இயற்கையின் எல்லாவடிவிலும் சக்தி கலந்திருக்கிறது. காற்று, நீர், விண், மண், மலை, நெருப்பு, உயிர்கள் யாவிலும் சக்தி இருக்கிறது. ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும். வெப்பசக்தி எரிசக்தியாகவும் எரிசக்தி வெப்ப சக்தியாகவும் மாறுவதை அறிவோம். அதனால் இயற்கையில் இருந்து சக்தியைப் பிரித்து எடுக்க முடியாது. சக்தியே உலகை இயக்குகிறது.
காட்டில் வாழ்ந்த மனிதன் குளிரிலும் வெப்பத்திலும் உணவு தேடித் கொடுத்தும் பிற கொடிய உயிரினங்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி வளர்த்த தாயின் சக்தியை மதித்தான். சிறுவயதிலேயே தாயின் சக்தியைக் கண்டு வியந்த மனிதன் அவளைப் போற்றினான். அதுவே தாய் தெய்வ வழிபாடாக சக்திவழிபாடக முகிழ்ந்தது. அது பின்னர் சிவவழிபாடாக ஆண்தெய்வ வழிபாடாகக் கிளைவிட்டுப் படர்ந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
அந்த உண்மையை சங்க இலக்கிய நூலான ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தும்
“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்
இருதாள் நிழற்கீழ் மூவகை
உலகும் முகிழ்ந்தன முறையே”
- (ஐங்குறுநூறு: கடவுள் வாழ்த்து)
எனக் கூறுகிறது. பிற்கால நூல்கள் சிவன் தனது இடது பாகத்தில் சக்தியை வைத்ததாக சொல்வதற்கு முற்றிலும் மாறாக அம்பாளின் பாகத்தில் சிவன் இருப்பதாகச் சொல்கிறது. இது சக்திவழிபாட்டில் இருந்து சிவவழிபாடு தோன்றியதைக் காட்டுகிறது. “சக்தி இன்றேல் சிவன் இல்லை” எனும் முதுமொழி தோன்ற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்பாடல் ‘சக்தியின் பாகத்தில் இருக்கும் சிவனின் இரு திருவடிகளின் நிழலின் கீழே மூவகை உலகும் முறையாகத் தோன்றின’ என்கின்றது. இக் கடவுள் வாழ்த்துச் சொல்லும் ‘மூவகை உலகும்’ எது? இதற்கு விளக்கம் எழுதியவர்கள் மேல், கீழ், நடு என மூவகை உலகு தோன்றியதாக எழுதியுள்ளனர். அது பிழையான கருதுகோளாகும்.
1. மேல் உலகு
2. கீழ் உலகு
3. நடு உலகு
என மூவகைப்பட்ட உலகு இருக்கிறதா? எங்கே இருக்கின்றது? ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியதா? என்கின்ற கேள்விகளுக்கு இவை விடை தருமா?
மூவகை என்பது இங்கே பொருளின் தன்மையை, பண்பைக் குறிக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்னும் உண்மையை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சொன்ன ஓர் அரிய பாடல் இது.
ஐங்குறுநூறு உலக தோற்றத்திற்குக் காரணமான பொருட்களின் நிலைகளை மூவகை [The three states of matter] எனக் கடவுள் வாழ்த்தில் சொல்கிறது. திண்ம [Solid], திரவ [Liqud], வாயு [Gas] ஆகிய மூன்றாலான உலகம் ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியது [முகிழ்ந்தது] என்கிறது.
அதாவது ‘திண்ம, திரவ, வாயு எனும் மூவகைப் பொருளாலான உலகம் நீலமேனியும் வெள்ளை அணியும் பூண்டவளின் பாகத்தில் இருக்கும் ஒருவனின் இரண்டு திருவடிகளின் நிழலில் இருந்து முகிழ்ந்தது’ என உலக தோற்றத்தை அறிவியல் கருத்துடன் சொல்கிறது. இம்மூவகைப் பொருட்களின் சக்தி இன்றேல் உலகேது?
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment