்தவர்கள், மற்றும் மாணவர்களின் இழப்புக்கள், மற்றும் புலம்பெயர் இடப்பெயர்வின் விளைவாக அவரால் வெளியிடப்பட்டாய்வுகள் கிடைக்கப்பெறா விடினும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆய்வுகளும் முத்தமிழுக்கு ஆற்றிய அரிய தொண்டுகள் பற்றிய அரிய பல தகவல்களின் மூலமும் இவர் ஆழ்ந்த புலமை கொண்ட பண்டிதராக இக்கிராமத்தில் வலம் வந்துள்ளார் என்பதையிட்டு நாம் ஒவ்வொருவரும் புளகாங்கிதம் கொள்கிறோம்.

புங்குடுதீவு கிழக்கு முத்துடையார் பரம்பரையினரான முத்துக்குமாரு நாகம்மை தம்பதியினர் செய்த தவத்தின் பயனாக பிறந்த எட்டுக்குழந்தைகளில் பண்டிதர் ஆறுமுகம் 1914ம் ஆண்டு பிறந்தார். பல்கலை விற்பன்னரான முத்துக்குமாருவால் அவர் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியம், சமயம், இசை, சோதிடம், வைத்தியம், சித்திரம் போன்ற துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இளவயதிலேயே மாகாவித்துவான் கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றவர்களுடன் கல்வி தொடர்பான நட்பு கிடைக்கப் பெற்றது. சங்க இலக்கியங்களையும், இலக்கண நூல்களையுங்கற்று இத்துறையில் தனக்கெனவுரிய இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இதன் விளைவாக இவரது 15 வயதிலேயே சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆசிரியப்பணி வழங்கப்பட்டது. 18வது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி தான் கல்விகற்ற புங்குடுதீவு கணேசவித்தியாசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் இளமைத் துடிப்புடையவராக இருந்தமையால் தனது கிராமத்தில் சகலரும் கல்வியினூடக உயர்வடைய வேண்டும் என்று எண்ணி, பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக தனது வீட்டில் இரவு வேளைகளிலும் லீவு நாட்களிலும் திண்ணைப்பள்ளியினை நடாத்தி கிராமமக்கள் கல்வியில் நாட்டம் கொள்ளவைத்தார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் தனது கல்விப் பரப்பினை விரிவுபடுத்தும் முகமாக மதுரைத் தமிழ் சங்கத்தாருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து, புங்குடுதீவில் முதலாவது பண்டிதர் என்ற பெருமைக்கு உரியவரானார். தமிழ் இலக்கியத்தில் பெற்ற புலமையானது பண்டிதரை ஒரு பெரிய ஆய்வாளராக உருவாக்கியது. இவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் பல அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் வெளிவந்தமை பற்றி எமது கிராமத்தினைச் சேர்ந்த மறைந்த இலக்கிய கலாநிதி க சிவராமலிங்கபிள்ளை அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மேலும் இவர் தான் பெற்ற கல்வியையும் கௌரவத்தினையும் தனது கிராம இளைஞர்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் பலரை வித்துவான்களாக, பண்டிதர்களாக, இசைக்கலைஞர்களாக, சைவ சித்தாந்தவாதிகளாக, சமூகத் தொண்டர்களாக உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார்.

தந்தையாரின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியத்துறையில் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவம் கற்று, சிறப்புத் தேர்ச்சி பெற்று பகுதிநேர மருத்துவராக தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியத்தில் கொண்டிருந்த அளவற்ற காதலின் விளைவாக தமிழ் அறிஞர்களுடன் இணைந்து பல மகாநாடுகளை நடத்திய பெருமையும் பண்டிதருக்குரியதாகும். குறிப்பாக திருக்கேதீஸ்வரத்தில் சைவமகாநாடு, திருவாசகவிழா, மற்றும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களுடன் இணைந்து கொழும்பில் தமிழ் மறைக்கழகத்தினை நிறுவி திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா, கிளிநொச்சியில் 16வது திருக்குறள் மகாநாடு, புங்குடுதீவில் சிலப்பதிகார மகாநாடு போன்ற பல இலக்கிய மகாநாடுகளை நடாத்துவதற்கு பெரும்பங்கு கொண்டுழைத்து அம் மகாநாட்டு மலர்களின் ஆசிரியராக இருந்தும் அதில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியும் புங்குடுதீவுக்கு புகழ் சேர்த்த பெருமகனாவார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் சமூகரீதியாக ஒதுக்கப்பட்டமக்கள் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையை புங்குடுதீவுக் கிராமத்தில் முதன்முதலாக வெளிப்படுத்தி அதனைச் செயலிலும் செய்துகாட்டியவர். குறிப்பாக இவரது இளைமைக் காலத்தில் சாதி அமைப்பு முறை இறுக்கமாக கடைப்பிடிக்கப் பட்டதால் சமூகரீதியாக நலிவுற்ற மாணவர்கள் உயர் சாதி மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது. இதற்கெதிராக விழிபுணர்வினை ஏற்படுத்தியதுடன் ஏனைய தீவுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டவர். பின்னாட்களில்  எழுத்தாளர் மு தளையசிங்கம் சாதி வேறுபாட்டுக்கு எதிராக குரல்கொடுத்து வெற்றிபெற்ற போதும் அதில் தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் தனது கிராமத்தில் அளவற்ற அன்பு கொண்டவராக இருந்த நிலையில் தனது ஆசிரியப் பணியின் நிமித்தம் அதிக காலத்தினை வன்னியிலும் தென்னிலங்கையிலும் வாழவேண்டிய நிலை உருவானது. பின்னாட்களில் கிராமத்துடன் ஆன தொடர்புகள் சற்றுத் தளர்வுற்ற போதும் அவரது சொல்லும் செயலும் கிராமத்துக்கு உரமூட்டியவையாகவே இருந்துள்ளன.

பண்டிதர் அவர்கள் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரிதேவியுடனான திருமண வாழ்வில் தமிழரசி என்ற மகளை ஈன்று தான் எவ்வாறு கல்வி கேள்விகளில் பாண்டித்தியம் பெற்றாரோ அதே போல மகளையும் கல்விப் புலத்தினூடாக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். திருமதி தமிழரசி ஆளுமைமிக்க கல்வியாளராக, இலக்கியவாதியாக, கவிஞராக, கலை கலாசார விழுமியங்களில் தெளிந்தவராக பேச்சுத்திறனில் வல்லவராக, சாதி, சமய வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவராக, வரலாற்றைத் தெளிவுறக்கற்றவராக வளர்தாளாக்கிய பெருமை பண்டிதர் ஐயாவையே சாரும். உதாரணமாக திருமதி தமிழரசி அவர்கள் 1977ம் ஆண்டு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவில் ஆற்றிய உரை பற்றி எமது கிராமத்துப் பெண் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தந்தையார் தமது மகளுக்கு கல்வியையும் பேச்சாற்றலையும் சிறப்பாகவே கொடுத்துள்ளார் எனக்கூறி தந்தையையும் மகளையும் வாயாரப் புகழ்ந்ததை நேரில் கேட்கக் கூடியதாகவிருந்தது.

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் தொடர்பாக என்னால் எழுதப்பட்ட புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூலில் அவரது கல்விப்புலமை பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் பல கனதியான ஆய்வுகள் பல எழுதியுள்ளமை பற்றி பலரும் தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாய்வுகளில் பல எங்கோ மறைந்து கிடக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் அவரது ஆய்வுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் தமிழ்த்துறையைப் பெருமையடையச் செய்யலாம். தற்போது அவரது நூற்றாண்டு மலரில் என்னால் சேகரிக்கக் கூடிய தரவுகள், தகவல்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையை எழுதுவதற்குக் கிடைத்த வாய்ப்பினை பெருமையாக கொள்கிறேன்.

பண்டிதர் ஐயா அவர்களின் நாமம் எமது கிராமம் தொடர்பான கல்விப்பாரம்பரியத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது வெள்ளிடைமலை.
இனிதே, 
தமிழரசி.

Sunday, 7 September 2014

பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க  வெள்ளிவிழா மலர் (1951)

புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு - கி பி 2ம் நூற்றாண்டு

புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள்.

“புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். நாகரிகமும் வீரமும் ஒற்றுமையும் உடையவர்கள்.” என்பது. இப்பொன் ஏடு இப்பொழுது கொழும்பு மாநகரிலுள்ள நூதன காட்சிச் சாலையில் இருக்கின்றது. இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பண்பட்ட மக்கள் புங்குடுதீவில் வாழ்ந்தனர் என்ற உண்மையை பொன் ஏட்டின் மூலம் அறிகின்றோம்.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளின் முன்னர் தென்னிலங்கை அடர்ந்த வனமாக இருந்தது. கொடிய விலங்குகளும் இயக்கரும் அங்கே வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுதும் அதற்கு அப்பாலும் நாகரிகம் முதிர்ந்த தமிழ் மக்கள் வட இலங்கையில் - நமது தீவகப் பகுதியில் வாழ்ந்தார்கள். ஏன்! இலெமூரியாக் கண்டம் கடல் வாய்ப்படுமுன் நமது அருமையான சிறு தீவகம் அதன் பகுதியாய ஒரு பெருந் தமிழகமாய்க் கூட இருந்திருக்கலாம். அதற்குரிய சான்றுகளைத் தொடர்பான சரித்திர வாயிலாக இன்னும் மக்கள் அறியவில்லை. இங்குள்ள நில அமைப்பும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகளும் தென் இந்தியாவுடன் ஒத்தனவாகவே இருக்கின்றன.

காப்பியன் வகுத்த தமிழை நமது தமிழகம் மறந்ததாயினும் இப்பொன் தமிழ்த்தீவகம் மறக்கவில்லை. ஏனைய பல நாடுகளில் வாழும் தமிழ் நண்பர்கள், ‘சிரட்டையை’ சிறட்டை என்றும் ‘முகிழைப்’ பணுவில் என்றும் ‘புகையிலையைப்’ பொயிலை என்றும் மழலை பயிலுகின்றார்கள். புங்குடுதீவு மக்கள் பண்பட்ட பழந்தமிழ்ச் சொற்களையே வழங்கி வருகின்றார்கள்.

