Saturday, 31 December 2022

வாழிய என்றே 2023ஐ வரவேற்போம்


எந்தமிழர் எங்கும் ஏற்றமாய் வாழ

  எம்நெஞ்சி லன்பும் இன்பமும் பெருக

சொந்தமும் பந்தமும் சேர்ந் தணைக்க

  செவ்விதழ் மலர சிரித்திடும் பாலகர்

தந்தனத் தோம் என்று பாட்டிசைக்க

  தளிர் மேகம் தண்மழை தூவ

வந்தனம் கூறி வாழிய என்றே

  வந்திடும் புத்தாண்டை வரவேற்போம்

இனிதே,

தமிழரசி.

Thursday, 22 December 2022

நுடங்கும் ஒளியே!


சிற்றம்பலவா என்று நின்சீரடியே நம்பி

சிந்தித் திருப்போர்தம் சிந்தையுள்ளே

முற்றுமுழுதாய் நிறைந்து மூர்த்தியுன் வடிவு

மொய்ப்புடன் காட்டும் மென்னியலே

வற்றாயின்ப வெள்ளத்து ஆழ்த்தி வாழ்விக்கும்

வாழ்வே வாராநெறி தனையேஎ

கற்காமுறையிற் கற்றிடவைக்கும் கற்பனைப் பொருளாய்

காண்பதற்கரிதாய் நுடங்கும் ஒளியே!

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மொய்ப்பு - பெருமிதத்துடன் ஆன வலிமை

மென்னியல் - மென்மையான இயல்பு

வாராநெறி - மீண்டும் பிறந்து வராத வழி

கற்காமுறை - கற்று அறியாத முறையில்

கற்றிட வைக்கும் - கற்க வைக்கும்

நுடங்கும் - நுட்பமாக ஒடுங்கும்

Friday, 9 December 2022

வாழும் உலகிற் பறப்போம்


கூவும் குயில் குரலில் கண்கள் மெல்ல விழித்து

கன்னித் தமிழ் பாடல் கவிதை தனைச் சுவைப்போம்

மேவும் கதிர் ஒளியில் மேயும் கன்றைப் பார்த்து

மெல்லப் போய் அணைத்து முத்த மிட்டு மகிழ்வோம்

தாவும் முயல் பின்னால் தயங்கித் தயங்கிச் சென்று

தளிரைக் கொஞ்சங் கொடுத்து தின்னு மழகை ரசிப்போம்

வாவும் வண்ணப் பூச்சி வண்ணந் தனை வரைந்து

  வட்ட மிட்டுத் திரிந்து வாழும் உலகிற் பறப்போம்

இனிதே,

தமிழரசி.

சொல்விளக்கம்:

மேவும் - பரவுதல்

தாவும் - தாவிப் பாயும்

வாவும் - அசைதல்/பறத்தல்/பாய்தல்

குறிப்பு:

பேத்தி மகிழினி பாடியாடித் திரிய எழுதியது.

Saturday, 3 December 2022

புங்கைவாழ் பெருமாட்டியே!

புங்குடுதீவு கண்ணகி அம்மன் 


எண்ணங்கள் பலவுடைய

ஏழையர்க்கு அருளவென்றே

வண்ணங்கள் பலவுடைய

வனங்களைப் படைத்தவர்க்கு

உண்ணவுணவு அளித்து

உவந்து காக்குமெம்

பெண்ணவளே கண்ணகியே

 புங்கைவாழ் பெருமாட்டியே!

இனிதே,

தமிழரசி.

Friday, 25 November 2022

தருந்தமிழுக்கு ஈடேது!


எனை ஆளும் சிவனவன்

  என் சிந்தை யுள்ளே

தினைப் போதும் அகலாதே

  துன்ப மெனும் புடமிட்டு    

வினை யாலே தடுமாறி

  வெய் துயிர்த்து வாடாது

தனையே நினைக்க வைத்து

  தருந் தமிழுக் கீடேது

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

தினைப் போதும் - சிறிதளவு நேரமும்

அகலாது - விட்டு நீங்காது

புடமிட்டு - குற்றங்களை நீக்கி தூய்மை செய்தல்

வெய்துயிர்த்து - ஆற்றாமையால் வரும் நெடுமூச்சு

வாடாது - சோர்வடையாது

தனையே - தன்னை/சிவனை

ஈடேது - ஒப்பு ஏதும் இல்லை

Tuesday, 1 November 2022

ஏழிசையும் பிறந்தன இங்கே

இசை என்பது ஓர் இன்ப ஊற்று. இவ்வுலகின் உயிர்ப்பே இசையில் தான் தங்கியிருக்கிறது. இயற்கையின் உயிர்த்துடிப்பாகிய இசை கல்லிலும் மண்ணிலும் நெருப்பிலும் நீரிலும் காற்றிலும் விண்ணிலும் எங்கனும் இருப்பதை மனிதன் கண்டான். இன்பங்கொண்டான். இயற்கையோடு இசைந்து அவன் போட்ட கூக்குரல் மொழியாயிற்று. 


காட்டிலும் மேட்டிலும் குகையிலும் மலை முகட்டிலும் அவன் விலங்குகளுடனும் பறவைகளுடனும் சேர்ந்து பாடினான். ஆடினான். அந்தப் பாடலும் ஆடலும் அவனை மகிழ்வுறச் செய்தன. இவ்வாறு பேச்சு, பாடல், ஆடல் ஆகிய முக்கூறுகளையும் இயற்கையிடம் இருந்து ஆதி மனிதன் கற்றுக் கொண்டான். 


பண்டைய மனிதன் தான் உருவாக்கிய மொழியில் இயற்கையிடம் இருந்து கற்ற முக்கூறுகளையும் புகுத்திக் கொண்டான். இயற்கையாக - இயல்பாக வந்த மொழி, இயல்மொழியாய் இயல்-தமிழானது. இயற்றமிழில் இருந்து இசைத்தமிழும், அவற்றிலிருந்து நாடகத் தமிழும் உருவாயிற்று. பண்டைய மனிதன் இயற்கையிடம் இருந்து கற்ற பேச்சு, பாடல், ஆடல் ஆகிய முக்கூறுகளையும் முறையே இயல், இசை, நாடகம், என முத்தமிழாய்ப் போற்றிப் பாதுகாப்போர் தமிழரே. அதனால் இயற்கையில் இருந்து பிறந்த மொழியாய், உலகின் முதன் மொழியாய், முத்தமிழாய் தமிழ் விளங்குகிறது. உலகில் இருக்கும் மற்ற மொழிகளுக்கு இல்லாத இந்தத் தனிச்சிறப்பு தமிழுக்கே உரியதாகும்.


தமிழின் குற்றெழுத்து நெட்டெழுத்தாக மாறும் போது இயல்பாகவே இசை பிறக்கிறது. ‘….., ….., ….., ….., , ….., என ஒருக்கால் பாடிப்பாருங்கள். இசையின் இயல்பை நீங்கள் உணர்வீர்கள். தமிழ் என்று தோன்றியதோ அன்றே இசைத்தமிழாகிய தமிழிசை தோன்றிவிட்டது. அதனால் பண்டைத் தமிழர்கள் , , , , , , என்னும் தமிழின் நெட்டெழுத்துக்களை ஏழு சுரங்களின் எழுத்துக்களாகக் கொண்டனர். அதனைப் பிங்கல நிகண்டு

வென்

றேழு ஏழிசைக்கு எய்தும் அக்கரங்கள்   

                                        - (பிங்கல நிகண்டு: 1415)

எனச் சொல்லும். அக்கரம் என்றால் எழுத்து. 


பண்டைய தமிழர்கள் ஆலாபனையை ஆளத்தி என்று கூறினர். இந்த ஆளத்தி - நிற ஆளத்தி, காட்டாளத்தி என இருவகைப்படும். உயிரெழுத்துக்களின் நெட்டெழுத்துக்களைக் கொண்டு செய்த ஆளத்தியே நிற ஆளத்தியாகும். இன்றும் கர்நாடக சங்கீதகாரர் ஆலாபனை செய்யும் போது தமிழின் நெட்டெழுத்துக்களைப் பயன்படுத்துவதைக் கேட்டிருப்பீர்கள். நம் முன்னோர் ஏழு இசைச் சுரங்களின் தன்மைகளையும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற சொற்களால் குறித்துஏழிசைஎன்றனர். 


