Saturday 5 November 2016

குறள் அமுது - (125)

குறள்:
“குற்றம் இலானாய் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய்ச் சுற்றும் உலகு”                            -1025

பொருள்:
குற்றம் இல்லாதவனாக தான் பிறந்த குடி உயர்வதற்காக வாழ்பவனை உலகம் தன் சுற்றமாகச் சூழ்ந்துகொள்ளும்.

விளக்கம்:
இத்திருக்குறள் குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. குடிசெயல்வகை என்றால் தான் பிறந்த குடும்பத்தை - குடியை மேன்மை அடையச் செய்தலாகும். நாம் பிறந்த குடி, நமது சுற்றம் என்று சொல்லும் போது அது ஒரு சிறு வட்ட எல்லைக் கோட்டுக்குள் அடங்கி விடும். அப்படி அடங்கிவிடக்கூடிய எமது செயல்திறனின் தன்மையை உலகெலாம் பரவச்செய்யும் ஆற்றல் எம்மிடமே இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது.

குற்றம் என்றால் என்ன? என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒருவருக்குக் குற்றமாகத் தெரிவது இன்னொருவருக்கு குற்றமாகத் தெரிவதில்லை. இதுவே இவ்வுலகம் எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றாகும். எனினும் நம் முன்னோர்கள் முதன்மைக் குற்றங்களை ஐந்தாகப் பிரித்து வைத்துள்ளனர். 
1. பொய் பேசுதல்
 2. மதுவருந்துதல்
 3. களவெடுத்தல்
 4. பிறரது பெண்களை விரும்புதல்
5. கொலை செய்தல் 
இந்த ஐவகைக் குற்றங்களில் இருந்தே மற்றைய குற்றங்கள் எல்லாம் கிளைவிட்டு வளர்கின்றன. இந்த அடிப்படைக் குற்றங்களுக்குக் காரணமாக இருப்பது நமது மனமே. மன எண்ணங்களே ஆசைகளைத் தூண்டி குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. களங்கம் இல்லா மனதுடன் வாழ்கின்றவரே குற்றம் இலாதவர் ஆவர்.

இன்னொரு வகையில் சொல்வதானால் உலகம் வெறுக்கும் ஆசைகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கக் கூடியோரும் குற்றம் இலாதவராய் வாழ்வர். இப்படி குற்றம் அற்று இருப்பவன் தான் பிறந்த குடியை [தமிழ்க்குடியை] பாடுபட்டு உழைத்து முன்னேற்றுகிறான். தன்னலம் கருதாத அவனது செய்கையைக் கண்டவர்கள் அவனை தன் சொந்த உறவாய்க் கருதத்தொடங்குவர். 
அவன் இப்படிப்பட்டவன் என்ற செய்தி மெல்ல மெல்ல ஊர்விட்டு ஊர்சென்று நாடுவிட்டு நாடு சென்று உலகம் முழுதும் பரவும். 

அதுவும் இன்றைய வலைத்தளங்களின் ஊடாக அடுத்த நொடியிலேயே அச்செய்தி உலகை வலம் வந்துவிடும். உலகமே வியப்புற்று அவனைத் தமது உறவாக எண்ணத் தொடங்கும். எனவே குற்றம் களைந்து வாழ்வதோடு தன் குடியையும் வாழவைத்தால் தன் சுற்றம் தன் குடி என்ற எல்லைக் கோடுகள் தகர்த்தப்பட்டு உலகமே சுற்றமாய்விடும்.

குற்றங்கள் செய்யாத ஒருவன் தான் பிறந்த குடியை முதன்மையடையச் செய்ய முனைவானேயானால் உலகம் அவனை தனது உறவு என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும்.

No comments:

Post a Comment