பண்டைக் காலந்தொட்டே வட இலங்கைத் தீவகங்கள் மாதோட்டத்துடன் தொடர்புள்ளனவாய் இருந்தன. தமிழ் மக்களும் தமிழரசரும் இப்பகுதிகளில் நிலைபெற்றிருந்தார்கள். திருக்கேதீஸ்வரத்தில் வைத்தே சிங்கள வமிசத்து முதல் அரசன் விசயனுக்கும் பாண்டிய இராசகுமாரிக்கும் மணம் நடந்ததென யாழ்ப்பாண சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இத்தொடர்புகள் யாவற்றையும் ஆராயுமிடத்து நமது தாயகமாகிய தீவகத்தில் மக்கள் ஆதிதொட்டு வாழ்ந்து வருதல் புலப்படுகின்றது.

சோழ சேர பாண்டிய சாம்ராச்சியங்கள் வன்மை பெற்று மரக்கலமோட்டி மாகடல் கடந்து வாணிபஞ் செய்த அந்த நாளிலும் இத்தீவக மக்கள் அவர்களுக்கு உறுதுணை புரிந்து சோறு கொடுத்து உதவினதன்றியும் அறத்தையும் தமிழையும் வளர்த்தும் வந்தனர்.

சாத்தனார் கூறும் மணிமேகலையில் பேசப்படும் மணிபல்லவம் நயினாதீவைக் குறிக்குமென ஆராச்சியாளர் கூறுகின்றனர். அதற்கு அருகேயுள்ள ‘இரத்தினத்தீவம்’ எனப்பேசப்படும் இடம் புங்குடுதீவுதான் என்பது சிங்கள சரித்திரமூலம் உண்மையென வலுப்பெறுகின்றது. அதாவது புத்தபகவானின் உபதேசங்களைப் பயின்று கொண்டு தொள்ளாயிரம் புத்த குருமார் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள். அதனால் “போதத்தீவென’  இத்தீவகம் அழைக்கப்பட்டது. இந்தியர் இங்கே இறங்கி மாதோட்டத்திற்குத் தரைமார்க்கமாகச் செல்லும் வழக்கம் இருந்தது என்றும் சிங்கள சரித்திரம் கூறுகின்றது. இதுவரை கூறிய விஷயங்கள் யாவும் இத்தீவுடன் பண்டைய வெளிநாட்டு மக்கள் கொண்டுள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

இவ்வூரின் பழங்குடி தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை ஆகியவற்றைத் தாங்களே ஆக்கினர். பிறருக்குங் கொடுத்துத் தாமும் உண்டு, உடுத்து வாழ்ந்தனர். ஒரு நாட்டின் உயர்ந்த நாகரிகம் அந்நாட்டில் வாழும் மக்களின் தொழில், கலை, பண்பாடு, இயற்கைவளம் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. இற்றைகுப் பல நூற்றாண்டுகளுக்கு முன் மேலைத் தேசத்தினர் பருத்தியாடை அணியாது வாழ்ந்தார்கள். அந்நாளில் இந்நாட்டு மக்கள் பருத்தியை உண்டாக்கினார்கள். பஞ்சை எடுத்தார்கள். அதிலிருந்து நூல் உண்டாக்கி நுண்ணிய ஆடைகள் செய்து உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.

நிலத்துக்கு உரமிட்டு வளம்படுத்தி நெல்விதைத்தார்கள். குளம் தோண்டி நீர்தேக்கிவைத்து நெல் விதைத்தனர். அன்றியுஞ் சிறு தானியங்கள் செய்தனர். வைத்தியம், சோதிடம், சித்தாந்த தத்துவம் ஆகிய துறைகளில் கைதேர்ந்த பரம்பரையான எத்தனையோ குடும்பப் பெரியோர்கள் இன்றும் தமது கலைச் செல்வங்களை நாட்டுமக்கள் அநுபவிக்க வாழ்கின்றார்கள். ஊணழகும் உடையழகும் கொண்டு உடலழகு பார்க்காமல் உயிரழகு கொள்ள வழிகண்டிருந்தார்கள். எங்குமாகிய இறைவனை திருக்கோயில்களில் நியமித்துப் பூசித்தனர். இன்றும் பழந்தமிழ்க் கோயில்கள் பலவுள. கோயிலால் பேர்பெற்ற கிராமங்களும் உள. அவற்றிலொன்று “கோயிற்காடு”. அக்கிராமம் தற்பொழுது வீராமலை’ என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’ என்பது வீர + அமலை - (கற்பு) வீரம் பொருந்திய அம்பாள் - கண்ணகி வந்து சேர்ந்த இடம். வீரபத்தினியின் சிலைவந்து அடைந்த பின்பு வீராமலை என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’யுடன் கர்ணபரம்பரையாக ஒரு கதையும் வழங்கி வருகின்றது பாருங்கள். 

இன்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு முன்பு இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பெருவேளாளனுடைய எருமை மாடுகள் வழக்காமாகாக் கிடக்கும் குளத்தில் ஒருநாள் காணப்படவில்லை. அவற்றை ஊருக்குள் பல இடங்களிலும் தேடினார். காணப்படவில்லை. அவர் தென்கரை ஓரமாகப் பார்த்துக்கொண்டு போனார். கடலில் ஒரு கூப்பிடு தூரத்தில் எருமைகள் கிடந்தன. சந்தோஷத்துடன் ஓடிப்போனார். கரைப்பக்கமாக அவற்றைக் கொண்டு வரும் பொருட்டு அடித்து நடத்தினார். தாம் கிடந்த இடத்தையே அவை சுற்றிச் சுற்றி ஓடின.

இப்படி அவற்றைக் கரையேற்றக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவைகளின் நடுவில் ஒரு பெட்டி கிடப்பதைக் கண்டார். உடனே அதனைத் தூக்கிக் கொண்டு கரைக்குப் போனார். அந்த அந்தறிவுப் பிராணிகள் எல்லாம் கதறிக் கொண்டு அவர்பின்பு சென்றன. அவர் கரையில் இரண்டு கயிற்றடி தூரம்* [176 அடி] போனதும் பெட்டியை வைத்துவிட்டுத் தனது உடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு பின்னரும் அதனைத் தூக்கினார். ஆனால் அவரால் பெட்டியை அசைக்க முடியவில்லை. இந்தச் செய்தி வாய்த்தந்தி மூலம் ஒரு கணப்பொழுதில் ஊரெங்கும் பரவியது. ஊரார் பலரும் வந்து பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். 

அதனுள் அவர்கள் கண்டதென்ன! வீராமலை!! வீரபத்தினித் தெய்வம். ஆம்! கண்ணகியம்பாள் உருவம் இருக்கக் கண்டார்கள். அந்த அம்பாளுக்கு கோவில்கட்டிப் பூசித்தார்கள்.

ஆம்! அந்த அம்பாள் கோவிலுக்குப் போனால் உண்மையில் திருச்செந்தூரில் நிற்கின்றோம் என்ற நினைவே தோன்றும். பரந்த நீலக்கடலலை ‘வா! வா! ஏன் வந்தாய்?’ எனப்புரண்டு மோதிக் கொண்டிருக்கும். ‘வெண்மணற்கரை, இப்படிக் கொஞ்சம் இருங்கள், ஏன் கால்வலிக்க நிற்கவேண்டும்?’ என்னும், குளிர்ந்த பிராணவாயு மெத்தனத் தவழ்ந்து வந்து, நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு போகும்.

தெய்வசக்தியும் இயற்கை அன்னையின் அழகும் ஒருங்கமைந்து அந்தக் கண்ணகையம்பாள் கோவில் பூலோக சுவர்க்கமென எவரையும் ஆனந்தமடையச் செய்யும். வரகவி முத்துக்குமாரப் புலவரால் (ஊரதீவு) இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளின் முன் பத்தும் பதிகமும் பாடிப் போற்றப்பட்ட தலமது. “மணிமந்திரரூபிநீ”  என்று தொடங்கும் புலவரது செய்யுள் "கன்னலொடு செந்நெல் விளை புங்கைநகர் தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே” என முடிகின்றது. இவையாவும் நம் தமிழ் மக்கள் பண்பாட்டைக் காட்டுகின்றன. 

இனி, மேலை நாட்டினருள் ஒல்லாந்தரும் முதலில் நமது நாட்டில் வந்து தங்கள் மிருகபலத்தினால் இங்குள்ள மக்களையும் அடக்கி கோட்டை கட்டி வாழ்ந்தனர். இந்தத் தீவகமும் அவர்கள் சுயதேசத்தைப் போலக் கடல்வளமுடைமையினால் போக்கு வரவுக்கு வசதியாய் இருந்தது. அவர்களின் கோட்டைகள் இருந்த இடம் *’கோட்டைக்காடென’ இன்றும் பெயர் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்டைகள் அழிந்து சிதைந்து இப்பொழுதும் இப்பொழுதும் காணப்படுகின்றன. தற்பொழுது கோட்டைக் காட்டில் ‘மன்னியாகுளம்’ என்று சொல்லப்படும் ஓர் இடம் உண்டு. போர்த்துக்கீச ஒல்லாந்த தளபதிகள் பல இடங்களில் இருந்து வந்து மந்திராலோசனை செய்த இடமென்பர். (கோட்டைக்காடிலுள்ள சிதைந்த கோட்டையின் சுவடுகள் மேலை நாட்டினர் கட்டியதல்ல என்பதை இக்கட்டுரை எழுதிய பின், அவரது தந்தை கொடுத்த வீரமாதேவியின் ஏடுகள் மூலம் அறிந்து கொண்டார்). ‘மன்னியாகுளம்’ - ‘மன்னர்குழாம்’ என அந்த நாளில் வழங்கியதென்று முதியோர் சொல்கின்றார்கள். அவர்கள் அரசு புரிந்த காலத்தில் ஒரு நன்மையும் செய்து சென்றுள்ளார்கள். அதுதான் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுச் சென்றதாகும்.

இவற்றைக் கூறுமுன்பு இநாட்டில் அன்று தொட்டு இன்றுவரையும் சைவசமயமே தழைத்தோங்கி வருகின்றது. புத்த மதத்தினர் இடையில் வந்து போனார்களே யொழிய இந்நாட்டு மக்கள் அம்மதத்தை அனுட்டிக்கவில்லை. அதன்பின் வந்த ஆங்கிலராட்சியில் இந்நாடும் மற்றைய நாடுகளுடன் அடிமைப்பட்டிருந்தாலும் ஓரளவு நன்மையும் அடைந்திருக்கின்றது. கல்வி, சமயம், போக்குவரத்துச் சீர்திருத்தம், நீதி என்பவற்றில் ஈழத்து ஏனைய நாடுகளுடன் போட்டி போடக்கூடியதாக இருத்தலே அது. 

யான் இங்கே இத்தீவகத்தின் பழம் பெருமைகளை எடுத்துக் கூற வல்லேனல்லேன். இதைச் சரித்திரப் பேராசிரியர் திரு வையாபுரிப்பிள்ளை, தமிழாராச்சித் தலைவர் சுவாமி தனிநாயக அடிகள் போன்ற பெரியார்களுக்கு விட்டுவிடுவோம். அவர்களால்தான் இந்நாட்டின் பண்பு நலனையும் மக்களின் பொற்றமிழ் நலனையும் சரித்திர நில அமைவுகளையும் நன்றாக நுணுகி ஆராய்ந்து கூறமுடியும்.

இவ்வளவு நேரமும் நம்முடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தையார் நாட்டின் நீளம் ஆறுமைல், அகலம் நான்கு மைல், கோடைத் தென்றலும் மாரி வாடையும் பெறும் நாடு. தென்றல் தவழும் தென் சமுத்திரக்கரை ஓரத்திலே மாலை நேரத்திலே தண்டு கொண்டு தோணி தள்ளுதலே பேரின்பம். கீழைக் கடல் மதியும் மேலைக்கடல் ரவியும் நீலக் கடலலையில் உயர்வதும் தாழ்வதும் பூரணத் தினத்தில் பார்க்கும் அதிஷ்டர்களை இயற்கை என்னும் இறைவன் தனதிரு கண்களினால் அன்புடன் பார்ப்பதை ஒக்கும். மேற்குக் கடலின் ஓரத்தில் குறிகாட்டுவான் இருக்கின்றது. அதில் நின்று சப்ததீவுகளையும் பார்க்கும் பொழுது பாற்கடலில் மரகதப்பேழைகள் மிதந்து கொண்டு நம்மை நாடி வருவன போலத் தோன்றும்.

பண்டைக்கால சேர சோழ பாண்டிய வாணிபம் இன்றும் நடைபெறுகின்றதோ எனச்சிந்தனை பண்ணும் படி மகாபெரிய உருக்களும் படகுகளும் பண்டங்களை ஏற்றிப் பாயிழுத்து ஓடிவந்து மணிபல்லவத்தீவுக்கும் எங்கள் இரத்தினத்தீவுக்கும் இடையே பாயிறக்கி நிறுத்தி அவற்றிளுள்ள மரக்கலமோட்டிகள் கரையிரங்கி நல்ல நீர் மொள்ள விரைந்து செல்வர். அவர்களுடன் உரையாடினால் பண்டைய  மன்னர் வாணிபமல்ல என்பதும், இன்றைய மக்களின் வாணிப மரக்கலங்களே என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இந்தமேற்குக் கடற்பாதையின் கதை பெரிய பாரதக்கதை போன்றது. திசையறி கருவி முதலிய நவீனசாதனங்கள் இல்லாத பண்டைக்காலத்தே இயற்கையோடு இசைந்து மரக்கலமோட்டிய பண்டையோர் தென் இந்தியக்கரை மறைய, வட இலங்கைத் தீவகங்களை தமது வெறுங்கண்ணாற் காணக்கூடியதாக இருந்தது. அதனால் அவர்கள் பண்டை தொட்டு இன்றும் இப்பழம் பெருங் கடற்பாதையையே உபயோகித்து வருகின்றனர். வீடும் தலைவாசலும் போலப் புங்குடுதீவும் நயினைமணித்தீவும் இருப்ப அவற்றின் இடையேயுள்ள நீலமணி முற்றம் போல எங்கள் மேலைக்கடல் காட்சியளிக்கும்.



கீழைக்கடல் ஆழமான வாய்க்கால் போன்றது. யாழ்ப்பாண நகரம் போகும் இந்திய மரக்கலங்கள் எங்கள் தீவகத்தில் மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று புறக்கடலிலும் ஓடியே போகவேண்டும். சுருங்கச் சொன்னால் எங்கள் தீவகத்தை வியாபார மரக்கலங்கள் வலம் வந்து கொண்டே எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதுதான். ஈற்றில் வடகடற் புறத்தே போவோமேயானால் பச்சைப்பசேலென்ற மாணிக்கத் தீவுகளையும் மரகதத்தீவுகளையும் அவற்றினிடையே அழகான கடல் நீரோடைகளையும் காண்போம். சின்னஞ்சிறிய அந்தத் தீவுகளில் மாரிகாலம் நீர் நிறைந்திருக்கும். அதனாலேதான் அதனை மேடுறுத்தி வீதிசமைத்து வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

எங்கள் நாட்டில் இன்று பதினையாயிரம் மக்கள் வரையில் வாழ்வு நடாத்துகின்றார்கள். தமிழ்ப்பாடசாலைகள் பதிநான்கும் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் உட்பட பதினைந்து பாடசாலைகள் உள்ளன. நாட்டு மக்கள் கமத்தொழில், வாணிபத்தொழில் என்பவற்றில் ஈடுபட்டுள்ளனர். வாணிபத் தொழிலில் இவர்கள் பழம் பெருமை படைத்தவர்கள். இன்று நேற்று வாணிபத்துறையில் இறங்கவில்லை. பண்டுதொட்டே பல தேசங்களிலும் சென்று வாணிபம் நடாத்தி வருகின்றார்கள். இலங்கையில் சிறந்த நகரங்கள் எல்லாவற்றிலும் இத்தீவக மக்களின் வியாபாரத் தலங்கள் பிரபலமாக விளங்குகின்றன.

மேல் நாட்டினர் இலங்கைப்பக்கம் வருமுன்னரே அதாவது அஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் தென்னிலங்கையில் உள்ள நகரங்களில் இவர்கள் சென்று அந்நாட்டு மக்களுடன் அன்புபெறப் பழகி “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்” “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்னும் புனித மொழிக்கு உவமைபெற வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பும் சுயமுயற்சியும் உடையவர்கள். எவரையும் எதிர் பார்ப்பவர்கள் அல்லர். திடகாத்திரமான உடலும் அதிவிவேகமும் உடையவர்கள். அறிஞர் பெரியோர் ஆதியோரை அன்புபெற வரவேற்று வணங்குவார்கள். தாம் எவ்வளவு பெருமை உடையவராய் இருந்தாலும் தம்மிடம் வரும் வயது முதிர்ந்தோர்க்கு என்றும் தளர்ந்து படியும் வழக்கமுடையர். ஒற்றுமையும் நன்றி மறவாத குணமும் உடையவர்கள். எப்பொழுதும் தாய்நாட்டின் நலனுக்காக கல்வியையும் செல்வத்தையும் முன்னரிலும் பார்க்க முனைந்து வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்விபயின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பல பகுதிகளிலும் இருந்து தொண்டாற்றி வருகின்றார்கள்.

இந்திய இலங்கைச் சுதந்திரப் போரிலும் இவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். மகாத்மா காந்தியின் ஒரு சீடராக, தம் நாட்டையும் ஆடம்பர வாழ்வையும் விடுத்து மனையுடன் சென்று காந்தீய சேவா கிராமத்தில் நாலுமுழத் துண்டுடுத்து வாழும் தேசத் தொண்டர்களும் இங்கே பிறந்து போயிருக்கிரார்கள். கலையே பெரிது, கடமையே பெரிது, அறிவே பெரிது, ஒழுக்கமே பெரிது என்று போதிக்கும் ஆழ்ந்த அநுபவம் உள்ள ஆசிரியர்களும் பலர் இங்கே இருக்கின்றார்கள். விருப்பு வெறுப்பற்ற தேவபூசை செய்யும் ஞானிகளும் உளர். தம்நாட்டிற்காகப் பெருங்கடல் கடந்து மலாய்நாடு சென்று பொருளும் புகழும் வளர்க்கும் வீரப்பெருமக்களும் உளர். 

ஈழநாட்டின் பல பாகங்களிலும் சென்று காடுதிருத்திச் செந்நெற் கழனிகளாக்கி வீடுங்கட்டிக் குடியேறி வாழும் வீராதிவீரர்கள் எங்கள் நாட்டினரிற் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்கள் வருங்கால சமுதாய உயர்ச்சிக்குரிய கோட்டையை அமைக்கும் தீவிர சிற்பிகள் போன்று திகழ்கின்றனர். இவர்களின் எதிர்கால இலட்சியம் ஈடேறுவதாக.

குறிப்பு: 
தந்தை எழுதிய இவ்வாக்கத்தை எனக்கு அனுப்பிவைத்த பேராசிரியர் கா குகபாலன் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியை அறியத்தருகிறேன்.

*இரண்டு கயிற்றடி தூரம் [தமிழர் நீட்டலளவை]
2 கோல் = 1 பெருங்கோல் = 11 அடி
8 பெருங்கோல் = 1 கயிறு
2 கயிறு = 176 அடி 

இக்கட்டுரையில் என் தந்தை புங்குடுதீவை 'நாடு' என்றே குறிப்பிடுக்கிறார். குறையாத விளைச்சலும் கற்ற அறிஞரும் நிறைந்த செல்வரும் உடையதே நாடு என்பது திருவள்ளுவர் முடிவு (குறள்: 731).  ஊர்கள் பல சேர்ந்திருப்பது நாடாகும். இவை புங்குடுதீவுக்குப் பொருந்துவதால் உயர்வு நவிச்சி அணிக்கமைய - தந்தையார் நாடு எனத் தான் பிறந்த புங்குடுதீவை புகழ்ந்து கூறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 24 August 2014

ஆசைக்கவிதைகள் - 94


பெண்: வெட்டுக்குளத்துக்கு போனேண்டி!
வேட்டையாட வந்தாண்டி! 
பட்டென்றே மனம் போச்சிதடி! 
குதிரை மேலேஏ வந்தாண்டி!
குமரிஎனை கண்டாண்டி
நிலை குலைந்து போனாண்டி!

                                                                                       -  நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                                                -  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Saturday, 23 August 2014

குறள் அமுது - (94)

குறள்:
“சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப் பாடுஊன்றும் களிறு”                                   - 597

பொருள்:
உடம்பில் அம்புபட்டு வருந்தும் யானை அதனைத் தாங்கி நிற்றல் போல அறிஞர் அழிவு வந்த போதும் தம் செயலில் தளரமாட்டார்.

விளக்கம்:
யாரை ஊக்கமுடையவர் எனச்சொல்லலாம்? ஊக்கமுடையவர் அழிவு வந்தால் தளர்ந்து போவரா? போன்ற கேள்விகளுக்கு இத்திருக்குறள் விடை தருகிறது. அத்துடன் இக்குறள் புதையம்பு என்றோர் அழகிய தமிழ்ச்சொல்லைத் சொல்கிறது. புதைத்தல் என்பது = ஒன்றை மறைத்தலாகும். சேற்றால் ஆன குழியுள் வீழ்பவை அமிழ்ந்து மறைந்து போவதால் அதற்கு புதைகுழி என்று பெயர். அம்புகள் தைத்து அவற்றுள் புதைதல் புதையம்பு எனப்படும். 

காட்டில் வாழும் யானைக்கூட்டத்தை ஒரு யானை தலைமை தாங்கி வழிநடத்தும். அந்த யானை எத்தகைய இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று யானைக்கூட்டத்தைக் காக்கும். தலைமைதாங்கும் யானை வேடர் எய்யும் அம்புகள் தைத்து தைத்து புதையம்பினுள் புதைந்தாலும் அம்புகள் தைத்த வேதனையையும் பொருட்படுத்தாது, தனது உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காது தான் தலைமைதாங்கிய யானைக் கூட்டத்தை வேடர்களிடம் இருந்து காப்பதற்கு துணிந்து நின்று போராடும்.

அதுபோல் அறிஞர்கள் [உரவோர்] தாம் செய்ய நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை என்ன இடர்வந்தாலும் தளர்வு அடையாது அதனைச் செய்துமுடிப்பர். அத்தகையோரை நாம் ஊக்கமுடையவர் என்று சொல்லலாம். ஊக்கம் இல்லாதோர் தாம் செய்யத்தொடங்கிய வேலையை, படிப்பை, செயலை இடைநடுவே செய்யாது விடுவர். ஆனால் ஊக்கம் உடையோர் தமக்கு - தம்முயிருக்கு அழிவு வந்தாலும் எடுத்த வேலையைத் தொடர்ந்து செய்து முடித்து வெற்றி காண்பர்.

Monday, 18 August 2014

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் நூற்றாண்டு விழா



புங்குடுதீவின் முதற்பண்டிதர் என்ற பெருமைக்குரிய 
பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் நூற்றாண்டுவிழாவுக்கு 
வருகை தந்து சிறப்பிக்குமாறு
 உறவினரையும், நண்பர்களையும், 
அவரிடம் கல்விகற்ற மாணவர்களையும், 
யாழ் தீவுப்பகுதி மக்களையும் 
அன்புடன் அழைக்கிறோம்


Saturday, 16 August 2014

இறைவன் ஆராய்ந்த அன்புவாழ்க்கை

அது தமிழர் வாழ்வு நெறி
எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[ஈழகேசரி - 1940]


தமிழர்களின் அன்பு வாழ்வினைப் பற்றி சங்க இலக்கியங்கள் விமர்சிக்கின்றன. அவை தமிழ் என்ன சொல்லியுளது, “தமிழ் நுதலிற்றோ” எனின் “தமிழ் நுதலிற்று” என்பர். நுதலிற்றோ - சொல்லுதல், நுதலிற்று - சொன்னது. தமிழ் என்றால் அன்பு என்று பொருள். எனவே சங்க இலக்கியம் அன்பை ஆராய்ந்தது.

அன்புசிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்புசிவம் என்பது யாரும் அறிகிளார்
அன்புசிவம் எனப தாரும் அறிந்தபின்
 அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே”

தமிழை ஆராய்ந்து ஆராய்ந்து கொண்டு போக, அன்புதான் சிவமாக - சிவந்தான் அன்பாக அமர்ந்துள்ளதை அறிந்து கொண்டார்கள் என்க. அன்பு வாழ்க்கையை வாழ்ந்தார்கள். 

சங்க இலக்கியங்களிலே பேசப்படுவன உலகியல். உலகம் வாழ்த்த வாழவேண்டிய சீரிய நெறிகளே. சங்க இலக்கியங்கள் போற்றப்படக் காரணமும் உலகியல் நெறிகளில் அதியுயர்ந்த - அன்பு வாழ்வினை - இன்புற இல்லற உலகியலில் பொருத்திக் கூறுவதனாலேயே. 

சங்க இலக்கியங்கள் பகரும் அன்புக் காதற்காட்சியைப் பாருங்கள். அழகிய இளநங்கை தன் வீட்டினுள் நடந்தாள். அவள் நடப்பதைக் கண்ட அவளுடைய அருமைத் தந்தை மகளுடைய பாதங்கள் நிலத்திலே தோய்ந்து நடக்கப் பொறுக்கமாட்டாது, 
“எவனடி குறுமகள் இயங்குதி என்னும்”
‘என் அழகு மகளே! ஏன் நடக்கிறாய்! பூமியில் பாதம் படாமல் - நடந்து திரியாமல் மெத்தையில் இரு!’ என உறுமுகிறான்.

அவளோ,
யாக்கைக்கு உயிரியைந்தன்ன துவரா நட்பில்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”
என்கிறாள்.

உயிரம் - உயிரினை உடையோம் என்று பொருள். உயிர(ம்)மே - ‘ஏ’காரம் ஈற்றசை. உயிரோமாயுள்ளோம் என்றவாறு. ஒரு நாள் அவள் உடன் போய்விட்டாள் - காதலித்தவனுடன் போய்விட்டாள். 

தோழி சிற்றன்னை ஓடித்தேடுகிறாள்.
"என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி காட்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும!
என வழியில் வருவோரை உசாவுகிறாள் - வினாவுகிறாள்.

அந்தணர் சொல்கிறார்
“காணோமல்லேம் கண்டனம் கடத்திடை
ஆணெழில் விடலையொடு அருஞ்சுரம் முன்னிய
மாணெழில் கற்பின் தாயிர் நீர் போறிர்…….
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாட்கவைதாமென் செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே….
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறந்தலைப் பிரியா ஆறுமற்றதுவே”
அவர்கள் இருவரும் ஒன்றாய்ப் போனது சரி. அது தர்மம் தலைப்பிரியாத தமிழர் வாழ்வு நெறி. நீர் இனிக் கவலையின்றிப் போகலாம் என்கிறார் அந்தணர்.

அவர்களுக்கு திருமணமும் முடிந்தது. அவளின் காதற்கணவன் பொருள் தேடிச் செல்கின்றான். அவன் சென்றதும் அவள் வீட்டில் இருந்து அழுதாளாம். அவள் மனதால் அழவில்லை. கண்ணால் அருவியாக நீர் பாய அழுதவள். தன்னைத் தானே கேட்கிறாள். இல்லை தனது கண்ணை முன்னிலைப் படுத்திக் கேட்கிறாள்.

“கண் தாம் கலுழ்வது எவன் கொலோ
தண்டா நோய் தான்காட்ட யான்கண்டது”

அவள் தனது கண்ணைக் கேட்டது வள்ளுவதேவரின் காதுக்குக் கேட்டு அவர் பாடிவைத்துள்ளார். அவளது கண்தான் காதலனை அவளுக்குக் காட்டியது. கண்ணே! நீ ஏன் அழுகிறாய்? நீ தானே அவரைக் காட்டித் தந்தாய். நீ காட்ட நான் கண்டேனே ஒழிய, நான் காட்ட நீ காணவில்லையே!  காதலரைக் காட்டித் தந்த நீ அழுவானேன் என்று கேட்டாளாம். அப்படித் தன் கண்ணைக் கேட்டு அழுதவள் இரண்டொரு நாளில் மனந்தேறிவிட்டாள்.

கணவன் பொருள் தேடி பாலை நிலத்தைக் கடந்து போகின்றானே. நெருப்பாக ஆதவன் கொழுத்துகிறானே. அவன் போகும் வழியில் பருக்கைக் கற்கள் தழல் போலச் சிவந்து தீயைக் கனல்கின்றனவே. அந்தக் கற்கள் பூ மொட்டுகள் போல இருக்கவேண்டும். பாலை நில வெப்பம் நீக்கி வானம் மேகந்தவழ வேண்டும். நிலம் குளிர வேண்டும். தன் காதலன், முட்டின்றி அவ்வழியேக வேண்டும் என மழைதரும் செல்வனாகிய சூரிய தேவனை, அன்பு இன்னதென உணர்ந்த - அன்பு மயமாய் வாழப்பழகிய தலைவி வேண்டுகிறாள்.

பருக்கைக் கற்கள் மலர் மொட்டுக்கள் - இல்லை தேன் நிரம்பிய மொட்டுக்கள் போலக் குழைந்து குளிர்ந்துவிடுகின்றன. முகில்கள் சூழ்ந்து மழைத் துளிகள் சொட்டுகின்றன. நிலம் துவண்டு கசிந்து பாதம் பதியக்கூடிய மெதுமையடைகின்றன. அவளது அன்பு ஆதவனிலும் பூமியிலும் வானத்திலும் தெய்வீகமாய்ப் பரவுகிறது. அதனை அநுபவிக்கும் தலைவன் துன்பம் நீங்கி அன்பில் மிதந்து கொண்டு போய்ப் பொருள் தேடி மீள்கின்றான். 

இது சங்கச் சான்றோர் வடித்த அன்புச் செய்யுள். இதனை கால - நேர - தூரங்கடந்த இறைவன் - சங்கப் புலவனாக இருந்து ஆராய்ந்தார். இதனை மணிவாசகர்

“சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் 
என் சிந்தையுள்ளும்
உறைவான், உயர் மதில்க் கூடலின் ஆய்ந்த 
ஓண் தீந்தமிழின் துறை” 
என்கின்றார். 

தமிழ் மக்களின் வாழ்வு நெறியை - அன்பு வாழ்க்கையை இறைவன் ஆராய்ந்து சொக்கி மெலிந்து போனாராம்.
இனிதே,
தமிழரசி

Friday, 1 August 2014

தென்கயிலை மலை வள்ளலே!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்                   
             - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]            

பொன்னழகி யாடக சவுந்தரி குளக்கோட்டன்
      பூசித் துவந்த பெருமான்
போகர்முதல் முனிவோர்கள் ஆகம விதிப்படி
      போற்றிசைப் பார்க ளென்றும்
அன்னமென் நடையம்மை வாமபாகம் மருவ
      அரியபத் மாசனத் தில்
அரியய னடிதொழ நவரத்ன பீடத்
      தமர்தருளு கோணா சலர்
அன்னைகைகசி லிங்கம் அரிசிமா விற்செய்து
      அர்ச்சித்த தற் குவந்து
அரியதிசை பத்தாண்ட இராவணே சனைமக
      னாகவீந் தருளு மையர்
தென்மொழித் தமிழ்மக்கள் உன்பத மடைக்கலம்
      செய்யபொற் றாள்துதித் தோம்
செல்வமுங் கல்வியும் நல்லரசு மீந்தருள்
      தென்கயிலை மலை வள்ளலே
இனிதே,
தமிழரசி.