அதனைக் காரைக்கால் அம்மையார்

துத்தம் கைக்கிளை விளரி தாரம்

உழை இளி ஓசை பண் கெழுமப் பாடி  

                                              - (.திருமுறை: 11: 1: 9)

இறைவன் ஆடியதாகக் கூறுகிறார்


இந்த ஏழு சுரங்களின் தன்மைகள் மாறுவதாலேயே பண்கள் பிறக்கின்றன. பாருங்கள் அம்மையாரும்பண்கெழுமப் பாடிஇறைவன் ஆடியதாகவே கூறுகிறார். 


இளங்கோவடிகளும் நிகண்டுகளும் குரல் என்று கூறும் சுரத்தின் இயல்பை இப்பாடலில் காரைக்கால் அம்மையார் ஓசை என்கின்றார். உயிரினங்களே குரல் எழுப்பும். ஆனால் ஓசையை உயிரற்றனவும் எழுப்ப வல்லன. உலக இயற்கை எங்கும் இசை விரவிக் கிடப்பதால் இசைச்சுரத்தின் தன்மையை ஓசை என்று காரைக்கால் அம்மையார் சொன்னது போல் சொல்வதே பொருந்துமென என் தந்தை கூறுவார்.


ஈழத்தமிழருக்கு இசைப்பாரம்பரியம் இல்லை என நினைப்போரும் நான் கூறப்போவதை அறிந்து கொள்வது நல்லது. சிறுமியாக இருந்த போது இராமநாதன் கல்லூரியின் சிறுவர் விடுதியில் தங்கியிருந்து படித்தேன். கல்லூரியில் சேர்ந்த அன்றே உயர்தர வகுப்புப் படித்த அக்காமார் ஒவ்வொருவராக வந்துநீங்க எந்த ஊர்? ஏன் இங்க படிக்க வந்தீங்க?” என்று  கேட்டார்கள். அப்போது நான் பேசிய சுத்தத்தமிழே அவர்கள் என்னை நோக்கிப் படை எடுக்கக் காரணம் என்பதை பின்னாளில் அறிந்தேன். நான் எனது ஊர் புங்குடுதீவு என்று சொல்ல, ! தீவாளா?” என்றார்கள். நான் புங்குடுதீவு என்ற விடயம் விடுதி முழுவதும் பரவியது.


என்னைக் காண்பவர்கள் எல்லோரும் தீவாள், தீவாள் என்று கிண்டல் அடித்தனர். அத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை. தீவாள் திடுக்கிடுவாள் திண்ணைக்கு மண்ணெடுப்பாள் என்றும் பாடினார்கள். நான் இலங்கையும் ஒரு தீவு தானே?” என்றேன். அதற்கு அவர்கள், “நாங்க வீட்டிலிருந்து வரும்போது கடலைக்கடந்து வருவதில்லை. நீங்க கடலைக் கடந்து தானே வந்தேங்க. அப்ப நீங்க தீவாள் தானேஎன்றார்கள். உண்மையில் நான் புங்குடுதீவிலிருந்து செல்லவில்லை.  ஆனால் புங்குடுதீவு எனச்சொல்லி, அவர்களிடம் சிக்கிக்கொண்டேன்.


என் தந்தை [பண்டித மு ஆறுமுகன்] எப்போ வருவார் எனப் பார்த்திருந்தேன். அவர் வந்தார். நடந்த கதையைச் சொன்னேன்.  


உடுப்பை எடுத்துக்கொண்டு வாஎன்றார். 


எல்லாப் பொருட்களையும் எடுத்து வரவாஎன்றேன். 


மாற்றி உடுக்க உடுப்பும் துவாயும் கொண்டுவாங்கஎன்றார். 


மருதனாமடத்தில் இருந்து புறப்பட்ட கார் புங்குடுதீவு குறிகாட்டுவானில் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கி கடற்கரை ஓரமாக கொஞ்சத்தூரம் நடந்து சென்றோம். 


உடையைக் கழற்று நீந்துவோம்என்றார். 


முன்பே அவர் எனக்கு நீச்சல் கற்றுத் தந்திருந்தபடியால் மகிழ்ச்சியுடன் கடலில் நீந்தினேன். இருவரும் நீந்தியபடி கொஞ்சத்தூரம் சென்றோம். 


குறிப்பிட்ட தூரம் சென்றபின் இடைநீரில் நின்று கொண்டுஎங்கள் ஏழு பெருந்தீவகத்தையும் பார்என புங்குடுதீவையும் சேர்த்து ஏழுதீவையும் ஒவ்வொன்றாய் காட்டி, “நீலக்கடல் இடையே ஏழு மரகதப்பேழை மிதப்பது தெரிகிறதா?” என்றார். உலகின் எந்த இடத்தில் இருந்தும் இந்த அழகைப் பார்க்க முடியாது. இது புங்குடுதீவாருக்கு இயற்கை கொடுத்த கொடை என்றார். 


இந்த ஏழு தீவுக்கும் இதைவிடப் பெரியசிறப்பு இருக்கிறது. ஏழிசை இராவணன், வாழ்ந்த தீவல்லவா இலங்கை”, எனக்கூறி மிக உரத்த குரலில் ஆலாபனை செய்தபடி ஒரு பழைய பாடலைப் பாடி எங்கள் ஏழு தீவகத்திற்கும் ஏழிசைக்கும் உள்ள தொடர்பைச் சொன்னார். 


எங்கள் தீவகங்களில் இருந்தே ஏழிசை பிறந்தது. இப்போதீவாள்என்று உரத்துச் சொல்லிப்பார், இனிக்கும்என்றார். 


,ரி, , , , , நிஎன்ற ஏழிசையும் எங்கள் ஏழுதீவிலும் பிறந்தன, என்பதைக் கேட்டதும் என் செவி இனித்தது. “என் சிந்தை இனிக்க புங்குடுதீவாள், புங்குடுதீவாள்என்று சொன்னேன்.  நான் அப்போது சிறுமியாய் இருந்ததால் அவர் பாடிய அப்பாடலை மறந்துவிட்டேன். இப்போ தேடுகிறேன் கிடைக்கவில்லை. புங்குடுதீவாளாக அந்தச் சேதியைத் தேடியதில் கிடைத்தைத் தருகிறேன். 


பண்டைத் தமிழர் ஏழிசைச் சுரங்களின் குறியீடாக ரி நியைக் கொண்டனர். அதனை அறிவனார் எழுதியஐந்தொகைஎன்னும் நூல் கூறுகிறது. இந்நூலின் பாடல்களை அடியார்க்கு நல்லாரின் உரையில் காணலாம். குறுந்தொகை, நெடுந்தொகை போன்ற தொகைநூல்கள் வந்த காலத்தைச் சேர்ந்ததாய் இந்நூல் இருக்கலாம் என்பது என் தந்தையின் கருத்தாகும். அந்நூலை இன்று நாம் பஞ்சமரபு என வடமொழிவாய்ப்பட்டு அழைக்கிறோம். 


ஏழிசைச் சுரங்களை 

சரிகம பதநிஎன்று ஏழெழுத்தால் தானம்

வரிபார்த்த கண்ணினாய் வைத்து - தெரிவரிய

ஏழுசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்

சூழ்முதலாம் சுத்தத் துளை

    - (பஞ்சமரபு: வங்கியமரபு[குழல்]: 1)

என அறிவனார் வரிபார்த்த கண்ணினாய்!’ என பெண்ணை விளித்து, இசையைப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுப்பதை இப்பாடல் சொல்கிறது. எனவே அன்றைய தமிழர் ஏட்டையும் பெண்கள் தொடுவதில்லை என்ற நிலையில் இருக்கவில்லை என்பதையும் ஐந்தொகை மிகத்தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது.


தமிழின் ஏழு இசைச்சுரங்களையும் சேந்தன் திவாகரம் என்ற நிகண்டும்

சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்

பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை

ஏழும் அவற்றின் எழுத்தே ஆகும்

எனும் இவ்

ஏழெழுத்தும் ஏழிசைக்கு உரிய     

                                            - (சேந்தன் திவாகரம்:10 : 132)

எனச் சொல்கிறது. இந்தத் தமிழிசைச்சுரங்கள் ஏழும் இன்று கர்நாடக சங்கீதமாகய் எம்மிடமே வலம் வருகிறது.


பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் [கி பி 1210 - 1241] வட இந்தியாவில் வாழ்ந்த சாரங்கதேவர் தமிழகம் வந்து தமிழிசையை ஆராய்ந்தார். அவர் தேவாரம், திவ்வியப்பிரபந்தம் போன்றவற்றின் பண்களின் துணைகொண்டு தமிழ்ப்பண்களை மிக நன்றாக ஆராய்ந்து வடமொழியில் எழுதியநூலே சங்கீத ரத்னாகரம்’ [Sangita Ratnakara]. அதில் ரி நிஎன்னும் தமிழரின் ஏழு சுரங்களையும் வட மொழியில் மாற்றி எழுதினார். இன்றைய கர்நாடக இசைக்கு அதுவே ஆதாரம். 


அவர் ஏழுசுரங்களையும் வடமொழியாக மாற்றி எழுதிய போதிலும் அவ்வேழுசுரங்களும் எங்கள் ஏழுபெருந்தீவுகளிலும் பிறந்தன என்ற உண்மையை மறைக்காது எழுதியுள்ளார். அதற்காக சாரங்க தேவரை நாம் போற்ற வேண்டும். சாரங்க தேவர், சங்கீத ரத்னாகரத்தை எழுதுவதற்கு ஆயிரவருடங்களுக்கு முன்னரே இளங்கோவடிகள் தமிழிசையின் நுட்பங்களையும் இசைக் கலைஞர்களின் இயல்புகளையும் மிகவிரிவாகவே தந்திருக்கிறார்.


தமிழிசை இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையுடையது. தமிழிசையின் ஏழிசையாகிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன எங்கே பிறந்தன என்பதை நம்முன்னோரும், அவர்களைப் பார்த்து சாரங்க தேவரும், பிறரும் எழுதியுள்ளனர். ஏழிசையும் ஏழு தீவுகளில் பிறந்தனவாம். அந்த ஏழுதீவுகளையும் ஏழ்பொழில் என்றும் கூறுவர்.


தமிழர் நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலத்தை தீவகம் - தீவம் - தீவு என்ற சொற்களால் அழைத்தனர். அதன் உண்மையைப் புரிந்து கொள்ளாத வடமொழியாளர்கள்தீவம்’ என்ற தமிழ்ச்சொல்லைத்வீபஎன்றார்கள். வடமொழியில் த்வீப என்றால் இருபுறமும் நீரால் சூழப்பட்டது என்ற கருத்தையே தரும். தமிழர் இருபுறமும் நீரால் சூழப்பட்ட நிலத்தை ஆற்றிடைக்குறை - இலங்கை - அரங்ககம் என்ற பெயர்களால் அழைத்தனர்அதனை

இலங்கையும் துருத்தியும் எனவரும் பெயரொடு

அரங்கமும் ஆற்றிடைக் குறையென அறைவர்

    - (சேந்தன் திவாகரம்: 5: 60)

என சேந்தன் திவாகரம் சொல்வதால் அறியலாம். பண்டை நாளில் குமரியாற்றுக்கு இடையே ஆற்றிடைக் குறையாக இருந்த நிலத்தை இலங்கை என்றனர். கடல் கோளால் அது தீவாக மாறிய போதும் அதன் பண்டைய இலங்கை என்ற பெயர் மாறாது நிலைத்து இருக்கிறது.


