Sunday 31 October 2021

கேட்குமா இதயவீணை?

இச்சிறுவர் சிறுமியர் போல் எத்தனை இதயவீணை இன்று மீட்கப்படுகிறது

இதயம் கனக்கிறது என்பார்கள். அதன் உண்மையை இன்று உணர்ந்தேன். தாய் தந்தையர் என்னைவிட்டுப் போன போது உடல் கூடானதே அல்லாமல் என் இதயம் கனக்கவில்லை. இது ஆன்மாவின் பிணைப்பா? எனதன்புத் தங்கை சிவசக்தியே உமக்குக் கேட்குமா இதயவீணை!


இராமநாதன் கல்லூரி வாழ்க்கையில்தமிழரசி அக்காஎன அழைத்தபடி என்னைச் சுற்றி வந்த வட்டக்கருவிழியாளை நினைக்கிறேன். கண்ணீர் வரவில்லை. பூசைக்கு வந்த மலர்கள் மணம் பரப்பவே வருகின்றன. அதற்காக எந்த மலராவது கண்ணீர் உகுக்குமா? எத்தனை வருட ஆன்ம நேயம் இது? என் மனச்சுமையை எழுத்தில் வடிக்கப்பார்க்கிறேன். 


இராமநாதன் கல்லூரி மேடையில் சின்னஞ்சிறு சிறுமியாக வீணைவாசிக்க இருந்தாய். உன் முகத்தை வீணை மறைத்தது. பின்னர் Cushion போட்டு இருந்து பாடிப்பாடி வீணை வாசித்தாய். அந்த நிகழ்வு என் மனத்திரையில் நிழல் ஆடுகிறது. சிறுமியாய் பாடும்போதெல்லாம் வாயைக் கொஞ்சம் சுழித்து கழுத்தை ஒருபக்கம் நிமிர்த்திப் பாடுவாய். இலண்டனில் கச்சேரி செய்யும் பொழுதும் மற்றோர் அறியாத அந்தப் பாங்கை உம்மிடம் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.


அதற்கு முன்னர் தொடங்கியது எமது அக்கா தங்கை உறவு. கற்பகவல்லியின் பொற்பதங்களைப் பிடித்த இணுவில் வீரமணிஐயரிடம் இசையும் பரதமும் கற்றனை. அவரிடம் பரதம் கற்று அதனை அரங்கேற்றம் செய்த ஒரேயொரு மாணவி என்ற பெருமையும் பெற்றாய். அவ்வரங்கேற்றத்தை என் தந்தையுடன் வந்து பார்த்தேன். அன்று பார்த்த ஆண்டாளை மறக்குமா பார்த்தோர் இதயவீணை?

காலஓட்டத்தில் 1980களின் தொடக்கத்தில் ஏதோவொரு விமானநிலையத்தில் இருவரும் பேசிக்கொண்டோம். சிவநேசனை திருமணம் செய்து இருப்பதும், சீனா போவதாகவும் சொன்ன ஞாபகம். மீண்டும் வில்லுப்பாட்டு ஆறுமுகம் அத்தான் மகள் சகானாவின் திருமணத்தில் என்னை வந்து கட்டிக்கொண்டாய். 1986ல் அத்திருமணம் நடந்திருக்க வேண்டும். நீங்க இலண்டன் வந்திருப்பதை அப்போது அறிந்தேன்.


பிறக்கும் போதே ஒருசிலரே ஆசிரியராய்ப் பிறப்பதுண்டு. அத்தகைய ஓர் ஆசிரியையாய் வலம் வந்து உம்மிடம் கற்ற மாணவர்க்கு எல்லாம் இசையென்னும் அறிவுச்சுடரை ஏற்றி வைத்தாய். அந்தச் சுடர் அணையுமா? என் மகன் வாகீசன் ஏழுவயதுப் பையனாக உம்மிடம் வீணை கற்க வந்தான். கிழமைக்கு நான்கு நாட்கள் இலண்டன் பாரதிய வித்தியபவனில் கழியும். மகள் ஆரணிக்கு ஏடு தொடக்கி இசையும் வீணையும் கற்றுக் கொடுத்து இன்று அவள் இசைத்துறையில் ஈடுபட உமது அன்பும் அரவணைப்புமே காரணம். கேட்குமா ஆரணியின் இதயவீணை?


அன்று என்னுடன் பேசிய போது எனக்குச் சுகமில்லை என்றதும் உமது உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாது அத்தானைக் கூட்டிக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறேன் என்றாயே. கேட்குமா உம் அத்தான் சிவநேசனின் இதயவீணை?


உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். எமக்கு நல்ல பண்பான பெற்றோர். அன்பான உறவினர். அறிவும் ஆற்றலும் மிக்க ஆசிரியர்கள் கிடைத்தார்கள். அதைவிட மேலாக எமது ஆன்மீகத் தேடலுக்கும் கலைப் பசிக்கும் அள்ள அள்ளக் குறையாமல் உணவு ஊட்டியது நம் இராமநாதன் கல்லூரியே. மீண்டும் பிறப்புண்டேல் கலைப்பசியைத் தீர்த்து மகிழ்வோம். எப்போ எனக்கு அழைப்பு வருமோ அப்போது வருகிறேன்.

இனிதே,

தமிழரசி அக்கா.

No comments:

Post a Comment