Thursday, 13 September 2012

உன்னை நினைந்திருந்தேன்



                          பல்லவி
என்னை மறந்தே கந்தா
உன்னை நினைந் திருந்தேன் 
                                            - என்னை மறந்தே
                        அனுபல்லவி
பன்னிரு அருள் விழியும்
என்னை காக்கு மென்றே 
                                            - என்னை மறந்தே

                          சரணம்
முன்னைத்தவம் செய்திடா மூர்க்கத்தால்
பின்னையான் செய்பிழை யாவுமிங்கே
முன்னைவினை யோடு மூண்ட தீயாய் 
சின்னத்தனங்கள் செய்து அழிவதற்கோ!
                                             - என்னை மறந்தே
இனிதே,
தமிழரசி.

Wednesday, 12 September 2012

அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ!



மனித இனம் ஒன்று. ஆனால் அது தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட கடவுளர் எத்தனை? எத்தனை? கடவுளர் பலராக, மதங்களும் பல ஆயின. அம் மதங்களின் பேரால் எத்தனை? எத்தனை? போர்கள். மதங்கள் தம்மிடையே ஒன்றோடு ஒன்று மதங்கொண்டு பொருதாமல் இருக்குமானால் இவ்வுலகில் எத்தனையோ அற்புதமான உயிர்கள் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும். 

கடவுளை நாடியே எல்லா மதமும் செல்கின்றன. ஆனால் எவையும் முழுமையாக எதனையும் சொல்லவில்லை. ஆதலால் இனிமேலாவது போரின்றி இவ்வுலகம் வாழவேண்டுமானால் மதங்களின் அறியாமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதமும் தம்மிடம் உள்ள மூடநம்பிக்கைகளை கைவிட்டால் அவற்றின் அறியாமை தானே ஒழிந்துவிடும்.

ஏதோ ஒருவிதத்தில் மதங்களோடு மலர்கள் ஒன்றுபடுகின்றன. மலர்களிலும் மதங்களைப்போல் எத்தனை விதங்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மணங்கள்? கடவுளுக்கு வேண்டியது மல்லிகையா? சண்பகமா? தாமரையா? வாசமலரா? வெள்ளை மலரா? சிவனுக்கு வில்வமா? திருமாலுக்கு துளசியா? பிள்ளையாருக்கு அருகம்புல்லா? இன்ன கடவுளுக்கு, இன்ன பூ என்று சொன்னது யார்? இந்த மலர்களும், இலைகளும் இல்லாத இடத்தில் கடவுளை வணங்க முடியாதா? இல்லையேல் அப்படிப்பட்ட இடத்தில் கடவுளே இல்லையா? மலர்களின் மேல் மதங்கள் கட்டும் மூடக்கட்டுக்கள் அறுத்து எறியப்பட வேண்டும்.

எமது மனம் பொய், களவு, சூது, வாது, பொறாமை, வஞ்சகம் போன்ற கயமையால் கறைபடியாது இருந்தால் அது கோடானுகோடி மலர்களுக்கு சமமாகும். இதனை விபுலானந்த அடிகள் மிக அழகாக கூறியிருக்கிறார். ‘உயிர்களுக்கு வேண்டிய யாவற்றையும் அள்ளி வழங்கும் வள்ளலான கடவுளின் திருவடிக்கு ஏற்ற மலர் எதுவாக இருக்கும்? வெள்ளை நிறமான மல்லிகைப் பூவா? அதைவிட உயர்ந்த மலர் வேறெந்த மலரோ?’ என விபுலானந்தர் தமக்கு தாமே கேள்வி கேட்டுக்கொண்டார். உத்தமன் ஆகிய கடவுள் விரும்புவது - வெள்ளை நிறப்பூவும் அல்ல, வேறெந்த மலருமல்ல என்று சொல்லி; எமது மனம் எனும் தாமரை மலரையே [உள்ளக் கமலம்] கடவுள் விரும்புவதாக விடையையும் தருகிறார். அவரது கேள்வியையும் பதிலையும் பாருங்கள். 
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
எம்மைத் தவிர எவராலும் பறிக்கமுடியாத, கறைபடுத்த இயலாத வாசமலர் எமது மனமே. அதைவிடச் சிறந்த மலரை எங்கு தேடியும் நாம் பெறமுடியாது. எனவே அதைப் போற்றுவோம். மனம் வாசனை ஆனால் வாய்ப்பது முத்து - முத்தி. 
இனிதே,
தமிழரசி.

Monday, 10 September 2012

பொங்கல் குரவை ஆடுவ மச்சி!


நாட்டுப்புறங்களிலும், கடற்கரையின் புன்னைமர நிழலிலும், பெருவிழாக்களிலும் பண்டைய தமிழர்கள் குரவை ஆடியதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. சங்ககாலத் தமிழரின் வாழ்வியலில் காணும் பல விடயங்களை மிகவும் சாதாரணமாக ஈழத்தமிழரின் வாழ்வியலிலும் காணலாம். அந்தவகையில் ஒப்புநோக்கி ஆய்வு செய்யப்பட்டால் அதற்கு இந்த நாட்டுப்பாடலும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

பாலி ஆற்றங்கரையில் மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலம் போட்டு, தெய்வத்திற்கு பொங்கலிட்டு தாரை, தப்பட்டை முழங்க, விளக்கை ஏற்றி வைத்து, தங்கக்குடத்தில் ஏறிநின்று ஆணும் பெண்ணூம் குரவை ஆடியதை இப்பாடல் சொல்கிறது. குரவைக்கூத்தை தன்னுடன் சேர்ந்து ஆடுவதற்கு மச்சாளை அழைத்த மச்சானையும், இருவரும் சேர்ந்து ஆடும்பொழுது அவளின் ஆடலை, அழகைப் பார்த்து அவன் ஏங்கியதையும், அவன் பார்த்தாலும் பரவாயில்லை, ஆனா தெய்வக் குற்றம் வராம பார் என அவள் சொன்னதையும், குரவை ஆடி தெய்வத்தை வணங்குவோம் என அவனை அவள்  அழைத்தையும் காட்டும் இந்நாட்டுப்பாடல்கள் பாலியாற்றங்கரை மக்களின் வாழ்வியலை சங்கத்தமிழர் வாழ்வியலோடு இணைக்கின்றது.

ஆணும் பெண்ணும்:  மாவிலைத் தோரணம் தொங்கத் தொங்க
                                          மாக்கோலம் போட்டாச்சி
                                ஆவிலை அருகம்புல் சேத்துக் கட்டி
                                         அடுப்பில உலையு வைச்சாச்சி

                ஆண்:     தப்பட்டை தாரை கொட்டக் கொட்ட
                                        ஏமவிளக்கை ஏற்றிவைத்து
                               தங்கக் குடத்தில தாவி நின்னு 
                                       பொங்கல் குரவை ஆடுவ மச்சி!
                               
               பெண்:    பொங்கல் குரவை ஆடயில கூட
                                        ஏங்கித் தவிப்பது யாரு மச்சான்
                             தெய்வ பங்கம்வராம பாரு மச்சான்
                                        தெய்வம் பரவுவ வாரும் மச்சான்.                                                                                                                                                                       -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

இப்படி பொங்கலிட்டு குரவையாடும் வழக்கத்தை சங்ககாலத் தமிழரும் செய்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. சிலப்பதிகாரத்தில் சங்ககாலத்தில் நடந்த இந்திரவிழாவை எடுத்துச்சொல்லும் இளங்கோஅடிகள் இந்திரவிழாவின் போது பெண்கள் - அவித்த கடலை வகை (புழுக்கல்), எள்ளுருண்டை (நோலை), ஊன்கலந்த சோறு (விழுக்குடை மடை), பொங்கல் முதலியவற்றைப் படைத்து துணங்கைக் கூத்தும், குரவைக் கூத்தும் ஆடியதை
புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி”           
                                                  - (சிலம்பு: 5: 68 - 70)
என்கிறார். 

பாலியாற்றங்கரையில் தப்பட்டையும் தாரையும் கொட்ட இரவுவிளக்கு ஒளியில் குரவை ஆடியதுபோல், விளக்கொளியில் முழவை முழக்கிக் கொண்டு துணங்கைக் கூத்து ஆடியதை பதிற்றுப்பத்து காட்டுகிறது.
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணையாக”       
                                                     - (பதிற்று: 52: 13 - 14)

பாலியாற்றாங்கரை ஆணும் பெண்ணும் குரவையாடி தெய்வத்தைப் பரவியது (வணங்கியது) போல சங்ககாலத் தமிழரும் குரவையாடி தெய்வத்தைப் பரவியதை கலித்தொகையில் முல்லைத்திணை பாடிய சோழன் நல்லுருத்திரன் 
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி 
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்
ஆளும் கிழமையோடு புணர்ந்த 
எம் கோ வாழியர், இம் மலர்தலை உலகே”     
                                                         - (கலி: 103: 75 - 79)
என்று கூறியுள்ளார். இதில் சோழன் நல்லுருத்திரன் முல்லை நிலத்தில் (காடும் காடுசார்ந்த இடமும் முல்லை நிலமாகும்) வாழ்ந்தோர் குரவையாடி தெய்வத்தை வணங்கியதாகக் கூறியுள்ளார். பாலியாற்றங்கரை இன்றும் காடும் காடுசார்ந்த இடமாக இருப்பதை நாம் காணலாம். எனவே பாலியாற்றங்கரையில் வாழ்ந்த ஈழத்தமிழரும் சங்ககாலப் பழமையான பண்பாட்டை தொடர்ந்து பேணி வந்தமையை இந்நாட்டுப்பாடல்கள் வரலாறாகச் சொல்கின்றன.  
இனிதே, 
தமிழரசி

Sunday, 9 September 2012

குறள் அமுது - (43)



குறள்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.                                    - 396

பொருள்:
மணற்கேணியில் இருக்கும் மணலைத் தோண்டத் தோண்ட அதில் ஊறிவருகின்ற நீரின் ஆழம் கூடிக்கொண்டு போவது போல மனிதர் கற்கக் கற்க அவரது அறிவும் கூடும்.

விளக்கம்:
கல்வி என்னும் அதிகாரத்தில் இருக்கும் இத்திருக்குறள் எமது அறிவை எப்படி வளர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. சிறுகுளம், தடாகம் போன்றவை கேணி என அழைக்கப்படும். அதனை கருங்கல்லால் கட்டியிருந்தால் பொக்கணை என்பார்கள். புளியம் பொக்கணை, குட்டம் பொக்கணை போன்றவை அவை. அப்படிக் கட்டாது மணலாலே ஆனதாக இருந்தால் மணற்கேணி என்பார்கள். 

மணற்கேணியில் உள்ள நீர் வெயிற் காலங்களில் வற்றிப்போவதால், குறைந்த ஆழமுள்ள நீரே அக்கேணியில் நிற்கும். கேணியின் அடியிலுள்ள மணலைத் தோண்டி எடுக்க எடுக்க அக்கேணியின் நீரின் ஆழம் கூடும். எவ்வளவுக்கு எவ்வளவு மணலைத் தோண்டி எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நீரின்  ஆழம் மிகக்கூடி இருக்கும். இதேபோல் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கற்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் அறிவும் பெருகும்.

ஒருவர் பத்தாம் வகுப்புப் படித்தபோது இருந்த அறிவைவிட பட்டப்படிப்பின் பின்னர் அறிவு கூடியவராக இருப்பார் அல்லவா? சிறுவயதில் படிக்கும் காலத்தில் மணற்கேணியை தோண்டுவது போல தொடர்ந்து கற்போம். அதனால் நம் அறிவு பெருகும். படியாத சாதாரணமாக மனிதர்கூட ஐந்து வயதைவிட ஐம்பது வயதில் அறிவு கூடியவராக இருப்பர். கற்றதால் பெற்ற அறிவுக்கும், வாழ்வின் இன்ப துன்ப அனுபவங்களால் பட்ட அறிவுக்கும், நிறையவே வேறுபாடு உண்டு. திருவள்ளுவர் இக்குறளில் கற்பதால் பெறப்படும் அறிவைப்பற்றியே சொல்கிறார்.

பட்டப்படிப்புக்கள் மட்டும் எமக்கு கல்வியறிவைத் தந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டிய விடயங்கள் இந்த உலகில் நிறையவே இருக்கின்றன. சரஸ்வதி சொல்கிராள் என ஔவையார் சொன்னது போல் 
“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவென்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தயங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்" 
இருக்கின்றன. 

எனவே எமக்கு விரும்பிய புதுப் புது விடயங்களாகப் பார்த்து ஆராய்ந்து ஆராய்ந்து கற்கக் கற்க அறிவும் மணற்கேணியின் நீர் போல் பெருகும்.

Friday, 7 September 2012

விடிவெள்ளி வந்தேறுமா?


தீர்க்காத தீர்வெல்லாம் திண்டாடுது
          தினமேங்கி தமிழ்நெஞ்சம் புண்ணாகுது
நீர்க்கோலம் போன்ற நிலையானது
          நன்றென்றால் நாளை என்னாவது
ஊர்கோலம் காணவே மனமேங்குது
          உரிமைக்கு விடிவெள்ளி வந்தேறுமா
போர்கால மேகங்கள் புறம்போகுமா
          பொன்னான எதிர்காலம் உடனாகுமா
இனிதே,
தமிழரசி.

Monday, 3 September 2012

அடிசில் 34

சுண்டைக்காய் பிரட்டல் 
                                                       - நீரா -















தேவையான பொருட்கள்:
சுண்டைக்காய்  - 300 கிராம்
வெட்டிய வெங்காயம்  -  1
செத்தல் மிளகாய்  - 5
வெந்தயம்  -  2 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி
சின்னச் சீரகம்  -  1 தேக்கரண்டி
புளி  - 15 கிராம்
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு   
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை: 
1.  சுண்டைக்காய்களை நன்றாகாக் கழுவி தண்ணீர் இல்லாது காய்ந்ததும், கிரண்டரில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்க.
2.  புளியை தண்ணீரில் ஊறவிட்டு கரைத்துக் கொள்க.
3.  செத்தல் மிளகாயையும் வெந்தையத்தையும் பொன்னிறமாக வறுத்து தூளாக, இடித்துவைக்கவும்.
4.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெட்டிய வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
5.  அதனுள் நறுவல் துருவலாக அரைத்துள்ள சுண்டைக்காயை போட்டு வதங்க விட்டு, உப்பு சேர்த்து இளஞ்சூட்டில் வேகவிடவும். 
6.  வெந்ததும் கரைத்த புளியையும், இடித்த தூளையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து பிரட்டலாக வரும்பொழுது இறக்கவும்.

Saturday, 1 September 2012

ஆண்டு! வருடம்! தமிழா?


பண்டைக்காலத் தமிழரில் விண்வெளி அறிஞர் பலர் இருந்ததை முதுகண்ணன் சாத்தனார் என்னும் சங்ககாலப் புலவர்
“செஞ்ஞாயிற்றுச் செலவும் 
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்பாரும் உளரே”                - (புறம்: 30)

என புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளார். 

இப்பாடலில் ‘சிவந்த சூரியன் செல்கின்ற வீதியும், அந்தச் சூரியனின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும் காற்றுவீசும் திசையும், ஒருவித ஆதாரமும் இன்றி நிற்கின்ற வானமும் ஆகிய இவற்றை தாம் நேரே சென்று அளந்து அறிந்தவர் போல் இதுஇது இப்படிப்பட்டது என்று சொல்வாரும் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார். 

ஆனால் இன்றோ ஆண்டு என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும், வருடம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்பாரும் இருக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்திருக்கும் தமிழும், தமிழரும் காலக்கணிதத்தை அறியவில்லை என்பது அவர்களது முடிபு. அந்த முடிவுக்கு அவர்கள் வர அவர்களது அறியாமைமட்டுமல்ல, தமிழர்களாகிய எமது அறியாமையும் காரணமாகும்.

எது எமது அறியாமை? எமது முன்னோர் அறிந்திருந்தது என்ன? அவர்கள் சொல்லிச் சென்ற அநுபவ உண்மைகள் என்ன? அவர்கள் காண்டறிந்தவை என்ன? என்பவற்றை நாமும் அறியாது, அவற்றை தேடி எடுத்து எம் தமிழ்க்குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்காது இருப்பது எமது அறியாமை தானே? காலம் கடந்துவிடவில்லை நாம் இவற்றை இப்போதும் செய்யலாம்.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல்  நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”                
                                                  - (குறுந்தொகை: 40)

இது உங்களில் பலருக்குத் தெரிந்த பாடல், குறுந்தொகையில் உள்ளது. இந்தக் குறுந்தொகைப் பாடல் வரிகளை, ’இருவர்’ படப்பாடலான “நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்” என்றபாடலில் வைரமுத்து புகுத்தி இருக்கிறார். நறுமுகையே பாடலை விரும்பிக் கேட்டோருக்கு இந்தவரிகள் தெரிந்திருக்கும். இவ்வரிகள் இரண்டாயிர வருடப் பழமையானவை. இதில் வரும் யாயும் ஞாயும் என்பது தாயும் தாயும் என்றே பொருள் தரும். பழந்தமிழர் சொன்ன யாய், யானை, யாடு போன்ற சொற்களை யாய் - தாய், ஆய் ஆகவும், யானை - ஆனை ஆகவும், யாடு - ஆடு ஆகவும் நாம் மாற்றிக் கொண்டது போல ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லை ஆண்டு என்கிறோம்.

புறநானூற்றில் பிசிராந்தையார் என்ற சங்கப்புலவர் வயது முதிர்ந்த பின்பும் தாம் இளமையாக இருப்பதற்கான காரணத்தைக் கூறுவதாக ஒரு பாடல் வருகின்றது. அப்பாடலில் 
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்” 
எனக்கூறுமிடத்தில் ஆண்டுகள் பல கடந்தும் நரை இல்லாது இருப்பது எப்படி எனக்கேட்பீர்கள் ஆனால் எனத் தொடங்குகிறார். யாண்டு எனப் பண்டைத்தமிழர் அழைத்த சொல்லே ஆண்டு ஆகியது என்பதற்கு பிசிராந்தையாரின் இப்பாடலை விடவும் ஆதாரம் இன்னும் வேண்டுமா?
பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலத்தின் எல்லைகள்


பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலத்தின் எல்லைகளைச் சொல்லும் புறநானூற்றுப்பாடல்
“வடாது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாது உருகெழு குமரியின் தெற்கும் 
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் 
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் 
என நான்கு திசைகளையும் சொல்கிறது. இதில் வடக்கு, தெற்கு தவிர்ந்த குணக்கு - கிழக்கு திசையையும் குடக்கு - மேற்குத் திசையையும் குறிக்கும்.  

மேலேயுள்ள முதற்பாடலில் முதுகண்ணன் சாத்தனார் 
‘வளிதிரி தரு திசையும்’
எனக் குறிப்பிட்டுள்ளார் அல்லவா? அவர் குறிப்பிடும் காற்று திரியும் திசையை அதாவது காற்று வீசும் திசையைக் கொண்டே ஒவ்வொரு திசையாலும் வரும் காற்றுக்கு ஒவ்வொரு பெயரிட்டு தமிழர் அழைத்தனர். 

குடக்கில் (மேற்கில்) இலிருந்து வீசும் காற்று குடக்காற்று ஆயிற்று. அதுவே கோடைக்காற்று.
குணக்கில் (கிழக்கில்) இருந்து வீசும் காற்று கொண்டல் ஆயிற்று. 
வடக்கில் இருந்து வீசும் காற்று வாடை ஆயிற்று. 
தெற்கில் இருந்து வீசும் காற்று தென்றல் ஆயிற்று.
இப்படி எல்லாம் மிக நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துப் பெயர் வைத்த நம் முந்தையோருக்கு ஆண்டு, வருடம் எனப் பெயரிடத் தெரியாமல் போயிற்றா? 

வருடு வருடல் என்பன தடவு, தடவுதல் எனும் கருத்தில் வரும் சொற்களாகும். தென்றல் மெல்ல உடலை வருடத் தொடங்கும் காலத்தில் வருடம் தொடங்குவதால் அதற்கு 'வருடம்' எனப்பெயரிட்டிருக்கலாம். நம் முந்தையோர் வைத்த பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே இருக்கின்றன. 

அதனால் சங்ககாலப் புலவர்களிடம் இருந்து ஏதும் தரவுகளைப் பெறமுடியுமா பார்ப்போம். பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி படுத்திருந்த கட்டில் விதானத்தில் புதிதாக மெழுகுபூசிச் செய்த  திரைச்சீலை கட்டியிருந்தது. அதில் ஓர் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியம் உறுதியான கொம்புள்ள ஆடு என்ற இராசியைத் தொடக்கமாகக் கொண்டு விண்ணில் சுற்றிவருகின்ற ஞாயிற்று மண்டலத்தையும் அந்த ஞாயிற்றைவிட மாறுபட்ட சிறப்புடைய திங்களாகிய சந்திரன் செல்லும் பாதையில் விலகாது நிற்கும் ரோகிணி என்ற நட்சத்திரத்தையும் கொண்ட ஞாயிற்றுத் தொகுதியைக் காட்டியது. இதனை


“புதுவது இயன்ற செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடுதலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி”
                                                     - (நெடுநல்வாடை: 159 - 163)
என நெடுநல்வாடை சொல்கிறது. 

இன்றைய தமிழர்களாகிய நாம் மேடராசி என்று அழைக்கும் இராசியை பண்டைய தமிழர் ஆடு என அழைத்தனர். ஆடு என்ற இராசியை (மேடராசியை) தொடக்கமாகக் கொண்டே வான்வெளியில் உள்ள கோள்களும் நட்சத்திரங்களும் சுற்றுகின்றன எனக் கணிக்கப்பட்டன. எனவே ஆடு எனும்  இராசியைத் தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று ஆண்டு ஆயிற்று என்பதை நாம் அறியலாம்.
                                    
                            வரை ஆடு[வருடை]                                    

இது போல் வரைஆடு என மலை ஆட்டை அழைத்தனர். வரை என்றால் மலை. வரைஆடு சங்கத் தமிழரால் வருடை எனவும் அழைக்கப்பட்டது. மேடராசியை வருடை எனக்காட்டும் சங்ககாலப் புலவரான நல்லந்துவனார் கோள்கள் சில வான்வெளியில் எந்தெந்த ராசியில் நின்றன என்பதையும் காட்டியுள்ளார். அவர் கூறியதை வைத்து அந்த வானியல் நிகழ்ச்சி கி மு 161ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் நாள் வியாழக்கிழமை நடந்ததாக சைவசித்தாந்தக்கழக நூற்பதிப்பில் 1969ல் வெளிவந்த சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூறப்பட்டுள்ளது. நல்லந்துவனார் 
“விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப 
எரிசடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதின் இருக்கையுள் 
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப........”                                         
                                                  - (பரிபாடல்: 11: 1 - 7)
என விரிவாக சொல்கிறார். இதில்
“வருடையைப் படிமகன் வாய்ப்ப”
என்று வருடை ராசிக்கு (மேடராசிக்கு) செவ்வாய் (படிமகன்) வந்ததை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வருடை இராசியை (மேடராசியை) தொடக்கமாகக் கொண்டு ஞாயிற்று மண்டலம் சுற்றிவரும் ஒரு சுற்று வருடம் ஆயிற்று. 

சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் யாடு - ஆடு; வருடை என மேடராசியை அழைத்தனர். அதனால் சங்கப் புலவர் வாயிலாக யாடு - ஆடு ஆகி, யாண்டு - ஆண்டு ஆகி, வருடை - வருடம் ஆனதையும் கண்டோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து சொல்லப்படும் ஆண்டு, வருடம் தமிழா! எனக்கேட்போருக்கு என்ன பதில் சொல்லலாம்?
 இனிதே,
 தமிழரசி.