சங்கப்புலவரான கடுவன் இளவெயினனார் முருகன் சூரபத்மனுடன் போர் செய்ததைக் கூறுமிடத்தில்

தீயழல் துவைப்பத் திரிய விட்டெரிந்து……

நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடை

குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து

மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை   

- (பரிபாடல்: 5: 3/8-10)

எனபேரொலியோடு தீயழலைக் கக்குகின்ற வேலை விட்டெரிந்து நாவல்மரச்சோலை, வடசோலைகளுக்கு இடையேயிருந்த கிரவுஞ்சம் [குருகு - அன்றில்] என்னும் பறவையின் பெயர் பெற்ற மலையை உடைத்து அம்மலையின் ஊடாக வழியை உண்டாக்கிய ஆறு மெல்லிய தலையுடைய முருகன்என்கிறார். அன்றில் பறவையின் வடமொழிப் பெயரே கிரவுஞ்சம்.


மணிமேகலையின் பாத்திரம் பெற்ற காதையில் 

ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்

ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது

நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து

- (மணிமேகலை: 11: 105 - 107)

என மணிமேகலை அமுதசுரபி பெற்றதைக் கூறும் சீத்தலைச் சாத்தனார் நயினாதீவை நாவல்மரப் பெயருடைய தீவு என்கிறார். கந்தபுராணமும் முருகன் கடல் நடுவே இருந்த கிரவுஞ்சமலையை உடைத்த போது கிரௌஞ்ச மலைச்சிகரம் ஏழு துண்டுகளாய் சிதறி வீழ்ந்தது. அப்படி வீழ்ந்த சிகரத்தின் துண்டுகள் ஏழும் கடலின் அடியில் இருந்த மலைத்தொடரில் தங்கித் தீவுகளாகின. அந்த ஏழு தீவுகளையும் நாவலந்தீவு, இறலித்தீவு, குசைத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சான்மலித்தீவு, தெங்கின்தீவு, புட்கரத்தீவு எனச் சொல்கிறது. கந்தபுராணத்தின் துணையைக் கொண்டு பரிபாடலில் கடுவன் இளவெயினனார் பாடிய பாடலைப் பார்தால் அத்தீவுகள் யாதெனப் புரியும்.


முருகன் திருச்செந்தூரில் நின்று நாவலந் தண்பொழிலாகிய  நயினாதீவுக்கும், வடபொழிலாகிய காரைதீவு, எழுவதீவு, அனலதீவுகட்கு இடையே இருந்த கிரவுஞ்சம் என்ற பெரியமலைச் சிகரத்தை உடைத்தார். கிரவுஞ்சமலைச் சிகரத்திலிருந்து சிதறி வீழ்ந்த துண்டுகள் ஏழும் மலைத்தொடரில் மோதிய போது எழுப்பிய ஓசையே - இசையே ஏழிசையாயின. அதனால் அத்தீவுகள் ஏழும் ஏழிசை பிறந்த தீவுகளாகச் சுட்டப்படுகின்றன


அறப்பளீசுர சதகம் என்னும் நூலும் எமது ஏழு தீவுகளையும் சொல்கிறது. அந்நூல் 

சா கத்தீவம் இங்கிதைப் 

     போர்ப்பது திருப்பாற் கடல் 

- [அறப்பளீசுர சதகம்: 71]

என்று காரைதீவைச் சூழ திருப்பாற்கடல் இருப்பதாகச் சொல்கிறது.


திருப்பாற்கடலை ஆண்டாள் இன்னொரு விதமாக

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை 

- (திருப்பாவை - 30)

என்கிறாள். ஆண்டாள் இப்பாடலில் பாற்கடல் கடைந்த மாதவனை   வங்கக்கடல் கடைந்தவன் என்றல்லவா சொல்கிறாள். ஆண்டாளின்கூற்றுப்படி வங்கக்கடல் தானே பாற்கடல்? எனவே எங்கள் தீவகங்கள் ஏழும் பாற் கடலில்தானே இருக்கின்றன!


