இந்நாளில் ‘கதை’ என்னும் சொல் தமிழ்ச்சொல் இல்லை என எழுதியும் பேசியும் வருகின்றனர். ஏன் எழுதுகின்றனர் என்பதுவும் தெரியவில்லை. வடமொழியின் 'கதா' எனும் சொல்லிலிருந்து தமிழ்ச்சொல்லான 'கதை' எனும் சொல் பிறந்திருக்கும் என்ற ஐயப்பாடும் இருக்கிறது.
காது, கதை, கதைத்தல் என்னும் சொற்கள் ‘கது’ என்னும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த சொற்களாகும். கது - பற்று. கது என்பது முதனிலைத் தொழிற்பெயர்ச் சொல். கது முதனிலை திரிந்த தொழிற்பெயராக மாறும் பொழுது ‘காது’ என வரும். கேட்கும் ஓசைகளை, ஒலிகளைப் பற்றுவதால் காது என்கிறோம்.
கதுவுதல்/கதுவல் - பற்றுதல் என்னும் கருத்தைத் தரும். கதுமெனல் - விரைவாக, உடனே பற்றுதல்.
“வல் வாய் உருளி கதுமென மாண்ட”
- (பதிற்றுப்பத்து: 7: 11)
கது + ஐ[தொழிற் பெயர் விகுதி] = கதை
கேட்போர் மனதை உடனே பற்றிப்பிடிப்பதால் கதை என்கிறோம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ள அரங்கேற்று காதை, கடல் ஆடு காதை, வேனிற்காதை, வழக்குரை காதை, நடுகற்காதை போன்ற காதைகள் எல்லாம் கதையையே குறிக்கின்றன. காது + ஐ = காதை.
பண்டைத் தமிழரிடம் கதை சொல்லும் வழக்கமும் கதை கேட்கும் பழக்கமும் இருந்ததா என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் உரைநடையை நான்கு வையாகப் பிரித்துக் கூறுமிடத்தில்
“பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவின்று எழுந்த கிளவி யானும்
பொருள் மரபில்லா பொய்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று
உரைவகை நடையே நான்கென மொழிப”
-(தொல்.பொரு: 166)
என்கின்றது.
இதில் வரும் பொய்மொழி என்பது இக்காலக் கட்டுக்கதை. நகைமொழி என்பது நகைச்சுவைக் கதை. இப்பாடலுக்கு விளக்கம் தரும் உரையாசிரியரான பேராசிரியர் ‘தம்முள் நட்புக் கொண்ட யானையும் குருவியும் எந்த எந்த இடங்களுக்குச் சென்று என்ன என்னவெல்லாம் செய்தன என்பதை ஒருவன் புனைந்து உரைப்பது’ அதனுள் அடங்கும் என்கிறார்.
சங்க இலக்கியங்களில் இருக்கும் பாடல்கள் யாவும் சங்ககால மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் கதை கதையாகத் தருகின்றன. ஆற்றுப்படை நூல்களும் பரிசிலர்க்கு எங்கெல்லாம் சென்று அங்கெல்லாம் எத்தகைய காட்சிகளைக் கண்டு என்னவெல்லாம் உண்டு யார் யாரிடம் பரிசு பெறலாம் என ஆற்றுப் படுத்துகின்றன. இலங்கையின் மாந்தைக்குச் சென்றால் ‘மடை நூல்’ [சமையல் நூல்] கூறுவது போல் சமைத்த உணவை உண்ணலாம் என்னும் கதையை சிறுபாணாற்றுப்படை
“பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விரும்பின் தான் நின்று ஊட்டி”
- (சிறுபாணா: 240 - 245)
எனச் சொல்கிறது. இலங்கையில் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சமையல் நூலைப் படித்து உணவு சமைத்து உண்டனர் என்னும் கதையை, வரலாற்றை நாம் அறியலாம். எனவே நம் தமிழ் முன்னோர் கதையைச் சொல்லியும் கேட்டும் இருக்கின்றனர். கதை என்பது கது எனும் வேர்ச்சொல் அடியாகப் பிறந்த தமிழ்ச்சொலே.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment