Thursday 28 October 2021

மெய்சிலிர்த்தல் என்பதை புல்லரித்தல் எனலாமா?

எமது உடலில் உள்ள மயிர் குளிர், பயம், வியப்பு, மிக்க மகிழ்ச்சி போன்றவற்றால் சிலிர்க்கும். அதனை உடல் சிலிர்த்தல், மயிர் சிலிர்த்தல் என அழைப்பர். தோலின் உணர்வின் சமநிலையைப் பேணுவதற்காக உடலின் மயிர் எழுந்து குத்திட்டு சிலிர்த்து நிற்கும் நிலையை உடல் சிலிர்த்தல் என்கின்றோம்.  உடலை மெய் எனச் சொல்வதால் மெய்சிலிர்த்தல் என்றும் கூறுவர். இச்செயல்பாட்டை புளகம் கொள்ளல், மயிர்க்கூச்செறிதல், புள்ளெறிதல் என்ற பெயர்களாலும் அழைப்பர். புளகம் = புள் + அகம். புள் என்பது பறவை. பறவைகள் கூரான சொண்டால் கொத்துவத்தால்[குத்துவதால்] புள் என அழைத்தனர். மன எழுச்சியால் ஏற்படும் மெய்சிலிர்ப்பையே நம் முன்னோர் புளகம் கொள்ளல் என்றனர். அது அகத்துள்[மனத்துள்] நடைபெறுவது.

ஆனால் தற்காலத்தில் பலரும் மயிர்க்குச்செறிதல், புல்லரித்தல் என்றும் எழுதுகின்றனர். இந்தத் தவறை பத்திரிகைகளும், பதிப்பகத்தேரும், வலைத்தளங்களும் செய்வதைக் காணமுடிகிறது. அதற்குக் காரணமாக வலைத்தளங்களில் இருக்கும் அகராதிகளும் இருக்கலாம். எனவே அவர்கள் தரும் சொற்கள் சரியான கருத்தைத் தருகின்றனவா என்பதைப் பார்ப்போம்.

  1. மயிர்க்குச்செறிதல்: இச்சொல்லைப் பிரித்து எழுதினால் அவர்கள் விடும் பிழை தெரியும். மயிர் + குச்சு + எறிதல் = மயிர்க்குச்செறிதல் ஆகும். இதில் வரும்குச்சுஎனும் வேர்ச் சொல் எதனைக் குறிக்கிறது? குச்சு - குச்சி. குச்சிக்கும் மெய்சிலிர்த்தலுக்கும் என்ன தொடர்பு உண்டு? சிந்தித்துப் பாருங்கள். இதை மயிர்க்கூச்செறிதல் என எழுதவேண்டும்மயிர் + கூச்சு + எறிதல் = மயிர்க்கூச்செறிதல் எனப் புணரும். ‘கூச்சு’ - கூரான முனை என்ற கருத்தைத் தரும். ‘எறிதல்’ -  நிமிர்தல் என்ற பொருளில் வருகிறது. மயிரின் கூரான முனைகள் குத்திட்டு நிற்பதையே மயிர்க்கூச்செறிதல் என்கிறோம்.
  2. புல்லரித்தல்: புல் + அரித்தல் = புல்லரித்தல் எனப் புணரும். புல், அரித்தல் எனும் இந்த இருசொற்களும் தமிழர்களாகிய எமக்குத் தெரிந்த சொற்களே. இவை புணர்ந்துவரும் புல்லரித்தல் செருக்கிய புல்லை மண்ணில்லாது அரித்து எடுப்பதைக் குறிக்கும். புல் அரித்தலுக்கும் மெய்சிலிர்த்தலுக்கும் ஏதாவதுதொடர்பு உண்டா? இவற்றை சிந்தனை செய்து பார்க்க மாட்டோமா? நமது மொழியை நாமே இழிவுபடுத்துகிறோமா? அழிக்கிறோமா? தெரியவில்லை. இதனை புள்ளெறிதல் என எழுதவேண்டும். உடலின் மயிர் குத்திட்டு நிமிர்ந்து நிற்பதையே புள்ளெறிதல் குறிக்கிறது. இவற்றை திருத்தி எழுதுவது தமிழராகிய நமது கடமையாகும்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment