Sunday 6 November 2016

மன ஏக்கந்தனைக் கேளீர்!


ஒற்றைப் பனை முற்றம் அதில்
ஓங்கி வளர்ந்து நின்ற
ஒற்றைப் பனை சொன்ன மன
ஏக்கம் தனைக் கேளீர்!

ஒற்றைப் பனை முற்றம் உம்
ஓடும் களம் ஆகும்
வற்றும் கடல் கண்டும் முகம்
வாடா தெம் இயல்பே!

சுற்றம் சூழ யிருந்து கதை
சொல்லி மகிழ் மாதர்
கற்றைக் குழல் வண்ண நிறம்
காட்டு மெம் வனப்பே!

கற்றபே ரறிஞர் கற்பக மென்ன
காலமெ ல்லாம் உகந்து
சற்றுஞ் செருக் கின்றி பழம்
சொரிந்த தெம் இனமே!

பெற்ற செல்வம் யாவும் நும்
பசியைப் போக்கத் தந்து
இற்றை நாள் வரையும் நிதம்
ஈதலெ மது குணமே!

முற்றத் துறந்த முனி போல்
மூர்க்க குணம் இன்றி
வற்று கடல் அருகே வெட்ட
வெளி இடையே எம்
சுற்றம் சூழ கூடலாய் பசும்
சோலை என நின்ற
உற்ற உறவெ ல்லாஞ் செல்
உண்டு வேக மீதம்
விற்று வந்த காசில் கல்
வீடு கட்டி வாழா
வெற்று மனையாய் விடும்
வேடிக்கை மானுடரே கேளும்!

பற்று இன்றிப் போயினும் எம்
பழமை தன்னை உணர்ந்து
முற்றிப் பழுத்த பழங்கள் உமக்கு
மீண்டும் யாம் தருவோம்!

பெற்ற செல்வம் என்றே எமைப்
பேணி வளர்க்க வேண்டும்!
சற்றுங் குறை யின்றி உம்
சந்ததி வாழ வைப்போம்!

மங்கலம் நிறை புங்கைப் பதி
மக்களே மகிழ்ந்து கேளும்!
உங்கள் உயிர் காக்க எங்கள்
உயிர் தந்த தறியீரோ! 
                                         - சிட்டு எழுதும் சீட்டு 128

2 comments:

  1. சிந்திக்க வைக்கும்
    சிறந்த பாவரிகள்

    ReplyDelete