        ஏழிசை பிறந்த ஏழுதீவுகளும் 

                      ஏழுசுரங்களும் 

ஏழிசை

ஏழிசைச் சுரங்கள் பிறந்த தீவுகள்

ஏழிசைக்கு

எழுத்து

இசை ஒலிக் குறியீடு

குரல்

நாவல் தீவு/ சம்புத்தீவு/ நயினாதீவு

துத்தம்

இறலித்தீவு/ சாகத்தீவு/ 

காரை தீவு

ரி

கைக்கிளை

குசைத்தீவு/ குசத்தீவு / [ஊர்காவற்றுறை, வேலணை, மண்டதீவு]

உழை

அன்றில்தீவு/ கிரவுஞ்சத்தீவு/ புங்குடுதீவு

இளி

இலவந்தீவு/ சால்மலித்தீவு/ அனலைதீவு

விளரி

தெங்கின்தீவு/ சுவேதத்தீவு/ எழுவதீவு

தாரம்

புட்கரத்தீவு/ தாமரைத்தீவு/நெடுந்தீவு

நி


கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தில் படைக்காட்சிப் படலம் உள்ளது. அதில் தீவகங்களின் பெயர்களைப் பார்க்கலாம். இராவணன் தனது அரண்மனைக் கோபுரத்தில் இருந்து இராமருடன் போர் புரிய வந்திருக்கும் தனது படையைப் பார்க்கிறான். இராவணனுக்கு அவனது படைவீரர்களைக் காட்டும் இடத்தில் முதலில் காட்டுவது சாகத்தீவாராகிய காரைநகர்ப் படையினரை. அடுத்து குசைத் தீவாரகிய ஊர்காவற்றுறை, வேலணை, மண்டதீவுப் படையினரைக் காட்டி, இலவந்தீவாராகிய அனலதீவுப் படையினரைக் காட்டியே அன்றில் தீவாரான புங்குடுவுப் படையினரைக் காட்டுகிறார்.


புங்குடுதீவுப் படையை

அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு 

என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்

குன்றைக் கொண்டுபோய் குரைகடல் இட அறக்குலைந்தோர்

சென்று இத்தன்மையைத் தவிருமென்று இரந்திடத் தீர்ந்தோர்                                             - (கம்ப.யு.கா: 9397)


எனக்கூறி, புங்குடுதீவுப் படையினரிடம் அமரர்கள் மண்டியிட்டதாக  [இரந்திட] கம்பர் சொல்லும் பாங்கு சிந்திக்கத் தக்கது. கம்பர்இவர்கள் அன்றில் தீவில் வாழ்பவர்கள். தேவர்கள் எப்போதும் இருக்குமிடம் மேருமலை என்று சொல்ல அம்மலையைக் கொண்டுபோய் கடலில் போட்டவர்கள். அதனால் நிலைகுலைந்த தேவர்கள், இந்தச் செயலைக் கைவிடுங்கள் என்று கெஞ்சிக் கேட்க அதனைக் கைவிட்ட வீரர்கள் என புங்குடுதீவுப் படைவீரரை இராவணனுக்குக் காட்டினார்என்கிறார். 


இன்னும் பல இடத்துப் படையினரைக் காட்டிய பின்பே மற்றத்தீவுப் படையினரையும் காட்டுவதாக கம்பர் கூறுகிறார். இந்தத் தீவுகளில் எந்தெந்தத் தீவுகள் இன்றைய பெயர்களுடைய தீவுகளுக்கு பொருந்தும் என்ற முடிச்சை பரிபாடலும் மணிமேகலையும் கம்பராமாயணமும் கந்தபுராணமும் அவிழ்க்கின்றன. 


குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசையும் முறையே நயினாதீவு, காரைதீவு, (வேலணை + ஊர்காவற்றுறை + மண்டைதீவு), புங்குடுதீவு, அனலதீவு, எழுவதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளில் பிறந்தன என்பதை கருணாமிர்தசாகரமும், சங்கீத ரத்னாகரம் போன்ற சமஸ்கிருத இசை நூல்களும் சொல்கின்றன. இதற்கான கல்வெட்டாதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. நம் முன்னோர் சொன்னவற்றில் இருந்து தமிழர் இசைப் பாரம்பரியம் எங்கிருந்து முகிழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இனிதே,

தமிழரசி.