விசுரவசு முனிவர் ஆலயம் [இசுருமுனிய -அநுராதபுரம்] இராவணன்
இராவணன் இலங்கை மன்னனா? அதற்கான ஆதாரம் ஏதும் உண்டா? இராமாயணத்தை விட வேறு நூல்கள் இராவணனை இலங்கை மன்னன் எனச் சொல்கின்றனவா? எனத்தேடினேன். எனது தேடலுக்கான விடையை பன்னிருதிருமுறைகளில் இருக்கும் அருளாளர்கள் சிலர் தந்தனர். தமிழரின் வரலாற்றின் அறியப்படாத எத்தனையோ பழம்பெரும் விடயங்களைக் கருத்துக்களை பன்னிருதிருமுறை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.
அது காட்டும் அருளாளர்களில் பலர் மாமேதைகள் மட்டுமல்ல அன்றைய தமிழ்நாட்டு வரலாற்றுப் பேரறிஞர்கள். அவர்கள் கூறிய பல விடயங்கள் கல்வெட்டுக்களோடும் ஏனைய இலக்கியங்களோடும் இடங்களின் பெயர்களோடும் அன்று வாழ்ந்து மறைந்த மாந்தர்களோடும் மிக நெருங்கிய தொடர்புடையனவாக இருக்கின்றன. அவர்களில் சேக்கிழார், காரைக்கால் அம்மையார், சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கண்டராதித்தர், சேரமான், திருமூலர் போன்றோர் தமிழரின் பண்பாட்டையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் பாங்கு போற்றுதலுக்கு உரியதாகும்.
அதிலும் தேவார மும்மூர்த்திகள் [அப்பர், சுந்தரர், சம்பந்தர்] இராவணனைப் பற்றிச் சொன்ன செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவையே. அவர்கள் மூவருள்ளும் திருநாவுக்கரசர் இராவணனைக் குறித்துக் கூறிய சொற்றொடர்கள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. இதைப் படிப்போரையும் திருநாவுக்கரசரின் இராவணன் பற்றிய கண்ணோட்டம் சிறிது சிந்திக்கத் தூண்டலாம்.
திருநாவுக்கரசு நாயனார் தாம்பாடிய தேவாரப் பதிகங்கள் தோறும் 10வது தேவாரத்தில் இராவணனை எடுத்துக் கூறுகிறார். சில பதிகங்களில் பதினொராவது தேவாரமாகவும் கரையான் அரித்த பதிகங்களில் வேறு இடங்களிலும் வருவதைக் காணமுடிகிறது. இராவணனை இலங்கைக் கோமான், இலங்கையர் கோன், இலங்கைக் கோன், இலங்கைக்கு இறைவன், இலங்கைக் கிழவன், இலங்கைக்கிறை, இலங்கை மன்னன், இலங்கையர் மன்னன், இலங்கை வேந்தன், இலங்கைத் தலைவன் என எத்தனை பெயர்களில் எவ்வளவு தேவாரத்தில் இலங்கையின் அரசனாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் தெரியுமா?
