Sunday, 20 March 2022

யாரை மனிதர் என்று சொல்லலாம்?


இன்பமாக இயற்கையை இரசித்து அதனோடு இசைந்து சங்ககாலத் தமிழர்  வாழ்ந்தனர். அதனை சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இயற்கையின் படைப்பிலே அறிவும் ஆற்றலும் மிக்க படைப்பு மனிதர் எனச் சொல்வது சரியா? மனிதரை சிந்தனைத் திறன் மிக்கவர் எனக்கூறலாம். ஆற்றல் மிக்கவர் என்று சொல்லமுடியாது. 

மரஞ் செடி, கொடிகள் ஒரே இடத்தில் நிலைத்து வாழினும் அவற்றால் மலையை மண்ணாக்கவும் முடியும். தூய்மையற்ற காற்றை தூய்மையாக்கவும் முடியும். நிலத்தடி நீரைக் காக்க நிழல் கவிக்கவும் இயலும். இவற்றுடன் சூரிய ஒளியையும் சேர்த்து தமக்கான உணவை தாமே உண்டாக்கவும் தெரியும். மனிதர்க்கு இவற்றைச் செய்ய இயலுமா? எனவே உலக உயிர்களில் மரம், செடி, கொடிகளே மிக்க ஆற்றலுடையன. 

யாரை மனிதர் என்று சொல்லலாம்? ஞானியரை? விஞ்ஞானியரை? மெஞ்ஞானியரை? அறிஞரை? சான்றோரை? கற்றோரை? செல்வந்தரை? அரசாட்சி செய்வோரை? விளையாட்டு வீரரை? முதியோரை? இப்படி எவரைச் சொல்லமுடியும்?

ஆனால்யாரை மனிதர் என்று சொல்லலாம்? என்பதை சங்ககாலப் புலவரான மணிபூங்குன்றனார் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவரை கணியன் பூங்குன்றனார், கணிபுன் குன்றனார் என்றெல்லாம் அழைப்பர். அவர் தமிழ் நாட்டிலுள்ள திருப்புத்தூர் - மகிபாலன்பட்டியில் பிறந்தார் என்று அங்கு நினைவுத்தூண் எழுப்பியுள்ளனர்.

மகிபாலன்பட்டியில் உள்ள நினைவுத்தூண் [photo: Dinamalar]


வே சுவாமிநாதையர் மணிபூங்குன்றனார் எனவும் பாடம் என எழுதியும் எவரும் கண்டு கொள்ளவில்லை.  உண்மையில் மணிபூங்குன்றனார் பிறந்த மணிபூங்குன்று இன்றும் ஈழத்து வன்னியில் உள்ள ஒட்டுசுட்டானுக்கும் நெடுங்கேணிக்கும் இடையே தலைநிமிர்ந்து நிற்கிறது. அக்குன்று செங்குத்தானது. மகிழமோட்டை அருகே அது இருக்கிறது. 

பரிபாடல் திரட்டு இருந்தையூரின் சிறப்பைக் கூறுமிடத்தில்மகிழம் பூபற்றிக்கூறுகிறது.

ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழம்

பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி

மணி நிறம் கொண்ட மலை

- (பரிபாடல் திரட்டு: 1: 7 - 9)

எனவே மகிழமரங்கள் மலையும் மலைசார்ந்த இடத்தில் [குறிஞ்சி நிலத்தில்] வளர்வன என்பது தெளிவாகின்றது. மணிபூங்குன்றில் இருந்த மகிழமரம் சூழ்ந்த மோட்டையை மகிழமோட்டை என்றனர். [மலை, குன்று போன்றவற்றின் முகட்டில் ஏற்படும் வெடிப்பால் தோன்றும் நீர்த்தேக்கத்தைமோட்டைஎனவும், பள்ளமாக இருக்கும் நீர்த்தேக்கத்தைபொக்கணைஎன்றும் கூறுவர்]  வன்னிப்பகுதியில் காஞ்சுரமோட்டை, புல்மோட்டை, முரசுமோட்டை என மோட்டைகள் இருக்கின்றன. ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி செல்லும் வழியில் மகிழமோட்டை சென்று மணிபூங்குன்றை அடையலாம். 

ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவுக்காக 1966ல் சென்ற போது மணிபூங்குன்றுக்குச் சென்றோம். குறுகிய பாதை வழியே செல்லவேண்டி இருந்ததால் ஒற்றை மாட்டு வண்டிகளில் சென்றோம். யானைக்காடு ஆதலால் வேட்டைக்காரரும் வந்தனர். எங்களை அங்கு கூட்டிச் சென்றவர் பன்னெடுங்காலமாக அப்பகுதியில் வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். மணிபூங்குன்றின் அடிவாரத்தில் மிருகங்களின் சிற்பங்களும் இருந்தன.  

எனது சித்தி [அம்மாவின் தங்கை], மகள்இங்கே பாருங்க தாய் யானையும் குட்டியும் துதிக்கையால் கட்டி விளையாடுவதைஎன ஒரு புடைப்புச் சிற்பத்தைக் காட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்தப்பகுதி எங்கும் எத்தனை மலைகள்? எத்தனை குன்றுகள்? எத்தனை குளங்கள்? எத்தனை எத்தனை கட்டிட இடிபாடுகள்? கருங்கற் தூண்களை ஒன்றன்மேல் ஒன்றாக கிடையாக அடுக்கிக் கட்டிய மதில்கள்? அவற்றின் இடிபாடு என என் இளநெஞ்சிற் பதிந்தன.

மணிபூங்குன்றனார்யாதும் ஊரே யாவரும் கேளிர்எனும் அவரது புறநானூற்றுப் பாடலால் உலகப்புகழ் பெற்றவர். அப்பாடலின் எட்டாவது அடியில் குறிப்பிடும்கல் பொருது இரங்கும் மல்லற் பேராறு  ஒட்டுசுட்டானால் ஓடி முல்லைத்தீவுக் கடலில் கலந்த வண்ணமே இருக்கிறது. அவர் பிறந்தமணிபூங்குன்றும்பாடலில் குறிப்பிடும்பேராறும்இருந்தும் அவரை ஈழத்தவராக இனங்காணாது இருப்பது வரலாற்றுத் தவறாகும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாது என்றலும் இலமே மின்னோடு

வானம் தண்துளி தலைஇ ஆனது

கல்பொருது இரங்கும் மல்லற் பேராற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியாரை வியந்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- (புறநானூறு:192)

தற்போது இப்பாடலை எழுதுவோர் பேராற்று என்பதை பேரியாற்று என எழுதுகின்றனர். 

பேராறு

மணிபூங்குன்றனார் இயற்றிய பாடல்களாக புறநானூற்றில் ஒரு பாடலும் நற்றிணையில் ஒரு பாடலுமாக இரண்டு பாடல்களே சங்க இலக்கியத்தில் இருக்கின்றன. எனினும் அவரது நற்றிணைப் பாடலை பலரும் கண்டுகொள்ளாது இருப்பது பெருவியப்பே. ‘யாரை மனிதர் என்று சொல்லலாம்என்பதை மிகத் தெளிவாக நற்றிணைப் பாடலில் உரத்து முழங்கியுள்ளார்.

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்

பொன்னுங் கொள்ளார் மன்னர்

            - (நற்றிணை: 226: 1 - 3)

மரம்சாக [மரஞ்சா] மருந்தையும் [மருந்தும்] எடுத்துக் கொள்ளாதவர் [கொள்ளார்] மனிதர் [மாந்தர்].

தமது வலிமைகெட[உரஞ்சா] தவம் செய்யார் உயர்தவத்தோர்.

குடிமக்களின் வளம் கெட்டுப்போக [வளங்கெட] செல்வத்தை [பொன்னுங்] எடுத்துக்கொள்ளாதவர் ஆட்சியாளர்[மன்னர்]

அதாவது மரத்தைக் கொன்று அதிலிருந்து செய்த மருந்தை தமது நோய் தீர்க்கவும் எடுத்துக் கொள்ளாதவர் எவரோ அவரே மனிதர் ஆவர். தமது வலிமை கெட உயர்தவம் செய்யாதோரே தவமுடையோர்.  வளம் கெட்டுப்போக குடிகளின் செல்வத்தை எடுத்துக் கொள்ளாதவரே ஆட்சியாளர் ஆவர்என்கிறார்.

மணிபூங்குன்றனாரின் கருத்துப்படி மருந்துக்காக எனினும் மரத்தைக் கொல்பவர் மனிதர் இல்லை. தம் வலிமை கெடும்படி தவம் செய்வோர் தவத்தோர் அல்லர்.  குடிகளின் வளம் கெட்டாலும் வரி என்ற பெயரில் நாளும் நாளும் உணவுப் பொருட்களின் விலையை கூட்டுவோர் தேவையற்ற வரி அறவிடுவோர் ஆட்சியார் அல்லர்.

பண்டைத் தமிழர் நோய் தீர்க்கும் மருந்தை பெரும்பாலும் மரஞ்செடி கொடிகளில் இருந்தே செய்தனர். மருந்து செய்ய பூ, காய், பிஞ்சு, விதை, இலை, பட்டை, வேர் என எதை எடுத்தாலும் சிறிதளவு எடுப்பர். ஏனெனின் மிகச்சிறிதளவு மருந்தே நோய் தீர்த்தது. உடனுக்குடன் தேவைக்கு ஏற்ப மருந்தைச் செய்தனர். அதனால் முழு மரத்தையும் அடியோடு வெட்டிச் சாய்க்க வேண்டிய தேவை இருக்கவில்லை. 

யாரை மனிதர் எனலாம்? மரத்தைச் சாகடித்து செய்த மருந்தை உட்கொள்ளாதவரை மனிதர் எனலாம். மரத்தை வெட்டி வெட்டிச் சாய்ப்போரை என்ன என்பது? நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்தி வீதி சமைப்போரை நகர் அமைப்போரை.... என்னென்று அழைப்பது? மனிதரா!!!!

இன்றைய கால சூழ்நிலையில் மணிபூங்குன்றனாரின் மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்என்ற முழக்கமே அவரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் முழக்கத்தை விட வேண்டியதாக இருக்கிறது. எனவே நா வின் காதுக்கு மணிபூங்குன்றனாரின் மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் என்னும் முழக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டிய கடப்பாடு ஈழத்தமிழராகிய எமக்கு இருக்கிறது. 

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment