குறள்:
“கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்” - 525
பொருள்:
சுற்றத்தாருக்கு வேண்டியதைக் கொடுத்தும் இனிமையாகப் பேசியும் வாழ்பவர் தொடர்ந்து சுற்றத்தால் சூழப்படுவர்.
விளக்கம்:
தத்தமது சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ற வழியைத் திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளர். இத்திருக்குறள் சுற்றம்தழால் எனும் அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளாகும். தாய், தந்தை, உறவினர், நண்பர், அயலவரென எம்மைச் சூழ்ந்து வாழ்வோர் யாவரையும் சுற்றம் என்பர். தழால் என்பது இங்கு தழுவி என்னும் கருத்தில் வருகிறது. சுற்றதாரைத் தழுவி அதாவது எம்மோடு அணைத்து வாழவேண்டும். இன்னொரு வகையில் சொல்வதானால் உறவினர் சூழ வாழ்தலாகும்.
சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்தலைச் சுமையாகக் கருதும் இந்தக் காலத்தில் கொரனா சுற்றத்தாரின் அருமை பெருமைகளை எமக்கு அறிவுறுத்துகின்றது. எம் மனநிலையை அடுதடுத்து நிகழும் இழப்புகள் ஓர் உலுக்கு உலுக்கி வைதிருக்கின்றது. ஏன் நாம் சுற்றத்தாரை சுமையாகக் கருதக்கூடாது? நாலடியார்
“அடுக்கல் மலைநாட தன் சேர்ந்தவரை
எடுக்கலம் என்னார் பெரியோர் - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு”
- (நாலடியார்: 21: 3)
என அதற்கான விளக்கத்தைத் தருகிறது. அடுக்கடுக்கான மலைகளுடைய நாட்டை உடையவனே! ஒரு மரத்தில் பெரிது சிறிதாக பலபல காய்கள் காய்த்தாலும் அக்காய்களைத் தாங்காத கிளை இல்லை. அதுபோல் பெரியோரும் தம்மைச் சார்ந்தவர்களைத் தாங்க மாட்டோம் எனச்சொல்லார். எடுக்கல் என்பது தாங்குதல், தூக்குதல், சுமத்தல் போன்ற கருத்துக்களைத் தரும். எடுக்கல் என்பதன் எதிர்ச்சொல் எடுக்கலம் ஆகும். சிலவேளை காற்றடித்து கிளைகள் முறியும். ஆனால் மரஞ்செடிகள் தாமாகக் காய்களை தமக்குச் சுமையென வீழ்த்துவதில்லை.
No comments:
Post a Comment