Tuesday 15 November 2016

குறள் அமுது - (126)


குறள்:
ஒருமையில் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் எமாப்பு உடைத்து                           - 126

பொருள்:
ஆமை தனது ஐந்து உறுப்புக்களையும் தேவை இல்லாத போது அடக்கி வைத்திருப்பது போல தனிமையில் இருக்கும் பொழுது ஐம்புலன்களையும் அடக்கமுடியுமாயின் அது வரும் தீமைகளைக் காக்கும் அரணாக நிற்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் அடக்கம் உடைமை என்னும் அதிகாரத்தின் ஆறாவது குறளாகும். அந்நாளைய நம்மவர்கள் பெண் குழந்தைகள் ஓடி விளையாடினால் ‘அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்’ என்று அதட்டுவார்கள். அடக்கம், ஒடுக்கம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. அடங்கி இருப்பது மீண்டும் வெளிப்படும். ஒடுக்கம் மீண்டும் வெளிப்படாது அப்படியே ஒடுங்கிப் போய்விடலாம். அடக்கத்தை ஒடுக்கமாகக் கருதுவது தவறாகும்.

இத்திருக்குறளில் திருவள்ளுவர் ஐம்புலன்களின் அடக்கத்தைப் பற்றியே கூறுகிறார். ஐம்புலன்களையும் எப்படி அடக்குவது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆமையைச் சொல்கிறார். ஆமை அலைந்து திரியும்போது அது தன் தலையையும் நான்கு கால்களையும் ஆமையோட்டிற்கு வெளியே வைத்திருக்கும். ஓய்வெடுக்கும் போதும் தற்பாதுகாப்பிற்காகவும் தனது ஐந்து உறுப்புக்களையும் ஆமையோட்டிற்குள் இழுத்து அடக்கி வைத்துக்கொள்ளும். அதுபோல் எமது ஐம்புலன்களையும் தேவையான பொழுது தொழிற்பட வைத்தும் தேவையற்ற போது மனதால் அடக்கி வைக்கவேண்டும்.

எப்போது ஐந்தடக்கல் ஆற்றவேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆசைகளையும் இன்பங்களையும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களே தூண்டுகின்றன. பலருடன் சேர்ந்து இருப்பதைவிட தனிமையில் இருக்கும்போது ஐம்புலன்களே எம்மை ஆட்சி செய்கின்றன. ஒன்று - ஒருமை. ஒன்று அது தனித்தது. ஒருமையில் அதாவது தனிமையில். அதனாலேயே வள்ளுவர் ஒருமையில் ஐந்தடக்கல் ஆற்றச் சொன்னார். 

எமக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்யும் போது அதனதன் வழியே ஐம்புலன்களையும் தொழிற்பட விட்டு, தீயவழியில் செல்லாது அடக்குவதே ஐந்தடக்கலாகும். எழுமை என்பதை எழு + மை எனப்பிரிக்கலாம். துன்பங்களை ‘மை’ என்பர். எழுகின்ற துன்பங்கள் எழுமையாகும். ஆதலால் தனிமையில் இருக்கும் போது ஆமையைப் போல் ஐம்புலன்களை அடக்குவதால் அது எமக்கு துன்பங்கள் வராது பாதுகாக்கும் அரணாக நின்றுதவும். 

திருக்குறளுக்கு விளக்கம் எழுதிய நம் முன்னோரில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, பரிமேலழகர் போன்ற பலரும் ஒருமையில் என்பதை ஒருபிறவியில் என்றும் எழுமையும் என்பதை எழுபிறப்பிலும் என்று ஏனோ கருதினர். அப்படிக் கருதுவது சரியில்லை என எண்ணியே ஒருமையில் என்பதைத் தனிமையில் என்றும் எழுமையும் என்பதை எழும் துன்பம் எனவும் கருத்து எழுதியுள்ளேன். தமிழ் உலகு இக்கருத்தை ஏற்றருளும் என நம்புகிறேன்.

No comments:

Post a Comment