1. இலங்கைக் கோமான் [5 தேவாரம்]
“கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானை”- (ப.முறை: 4: 13: 10)
“இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று”
- (ப.முறை:4: 67: 10)
“கடலிலங்கைக் கோமான் தன்னை” - (ப.முறை: 6: 35: 10)
“மதிலிலங்கைக் கோமான் தன்னைச்” - (ப.முறை: 6: 47: 10)
“கடலிலங்கைக் கோமான் தன்னைப்” - (ப.முறை: 6: 62: 10)
2. இலங்கையர் கோன் [5 தேவாரம்]
“இலங்கையர் கோன் முடிபத்தும்” - (ப.முறை: 4: 16: 10)
“கரையார் கடல்சூழ் இலங்கையர் கோன்” - (ப.முறை: 4: 82: 10)
“இலங்கையர் கோன் சிரம்நெரித்த இறைவா”- (ப.முறை: 6: 31:10)
“இலங்கையர் கோன் தோளிறுத்தா யென்றேன்”- (ப.முறை: 6:37:10)
“இலங்கையர் கோன் சிரங்கள் பத்தும்” - (ப.முறை: 6: 54: 10)
3. இலங்கைக்கு மன்னன் [1 தேவாரம்]
“மாலினால் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்” - (ப.முறை: 4: 30:10)
4. இலங்கையர் மன்னன் [4 தேவாரம்]
“இலையுடைப் படையேந்து இலங்கையர் மன்னன் தன்னை”
- (ப.முறை: 4: 37: 10)
“எடுத்தன எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை”
- (ப.முறை: 4: 49: 10)
“அடுத்து வந்த இலங்கையர் மன்னனை” - (ப.முறை: 5: 37: 11)
“அரக்கனாய இலங்கையர் மன்னனை” - (ப.முறை: 5: 57: 10)
5. இலங்கை வேந்தன் [12 தேவாரம்]
“இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்”
- (ப.முறை: 4: 54: 10)
“இலங்கை வேந்தன் இராவணன்” - (ப.முறை: 5: 47: 11)
“இலங்கை வேந்தன் இருபது தோள்” - (ப.முறை: 5: 66: 10)
“இலங்கை வேந்தன் இருபது தோளிற” - (ப.முறை: 5: 71: 10)
“இலங்கை வேந்தன் இருபது தோளிற்று” - (ப.முறை: 5: 80: 10)
“ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 18: 6)
“துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று” - (ப.முறை: 6: 23: 10)
“பேரும் பெரிய இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 38: 11)
“அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 48: 10)
“மலையெடுத்த இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 63: 10)
“அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 76: 10)
“கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்” - (ப.முறை: 6: 99: 10)
6. இலங்கை மன்னன் [5 தேவாரம்]
“பொருகடல் இலங்கை மன்னன்” - (ப.முறை: 4: 60: 10)
“இலங்கை மன்னன் இருபது தோளினை” - (ப.முறை: 5: 26: 10)
“இலங்கை மன்னன் இருபது தோளிற” - (ப.முறை: 5: 68: 10)
“இலங்கை மன்னனை” - (ப.முறை: 5: 97: 30)
“தென் இலங்கை மன்னன் போற்றி” - (ப.முறை: 6: 56: 10)
7. இலங்கைக் கோன் [13]
“இலங்கைக் கோன் வந்தெடுத்தலும்” - (ப.முறை: 4: 62: 10)
“விரிகடல் இலங்கைக் கோனை” - (ப.முறை: 4: 69: 10)
“ஆர்த்தெழு இலங்கைக் கோனை” - (ப.முறை: 4: 72: 10)
“எரிய எய்தனரேனும் இலங்கைக்கோன்” - (ப.முறை: 5: 25: 11)
“தனலோட்டி இலங்கைக் கோன்” - (ப.முறை: 5: 36: 10)
“மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனை”- (ப.முறை: 6: 3: 11)
“இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை” - (ப.முறை: 6: 39: 10)
“ஏத்தா இலங்கைக் கோனை” - (ப.முறை: 6: 42: 10)
“கடியிலங்கைக் கோனை யன்று” - (ப.முறை: 6: 44: 10)
“எண்ணா இலங்கைக்கோன் தன்னை” - (ப.முறை: 6: 55: 11)
“மதிலிலங்கைக் கோன்” - (ப.முறை: 6: 75: 11)
“நீலக்கடல் சூழ் இலங்கைக் கோனை” - (ப.முறை: 6: 78: 10)
“அடலாழித் தேருடைய இலங்கைக்கோனை” - (ப.முறை: 6: 90: 10)
8. இலங்கைக் கிழவன் [1தேவாரம்]
“உயர் இலங்கைக் கிழவன்” - (ப.முறை: 4: 84: 11)
9. இலங்கைக்கு இறைவன் [2 தேவாரம்]
“இலங்கைக்கு இறைவன் இருபது தோளும்” - (ப.முறை: 4: 85: 10)
“நீர் இலங்கைக்கு இறைவன்” - (ப.முறை: 5: 20: 10)
10. இலங்கைக்கு இறை [4 தேவாரம்]
“இலங்கைக்கிறை தன்னை” - (ப.முறை: 4: 91: 10)
“எளியனா மொழியா இலங்கைக்கிறை” - (ப.முறை: 5: 23: 10)
“ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை” - (ப.முறை: 5: 31: 10)
“பொங்கு மாகடல் சூழிலங்கைக் கிறை” - (ப.முறை: 5: 35: 10)
11. இலங்கையர் காவலன் [1 தேவாரம்]
“மதில்சூழ் இலங்கையர் காவலனை” - (ப.முறை: 4: 97: 11)
12 இலங்கை மன்னவர் கோன் [1தேவாரம்]
"தென்னிலங்கை மன்னவர் கோன்” - (ப.முறை: 6: 59: 10)
13. இலங்கைத் தலைவன் [1 தேவாரம்]
“இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்” - (ப.முறை: 4: 77: 10)
ஒன்றுரெண்டு தேவாரம் அல்ல ஐம்பத்தைந்து தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் இராவணனை இலங்கை மன்னனாகப் படம் பிடித்துக் காட்டியும் தமிழர்களாகிய எம் கண்களுக்கு அவை எவையும் தெரியவில்லை. அவர் இராவணன் பற்றிக் கூறிய தேவாரத் தொகுதியில் இந்த ஐம்பத்தைந்து தேவாரமும் ஏறக்குறைய 20% ஆகும்.
ஆனால் இராவணன் சிவபக்தன், சைவன், இந்து எனக் காட்டுவதற்காக “இராவணன் மேலது நீறு” எனக்கூறிய ஒரு தேவாரத்தை ஊடகங்கள், மேடைகள் எங்கும் எத்தனை ஆயிரம் முறை கண்டும் கேட்டோம்? சிவபக்தன் என நேரடியாகச் சொல்லாததைச் சொல்லும் நாம் அதே இராவணனை “இலங்கை வேந்தன் இராவணன்” என ஐந்தாம் திருமுறையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக்கொள்ளாது இருப்பது ஏன்? எவருக்காவது இதற்கான விடை தெரியுமா?
இராவணனை ‘இலங்கை மன்னன்’ என திருநாவுக்கரசர் மட்டும் அல்ல திருஞானசம்பந்தரும் முன்னூற்றைம்பதிற்கும் மேற்பட்ட தேவாரத்தில் இராவணனைக் குறிப்பிட்டுள்ளார்.
“கொடித்தேர் இலங்கைக் குலக்கோன்” - (ப.முறை: 1: 33: 8)
“தென்னிலங்கையர் குலபதி” - (ப.முறை: 2: 107: 8)
"தென்னிலங்கையர் குலபதி" என்று திருக்கேதீஸ்வரத் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டும் நம் எவர் கண்ணிலும் அது படவில்லை.
சுந்தரமூர்த்திநாயனாரும்
“எறியு மாக்கடல் இலங்கையர் கோனை” - (ப.முறை: 7: 55: 9)
"இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை" - (ப.முறை: 7: 68: 9)
எனக்கூறியும் நாம் வாய்திறவாது ஊமையர்களாய் இருப்பது ஏன்? ஏன்? பெருவியப்பே!!
இந்தத் தேவார மூவர்க்கும் நாம் பாலால் திருமுழுக்குச் செய்வோம், குருபூசை செய்வோம், சைவ மாநாடுகள் நடாத்துவோம், அவர்கள் பெருமையை மணிக்கணக்காய் பேசுவோம், திருக்கோயில்கள் கட்டுவோம் ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை அறியாத மூடராய் இருப்போம். அப்படி இருந்ததாலேயே இன்று மாற்றான் நாட்டு மண்ணிலே எங்கள் உறவுகளைச் சந்ததியினரைத் தொலைக்கிறோம்.
‘இலங்கை மன்னன் இராவணன்’ என நம் சைவத்தமிழ்ச் சான்றோர் கூறினர் என்பதை நெஞ்சத் துணிவோடு என்று உரத்து முழங்கப் போகிறோம்?
இனிதே,
தமிழரசி
குறிப்பு:
இராவணனை இலங்கை மன்னன் எனச் சம்பந்தரும் சுந்தரரும் பாடிய தேவாரம் பல உண்டு. இவ்வாய்விற்கு திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை மட்டுமே எடுத்தேன். அநுராதபுரத்திலுள்ள இசுருமுனிய ஆலயம் இராவணனின் தந்தை பெயராலே[விசுவரசு முனிவர்] இன்றும் அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment